வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

மனிதன் மாறவில்லை!

பாவ மன்னிப்பு என்று ஒரு பழைய சினிமா வந்ததே, அதில் “மனிதன் மாறிவிட்டான்” என்று ஒரு பாட்டு ஞாபகம் இருக்கிறதா? அது வந்த போதில் அந்தப் பாட்டில் சொன்னது எல்லாம் உண்மை என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதில் பூராவும் உண்மையில்லை என்று இப்போது தோன்றுகிறது.

ஆடைகளால், பழக்க வழக்கங்களால் , மேலை நாட்டு நாகரீகங்களுக்கு அடிமையாய் மாறினோம். வழிவழியாய் வந்த நல் ஆசாரங்களை மூட நம்பிக்கை என்று உதறித் தள்ளினோம். அவர்களிடமிருந்து எது தேவையில்லாததோ அதை முழு “அர்ப்பணிப்போடு” ஏற்று செயல்படுகிறோம். (உதாரணமாக, இந்த அப்பா தினம், அம்மா தினம், காதலர் தினம் etc) ஆனால் எதைப் பின்பற்ற வேண்டுமோ அதைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிப்பதில்லை என்பது நம் கொள்கையாகிப் போயிற்று.

இந்த வழக்கம் காசு கொடுத்துப் பத்திரிகை வாங்கிப் படிப்பதிலும் ! அதிலும் ஸம்ப்ரதாயப் பத்திரிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம்.

அடியேன்வசம் அவ்வப்போது கிடைக்கும் பல பழைய இதழ்களிலும் இதழ் தப்பாமல் அதன் நிர்வாகிகள் எல்லாரும் “சந்தா பாக்கி” நினைவூட்டல்களை இதழ்தவறாமல் வெளியிட்டுக் கிட்டத்தட்ட வாசகர்களிடம் கெஞ்சியிருக்கிறார்கள். ஆனாலும் பலனிருந்ததாகத் தெரியவில்லை.

அதிலும் இந்த “ஸம்ரக்ஷணீ” என்ற இதழின் ஆசிரியர் பாவம் சந்தா வசூலுக்குக்காக, மாதம்தோறும் இதழில் நினைவூட்டி, அதன்பின் கடிதங்கள் மூலம் வேண்டியும் பலனில்லாமல் ஊர் ஊராகப் போய் நேரில் சந்தித்து வசூல் செய்ய முயன்றிருக்கிறார். அதிலும் முழு வெற்றி கிடைக்கவில்லையாம். அதன்பின் 1941ல், 1938லிருந்து 1940 வரை சந்தா செலுத்தாதவர்கள் சந்தா பாக்கியைத் தள்ளுபடி செய்து 1941க்காவது சந்தா அனுப்பச் சொல்லிக் கதறியிருக்கிறார். இரண்டாம் உலக யுத்தம் காரணமாகக் கடுமையான பேப்பர் நெருக்கடி இருந்த அந்தக் காலத்தில், அதுவும் வருட சந்தா வெறும் ஒண்ணரை ரூபாயாக இருந்ததைக்கூட செலுத்தாமல், “யாராவது பைத்தியக் காரர்கள் ஒரு ஸம்ப்ரதாயப் பத்திரிகைக்கு சந்தா கட்டிப் படிப்பார்களோ” என்ற மனோ நிலையிலேயே வாழ்ந்திருப்பார்கள் போலும்.

சரி! அந்தக் காலம்தான் அப்படி என்றால், ஒரு வேளை அன்றிருந்த சூழ்நிலையில் அந்த ஒண்ணரை ரூபாய்கூடப் பெருந்தொகையாக இருந்திருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் கூட. இன்று ஏதாவது மாறியுள்ளதா என்று பார்த்தால், இன்றும் அதே கதைதான்! ஸ்ரீரங்கநாத பாதுகா, ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா, என்ற பெரிய பத்திரிகைகளோ, அல்லது ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவக, ஸேவா போன்ற சிறிய பத்திரிகைகளோ, அவற்றில் மாதம்தோறும் சந்தா நினைவூட்டல் இல்லாமல் வருகிறதா? அதே சமயம் குமுதம், விகடன் போன்ற ஜனரஞ்சகப் பத்திரிகைகள் எதிலாவது இந்த மாதிரி நினைவூட்டல் விளம்பரங்கள் வருகிறதா? அவைகளுக்கு நேரடி சந்தாதாரர்கள் கம்மி, பெரும்பாலும் கடைகளில் காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்று சிலர் வாதிக்கலாம். உண்மைதான். ஆனால், இன்று வெள்ளிக்கிழமை, விகடன் வந்திருக்கும் என்று 3 கி.மீ தள்ளியிருக்கும் கடைக்குத் தேடிப் போய் காசு கொடுத்து, கண்ட குப்பைகளை, வாழ்க்கைக்கு எந்தவித ப்ரயோஜனமும் இல்லாத விஷயங்களைப் படித்து இன்புற நாம் தயார். அந்த அக்கறை, அந்த ஆர்வம் ஆன்மாவுக்குப் பயன்படும் நல்லவற்றையே எழுதும், நம்மைப் பண்படுத்தும் உயர்வான கட்டுரைகளைத் தாங்கி வரும் பத்திரிகைகளை வருடத்துக்கொரு முறை சந்தா செலுத்துவதில் ஏன் இல்லை? ஊர் அக்கப்போர்களை, வம்புகளையே எழுதும் பத்திரிகைகள் (இவைகளுக்குப் புலனாய்வுப் பத்திரிகைகள் என்று பெயர்) வந்த அன்றைக்கே படிக்காவிட்டால் தவித்துப் போகும் சில நண்பர்கள் அடியேனுக்கு உண்டு. அரசியல், ஊழல் செய்திகளை அக்குவேறு ஆணிவேராய் அலசும் இவர்களிடம் நான் அடிக்கடி கேட்பதுண்டு. இவைகளால் உங்களுக்கு என்றாவது மன நிம்மதி ஏற்பட்டதா? என்று. கேபிள் டி.வி.க்கு சந்தா எப்போது முடிகிறது என்பது சரியாக ஞாபகம் இருக்கும். ஒரு வாரத்துக்கு முன்னேயே கூடப் போய் renew பண்ணுவோம். இல்லையென்றால், மானாட மயிலாட என்று வரும் அருவறுப்புகளைப் பார்க்க முடியாதே! இப்படிக் கண்ட குப்பைகளை நம் தலையில் கட்டி கொழுத்த லாபம் பார்த்துக் கோடீஸ்வரர்களாகிறவர்களிடம் நமக்கு ஒரு மயக்கம். ஆனால் நல்வழி காட்டும் ஸம்ப்ரதாயப் பத்திரிகைகள் என்றால் பாதிப் பேருக்கு வேப்பங்காய் ! இல்லையென்றால் அவர்களுக்கு மாறி மாறி பலமுறை நினைவூட்ட வேண்டும். இத்தனைக்கும் இந்தப் பத்திரிகைகள் பெரும்பாலும் நஷ்டத்தில், அச்சுக்கூலி, பேப்பர் செலவுகளுக்குக் கூட ஈடுகட்டாத சந்தா தொகையைத் தான் நிர்ணயித்துள்ளன. அப்படி இருந்தும் சந்தாக்கள் குறிப்பிட்ட காலங்களில் புதுப்பிக்கப் படுகின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இவ்வளவு குறைந்த சந்தாவை – கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் – நினைவூட்டித் தான் பெற வேண்டியிருப்பது என்ன கொடுமை?    

அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன் “மனிதன் மாறவில்லை” என்று!   

இல்லை! இல்லை! நாங்கள் மாறித் தான் இருக்கிறோம். இப்போதெல்லாம் சந்தா வசூலிக்க யாரும் நேரில் வருவதில்லையே! அப்போ நாங்க மாறித் தானே இருக்கிறோம் என்று சொன்னாலும் சொல்லலாம்! யார் கண்டது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக