திங்கள், 20 டிசம்பர், 2010

வைணவ ஆசாரியர்கள்.

யமுனைத் துறைவர்



5. சிறுபிள்ளை கேட்டவை

வேந்த னவையிற் சாந்தமொடு
        வியப்பும் நிலவ நாட்டங்கள்
பாய்ந்த சிறுவன் றன்பாலே
         செவிகள் படிந்த வத்திசையே
வாய்ந்த புலமைப் பெரியோன்முன்
         பாலன், “வலவ! மறுத்திடுவாய்
ஆய்ந்து நின்ற னன்னையவள்
          வந்தி யென்ப” னென்றனனே.                       42.

வேந்தனவையில் மக்கள் சாந்தமொடும் வியப்போடும் அமர்ந்திருந்தனர். இவர்கள் கண்களும் செவிகளும் இச்சிறுவனை நாடின.  முதல் விஷயம்.; நின் அன்னை வந்தி --- உனது தாயார் மலடி. பாய்ந்த – பாய்ந்தன.

புலவன் நெடிதே தானாய்ந்தும்
      மறுக்க வகையே புலர்ந்திலதே
“இலனோ யானென் னன்னைதனை
            வந்தி யென்றே யியம்பற்கே?
உலவை யொப்பா னிவனொருவன்
            இங்ங னுரைத்த லென்னெனவே
உலக மிகழ்தல் செய்யாதோ?”
            என்றே கலங்கி யொல்கினனே.                43.

புலவனது கலக்கம்.  உலவை – உலர்ந்த மரம்

“நல்லாய்! இந்த நரபதிதான்
            தரும வானா மென்பலியான்
வல்லை யென்னில் மேற்கோள்கள்
            வரைந்து மறுப்பாய்” என்றிதனை
வல்லோர் மலங்க விச்சிறுவன்
            பகர மனத்துட் கலக்கமெழ
“எல்லை யிற்றே னின்”றென்றே
            இறுமாப் பிற்றான் பண்டிதனே.                   .44.

இரண்டாவது விஷயம்;  இம் மன்னன் தருமவான்.   இற்றேம் – முடிந்தோம். இறுமாப்பு இற்றான் – இறுமாப்பு ஒழியப் பெற்றான்.

“வேந்த னறத்தின் வடிவெனவே
            விரவு மன்பால் விளம்புவரே
பாந்தள்   தனினுஞ் சீறானோ
            பாவி யிவனென் றியம்பிடினே?
மாந்த ரினமு மிகழாவோ
            நன்றி மறந்தா னிவனென்றே?
போந்த தென்பாற் புன்கண்ணே”
            என்றே சுழலும் புலவரனே.                           .45.

புன்கண் – துன்பம்

“வேறொன் றிதுகேள் மிகவல்லோய்!
            வேந்தன் தேவி பதிவிரதை
தேறி மறுப்பா யிதுதன்னைத்
            தெளிவார் சான்று தனையோதி”
மாறொன் றில்லா விதுதன்னைச்
            சிறுவ னியம்ப வணங்காதான்
கூறி லிடியே றிறுத்திட்ட
            கோடே போலக் குலைந்தனனே.                       .46.

மூன்றாம் விஷயம்;  அரசமாதேவி பதிவிரதை. தெளிவு ஆர் சான்று --- தெளிவான சான்று. வணங்காதான் – ஒரு புலவனுக்கும் கீழ்ப்படியாத வித்துவான். கூறில் – இவனது மனத்துயரத்தை விவரித்தால். இடி ஏறு இறுத்திட்ட கோடு போல --- வலியதான இடியால் தாக்கப்பட்ட மரம் போல.

“ஐயோ! அழிந்தே னகந்தையினால்
            அரசி தன்பா லகங்கூறல்
வெய்தே யாமே என்செய்கேன்
            மேலு மிதுவோ பெண்பாவம்
வைய மிதனிற் கொடிதொன்றும்
            வைத்த லிலதா” லெனநைந்து
கையிற் சிரமே தான்தோயக்
            கவலை நீத்தத் தாழ்ந்தனனே.                                 .47.

புலவன் வருந்தியமை. வெய்தேயாம் – கொடியதாம். இதனில் கொடிது ஒன்றும் வைத்திலது – இதனிற் கொடிது வேறொன்றுமில்லை. கையில் சிரமே தான் தோய --- கையில் தலையைச் சாய்த்து. நீத்தம் – வெள்ளம்.  கவலை நீத்தம் --- கவலையாகிய கடல்.

இறைவன் சிறுவன் முன்னணுகி
            “இளைஞ! இவற்று ளொன்றேனும்
குறையே கூறி மறுத்திடவே
            கூடு மென்னிற் செய்”கெனவும்,
“இறைவ! இவன்றா னிறுமாப்பால்
            இழுக்கே யுற்றா னுலகினிலே
நெறியே பரவ இவனாகான்
            எனவே யிலனே இவனாவான்.                                  .48.

“இவற்றுள் ஒன்றேனும் நீ மறுப்பாயா?” என அரசன் கேட்கச் சிறுவன் கூறியது. இவன் இறுமாப்பால் இழுக்குற்றவன். உலகம் வாழ இவன் பயனுறுவதில்லை. ஆதலால் இவன் இலன் என்றே கருதத் தக்கவன்.

“இவனை ஒன்றாய்ப் பெற்றவளோ
            தாயே யல்லள் வந்தியளே!
நவையே வாயும் நாட்டினர்த
            மேத மியாவும் நரபதிபால்
குவியு மிதனாற் கோமானும்
            எவ்வ முடையா னெனலாமே
இவனே நலம்பெய் புரோகிதனா
            யேற்றல் தானு மிழுக்கன்றோ.                     49.

சிறுவன் மேலும் கூறியது; ஒரு மரமும் தோப்பன்று. ஒரு மகனும் பிள்ளையன்று என்பர். இவன் தனது தாய்க்கு ஒரே மகன்; இதனால் மகனெனக் கருத இயலாது. இரண்டாவதாக உலகினர் செய்யும் பாவமெல்லாம் அரசனைச் சேரும். இப்புலவனைத் தனக்காக மன்னன் கொள்வது இழுக்காகும்.

“மணங்கொள் நங்கை வதுவைதனில்
            வருணன் முதலோர் தமக்காகி
வணங்கொள் நாதன் றனக்காகும்
            வண்ண மிதனா லொருவர்க்கோ?
இணங்க நூலு மிதுகூறும்
            என்னில் மறுப்பே இதுவன்றோ?
குணங்கொள் தேவி நின்பாலே
            குலவு முளத்தாள் கோமானே.”                       .50.

மேற்கோள் இது. குணங்கொள் தேவி ……. உளத்தாள் --- உத்தமியான அரசமாதேவி நின்பால் அன்புடையவள் மூன்றாவதற்கு விடை : திருமணத்தின்போது மணமகள் வருணன் முதலிய நால்வர்க்கு உரியளாகிப் பின்னர் கணவனுக்கு உரிமை பெறுகிறாள். ஒருவர்க்கோ?  -- ஒருவனுக்கோ உரிமை? இணங்க நூலும் இது கூறும் --- நூலிலிருந்து.

என்றிவையே யவைதன்னிற் கலையோதி
            இளஞ்சீய மியம்பக் கேட்டார்
நன்றென்றார் நம்மிடையே நாமகளே
            இவ்வுருவிற் போந்த தென்றார்
குன்றனைய தோளான்மன் தன்னுடைய
            புரோகிதனின் குறைவு கூறி
வென்றவிளம் பிள்ளைதனை மீப்புகழ்ந்து
            தன்னரசிற் பாதி யீந்தான்.                                      .51.

அவையிலுள்ளோர் சிறுவனைப் பாராட்ட, அரசன் இவனுக்குத் தனது இராச்சியத்தில் பாதி அளித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக