குழந்தை விளையாட்டு
சகடம் சாடி தழும்பு இருந்த தாளன்,
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்,
இந்திரன் தந்தப் பொன்முக கிண்கிணி ஆர்ப்ப,
தூநிலா முற்றத்தே போந்து விளையாடுகின்றான்;
புழுதி அளைந்தும் “வான் நிலா அம்புலீ, சந்திரா வா” என்று
தன் சிறுக்கைகளால் திங்களைக் காட்டி அழைக்கின்றான்;
சக்கரக்கையன் தடங்கண்ணால் மலர விழித்து,
மைத்தடங்கண்ணி யசோதையின்ஒக்கலையின் மேலிருந்து,
அம்புலி சுட்டிக் காட்டி மழலை முற்றாத இளஞ்சொல்லால்,
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற,
”விண்தனில் மன்னிய மாமதீ மகிழ்ந்து விரைந்து ஓடி வா”
என்று கூகின்றான்.
செலவு பொலி மகரக்காது திகழ்ந்து இலக,
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன் முன்
முன்ன முகத்து அணிஆர் மொய் குழல்கள் அலைய;
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு
சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர,
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளி முளைபோல் சில பல் இலக,
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
கனிவாய் அமுதம் இன்று முறிந்து விழ,
செங்கமல கழலிற் சிற்றிதழ்போல் விரலில் சேர்திகழ்
ஆழிகளும் கிண்கிணியும் அரையிற் தங்கிய பொன்வடமும்
தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும்,
மோதிரமும் கிறியும் மங்கல ஐம்படையும் தோள்வளையும்,
குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக,
”ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை,
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை,
ஆயர்கள் நாயகனே, என் அவலம் களைவாய்
ஆடுக செங்கீரை” என்று அன்னநடை மடவாள்
அசோதை உரைக்க அண்ணல் செங்கீரை ஆடினான்.
வேய்ந்தடந்தோளி ஆய்ச்சி அரைமேல் நின்று இழிந்து
கோவலர் தம் மன் கூர்வேற் கொடுந்தொழிலன்
நந்தகோபன் அரைமேல் ஏறி, மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப,
மருங்கின்மேல் ஆணிப்பொன்னாற் செய்த
ஆய் பொன்உடை மணி பேணி, பவளவாய் முத்து இலங்க,
பொன் அரைநாணொடு தனிச்சுட்டி தாழ்ந்து ஆட,
சப்பாணி கொட்டினான் செங்கண் மணிவண்ணன்.
”சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் கொண்ட கைகளால்
கொட்டாய் சப்பாணி, கோவலனே கொட்டாய் சப்பாணி,
குடம் ஆடி கொட்டாய் சப்பாணி” என்று பெரியன ஆய்ச்சியர் சாற்ற
பல்மணிமுத்து இன்ப பவளம் பதித்தன்ன
இலங்கு பொற்தோட்டின்மேல் மணிவாய் முத்து இலங்க
அம்மை தன் அம்மணிமேல் சப்பாணி கொட்டினான்.
அப்பம் தருவர் அவர்க்காகச் சாற்றிஓர் ஆயிரம்
சப்பாணி கொட்டினான்.
முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்,
முறைமுறை தம்தம் குறங்கிடை இருத்தி,
”எந்தையே! என்தன் குலப்பெருஞ்சுடரே!
எழுமுகிற் கணத்து எழில் கவர் ஏறே! உந்தை யாவன்?” என்று உரைப்ப,
செங்கேழ் விரலினும் கண்ணிலும் காமர்தாதை காட்ட,
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
நந்தகோபாலன் பெற்றனன் புகழே.
……………. கண்ணன் விளையாட்டு
நாளையும் தொடரும்.
(சென்னையிலிருந்து மின் மறைவுப் பகுதிக்கு வந்து விட்டேன். அதனால் எப்போதோ எட்டிப்பார்க்கும் மின்சாரம் இருக்கும்போது தட்டச்சிட முடிந்ததை இங்கு இடுவேன்)
Manargudi Sri Rajagopalachar swmay Upanyasam on my channel rdevanathan1 on youtube may be visied under the title"priyashvarun Kannanum"
பதிலளிநீக்குDasan
R.Devanathan