வெள்ளி, 24 டிசம்பர், 2010

வைணவ ஆசாரியர்கள்.

2. யமுனைத்துறைவர்.

6.மணக்கால் நம்பி பச்சையிட்டமை

பொன்னி யன்னவப் பூபனின் தேவியோ
பன்னு தேசுடைப் பாலக னைத்தழீஇ
”என்னை யாளவந் தானிவன்” என்றலும்
மன்ன லாயதே மண்ணினி லிப்பெயர்.                              .52.

இச்சிறுவனுக்கு ஆளவந்தார் எனப் பெயர் வந்ததன் காரணம். பொன்னி –இலக்குமி. தழீஇ –தழுவி.

இன்ப வாரிதி யிழிந்தவிம் மன்னவன்
அன்பி னிச்சிறு வனைக்கலை யாழியைத்
தன்ப தத்தினி லமர்த்தினன் தலைமிசை
மின்ப திந்திடு முடிதனை வேய்ந்தனன்.                              .53.

அரசன் இவனுக்கு முடி சூட்டியமை. வாரிதி – கடல். சிறுவனை கலையாழியை --- கலைக்கடலாகிய பாலகனை. தன் பதம் – தனது சிங்காதனம். மின் பதிந்திடு முடி – ஒளி வாய்ந்த கிரீடம்.

சிறிய னாயினு மியாமுன னரசினுக்
குரிய யாவையு முயவற வியக்கினன்
பெரிய ரியாவரும் பெய்திடு மன்பினில்
அரிய னாளவந் தானிவ னென்றனர்.                                 .54.

சிறுவன் நன்கு அரசு புரிந்தமை. ஆயினும் + யாமுனன் – ஆயினுயாமுனன். உயவு அற – வருத்தமின்றி, எளிதில். பெரியர் + யாவரும் = பெரியோர் யாவரும். ஆளவந்தான் – மக்களை ஆளப் பிறந்தவன், ஆள இயற்கையாக ஆற்றல் வாய்ந்தவன்.

தந்தை யீச்சுர முனிவனு மிவன்கொளச்
சந்த மல்குழ லாளொரு தருணியைப்
பந்த முற்றிடப் பிணைத்தனன் பரிவினில்
சிந்தை யொன்றிட வொன்றின ரிருவரும்.                               .55.

ஈச்வர பட்டர் இவனுக்குத் திருமணம் செய்து வைத்தமை. சந்து அமல் குழல் --- பரிமணம் மிகுந்த கூந்தல். சந்தம் அல் குழல் – அழகிய கறுத்த கூந்தல்.

நங்கை நானிலம் மகிழ்வுற நல்கினன்
பொங்கு சோதியர் புத்திரர் நால்வரோ
எங்கு மேபுக ழியங்கிட இன்னவர்
பொங்கு மேதையர் நெறியினர் பொலிந்தனர்.                        .56.

இந்த நங்கை நான்கு செல்வரைப் பயந்தாள்.

மெய்ய னீச்சுர முனிவன் மைந்திடம்,
”உய்ய வாவன மணக்கால் நம்பியே
ஐய னின்னிடை அருளு” மென்றுதன்
செய்ய னாரிய னடிய டைந்தனன்.                                           .57.

ஆளவந்தாரிடம் தந்தை, “ மணக்கால் நம்பி என்பவர் உனக்கு நல்லன உபதேசம் செய்வார்” எனக் கூறி உயிர் நீத்தார். உய்ய ஆவன – உய்வதற்கு வேண்டுவன. செய்யன் ஆரியன் – தூயோனாகிய உய்யக் கொண்டார்.

குரவ னாணையைக் குறையற வியக்குநன்
விரவு பத்துடை மணக்கால் நம்பியிப்
புரவ லன்றனை யணுகிடப் போதலும்
பரவு பணியினர் தடுத்தனர் பன்முறை.                                  .58.

மணக்கால் நம்பி ஆளவந்தாரைக் காண முயன்றமை. பரவு பணியினர் – பணியில் உற்றவர்.  தடுத்தனர் – உள்ளே புகவொட்டாமல் தடுத்தனர்.

பாக சாலையை நாடினன் நம்பியும்
போக மாமெனப் புரவலன் தூதுளைச்
சாக மேற்பது கேட்டன னிதுதனை
ஆக மோங்கிட வைகலு மளித்தனன்.                                     .59.

பாகசாலை – சமையலறை. மணக்கால் நம்பி சமையலறையிட்புக்கு, ஆளவந்தார் விரும்புவது தூதுளங்கீரை எனக் கேட்டு இதனைத் தவறாது நாடொறும் அளித்து வந்தார். சாகம் – கீரை. போகம் – விருப்பம். ஆகம் – உள்ளம்.

கால மிங்ஙனம் கழிதலும் நம்பியோ
மேல வற்கென வளித்தில னொருபகல்
சால வேட்பது பெற்றிலன் தலைவனும்
சீல னம்பியின் செயல்தனை யறிந்தனன்.                                  .60.

ஒரு நாள் நம்பி கீரை அளிக்கவில்லை. ஆளவந்தார் இதனைக் கொடுப்பது நம்பி என அறிந்தார். வேட்பது – விரும்புவது. தலைவன் – அரசன், ஆளவந்தார்.

“இன்னவ னிவனொருகா லேகிடிற் பொருக்கெனவே
என்னரு கனுப்பி”ரென இறையவ னியம்புதலும்
பொன்னனை வணனொருவன் பின்றையப் புரவலன்முன்
தன்னுடைத் தலைவணக்கிச் சாற்றினன் விசயமதே.                   .61.

சீலன் + நம்பி – சீலனாகிய மணக்கால் நம்பி. “இந்நம்பி மறுபடியும் இங்கு வந்தால், இவரை என்னிடம் அனுப்புக” என்று ஆளவந்தார் ஆணையிட, மறுநாள் அந்நம்பியை அரசன் முன்னர் நிறுத்தினர், பணியாளர். பொன் அனை வணன் – பொன்போலும் சோதி வாய்ந்த மேனியுடைய ஒருவர்.. பின்றை – மறுநாள். சாற்றினன் விசயம் – ஜயவிஜயீபவ என வாழ்த்தினான்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக