||ஸ்ரீ:||
செந்தமிழ்த் தென்பாண்டி நன்னாட்டு
அநுமந்த நகரம் மதுரகவி
ஸ்ரீ உ. வே. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி
இயற்றிய
ஊர்ப்பதிகம்
திங்களூர் மாடந் திகழுமூர் தெய்வமெலா
நங்களூ ரென்று நவிலுமூர் -- பங்கயத்தோன்
பூசித்துப் போற்றும் புருடோத்த மன்றுயிலும்
ஆசற்ற வூரரங்கமாம். .1.
நாடிப் புலவர் நணுகுமூர் நற்பதின்மர்
பாடிப் பணிந்து பரவுமூர் -- சூடிக்
கொடுத்தாள் விருப்பங் கொளுமூர் பூஞ்சோலை
யுடுத்தா ரியஞ்சிறந்த வூர். .2.
பொன்னியிரு பாலும் பொலிந்தவூர் போகமெலா
மன்னுமூர் சோழன் வழுத்துமூர் --- மன்னரங்கன்
றென்னிலங்கை நோக்கித் திருக்கண் டுயிலுமூர்
ஒன்னலரும் போற்றுமணி யூர். .3.
ஏத்துபுகழ்க் கம்பனரங் கேற்றுமூ ரெண்பதின்மர்
தோத்திரப்பா மாலை துலங்குமூர் -- சாத்துவிகப்
பத்திநெறி யாளர் பயிலுமூர் பண்டைமறை
யுத்தமர்கள் வாழ்ந்துறையு மூர். .4.
மேனோக்கு புண்டரத்தார் வேதாந்த விற்பனர்முக்
கோனோக்குஞ் சீயர் குழாமுறையூர் -- வானோக்கி
யேழ்புரிசை யோங்கி யிருக்குமூ ரும்பர்கண
மூழ்கடிய வந்துறையு மூர். .5.
வாதூர் புறச்சமைய வல்லிருட்கு மித்திரனாம்
பூதூர் முனிவன் புகழுமூர் -- தாதூரும்
செம்பதும மாலைச் செழுமறையோர் போற்றுமூர்
உம்பர் குறையிரக்கு மூர். .6.
மட்கி மதிவெய்யோன் மறுவொழிப்பான் றம்பெயராற்
புட்கரணி யாற்றிப் புகழுமூர் -- உட்கரணம்
நன்றறிந்த வீடணனார் நாடோறும் வந்துபணிந்
தென்றும் புகுமூ ரிது. .7.
வேதம் புகழுமூர் வேதாந்தம் வேட்குமூர்
மாதந் தொறுஞ்சாறு மன்னுமூர் --- ஆதுலர்க்கு
வண்மை திகழ வழங்குமூர் மாதரெலா
முண்மை வழங்கிவரு மூர். .8.
மாலூர் வளனூர் மணியூ ரணியூர்தண்
சேலூர் பழனந் திகழுமூர் – நாலூரான்
பன்னிப் புகழ்ந்துட் பரவிப் பணியுமூர்
உன்னற் கரியதுநம் மூர். .9.
திருவரங்கஞ் செல்வந் திகழரங்கஞ் செய்யாண்
மருவரங்க மன்பர் வரங்கள் --- தருவரங்கம்
தேன்றுளிக்குஞ் சோலைத் தெருவரங்கஞ் செய்யபுகழ்
ஊன்றரங்க மென்றுரைக்கு மூர். .10.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக