வெள்ளி, 16 மார்ச், 2012

வைத்தமாநிதி 15

குழந்தை விளையாட்டு தொடர்கிறது

தொடர் சங்கிலிகை சலார் – பிலார் என்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்பப் படு மும்மதப் புனல் சோர
பைய வாரணம் நின்று ஊர்வதுபோல்,
உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறைகறங்க
செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்
சிறுபிறை முளைப்போல் நக்க,
செந்துவர்வாய்த் திண்ணைமீதே நளிர்
வெண்பல்முளை இலக
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்டு,
மின்னுக் கொடியும், ஓர் வெண்திங்களும் சூழ் பரிவேடமுமாய்ப்
பின்னற் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்


மின்னிற் பொலிந்த ஓர் கார் முகில்போலக்
கழுத்தினிற் காறையொடும் தளர் நடை நடந்தான்.
முன் நல்ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்
மொடுமொடு விரைந்து ஓடப் பின்னைத் தொடர்ந்து
ஓர் கருமலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவதுபோல்
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்
பலதேவன் என்னும் தன் நம்பி ஓட
பின் கூடச் செல்வான் தளர்நடை நடந்தான்.
ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம் உள்ளடி பொறித்து
அமைந்த இருகாலுங்கொண்டு
அங்கு அங்கு எழுதினாற்போல்
இலச்சினை பட நடந்து, பெருகா நின்ற இன்ப – வெள்ளத்தின்மேல்
பின்னையும் பெய்துபெய்து
படர் பங்கைய மலர் வாய் நெகிழப்
பனிபடு சிறுதுளிபோல் இடங்கொண்ட செவ்வாய்
ஊறி ஊறி இற்று இற்று வீழ நின்று
கடுஞ்சேக்கழுத்தின் மணிக்குரல்போல்
உடைமணி கணகணென,
தடந்தாளிணை கொண்டு தளர்நடை நடந்து
கன்னற்குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
கண கண சிரித்து, உவந்து,
தன்னைப் பெற்றோர் முன்வந்து நின்று
தன்வாய் அமுத முத்தம் தந்து தளிர்ப்பிக்கின்றான்.
பக்கம் கருஞ்சிறுப் பாறைமீதே
அருவிகள் பகர்ந்தனைய அக்குவடம் இழிந்து ஏறித்தாழ,
அணி அல்குல் புடை பெயர,
வெண்புழுதி மேற்பெய்துகொண்டு அளைந்தது ஓர்
வேழத்தின் கருங்கன்றுபோல தெண்புழுதியாடி,
சிறு புகர்பட வியர்த்து ஒண்போது அலர்கமலச்
சிறுக்கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண்போது கொண்ட தவசின்மீதே தளர் நடை நடக்க
மக்கள் உலகினிற் பெய்து அறியா மணிக்குழவி உருவின்
தக்க மாமணிவண்ணன் தன் திருநீர் முகத்துத்
துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர,
பெருநீர்த்திரை எழு கங்கையிலும்
பெரியதோர் தீர்த்த பலம் தரும்.

பொன் இயல் கிண்கிணி சுட்டி புறங்கட்டி
தன் இயல் ஓசை சலன் சலன் என்றிட,
மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற் போல்
என் இடைக்கு ஒட்டரா அச்சோ, அச்சோ,
எம்பெருமான் வாராய் அச்சோ, அச்சோ என்று ஆய்ச்சி உரைக்க
நச்சுவார் முன் நிற்கும் நாராயணனும்,
செங்கமலப்பூவிற் தேன் உண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து பவளவாய் மொய்ப்ப வந்து
அங்கைகளாலே அன்னையை ஆரத் தழுவினான்.
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு
நுனையில் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க,
கிண்கிணி கட்டிக் கிறிகட்டிக் கையினிற் கங்கணம் இட்டுக்
கழுத்திற் தொடர்கட்டித் தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து,
அத்தன், கோவிந்தன் ஆயர்கள் ஏறு,
அன்னை புறம் புல்குவான்.
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற,
கொத்து ஆர் கருங்குழற் கோபால கோளரி அத்தன்
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்.

“தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன்!
போக வேண்டா, அரவு அணையாய், ஆயர் ஏறே,
அம்மம் உண்ணத் துயிலெழாயே!
ஆயர்பாடிக்கு அணி விளக்கே!
அமர்ந்து வந்து நான் சுரந்த முலை உணாயே” என்று
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி வேண்ட
என்ன நோன்பு நோற்றாள்கொலோ
இவனைப் பெற்ற வயிறு உடையாள் என்னும் வார்த்தை எய்துவித்து
வண்டு உலாம் பூங்குழல் அசோதை இளஞ்சிங்கம்,
திருமலிந்து திகழு மார்வு தேக்க வந்து,
வனமுலைகள் சோர்ந்து பாய, அவள் அல்குல் ஏறி,
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்து உதைத்து,
முத்து அனைய முறுவல் செய்து, மூக்கு உறிஞ்சி,
ஒரு முலையை வாய் மடுத்து
ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையாய்
ஏங்கி ஏங்கி இருந்து உண்டான்.
அங்கமலப் போதகத்தில் அணிகொள் முத்தம்
சிந்தினாற்போல் செங்கமல முகம் வியர்ப்ப,
தீமை செய்து இம்முற்றத்தூடே அங்கம் எல்லாம்
புழுதியாக அளைவது விடுத்து,
சந்தன மலர்க்குழல் தாழ ஓடஓடக்
கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசையுடன், தான் உகந்து ஓடி,
தனியே வந்து, அன்னை முலைத்தடம் தன்னை வாங்கி,
வாயில் மடுத்து நந்தன் பெற்ற நம்பி
அம்மம் சேமம் என உண்டான்.
பின் விண்ணெல்லாம் கேட்க அழுதிட அன்னையும்
அவன் வாயில் விரும்பி அதனை நோக்கி
மண்ணெல்லாம் கண்டு தன் மனத்துள்ளே அஞ்சி
மதுசூதனே என்று இருந்தாள்.  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக