ஞாயிறு, 1 நவம்பர், 2015

மும்மணிக்கோவை 3

தெருள்தரநின்ற:-- இதுவும் ஓர் அர்ச்சாவதார ரஹஸ்யம். தன்னைக் கிட்டி வழிபடுவோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் திவ்யமங்கள விக்ரஹங்களை ஞானம் சிறிதுமின்றியே வந்து ஸேவிப்பவர்களுக்கும் அந்த ஸேவையினாலேயே ஞானம் உண்டாகிறது என்கிற தத்துவம் இதனால் உணர்த்தப்படுகிறது. தர -- முக்காலத்திலும் ஞானத்தைக் கொடுக்க ஸங்கல்பித்திருக்கிறான் என்று த்வனி.

நின்ற --- வந்துதோன்றி மறைந்துபோகும் ராம கிருஷ்ணாத்யவதாரங்கள் போலன்றிக்கே, ஞானம் நல்குவது என்ற த்ருடமான ஸங்கல்பத்துடன் ஸ்திரமாய் என்றென்றைக்கும் நிற்கிறான் என்று கூறப்படுகிறது.

தெய்வநாயக -- அவன் தெய்வக் குழாங்கள் கைதொழ நிற்கும் தனிப்பெரும் நாயகன். அப்படியே அழைக்கிறார்.

நின் -- “நின்னருள்” என்பதால் மற்றோர்களின் அருள் விலக்கப்படுகிறது. “அவ்வருளல்லன் அருளுமல்ல” (நம்மாழ்வார்). இதைக் குறிக்கவேண்டி பாசுரத்தில் இரண்டாவது அடியில் “நின்” என்னும் பதம் தனியான சொல்லாக விளங்குகிறது. “தெய்வநாயக நின்” என்று அசைக்கும் இசைக்கும் சேர நிறுத்தி அனுபவிப்பதில் ஒரு ரஸம் காண்கிறது.

அருள் -- வடமொழியில் “தயா”, “க்ருபா”, “கருணா” “அநுகம்பா” முதலான சொற்களின் பொருள்களை யெல்லாம் கொடுக்கவல்ல ஒரு தமிழ்ச் சொல் இது.

அருள் எனும் சீர் : சீர் என்றால் குணம். இந்த சொற்றொடரால் “அருள் ஒன்றுதான் குணம்; எம்பெருமானுடைய மற்ற குணங்களெல்லாம் அருளின் ஸம்பந்த மிராவிடில் தோஷங்களேயாவன” என்கிற தத்துவார்த்தத்தைக் காட்டுகிறார்.

ஓர் அரிவையானதென --- ஒப்பற்ற ஒரு ஸ்திரீ ரூபம் கொண்டதுபோல. குணம் வேறு, ரூபம் வேறு என்று தத்துவம் இருக்க, இங்கே குணமே ரூபமானது என்று ரஸமாகப் பேசுகிறார்.

என -- என்று சொல்லும்படியாக. பிராட்டி அருள் நிறைந்தவளோ அல்லது அருள் பிராட்டியாக வடிவு கொண்டதோ என்று தர்க்கிக்கும்படி இருக்கிற நிலை காட்டப்படுகிறது. ஸந்தேஹாலங்காரம் போலும் இது.

எமக்கு -- சேதனர்களுக்கு; மனுஷ்யர்களுக்கு. அவர்களுள் ஒருவராய்த் தம்மையும் கூட்டிக் கொண்டு பேசுகிறார்.

இருள் செக -- எல்லாவிதமான இருளும் நீங்க. உண்மையான தத்துவஹித புருஷார்த்தங்கள் எவை என்று தெரியாமல் துன்புறும் நிலை நீங்க. பிரகாசத்தினால் எப்படி இருள் இருந்தவிடம் தெரியாது போய் விடுகிறதோ அப்படியே நம்முடைய அஜ்ஞானமாகிற இருள் அடியோடு நீங்கும்படி செய்யவல்ல இன்னொளி விளக்கு பிராட்டி.

இன்னொளி விளக்கு -- கண்ணைக் கூசச் செய்யும் கொடுஞ் சுடரன்று; இனிமையான ஒளியுள்ளது. இருட்டில் தவிப்பவர்களுக்குத் தீபம் கிடைத்தால் என்ன ஸந்தோஷம் ஏற்படுமோ அதை “இன்” என்பதால் குறிப்பிடுகிறார்.

ஒளி விளக்கு -- மங்காத சுடர். “நந்துதலில்லா நல்விளக்கு” என்று நான்காவது பாசுரத்தில் கூறுகிறார். விளங்க வைப்பது விளக்கு.

ஒளி விளக்கு -- ஏற்றிய தீபம். அப்படிப்பட்ட தீபம் கிடைத்தபிறகு இருட்டைப் போக்குவதற்கு ஓர் உபாயம் தேடவேண்டியதில்லை. அதுபோலப் பிராட்டியின் கடாக்ஷம் பெற்றால் ஞானம் தானாக வரும் என்றபடி. அவள் “சைதன்ய - ஸ்தன்ய - தாயிநீ” அன்றோ˜ விளக்கு தன்னையும் காட்டி மற்ற வஸ்துக்களையும் காட்டுவது போலப் பிராட்டி தன்னையும் காட்டிக் கொண்டு எம் பெருமானையும் நமக்குக் காட்டிக்கொடுக்கிறாள்.

மணிவரையன்ன நின்திருவுருவில்---”பச்சைமா மலை போல் மேனி” என்றும் “கருமாணிக்கமலை” என்றும் ஆழ்வார்கள் அனுபவித்ததைச் சேர்த்து “மணி - வரை” என்று பாசுரமிடுகிறார். “திரு - உரு” “மணி - வரை” என்றபோது “திரு” மணியாகவும், “உரு” வரையாகவும் முறையே உத்ப்ரேக்ஷிக்கப்படுகின்றன. பெருமாளுக்குப் பிராட்டிதான் ஒளி பயக்கிறாள். “ப்ரபவாந் ஸீதயா தேவ்யா”, “தீபஸ்த்வமேவ ஜகதாம் தயிதா ருசிஸ் தே” என்று ஸ்வாமியின் அருளிச் செயல்கள்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக