வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கீதைக் குறள்

வழக்கம்போல திருவல்லிக்கேணி நடைபாதைக் கடையில் தேடிக் கொண்டிருந்தபோது கையில் கிடைத்த ஒரு நூல்  “கீதைக் குறள்”.  புரட்டிப் பார்த்தபோது அடியேன் சந்தோஷப்பட அதில் சில விஷயங்கள் இருந்தன.  நூலின் ஆசிரியர் திரு குருசாமி (ஓய்வு பெற்ற டெபுடி கலெக்டராம்) எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது முதலில் அடியேனை மகிழ்வித்தது.   நூலாசிரியர் இந்த நூலை அனேகமாக எனக்காகவே எழுதியிருக்க வேண்டும் என அவரது முன்னுரையிலிருந்து  அறிந்த அந்த சந்தோஷம் அடுத்தது. “……கீதைக்குறள் என்ற நூலை நான் எழுதியதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. இந்நூல், சில சொற்கள் அடங்கிய குறள் வெண்பா வடிவத்தில் அமைந்திருப்பதால் வடமொழியில் தேர்ச்சி பெறாத தமிழ் அறிந்தவர்கள் பாராயணம் செய்வதற்கும்,சிறந்த பகுதிகளை மனனம் செய்து சிந்திப்பதற்கும் ஏற்றதாக இருக்குமென்பதே அக்காரணமாகும்.”  (எனக்கு தமிழ் தெரியுமா எனக் கேட்டுவிடாதீர்கள். அதுவும் தெரியாது என்பதே உண்மை. நாலாயிரத்தில் ஒரு நூறும் அறியாதவன் தமிழ்தெரிந்தவனாக இருக்க முடியுமா?) இப்படி எழுதிய நூலாசிரியர், கீதையைக் குறளாக மட்டும் எழுதிப் போகாமல், சிறு பொழிப்புரையும் எழுதியிருப்பது இன்னும் உதவியாக இருப்பது அடுத்த சந்தோஷம்.

ஓம்வடிவாம் வேழத் தொருவன் கழல்பேணத்
தாம்வருமே கீதைக் குறள்.

பற்றொழித்துச் செய்கைப் பயனோக்கா தாற்றுகெனச்
சொற்றவன்றன் நற்றாள் துணை.

என  விநாயகரையும், கண்ண பரமாத்மாவையும் துதித்து ஆரம்பிக்கின்ற இந்த நூலில் முதல் அத்தியாயமான “அருச்சுனன் தளர்வியல்”  இப்படி ஆரம்பிக்கிறது

திருதராட்டிரன் கூற்று:-
அறஞ்சேர் குருநிலத்தே  ஆர்ப்பெழுந்தார் என்னோ
உறச்செய்தார் சஞ்சயநீ ஓது.

பொழிப்புரை:—சஞ்சயா, அறநிலமாகிய குருநிலத்தில் போரின்கண்ணே வந்த நம்மவர்களும், பாண்டவர்களும் என்ன நேரும்படி செய்தார்கள்? கூறுவாயாக.

குறிப்புரை  அறஞ்சேர் குருநிலம் – அதருமம் மிகுங்காலத்தே போர் மூள்கின்றது. போரின் இறுதியில் தருமம் நிலைபெறுகிறது. இதுபற்றியே போர்க்களமாகிய குருச்சேத்திரம் “அறஞ்சேர் குருநிலம்” எனப்பட்டது. உற—நேரும்படி

இப்போரினைப்போலவே, நம் உடம்பினுள்ளும், நற்குணங்களுக்கும் தீய குணங்களுக்குமிடையே என்றும் போர் நிகழ்கிறதென்பதும், இருள் நிறைந்த சீவன் ஞானக்கண் பெற்ற குருவினுதவியால் இப்போரின் தன்மையை அறிய இயலுமென்பதும் உட்கருத்தாகும்.

       1985ல்  வெளியிடப் பட்டிருக்கும் இந்நூல் காபிரைட் பாதுகாப்பைப் பெற்றுள்ளது. உரிமை பெற்றுள்ள  நூலாசிரியரின் மகள் சம்மதித்தால் அந்நூலை இங்கு வெளியிடுவேன்.

பாண்டவர் தம்படையைப் பார்த்துச் சுயோதனனும்
ஈண்டுதுரோ ணர்க்கியம்பும் ஏற்று.

ஐவர் படையை அணிவகுத்தான் நின்சீடன்
மையில் துருபன் மகன்.

வில்விசயன் வீமனுறழ் வீரர் யுயுதானன்
வெல்விரா டன்காசி வேந்து.

சேகிதா னன்திட்டகேதுபுரு சித்துகுந்தி
போசசைபி யன்றுபன் போந்து.

அஞ்சா உதாமன் அபிமன்னன் உத்தமசு
பஞ்சாலி மைந்தரையும் பார்.

என வளரும் இந்நூலை இங்கு எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள அருள அந்த கீதாசார்யனே துணை.

3 கருத்துகள்:

  1. கல்லூரியில் படிக்கும் போது (1989 - 93) எனக்கு வத்திராயிருப்பு நூலகத்தில் இந்த நூல் கிடைத்தது. அப்போது மிகவும் விரும்பி ஒரு பழைய ரெகார்ட் நோட்டில் எழுதி வைத்துக் கொண்டேன். இப்போதும் என்னிடம் இங்கே அமெரிக்காவில் இருக்கிறது. என்னுடைய நோட்டில் குறட்பாக்களை மட்டுமே குறித்து வைத்துக் கொண்டேன். நீங்கள் பொழிப்புரையுடன் அந்த நூல் கிடைத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் இங்கே இடப்போகிறீர்கள் என்று அறிந்து மகிழ்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. திரு குமரன்,
    மல்லி குமரன்தானே? உடன் படித்து கருத்து இட்டமைக்கு மிக்க நன்றி.
    முதலில் அனுமதி பெற்று அதன்பின் இங்கு இடலாம் என்றிருந்தேன். ஆனால், முன்பின் தெரியாதவர்களிடம் அனுமதி வாங்குவது -- அதுவும் 25 ஆண்டுகள் கழித்து அவர்களைத் தேடிப் பிடித்து--- எளிதா என்ற ஐயம் இப்போது!அதனால் ஆக்ஷேபணை வரும்வரை இடுவது என முடிவெடுத்து விட்டேன்! விரைவில் தொடர்வேன்!

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் ஐயா. மல்லி குமரன் தான்.

    பதிலளிநீக்கு