அணியமராக அலங்கலாய் இலங்கி -- “அணியமராகத்து அலங்கலாயிலங்” என்றும் பாடம் உண்டு. பொருளில் பேதமில்லை. “அணி” என்பதற்கு அழகு, ஆபரணம் என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. “ஆபரணங்கள் எல்லாம் அமர்ந்து நிறம் பெற விரும்பும் திருமார்பு” என்று பொருள் கொள்வது உசிதம். ஆகம் பிராட்டியின் அகம் வீடு, பெருமாளது ஆகம் (மார்பு). ஆகம் -- ஹ்ருதயஸ்தானம்.
அலங்கலாய் இலங்கி -- அலங்கல் -- ஓர் ஆபரணம். அலங்காரமாய் ஒளி கொடுத்துக்கொண்டு, ஆபரணங்களுக்கு மேல் ஆபரணமாய் விளங்கி; “உன் திருமார்வத்து நங்கை” என்கிறபடியே.
நின்படிக்கெல்லாம் தன்படி ஏற்க -- உன் ரூப - குண ஸௌந்தர்ய - லீலாதி ஸர்வப்பிரகாரங்களுக்கும் ஒன்று விடாமல் தன் ரூபகுண ஸௌந்தர்ய லீலாதி ஸர்வப் பிரகாரங்களும் ஒத்திருக்கும்படி. “ஏற்க” என்பதால் பிராட்டி ஸ்வேச்சையாலே பெருமாளுக்கு ஒத்த பிரகாரங்களைக் கொண்டு அநுரூபையாய் இருக்கிறாள் என்பது காட்டப்படுகிறது. “யத் -- பாவேஷு ப்ருதக் -- விதேஷு அநுகுணாந் பாவாந் ஸ்வயம் பிப்ரதீ”. “தன்படி” “நின்படி” என்று வேற்றுமை இருக்கச் செய்தேயும், அவற்றுள் ஒற்றுமையும் ஐகரஸ்யமும் “ஏற்க” என்பதால் கூறப் படுகின்றன. “ஸஹ - தர்ம -சரீ” என்றும், “துல்ய -- ஸீல வயோ - வ்ருத்தாம்” என்றும் மஹர்ஷிகள் கொண்டாடும் ஒற்றுமையன்றோ˜ கடலுக்கு இக்கரையிலிருந்து அவன் “மித்ர - பாவேந” என்றால், கடலுக்கு அக்கரையிலிருந்து அவள் “தேந மைத்ரீ பவது தே” என்று சொல்லும்படி ஒத்த மனோவியாபாரங்களையுடையவர்கள்.
அன்புடன் உன்னோடு அவதரித்தருளி -- அவன் அவதாரம்போல இவள் அவதாரமும் கிருபையின் கார்யம் என்று காட்ட “அருளி” என்று பிரயோகிக்கிறார். அவனுக்குப்போல இவளுக்கும் பூலோகத்திற்கு வருவது ஒரு அவதரணம் -- மேல் உலகத்திலிருந்து இழிதல். அன்புடன் -- அன்பினால்; அவனிடத்து அன்பினாலும் சேதனர்களான நம்மிடத்து அன்பினாலும் பிராட்டி அவதரித்தருளுகிறாள். இறையும் அகலகில்லாதவளாகையால் அவனை விட்டுப் பிரிந்திருக்க ஸஹியாதவளாய் அவதரிக்கிறாள். அவளும் வந்தால்தானே அவதார கார்யம் நிறைவேறும்˜ “உன்னோடு” என்னும் பதம் இருவரும் சேர்ந்து அவதரித்தபோதுதான் தத்துவபூர்த்தி என்பதைக் காட்டுகிறது. ஒருவர் மட்டும் அவதரித்தால் பரதத்வத்தின் ஏகதேசந்தான் அவதரித்ததாகும். ஆகையால் உன்னோடு அவதரித்தருளி.
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்து -- மிக ரஸமான சொற்றொடர். யாரிடம் கேட்டு யாரைக் கேட்பித்து என்பதை ஆராய்ந்தால் ஆச்சர்யமான அர்த்தங்கள் ஏற்படுகின்றன. இதற்கு மூன்று அர்த்தங்கள் கொள்ளக் கிடக்கின்றன. முதலாவது, சேதனன் வேண்டுரை (பிரார்த்தனையை) அவனிடம் கேட்டு, எம்பெருமான் திருச்செவிகளில் அவைகளைக் கேட்பித்து, என்பது; இரண்டாவது, எம்பெருமான் சேதனர்பக்கல் வேண்டும் (எதிர்பார்க்கும் நிலைகளைப் பற்றிய) உரையை அவனிடம் கேட்டுத் தன் பிரஜைகளான சேதனர்களுக்கு வாத்ஸல்யத்தால் அதை அறிவிக்கும்பொருட்டு அவர்களைக் கேட்பித்து என்பது; மூன்றாவது, எம்பெருமானிடம் கேட்ட வசனங்களையே அவன் அந்த நிஷ்டையினின்றும் தவறினதுபோல் காணும் ஸமயங்களில் அவனையே கேட்பித்து என்பது. இந்த மூன்றும் நம்மாசார்யோத் தமனது ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் பொதிந்து கிடக்கும் அர்த்த விசேஷங்கள். த்வயாதிகாரத்தில் இந்த பங்க்திகள் காணக்கிடக்கின்றன. “ஶ்ருணோதி -- ஶ்ராவயதி” என்கிற வ்யுத்பத்திகளில் “ஸாபராதரான அடியார்களை ஸர்வேச்வரன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தருளவேணும் என்று இப்புடை களிலே ஆச்ரிதர்களுடைய ஆர்த்தத்வனியைக் கேட்டு ஸர்வேச்வரனுக்கு விண்ணப்பம் செய்து, இவர்களுடைய ஆர்த்தியை சமிப்பிக்கும்” என்றதாம். *** “ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம:” இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு “ ச்ருணுசாவஹித: காந்த யத்தே வக்ஷ்யாம் -- யஹம் ஹிதம் ப்ராணைரபி த்வயா நித்யம் ஸம்ரக்ஷ்ய: சரணாகத:” என்று கபோதத்தைக் கபோதி கேட்பித்தாப்போலே அவஸரத்திலே கேட்பிக்கும் என்னவு மாம். ஸர்வேச்வரன் பக்கலிலே லோக ஹிதத்தைக் கேட்டு “மித்ரம் ஔபயிகம் கர்த்து”” இத்யாதி களிற்படியே விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம்” பெருமாளிடத்தில் வால்லப்யத்தால் (சலுகையால்) அவனையும் நம்மிடம் வாத்ஸல்யத்தால் நம்மையும் பிராட்டி கேட்பிக்கிறாள் என்றதாயிற்று.
ஈண்டிய வினைகள் மாண்டிட --- ஜீவாத்மாக்களிடம் சேர்ந்துள்ள எல்லா வினைகளும் வேரோடு அழியும்படி, முயன்று -- ஸர்வப்ரகாரத்தாலும் எப்பாடு பட்டாயினும் வினைகளை மாள வைத்து, தன்னடி சேர்ந்த -- தனது, அதாவது பிராட்டியினுடைய சரணங்களை ஆச்ரயித்தவர்களான தமர் -- பாகவதர்கள்; பிராட்டியால் தன்னுடைய வர்கள் என அங்கீகரிக்கப் பட்டவர்கள்.
உனை அணுக -- “அணுக நிற்கு” என்றதால் பிராட்டி எம்பெருமானோடு இடைவிடாது நிற்பது அவனை ஆச்ரயிக்கிற வர்களை வாழ்விக்கவே. “அணுக” என்பதற்கு அணுகுவதற் காகவே என்று அர்த்தம்; அல்லது அவர்கள் உன்னை அணுகுங் கால் உன் பக்கத்தில் ப்ராப்யகோடியில் (அடையவேண்டிய நிலையில்) நிற்கிறாள் என்னவுமாம்.
நின்னுடன் சேர்ந்து -- உன்னோடு ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஒரு சேர்த்தியாய் இருந்து
நிற்கும் -- ஸ்திரமாய் எழுந்தருளியிருக்கும்
நின் திருவே -- உனது தேவியே, உன்னுடன் ஒருபடி யாய் நிற்கக் கூடியவள் பிராட்டி ஒருத்தியே தவிர வேறு எவருமில்லை என்றபடி.
“நின்திரு” -- உன்னையிட்டு அவள் திரு. உனக்கும் திருவாய் நிற்பவள்; திருவைத் தருபவள்.
நின் திருவே அருள்தரும் என்று (விற்பூட்டாக) அந்வயித்துக் கொள்வாருமுண்டு என்பது முன்பே கூறப்பட்டது. அருள் என்னும் சீர் வடிவெடுத்தாற்போன்ற திருவாலல்லது வேறு யாரால் அருள் தர முடியும்˜
(பாசுரம் 2 தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக