வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 6

          11. கஜேந்திர மோக்ஷம் (யானையின் துயர் தீர்த்தருளியது)

           ஒருநாள் கொழுந்து அலரும் மலர்ச்சோலைக்கு , மீன் அமர்இலை ஆர்மலர்ப் பூம்பொழில் பூரம்கொள் பொய்கையில், நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு, “வைப்பன் மணிவிளக்கா மாமதியை மாலுக்கு” என்று எப்பொழுதும் கைநீட்டும் ஆனை சென்று, நால்வாய் மும்மதத்து இருசெவி தனிவேழம் கடிகொள் தாமரை வாங்க, களிறு முடியும் வண்ணம் காலை ஓர் முழுவலி பதக முதலை பற்ற, பிலம்புரை பேழ்வாய் வெளிஎயிறுஉற அதன் விடத்தினுக்கு அனுங்கி, தடம் மால்வரை போலும் போர்யானை கோட்பட்டு நின்று அலறி, நடுக்குற்று, குலைந்து, உள்நினைந்து, துவண்டு, “நீ அன்றி மற்றுஒன்று இலம் நின் சரணே” என்று நீர்மல்கக் கமலம் கொண்டு ஒரு நெடுங்கையால் கூப்பி, “ நாராயணா ஓ! மணிவண்ணா, நாகணையாய் ஓ! வாராய் என் ஆர்இடரை நீக்காய் என் கண்ணா, என் கண்ணா” என்று நினைந்து கதற, நாவளம் நவின்று அங்கு ஏத்த, திருமால் வெகுண்டு, உதவப்புள் ஊர்ந்து, செம்புலால் உண்டு வாழும் முதலைமேல்ச் சீறிவந்தான், பெண் உலாமசடையினானும் பிரமனும் உன்னைக்காண்பான் எண்இலா ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப, விண் உளார் வியப்ப ஓடிவந்து ஆனையின் அருந்துயர்கெட, மதம் ஒழுகு வாரணம் உய்ய மாமுதலை கோள்விடுப்பான், தன் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர அருள் செய்தான் ஆழிப்படையான், கொடிய வாய்விலங்கின் உயிர் மலங்கக்கொண்ட சீற்றத்தால் சென்று சுடு ஆழி தொட்டுவன் முதலை துணிபட இரண்டுகூறாக கொடுமாமுதலைக்கு இடர்செய்தான் செங்கண் பெருந்தோள் நெடுமால். கைம்மதயானை இடர்தீர்த்த கருமுகிலை, தூம்பு உடைப்பணைக் கைவேழம் துயர் கெடுத்தருளிய அம்மானை, நரகத்தின் நடுக்கம் தீர்த்தானை, பொள்ளைக்கரத்தப் போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனை அடைக்கலம் புகுவோம்.

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன்சேவடிமேல் அன்பாய், துணிந்தேன்
புரிந்து ஏத்திஉன்னை, புகலிடம்பார்த்து ஆங்கே
இருந்துஏத்தி வாழும் இது.

12. நீறு பூசி ஏறு ஊரும் சிவன் சாபம் தீர்த்தது
      {பிண்டி ஆர் மண்டை ஏந்தி, பிறர்மனை திரிந்து உண்ணும் முண்டியான் துயர் நீங்கியது}

        அயன் அரனைத்தான் முனிந்து இட்ட, வெம்திறல் சாபத்தால், துண்ட வெண்பிறையணிந்து, வெந்தார் என்பும் சுடுநீறும் மெய்யில் பூசி, கையகத்து ஓர் சந்துஆர் தலைகொண்டு மூவுலகும் பலிதிரியும் ஈசன், சென்று மாமணி வண்ணனிடம் “என் எந்தாய்! சாபம் தீர், முகில்வண்ணா ஓ ஈன்அமர் சாபம் நீக்காய்” என இரந்தான் இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள குறைஇரப்ப, இரங்கி, வெண்த்தலைப் புலன் கலங்கஉண்ட பாதகம்கெட, மாறுஒன்று இல்லா வாசநீர், அலங்கல் மார்வு அகலத்து குருதிநீர், இலங்கு அமுதநீர் அளித்து மண்டை நிறைத்து இடர் நீக்கினான் அரவின் அணைமேலான் செக்கர்மேனி நீறு அணிந்த புன்சடைக்கீறு திங்கள் வைத்தவன், நக்கன், ஊன்முகம் ஆர்தலை ஒட்டு ஊண் ஒழித்து, பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனைத்தன் உந்தியிலே உறையவைத்தான்.

      ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமேல் அணிந்து, உடலம் நீறுபூசி, ஏறுஊரும் ஈசற்கு இசைந்து உடம்பினால் ஓர்கூறு தான்கொடுத்தான் வானைஆர் அமுதம் தந்த வள்ளல் ஆலமர கீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த, ஆலம் அமர் கண்டத்து அரன், ஐந்து பொறிவாசல் கதவும் சாத்த அறிவானாம் நெறிவாசல் தானேயாய் நின்ற நிமலனை

     சுடலையில் சுடுநீறன் அமர்ந்தது ஓர் நடலை தீர்த்தவன் புரங்கள் மூன்றும் ஓர்மாத்திரைப்போதில் பொங்கு எரிக்கு இரைகண்டவன், ஒருவன் ஒருவன் அங்கத்து என்றும் உளன்.

அரன் நாராயணன் நாமம் ஆன்விடைபுள் ஊர்தி
  உரைநூல் மறையுறையும் கோயில்
  வரைநீர், கருமம் அழிப்பு அளிப்பு கையதுவேல்
நேமி! உருவமெரிகார் மேனியொன்று.”

“ தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
  சூழ்அரவும் பொன்னாணும் தோன்று மால்
  சூழும் திரண்டருவிபாய் திருமலைமேல் எந்தைக்கு
  இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து”

         புக்கு அடிமையினால் தன்னைக்கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்கப்பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே; மன்னும் நான்மறை பெற்ற மைந்தனை மதியாத வெம்கூற்றம் தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய், கதவுஇல் காலனை உகமுனிந்து ஒழியா பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம் எண்ணியபேர் அருள் செய்தான் பாதமலர் ஏறஇட்டு உண்மலர்த்தொங்கல் மார்க்கண்டன் கண்ட வகையேவரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்டநிலை இந்த ஏழுலகமும் மற்றும் இவைஆ என்று வாய் அங்காத்து முற்றும் மறையவர்க்குக் காட்டிய மாயவன்.

தானே உனக்கு உவமன்தன்உருவே எவ்வுருவும்
தானே தவஉருவும் தாரகையும், தானே
எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்து
இருசுடரும் ஆய இறை.

முனியே நான்முகனே முக்கண்ணப்பா
தனியேன் ஆருயிரே! இனிநான்போகல் ஒட்டேன் உன்னையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக