வியாழன், 21 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 6

"மந்த்ர பரச்ந பாஷ்யம் ஸ்ரீ என்.வி.எஸ் அவர்களது நடையில் தொடர்கிறது.”

ஜாதகர்ம ப்ரகரணம்

ஜாத என்றால் பிறந்ததும், கர்மா என்றால் செய்யவேண்டிய ஸம்ஸ்கார விஷயம் என்பது பொருள். ஸத்புத்ரன் பிறந்ததும் பித்ரு கடன் தீருகிறது.

புத்ரன் பிறந்தாலும், யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நாநம், க்ரஹண காலம், ஸங்க்ரமணம் (முடியும் மாதமும் பிறக்கும் மாதமும் சந்திக்கும் தருவாய்) ஆகிய இக்காலங்கள் இரவு நேரம் ஆயினும் ஸ்நாநம் செய்தே தீரவேண்டும். மற்ற காலங்கள் இரவில் ஸ்நாநம் நிஷேதம் (செய்யக்கூடாது).  உணவு உட்கொண்டிருந்தாலும் "சசேல ஸ்நாநம்" என்னும் இடுப்பில் உடுத்தியிருக்கும் வஸ்த்ரத்துடன் (வேஷ்டியுடன்) தீர்த்தமாடி உடனே ஜாதகர்மாவைப் பண்ணவேண்டும்.

குளிர்ந்த ஜலம் உள்ள குளம் - தடாகத்தில் தண்ணீர் மேலெழும்பும்படியாக குதித்துக் குளிக்கவேண்டும். மேலெழும்பித் தெறிக்கும் தண்ணீரினால் பித்ருக்கள் அதிக ஆனந்தமடைகிறார்கள்.

தொப்புள்கொடி அறுக்கப்படும்வரை தீட்டில்லை. அந்த காலத்தில் தானம் செய்வதும், வாங்குவதும் தோஷம் ஆகாது. புதிதாகக் குழந்தை பிறந்த இல்லத்தை நோக்கி தேவர்களும், பித்ருக்களும் ஆவலுடன் வருகிறார்கள். ஆகையால் அந்த தினம் மிகச் சிறந்த தினமாகும். ஆகையால் அன்று முழுவதும் (இரவானாலும்) ஸ்வர்ணம் (தங்கம்), பூமி, பசு, குதிரை, குடை, ஆடு, வஸ்த்ரம், புஷ்பம், படுக்கை, ஆஸநம், வீடு, தான்யம், சித்ரான்னம், வெல்லம், நெய் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

தொப்புள் கொடி அறுப்பதற்கு முன்போ அல்லது தீட்டுப்போன உடனேயோ, ஹிரண்யம் அல்லது ஆம ரூபமாக நாந்தீ ச்ராத்தம், தானங்கள் போன்றவற்றைச் செய்துவிடவேண்டும். நாந்தியை அன்ன ரூபமாகச் செய்வதை தவிர்க்கவேண்டும். தானங்களை உடனே செய்ய இயலாமல் ஏதாவது அஸெளகர்யம் ஏற்பட்டால்தான் 10 நாள் தீட்டுப்போனபின் உடனே செய்யவேண்டும். ப்ரதி (ஒவ்வொரு) வருடமும் அவரவர் பிறந்த நக்ஷத்திரத்தன்று அன்ன தானம் செய்யவேண்டும். ஆஹிதாக்நியாக இருந்தால் ஜாதேஷ்டியைச் செய்யவேண்டும். (யஜ்ஞங்களையும், ஒளபாஸனத்தையும் விடாமல் செய்து வருபவருக்கு "ஆஹிதாக்னி" என்று பெயர்.

மேலும் அக்னிகார்யங்கள் பற்றி விளக்கம்பெற :http://www.brahminsnet.com/forums/showthread.php/1260

இதைச் செய்வதால் - வலிமையான சரீரம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நிலைத்த புகழ், கூர்மையான புத்தி, இளமையில் கொடிய நோயினால் பாதிப்படையாமை, துர்க்ரஹங்களின் தொல்லையின்மை போன்ற நன்மைகளைப் பெறலாம். இதைச் செய்யாதபோதுதான் குழந்தைக்கு வயிற்றுக் கட்டி, இதர தீராத வியாதிகள் வருகின்றன. குழந்தை பிறந்ததும் (ஸந்த்யா காலத்தில் அர்க்யம் விடுவதுபோல) ஸ்நாநம் அவசியம் ஆகும். அகாலத்தில் செய்வது செய்யாததோடு ஒக்கும். பலன் தராது. தற்காலத்தில் ஜாதகர்மா, நாமகரணம், அந்நப்ராசனம், சௌளம் யாவும் உபநயனம் செய்யும்போது சேர்த்துச் செய்கிறார்கள். அதை சாஸ்த்ரம் அனுமதிக்கவில்லை. அந்தந்த காலத்தில் அவ்வவற்றைச் செய்து, தேவ-பித்ருக்களின் அநுக்ரஹத்தை பெறவேண்டும். "ஸகால கார்யம் இஹபர ஸாதகம்" என்பது வாசகம். ஏதோ சிலரே உரிய காலத்தில் செய்து ஷேமமாய் இருக்கின்றனர்.

இவ்விஷயங்களை நாம் கர்மாந்தரார்த்தம் மூலம் அறிகிறோம். இதற்காகத்தான் தீர்க்கதரிசிகளான நம் முன்னோர் இம்மாதிரியெல்லாம் எழுதி வைத்துள்ளனர்.

உரிய காலத்தில் செய்யாவிடில், அதற்கான ப்ராயச்சித்த ஹோமங்கள், ஹிரண்யதானம், க்ருச்ரங்கள் எனப்படும் பணமாகச் செய்யப்படும் தானங்களையும் முறையாகச் செய்துவிட்டு காலத்தில் செய்யாது விட்ட கர்மாக்களைச் செய்யவேண்டும்.

வத்ஸ்ப்ர ரிஷியின் குமாரர் இதை ஸமாதி நிலையிலான நிஷ்டையில் ஸாக்ஷாத்கரித்ததால் (நேரிடையாக தரிசித்ததால்) இந்த (ஜாதகர்ம) மந்திரத்திற்கு வாத்ஸப்ரம் என்று பெயர். இம்மந்த்ர ப்ரச்நத்தில் இந்த அநுவாகத்தின் முதல் மந்திரத்தை மட்டும் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. இது தைத்ரிய ஸம்ஹிதை 4ம் காண்டம், 2ம் ப்ரச்நம், 2ம் அநுவாகம் ஆகும். 11 மந்திரங்களைக் கொண்டது. இந்த மந்த்ரங்களுக்கான ப்ரயோகம் மற்ற மந்திரங்களைப்போல் யாகத்தில்தான் பயன்படுகிறது. காலை, மாலை இருவேளையும் அக்நிஹோத்ரம் செய்பவர்கள் இதை இரு காலத்திலும் ஜபம் செய்கிறார்கள்.

திவஸ்பரி :- ஜாதவேதஸ் என்கிற அக்னி பகவான் முதலில் ஆகாசத்தில் ஸூர்யனாகத் தோன்றினார். இரண்டாவதாக யாகங்களைச் செய்யும் நம்மிடம் அரணிக்கட்டையின் வாயிலாக அக்நியாக உற்பத்தியானார். மூன்றாவதாக ஸமுத்ரத்தில் பாடபா அக்நியாக அவதரித்தார். இப்படிப்பட்ட அக்நி தேவரின் அநுக்ரஹத்தைப் பெற, ஒவ்வொருநாளும்  அக்நியை ஜ்வலிப்பித்து உபாஸிக்கின்றனர்.

2. வித்மாதே : - ஓ அக்நிதேவனே! பூமி, ஆகாசம், ஸ்வர்கம் எனும் மூன்று உலகங்களில் நீர் அக்நி, வாயு, ஆதித்யன் என்று மூன்று திருநாமங்களோடு விளங்குவதை யாம் அறிவோம். கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்ற உமது மூன்றுவிதமான பயன்பாட்டு நிலையையும் யாம் அறிவோம். வேதம் ஓதாதவர்களுக்குத் தெரியாததான உமது மற்ற பல திருநாமங்களையும் (ஸஹஸோ யஹோ, தேவேத்த மந்வித்த, மந்த்ரங்கள்) நாம் அறிவோம். தீர்த்தத்திலிருந்தும் அவதரிக்க வல்லவர் நீர் என்பதையும் யாம் அறிவோம்.

3. ஸமுத்ரேத்வா :- ஹே அக்நி பகவாநே! ஸமுத்ரத்திலிருக்கும் உம்மை அருள் வழங்கும் தன்மையுள்ள வருணன் வ்ருத்தி செய்கிறான். மேகத்தில் மின்னல் உருவாய் இருக்கும் உம்மை கர்மங்களுக்கு சாட்சியாய் விளங்கும் சூரியன் வ்ருத்தி செய்கிறான். வான்வெளியில் வஸிப்பவரான உம்மை ஜ்ஞானிகள் நன்கு உணர்வர்.

4. அக்ரந்தக்நி: :- காட்டுத் தீ வடிவமான அக்நிதேவன் ஆகாயத்தில் மேகம் கர்ஜிப்பதைப்போல், காட்டுப் பகுதியில் புதர்களில் பரவி அவற்றை சப்தத்துடன் எரிக்கிறார். கொழுந்துவிட்டுப் பெரிதாக எரியும்போது பூமிக்கும் ஆகாசத்திற்கும் பரவி வெகு து}ரத்திலிருப்பவரும் தரிசிக்கும்படி ப்ரகாசிக்கின்றார்.

5. உசிக் பாவக: அரதி: :- அனைவருக்கும் அருள் புரிவதால் யாவராலும் விரும்பப்படுபவராயும், எல்லாப் பொருள்களையும் சுத்தம் செய்பவரும், அசையும் தன்மை கொண்டவரும், அனைத்தையும் அறிபவருமான அக்நிதேவன், புவியில் இல்லற வேள்விக்கு உதவுமாறு கார்ஹபத்ய அக்நியாக என்றும் நிலைத்து இருக்கும்படி எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டுள்ளார். அக்நியானவர் புவியிலுள்ளவற்றை ஆவியாக்கி, ஆகாயத்திற்குக் கொண்டு சென்று, மழைபொழியக் காரணமாகி உலகத்தை காத்தருள்கிறார்.   தமது ப்ரகாசமான ஒளியினால் ஆகாயத்தினுள்ளும் புகுந்து, அருள் புரிகிறார்.

(ப்ராஹ்மணர்கள் ஒளபாஸனம் மற்றும் யஜ்ஞங்களைத் நந்தாமல் தொடர்ந்து செய்வதால் அக்நியை நித்யம் - நிலைத்த தன்மையுடையவர் என்று சொல்லப்பட்டுள்ளது.)

6. விச்வஸ்ய கேது: :- அனைத்தையும் அறிபவரும், ஜடராக்நி என்ற பெயரில் ஒவ்வொருவரின் சரீரத்தின் மத்தியில் இருப்பவரும், ஜ்வலிக்க ஆரம்பித்ததும் பூமி மற்றும் ஆகாயத்தை ஒளிபெறச் செய்பவருமான அக்நிதேவன், வேள்வியில் ஸமர்ப்பிக்கப்படும் வஸ்த்துக்களை உரிய தேவதையிடம் கொண்டு செல்லும் வழியில் மலைபோன்ற எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையும் பிளந்து கொண்டு, உரியவரிடம் அடைவிக்கிறார்.

(இந்த வேத வாக்யம் ‘அயஜந்த பஞ்ச" என்று முடிகிறது. ‘பஞ்ச" என்பதால் முதல் நான்கு வர்ணத்தாருக்கு மட்டுமன்றி, எந்த வர்ணத்திலும் சேராதவரான ஐந்தாம் வர்ணத்தைச் சார்ந்தவர் செய்யும் வேள்விப் பொருட்களையும் எடுத்துச் செல்கிறார் என்பது புலனாகிறது.)

7. ஸ்ரீணாமுதார: :- பதினாறு விதமான செல்வங்களையும் அடையச் செய்பவரும், அடைந்த செல்வத்தை நிலைத்திருக்க அருள்புரிபவரும், மேன்மையான அறிவாற்றலைக் கொடுப்பவரும், ஸோம யாகம் போன்ற யாகங்களை காத்தருள்பவரும், சிறந்தவரும், ஸஹஸ் என்கிற பலத்தின் குமாரரும், (அரணிக்கட்டையைக் கடைந்து அக்னி உண்டாக்க வேண்டுமானால் மிகுந்த பலம் தேவை, இதனால் இவ்வாறு சொல்லப்பட்டது) மழை ஜலததில் மின்னலாய் ப்ரகாசிக்கின்றவருமான அக்நி தேவதை, விடியற்காலையில் மிகுந்த ப்ரகாசத்துடன் விளங்குகிறார்.

8. யஸ்தே அத்ய: :- மங்களகரமான ஒளிபொருந்திய ஓ அக்நி தேவனே! என்றும் இளமையாய் இருப்பவரே! நெய்யாலும், புரோடாசம் என்னும் உணவாலும் வேள்வி செய்யும் எனக்கு இஹத்திலும், பரத்திலும் நன்மை அளிக்கக்கூடிய செல்வம் மற்றும் புகழைக் கொடுத்தருளும்.

(ஒருவர் இறந்தால் அவருக்குள்ள புகழைக் கொண்டு ‘செத்த பிணமா? சாகாத பிணமா?" என்று கேட்கும் வேடிக்கையான வழக்கு உண்டு. ‘பூத உடலை நீத்து புகழுடம்பை எய்தினார்" என்றும் வழங்குவதுண்டு. ஸத்ய நெறியால் ஹரிச்சந்த்ரனும், வள்ளல் தன்மையால் கர்ணனும், உத்தம பத்திநி வ்ரதத்தால் அருந்ததியும், பழுத்த பக்தியால் ப்ரஹலாதன், குசேலனும், தவ வலிமையினால் த்ருவனும் புகழுடம்பை எய்திவர்களுக்குச் சில சான்றாவர்.)

9. ஆதம்பஜ :- ஓ அக்நி தேவனே! சரு, புரோடாசம் போன்றவற்றை மிகுதியாக உடைய யாகங்களில் உக்தம் எனப்படும் சஸ்த்ர ஸ்தோத்ரம் சொல்லும்போதெல்லாம், அந்த வேள்வி செய்பவனை ஆசீர்வதிப்பதற்காக நீர் அங்கு செல்லவேண்டும். வேள்வி செய்பவன்;, உம்முடையவும் மற்றும் ஸூர்யனுடைய ப்ரீதிக்கும் பாத்திரமாகவேண்டும். உம்மை ஆராதிப்பவன் தான் தன் சந்ததிகள் அனைவரும் பூவுலகில் அனைத்துப் பகுதிகளிலும் புகழ்பெற்று விளங்கவேண்டும். ‘இவன் தந்தை எந்நோற்றான் கொல்" எனும் இலக்கணத்திற்கொப்பத் திகழவேண்டும். இந்த பாலகனின் சந்ததிகளாலும் அவனைப் பெற்ற தந்தைக்கு ஏற்றம் ஏற்படவேண்டும்.

10. த்வாமக்நே :- அக்நி தேவனே! உம்மை தினந்தோறும் ஆராதிப்பவர் மிகுந்த செல்வந்தராகின்றனர். அசுரர்களால் கவரப்பட்டு குகையில் அடைக்கப்பட்ட தேவர்களின் பசுக்களை  அக்நி, அங்கிரஸ், ப்ரஜாபதி போன்ன தேவர்கள், அசுரர்களை வென்று பசுக்களை மீட்டுக்கொடுத்த வ்ருத்தாந்தம் இம்மந்திரத்தில் இயம்பப்படுகிறது.

11. த்ருசாநோருக்ம: :- தன் ப்ராகசத்தால் வெகு தொலைவில் உள்ளவராலும் தரிசிக்கவல்லவராயும், தங்கம் போல் ஜ்வலிப்பவருமானவர் அக்நி தேவன். இவருடைய ஒளிவெள்ளத்தை திரையிட்டு மறைக்க இயலாது. அக்நியில் விதிப்படி ஹோமம் செய்யப்படும் ஹவிஸ் (ஆஹாரம்) ஸூர்யனை வந்தடைகிறது. ஸூர்யனால் மழை உண்டாகிறது என சாஸ்த்ரம் கூறுகிறது. மழைக்குக் காணமான ஹவிஸே மின்னலுக்கும் காரணமாகிறது. இவருக்கு மழை சுக்கிலம் (வீர்யம்) போல் ஆகிறது. இதனை உடைய ஆகாசம் ஹவிசுடன் கூடிய அந்நங்களால் மின்னல் வடிவமாக ஏற்பட்டது. அக்நி தேவன் ஸம்பத்தாகிய செல்வங்களையும் நீண்ட ஆயுளையும் தரவல்லவர். செய்யப்பட்ட ஹோமங்களால் இவர் அம்ருத நிலையை எய்திவிட்டார்.

இம் மந்திரத்தை இந்த கர்மாவில் சொல்லக் காரணம்: இம்மந்த்ரமானது அக்நிசயந யாகத்தில் புதிதாக உண்டான "உகா" என்னும் அக்நியைத் துதிப்பதற்காக ஏற்பட்டது. அவ்விடத்தில் அந்த அக்னியை ஒரு சிசுவாக (குழந்தையாக) வேதம் வர்ணிக்கிறது. எனவே புதிதாகப் பிறந்த குழந்தையின் ஜாதகர்மாவிலும் தேவதா ப்ரார்த்தனா ரூபமாக ஜபிக்கும்படியாக ஆபஸ்தம்ப ருஷி விதித்துள்ளார்.

மந்த்ரப்ரச்நம் 2ல் 12ம் கண்டம்

குழந்தையைப் தகப்பனாரின் மடியில் வைத்துக்கொள்ள மந்த்ரம்

12. ஸ்வதந்த்ரனாக இந்தக் குமாரன் மூலம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஸகல ஷேமங்களும் உண்டாகட்டும். அஸ்மிந்.

புத்ரனை அபிமந்த்ரணம் செய்யும் மந்த்ரம்

13 அங்காத்அங்காத் :- ஏ புத்ரனே! நீ எனது ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் உண்டாகியிருக்கிறாய். ஆத்மாவாக எம்பெருமான் உறைவிடமான ஹ்ருதயத்திலிருந்து நீ உண்டானாய். ஆகையால் அதுவே முக்யமானதாகும். (ஆசை பிறக்குமிடம் மனம். ஸுஹ்ருத் என்று நண்பனை அழைப்பதுபோல்) நானே பிள்ளை என்கிற பெயரில் உன்வடிவில் பிறந்திருக்கிறேன். நீ நீண்டகாலம் ஜீவித்திருப்பாயாக. (சதமானம் பவதி சதாயு: புருஷ:) தோற்றம், குணம், சரீர அமைப்பு, குரல், கை எழுத்து, அங்க அசைவுகள் (மேனரிசம் எனப்படும் சேஷ்டைகள்) போன்றவற்றில் தகப்பனும், மகனும் ஒத்திருப்பதால்  தகப்பன் வேறு, பிதா வேறு என்ற பேதத்தை - வேற்றுமையை மறுத்து ஒன்றுதான் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக