சனி, 25 டிசம்பர், 2010

க்ஷமாஷோடஸீ ஸ்தோத்ரம்.

சில வாரங்களுக்கு முன் நமது ஸ்ரீரங்கம் ஸ்ரீதரன் ஸ்வாமி அவரது "நம்பெருமாள் விஜய"த்தில் வெளியிட்ட க்ஷமாஷோடஸீ ஸ்தோத்ர தமிழ் விளக்கங்களைக் கண்டு ரசித்த அன்பர்கள் இப்போது மிக அருமையாக இசைக்கப் படும் அந்த ஸ்தோத்ரத்தைக் காது குளிர, மனம் நெகிழக் கேட்டு மகிழலாம். இதுவரை ஸ்ரீதரன் ஸ்வாமியின் விளக்கங்களைப் படிக்காதவர்கள் இங்கிருந்து தரவிறக்கிப் படித்து அனுபவிக்கலாம்.


வெள்ளி, 24 டிசம்பர், 2010

Enjoy a good blog from Thiruvallikkeni.



Sri Sampath is one of my friends at facebook. He owns a blog http://samptamilspeak.blogspot.com where he covers almost all the events of Thiruvallikkeni in an excellant manner. Please visit and send him your feedbacks. Use the slides to move up and down and also from left to right.

வைணவ ஆசாரியர்கள்.

2. யமுனைத்துறைவர்.

6.மணக்கால் நம்பி பச்சையிட்டமை

பொன்னி யன்னவப் பூபனின் தேவியோ
பன்னு தேசுடைப் பாலக னைத்தழீஇ
”என்னை யாளவந் தானிவன்” என்றலும்
மன்ன லாயதே மண்ணினி லிப்பெயர்.                              .52.

இச்சிறுவனுக்கு ஆளவந்தார் எனப் பெயர் வந்ததன் காரணம். பொன்னி –இலக்குமி. தழீஇ –தழுவி.

இன்ப வாரிதி யிழிந்தவிம் மன்னவன்
அன்பி னிச்சிறு வனைக்கலை யாழியைத்
தன்ப தத்தினி லமர்த்தினன் தலைமிசை
மின்ப திந்திடு முடிதனை வேய்ந்தனன்.                              .53.

அரசன் இவனுக்கு முடி சூட்டியமை. வாரிதி – கடல். சிறுவனை கலையாழியை --- கலைக்கடலாகிய பாலகனை. தன் பதம் – தனது சிங்காதனம். மின் பதிந்திடு முடி – ஒளி வாய்ந்த கிரீடம்.

சிறிய னாயினு மியாமுன னரசினுக்
குரிய யாவையு முயவற வியக்கினன்
பெரிய ரியாவரும் பெய்திடு மன்பினில்
அரிய னாளவந் தானிவ னென்றனர்.                                 .54.

சிறுவன் நன்கு அரசு புரிந்தமை. ஆயினும் + யாமுனன் – ஆயினுயாமுனன். உயவு அற – வருத்தமின்றி, எளிதில். பெரியர் + யாவரும் = பெரியோர் யாவரும். ஆளவந்தான் – மக்களை ஆளப் பிறந்தவன், ஆள இயற்கையாக ஆற்றல் வாய்ந்தவன்.

தந்தை யீச்சுர முனிவனு மிவன்கொளச்
சந்த மல்குழ லாளொரு தருணியைப்
பந்த முற்றிடப் பிணைத்தனன் பரிவினில்
சிந்தை யொன்றிட வொன்றின ரிருவரும்.                               .55.

ஈச்வர பட்டர் இவனுக்குத் திருமணம் செய்து வைத்தமை. சந்து அமல் குழல் --- பரிமணம் மிகுந்த கூந்தல். சந்தம் அல் குழல் – அழகிய கறுத்த கூந்தல்.

நங்கை நானிலம் மகிழ்வுற நல்கினன்
பொங்கு சோதியர் புத்திரர் நால்வரோ
எங்கு மேபுக ழியங்கிட இன்னவர்
பொங்கு மேதையர் நெறியினர் பொலிந்தனர்.                        .56.

இந்த நங்கை நான்கு செல்வரைப் பயந்தாள்.

மெய்ய னீச்சுர முனிவன் மைந்திடம்,
”உய்ய வாவன மணக்கால் நம்பியே
ஐய னின்னிடை அருளு” மென்றுதன்
செய்ய னாரிய னடிய டைந்தனன்.                                           .57.

ஆளவந்தாரிடம் தந்தை, “ மணக்கால் நம்பி என்பவர் உனக்கு நல்லன உபதேசம் செய்வார்” எனக் கூறி உயிர் நீத்தார். உய்ய ஆவன – உய்வதற்கு வேண்டுவன. செய்யன் ஆரியன் – தூயோனாகிய உய்யக் கொண்டார்.

குரவ னாணையைக் குறையற வியக்குநன்
விரவு பத்துடை மணக்கால் நம்பியிப்
புரவ லன்றனை யணுகிடப் போதலும்
பரவு பணியினர் தடுத்தனர் பன்முறை.                                  .58.

மணக்கால் நம்பி ஆளவந்தாரைக் காண முயன்றமை. பரவு பணியினர் – பணியில் உற்றவர்.  தடுத்தனர் – உள்ளே புகவொட்டாமல் தடுத்தனர்.

பாக சாலையை நாடினன் நம்பியும்
போக மாமெனப் புரவலன் தூதுளைச்
சாக மேற்பது கேட்டன னிதுதனை
ஆக மோங்கிட வைகலு மளித்தனன்.                                     .59.

பாகசாலை – சமையலறை. மணக்கால் நம்பி சமையலறையிட்புக்கு, ஆளவந்தார் விரும்புவது தூதுளங்கீரை எனக் கேட்டு இதனைத் தவறாது நாடொறும் அளித்து வந்தார். சாகம் – கீரை. போகம் – விருப்பம். ஆகம் – உள்ளம்.

கால மிங்ஙனம் கழிதலும் நம்பியோ
மேல வற்கென வளித்தில னொருபகல்
சால வேட்பது பெற்றிலன் தலைவனும்
சீல னம்பியின் செயல்தனை யறிந்தனன்.                                  .60.

ஒரு நாள் நம்பி கீரை அளிக்கவில்லை. ஆளவந்தார் இதனைக் கொடுப்பது நம்பி என அறிந்தார். வேட்பது – விரும்புவது. தலைவன் – அரசன், ஆளவந்தார்.

“இன்னவ னிவனொருகா லேகிடிற் பொருக்கெனவே
என்னரு கனுப்பி”ரென இறையவ னியம்புதலும்
பொன்னனை வணனொருவன் பின்றையப் புரவலன்முன்
தன்னுடைத் தலைவணக்கிச் சாற்றினன் விசயமதே.                   .61.

சீலன் + நம்பி – சீலனாகிய மணக்கால் நம்பி. “இந்நம்பி மறுபடியும் இங்கு வந்தால், இவரை என்னிடம் அனுப்புக” என்று ஆளவந்தார் ஆணையிட, மறுநாள் அந்நம்பியை அரசன் முன்னர் நிறுத்தினர், பணியாளர். பொன் அனை வணன் – பொன்போலும் சோதி வாய்ந்த மேனியுடைய ஒருவர்.. பின்றை – மறுநாள். சாற்றினன் விசயம் – ஜயவிஜயீபவ என வாழ்த்தினான்.

 

புதன், 22 டிசம்பர், 2010

தினமணி இணைய தளத்திலிருந்து

ஃபோட்டூன்
வரலாறு காணாத போராட்டங்கள்!

First Published : 22 Dec 2010 04:03:20 PM IST

Last Updated : 22 Dec 2010 05:29:42 PM IST



(குறை கேட்பு எப்படி இருக்கும்? எல்லாம் நம்ம கற்பனைதான்!)

சொல்லுங்க என்ன பிரச்சினை?

ஐயா எம் பொண்ணு எல்.கே.ஜி படிக்கிறா. நேத்திக்கு ஸ்கூல் போக 10 நிமிஷம் லேட்டாயிருச்சு. டீச்சர் 1 ரூபாய் அபராதம் போட்டுட்டாங்கய்யா.

அப்படியா? உடனே நம்ம மாவட்ட செயலாளருகிட்ட சொல்லி, ஸ்கூலுக்கு எதிரா பிரமாண்ட கண்டனக் கூட்டம் நடத்திருவோம். சரி... அப்புறம்..?

எங்க வீட்டு முன்னால சாக்கடை ஒண்ணு இருக்குங்க. அதுல பக்கெட்ல சேருகிற தண்ணிய கொட்டுவோம். இவங்க என்னடான்னா அதுல சிமிண்டு சிலாப் போட்டு சுத்தமா மூடி வெச்சிருக்கிறாங்க. நாங்க அரை கி.மீ நடந்து வந்து கழிவுத் தண்ணிய கொட்ட வேண்டிருக்குங்க...

அட... இவ்ளோ கஷ்டமா? நகராட்சி என்ன செய்யிது. இந்த அராஜகத்த கண்டிச்சி, உடனே மாவட்ட அளவுல நிர்வாகிங்கள வெச்சி ஒரு போராட்டம் நடத்திடுவோம்.

உங்க கோரிக்கை என்ன சொல்லுங்க?

அம்மா... இந்த மாதிரி... நேத்திக்கு எங்க ஊருக்கு வழக்கமா 8.30க்கு வரவேண்டிய பஸ் 8.28க்கே வந்துச்சுங்க. அதுனால எவ்ளோ பேர் கஷ்டப்பட்டாங்க தெரியுமா?

இது தப்பாச்சே! உடனே போக்குவரத்துக் கழக பணிமனை முன்னால போராட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிடுவோம். கவலப் படாதீங்க.

ரொம்ப நல்லதும்மா. எங்க நகர்மன்றத் தலைவர்ட்ட பேசுறப்போ, இந்த... எதோ... 2ஜி ... ஸ்பெக்ட்ரம்... ஊழல்...அது இதுன்னு போராட்டம் பண்ணலாம்னு ஒருத்தர் பேசினாராம்... அதான்... எங்க விஷயத்த என்னத்த கவனிக்கப் போறாங்களோன்னு நெனச்சேன்..

ஐயா... கொஞ்சம் சும்மா இருங்கீங்களா..! ஊழல் அது இதுன்னு...அதெல்லாம் ஒரு விஷயமா? இப்போதான் கூட்டணி அப்டி இப்டின்னு பேசிட்டிருக்காங்க... நீங்க வேற...

..?! சரி சரி... யோவ் பி.ஏ. மீடியாக்கெல்லாம் உடனே அம்மா பேர்ல அறிக்கய ரெடி பண்ணுங்கப்பா!

ஆருத்ரா தரிசனம்

இன்று உலகெங்கும் உள்ள சிவ பக்தர்கள் உவகையுடன் கொண்டாடும் ஆருத்ரா தரிசனத் திருநாள். எங்கள் இராமநாதபுர மாவட்டத்தின் மிகப் பெரிய திருநாள். சிதம்பரத்திலே அம்பலத்தில் ஆடிய சிவன் இங்குள்ள திருஉத்திரகோசமங்கை யிலே அறையில் ஆடி, சிவகாமியை மகிழ்வித்த திருத்தலம். மாணிக்கவாசகரை ஆட்கொண்ட திருத்தலம். மார்கழி ஆதிரை நாளிலே இரவெலாம் அபிஷேகங்கள் கண்டு சந்தனக் காப்பு சாத்திக் கொள்ளும் உன்னத நாள். நாட்டின், ஏன் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கூட, பக்தர்கள் பல்லாயிரக் கணக்காய் வந்து தரிசனம் காணும் திருநாள் இது. ஆறடி உயர மரகதத் திருமேனி. பார்ப்போரை எப்படிச் செதுக்கினரோ என வியக்க வைக்கும் அற்புதக் கலைப் படைப்பு. மத்தளம் அதிரத் தெறிக்கும் மரகதக் கல்லிலே உளி கொண்டு செதுக்கிய நம் முன்னோர்களின் ஈடில்லா திறமைகளுக்கு ஒரு ஒப்பற்ற சான்று. வருடம் முழுவதும் சந்தனக் காப்புடன் இருக்கும் இந்த ஆடல்வல்லானை இன்று ஒரு நாள் மட்டுமே தரிசனம் காண முடியும் என்பதால் குவியும் பக்தர் கூட்டம். அரசு உள்ளூர் விடுமுறை அளிக்கும் அளவுக்கு மக்கள் குவியும் பெரும் திருநாள்.

திங்கள், 20 டிசம்பர், 2010

வைணவ ஆசாரியர்கள்.

யமுனைத் துறைவர்



5. சிறுபிள்ளை கேட்டவை

வேந்த னவையிற் சாந்தமொடு
        வியப்பும் நிலவ நாட்டங்கள்
பாய்ந்த சிறுவன் றன்பாலே
         செவிகள் படிந்த வத்திசையே
வாய்ந்த புலமைப் பெரியோன்முன்
         பாலன், “வலவ! மறுத்திடுவாய்
ஆய்ந்து நின்ற னன்னையவள்
          வந்தி யென்ப” னென்றனனே.                       42.

வேந்தனவையில் மக்கள் சாந்தமொடும் வியப்போடும் அமர்ந்திருந்தனர். இவர்கள் கண்களும் செவிகளும் இச்சிறுவனை நாடின.  முதல் விஷயம்.; நின் அன்னை வந்தி --- உனது தாயார் மலடி. பாய்ந்த – பாய்ந்தன.

புலவன் நெடிதே தானாய்ந்தும்
      மறுக்க வகையே புலர்ந்திலதே
“இலனோ யானென் னன்னைதனை
            வந்தி யென்றே யியம்பற்கே?
உலவை யொப்பா னிவனொருவன்
            இங்ங னுரைத்த லென்னெனவே
உலக மிகழ்தல் செய்யாதோ?”
            என்றே கலங்கி யொல்கினனே.                43.

புலவனது கலக்கம்.  உலவை – உலர்ந்த மரம்

“நல்லாய்! இந்த நரபதிதான்
            தரும வானா மென்பலியான்
வல்லை யென்னில் மேற்கோள்கள்
            வரைந்து மறுப்பாய்” என்றிதனை
வல்லோர் மலங்க விச்சிறுவன்
            பகர மனத்துட் கலக்கமெழ
“எல்லை யிற்றே னின்”றென்றே
            இறுமாப் பிற்றான் பண்டிதனே.                   .44.

இரண்டாவது விஷயம்;  இம் மன்னன் தருமவான்.   இற்றேம் – முடிந்தோம். இறுமாப்பு இற்றான் – இறுமாப்பு ஒழியப் பெற்றான்.

“வேந்த னறத்தின் வடிவெனவே
            விரவு மன்பால் விளம்புவரே
பாந்தள்   தனினுஞ் சீறானோ
            பாவி யிவனென் றியம்பிடினே?
மாந்த ரினமு மிகழாவோ
            நன்றி மறந்தா னிவனென்றே?
போந்த தென்பாற் புன்கண்ணே”
            என்றே சுழலும் புலவரனே.                           .45.

புன்கண் – துன்பம்

“வேறொன் றிதுகேள் மிகவல்லோய்!
            வேந்தன் தேவி பதிவிரதை
தேறி மறுப்பா யிதுதன்னைத்
            தெளிவார் சான்று தனையோதி”
மாறொன் றில்லா விதுதன்னைச்
            சிறுவ னியம்ப வணங்காதான்
கூறி லிடியே றிறுத்திட்ட
            கோடே போலக் குலைந்தனனே.                       .46.

மூன்றாம் விஷயம்;  அரசமாதேவி பதிவிரதை. தெளிவு ஆர் சான்று --- தெளிவான சான்று. வணங்காதான் – ஒரு புலவனுக்கும் கீழ்ப்படியாத வித்துவான். கூறில் – இவனது மனத்துயரத்தை விவரித்தால். இடி ஏறு இறுத்திட்ட கோடு போல --- வலியதான இடியால் தாக்கப்பட்ட மரம் போல.

“ஐயோ! அழிந்தே னகந்தையினால்
            அரசி தன்பா லகங்கூறல்
வெய்தே யாமே என்செய்கேன்
            மேலு மிதுவோ பெண்பாவம்
வைய மிதனிற் கொடிதொன்றும்
            வைத்த லிலதா” லெனநைந்து
கையிற் சிரமே தான்தோயக்
            கவலை நீத்தத் தாழ்ந்தனனே.                                 .47.

புலவன் வருந்தியமை. வெய்தேயாம் – கொடியதாம். இதனில் கொடிது ஒன்றும் வைத்திலது – இதனிற் கொடிது வேறொன்றுமில்லை. கையில் சிரமே தான் தோய --- கையில் தலையைச் சாய்த்து. நீத்தம் – வெள்ளம்.  கவலை நீத்தம் --- கவலையாகிய கடல்.

இறைவன் சிறுவன் முன்னணுகி
            “இளைஞ! இவற்று ளொன்றேனும்
குறையே கூறி மறுத்திடவே
            கூடு மென்னிற் செய்”கெனவும்,
“இறைவ! இவன்றா னிறுமாப்பால்
            இழுக்கே யுற்றா னுலகினிலே
நெறியே பரவ இவனாகான்
            எனவே யிலனே இவனாவான்.                                  .48.

“இவற்றுள் ஒன்றேனும் நீ மறுப்பாயா?” என அரசன் கேட்கச் சிறுவன் கூறியது. இவன் இறுமாப்பால் இழுக்குற்றவன். உலகம் வாழ இவன் பயனுறுவதில்லை. ஆதலால் இவன் இலன் என்றே கருதத் தக்கவன்.

“இவனை ஒன்றாய்ப் பெற்றவளோ
            தாயே யல்லள் வந்தியளே!
நவையே வாயும் நாட்டினர்த
            மேத மியாவும் நரபதிபால்
குவியு மிதனாற் கோமானும்
            எவ்வ முடையா னெனலாமே
இவனே நலம்பெய் புரோகிதனா
            யேற்றல் தானு மிழுக்கன்றோ.                     49.

சிறுவன் மேலும் கூறியது; ஒரு மரமும் தோப்பன்று. ஒரு மகனும் பிள்ளையன்று என்பர். இவன் தனது தாய்க்கு ஒரே மகன்; இதனால் மகனெனக் கருத இயலாது. இரண்டாவதாக உலகினர் செய்யும் பாவமெல்லாம் அரசனைச் சேரும். இப்புலவனைத் தனக்காக மன்னன் கொள்வது இழுக்காகும்.

“மணங்கொள் நங்கை வதுவைதனில்
            வருணன் முதலோர் தமக்காகி
வணங்கொள் நாதன் றனக்காகும்
            வண்ண மிதனா லொருவர்க்கோ?
இணங்க நூலு மிதுகூறும்
            என்னில் மறுப்பே இதுவன்றோ?
குணங்கொள் தேவி நின்பாலே
            குலவு முளத்தாள் கோமானே.”                       .50.

மேற்கோள் இது. குணங்கொள் தேவி ……. உளத்தாள் --- உத்தமியான அரசமாதேவி நின்பால் அன்புடையவள் மூன்றாவதற்கு விடை : திருமணத்தின்போது மணமகள் வருணன் முதலிய நால்வர்க்கு உரியளாகிப் பின்னர் கணவனுக்கு உரிமை பெறுகிறாள். ஒருவர்க்கோ?  -- ஒருவனுக்கோ உரிமை? இணங்க நூலும் இது கூறும் --- நூலிலிருந்து.

என்றிவையே யவைதன்னிற் கலையோதி
            இளஞ்சீய மியம்பக் கேட்டார்
நன்றென்றார் நம்மிடையே நாமகளே
            இவ்வுருவிற் போந்த தென்றார்
குன்றனைய தோளான்மன் தன்னுடைய
            புரோகிதனின் குறைவு கூறி
வென்றவிளம் பிள்ளைதனை மீப்புகழ்ந்து
            தன்னரசிற் பாதி யீந்தான்.                                      .51.

அவையிலுள்ளோர் சிறுவனைப் பாராட்ட, அரசன் இவனுக்குத் தனது இராச்சியத்தில் பாதி அளித்தான்.

வைணவ ஆசாரியர்கள்


 
யமுனைத் துறைவர்

4. பிள்ளையும் பண்டிதனும்


உக்கி லாத விஞ்சை யோடொ சிப்பு றாத வாண்மையும்
மிக்கு யர்ந்த நெறியு மின்ன வேய மிச்ச பையிலே
புக்கு நின்ற பிள்ளை தன்னைக் கண்ட புந்திப் பண்டிதன்
நக்கு, “நல்லை நம்மை வாதில் நலிய நாடிப் போந்துளை.               .32.

அரசவை . உக்கிலாதசிந்தாத, நிலையான. விஞ்சைகல்வி. ஒசிப்பு உறாத --- குலையாத. வேயும்அணியா அமைந்த. அரசன் கல்வி, ஆண்மை, நெறி இவற்றால் சிறந்தவன். நக்குநகைத்து. நல்லைநீ மிக்க நல்லவன்.

நெடிய மேரு தன்னை யெற்ற நேடு புல்ல தாயினை
கொடிய வேங்கை கொல்ல வென்று மேவு பூசை போன்றனை
மடிவி லாத வீற வாயு மெ ன்னைச் சுட்டு விரலினும்
வடிவி னற்பன் வாதில் வென்று வன்மை யேற்ற லெங்ஙனே?”       .33.

புலவன் ஏளனஞ் செய்த வகை. நெடிய மேருஉயர்ந்த மேரு பர்வதம். எற்றஅழிக்க. நேடுதேடுகின்ற , முயல்கின்ற. பூசைபூனை. மடிவு இலாதஅழியாத. வீறுமேன்மை.

என்று காயு மையன் முன்னர் பிள்ளை இங்ஙன் கூறினன்
நன்று நானி ளைஞ னென்று நன்ன ரேசு கின்றனை
குன்றி னோங்கு குஞ்ச ரத்தைக் குருகு சீயங் கொல்லலும்
குன்று தன்னைக் குற்றி ரும்பு லைத்தல் தானுங் கண்டிலை.            .34.

வெப்ப மெங்கு மோங்க ருக்கன் றன்னைக் கைக்குடை
தப்பு றாத டைத்தல் தானுங் கண்டி லைகொ லைய!நீ
ஒப்ப வோங்கு தால முற்றும் புல்லி லையி லுற்றிடும்
அப்பு விந்து தன்னு ளேயடக்கல் தானுங் கண்டிலை.                       .35.

வான ளாவு வையின்  சும்மை தன்னை யோர னற்பொறி
ஈன மாக்கு மித்தை நீயுங் கண்டி லைகொ லேந்தலே!
மீன தன்சி னையி னொய்ய ஆலி நுண்வி தையதும்
மான நீழல் வாயு மாவி ருட்ச மாதலோர்ந்திலை.                               .36.

சிறுவன் கூறியது. காயும் --- சினங்கொள்ளும். நன்னர் ஏசுகின்றனை ---. குன்றின் ஓங்கு குஞ்சரம்மலையினும் வலிமை வாய்ந்த பெரிய யானையை , குருகுகுட்டி. சீயம்சிங்கம். குற்றிரும்புஇரும்புத் துண்டு. உலைத்தல்வெட்டுதல். வெப்பம் எங்கும் ஓங்க ஓங்கு அருக்கன் -- . அருக்கன்சூரியன். தப்பு உறாது அடைத்தல்தப்பாமல் மறைத்தல் . கண்டிலை கொல்நீ கண்டிலை போலும். ஒப்ப ஓங்கு …..அடக்கல்வானில் உயர்ந்த பனைமரம் முற்றும் புல்நுனி நீர்த்துளி தன்னிலே அடக்கிக் காட்டுவது. அப்புநீர். விந்துபிந்து, துளி. வைவைக்கோல். சும்மைபோர். மீனதன் சினையில் நொய்ய --- மீன் சினையினும் மிகச் சிறிய . ஆலின் + யுண் விதையதும் – ---.  மான நீழல் --- பரந்த நிழல் . மா விருட்சம் --- பெரிய மரம்.

மேலு மேலு ரைத்தல் நீக்கி வாத மேதொ டங்குவை
மேல!” வென்று ரைத்த குட்டன் றன்னை வெம்பி நோக்கியே
பால! நீயெ ழுத்தி னங்கள் பகர வல்லை யாயினே
நூல ளிப்பலென்று வித்து வான றைதல் செய்தனன்.

வாதத்தைத் தொடங்குகஎனச் சிறவன் சொல்ல, வித்துவான்நீ எழுத்துக் கூட்ட வல்லையாயின், இதனைச் சோதிக்க நூல் ஒன்று தருவேன்என்றான். அறைதல் செய்தனன்மொழிந்தனன்.

சிறுவன், “போதும் வீணு ரைகள்என்று செப்பி மேலவா
உறுவ நூல்க டம்மை யோதி யுட்க ருத்து ரைத்துமேல்
முறுவ லோடு நின்ற வீறு தன்னைக் கண்ட முன்னவன்
இறுதல் திண்ண மென்ற தோர்ந்து சாத்தி ரங்க டம்முளே.              .38.

சிறுவன் தானே நூல்களை ஓதிக் கருத்தைக் கூறினன். மேலவா உறுவ நூல்கள் --- மேலான நூல்கள். இறுதல்தோல்வியடைதல்

சிலவெ டுத்தி யம்பல் செய்ய  மேல மேல சிறுவனும்
பலவெ டுத்து ரைத்தல் தன்னைக் கேட்ட பண்டி தன்முனன்,
புலமை யற்ற  புல்ல னோடு பெரிய ஓதல் குருவியின்
தலையில் தால நற்ப ழத்தை வைத்தல் சாலு மாகலின்,                   .39.

புலவன் சில சில ஓத, இவற்றிற்கு மேல் சிறுவனும் ஒத, வித்துவான், “உன்னிடம் கனத்த யூல்களை ஓதுவது குருவியின் தலையிற் பனங்காயை வைத்தலை ஒக்கும்என்றான். தால நல் பழம் --- பருத்த பனம்பழம். சாலும்ஒக்கும்.

அத்த! இச்ச பையி லுற்ற வன்பர் கேட்க  நற்பொருள்
மெத்த  ஓத வல்லை யாகில் நின்றன் மேன்மை சாற்றுவல்
எத்த ரத்தை யென்ப தோர்வல்என்று கூற யாமுனன்,
சித்த நல்லை செல்வ! யானுஞ் செய்வல் கேட்கஎன்றனன்.                 .40.

யாமுனன்  --- யமுனைத் துறைவன். சித்தம் நல்லைநல்ல சிந்தை வாய்ந்தவன் நீ; ஏளனமாக இயம்பியது.!

கலைவலர் முன்னோய்! மொழிகுவல் மூன்றாம்
          கருத்தவை கலைதமைக் கொண்டே
அலவென வாதஞ் செய்குவை யாயின்
          வெற்றிய னாகுவை நீயே
இலையெனில் யானே இயம்புவல் நீதி
          என்றன னிளையவன் றானும்,
குலைவது  காணேன் கூறுகவென்றான்
         புலவனும் புலவரர் குழுவில்.                            .41.

சிறுவன் கூறியது. நான் ஓதுவ மூன்றினைக் கலைகளைக் கொண்டு நீ மறுப்பாயின் வெற்றி நின்னது; இல்லையெனில் நானே நீதியைக் கூறுவேன்.

நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸம் --- 20-12-2010

சனி, 18 டிசம்பர், 2010

தேசிகப்ரபந்தம் --- ஆர். கேசவய்யங்கார் முன்னுரையின் நிறைவு'


ப்ரபந்தவகை


இம்மஹாதேசிகர் அருளிச் செய்த ரஹஸ்ய நூல்கள் பல. அவை முப்பது என்பர் சிலர்.  முப்பத்திரண்டு என்பர் வேறு சிலர்.  பின்னும் அதிகம் என்பர் பின்னும் சிலர்.  மறைந்தன பல.  மிகுந்துள்ளவற்றுள்ளும் சிலபாகங்கள் மறைந்தன.  மும்மணிக்கோவையில் பாக்கள் பத்தே காணப்படுகின்றன.  மிகுந்துள்ளவை மறைந்தன.  வடமொழியிற்போல் மணிப்பவளத்திலும் தமிழிலும்  பல்பெரும்ப்ரபந்தங்கள் மறைந்தன.  பந்துப்பா, கழற்பா, அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா என்று தெய்வநாயகன் விஷயமாய்ப் பாடியுள்ளதாக இவர்தாமே1(நவமணிமாலை 10) கூறிய பாக்கள்  ஐந்தும் மறைந்தன.  அதுபோற் பாடற்ப்ரபந்தங்களும் ரஹஸ்யப்ரபந்தங்களும் உரைப்ரபந்தங்களும் மறைந்தன பலவே.  மிகுந்துள்ளவற்றை ஆன்றோர்கள் தேசிகப்ரபந்தம் என்று திரட்டித் தொகுத்து ஓதி உணர்ந்து வருகின்றார்கள்.  அதன் வகை:-
   1   அமிர்தரஞ்சனி:- இது, ஸம்ப்ரதாயபரிசுத்தி, தத்த்வ பதவி, ரஹஸ்யபதவி தத்த்வநவநீதம்,     ரஹஸ்யநவநீதம், தத்த்வமாத்ருகை, ரஹஸ்யமாத்ருகை, ரஹஸ்யஸந்தேசம், தத்த்வரத்நாவளி            ரஹஸ்யரத்நாவளி, ரஹஸ்யரத்நாவளிஹ்ருதயம். தத்த்வத்ரயசுளகம், ரஹஸ்யத்ரயசுளகம் என்னும் மணிப்பவள ரஹஸ்யநூல்கள் பதின்மூன்றின் தமிழ்ப் பாடல்களின் திரட்டு.  இதிற் பாடல் 39.
   2   அதிகாரஸங்க்ரஹம்:- இது குருபரம்பராஸாரம் உள்ளிட்ட ரஹஸ்யத்ரயஸாரப் பாடல்களின் திரட்டு.  ரஹஸ்யத்ரய ஸாரநூலின் ஒவ்வோர் அதிகாரப் பொருளின் தமிழ்ச் சுருக்கு ஆதலால் இது அதிகார ஸங்க்ரஹம் என்னப்படும் இதிற் பாடல் 56.
   3   அமிர்தாஸ்வாதினி:- இது ஸாரஸாரம், அபயப்ரதாநஸாரம். ரஹஸ்யசிகாமணி. அஞ்சலி வைபவம் ப்ரதாநசதகம். உபகாரஸங்க்ரஹம், ஸாரஸங்க்ரஹம், விரோதபரிஹாரம், முநிவாஹநபோகம் என்னும் மணிப்பவள ரஹஸ்ய நூல்கள் ஒன்பதின் தமிழ்ப்பாடல் திரட்டு இதிற் பாடல் 21.
   5   பரமதபங்கம்:- இது இப்பெயருடைய மணிப்பவள ரஹஸ்ய நூலின் தமிழ்ப்பாடல் திரட்டு.  இதிற் பாடல் 54.  
   6  அத்திகிரிமான்மியம்:- இது இப்பெயருடைய மணிப்பவள ரஹஸ்யநூலின் தமிழ்ப்பாடல் திரட்டு.  இதைமெய்விரதமான்மியம்என்றும் கூறுவர்.  இதிற் பாடல் 29.
    7   அடைக்கலப்பத்து:- இது தமிழ்ப்பாடற்ப்ரபந்தம் இதிற் பாடல் 11.
    8. அர்த்தபஞ்சகம்:- ‘ஐந்துபொருள்களை’ (அர்த்தபஞ்சகத்தை) உணர்த்தும் தமிழ்ப் பாடற் ப்ரபந்தம.  ஐந்து பொருள்களாவன:- அடையப்பெறும் இறைவன் ஸ்வரூபம், அடையும் உயிர்ப்பொருளின் ஸ்வரூபம், இறைவனை உயிர்ப்பொருள் அடைதற்குத்தடை, அடையும் உபாயம், பேறாகிய அடைவு என்பன.  இதிற்பாடல் 10.
   9   ஸ்ரீவைஷ்ணவதினசரி:- இது ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள்தோறும் ஐந்து காலங்களிலும் ஒழுகவேண்டிய முறையை உணர்த்தும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற்பாடல் 10.
   10   திருச்சின்னமாலை:- இது பேரருளானுக்குப் பாடிய திருச்சின்னத் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 11.
     11   பன்னிருநாமம்:- இது கேசவநாமம் முதல் தாமோதர நாமமளவும் ஓதும் பன்னிருநாம விளக்கத் தமிற்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 13.
     12    திருமந்திரச்சுருக்கு:- இது மூலமந்திரப் பொருள் ஒன்பதை உணர்த்தும் தமிழ்ப்பாடற் ப்ரபந்தம் இதிற் பாடல் 10.
    13  த்வயச்சுருக்கு:-  இது த்வயமந்திரத்தின் பத்துப் பொருள்களை விளக்கும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம். இதில் பாடல் 12.
   14  சரமச்லோகச்சுருக்கு:- இது சரமச்லோகத்தின் திரண்ட பொருளையும், பதம் சொற்றொடர் இவைகளின் பொருள்களையும் விளக்கும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம். இதிற் பாடல் 11.
   15  கீதார்த்தஸங்க்ரஹம்:- இது கீதைப்பொருளைச் சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் முறையில் கீதை ஒவ்வொரு அத்தியாயப்பொருளையும் ஒவ்வொரு பாட்டால் சுருங்கக் கூறி, முதற்பாட்டால் கீதைக்குத் திரண்டபொருள் கூறி, இருபதாம் பாட்டால் பயன் கூறி, இருபத்தொன்றாம் பாடல் திருநாமப் பாட்டாகத் தலைக்கட்டும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற்பாடல் 21.
   16   மும்மணிக்கோவை:- இது தெய்வநாயகன் விஷயமாய்ப் பாடப்பெற்றஅவியகத்துறைகள்  தாங்கி நிற்கும் பேரின்பத் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 10. பிற மறைந்தன.
   17   நவமணிமாலை:- இது தெய்வநாயகன் விஷயமாய்ப் பாடப்பெற்ற தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 10.
            மும்மணிக்கோவையைசெந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்துஎன்றும், நவமணி மாலையைபரவுநவ மணிமாலைஎன்றும் அவர் நவமணிமாலையில் கூறியிருத்தல் நோக்குக.
   18  ப்ரபந்தஸாரம்:- இது ஆழ்வார்கள் அவதரித்த நாள்’,‘திங்கள்’,‘அடைவு’,“திருநாமங்கள்அவர்கள் அருளிச்செய்ததிருமொழிகள்” “அவற்றுட் பாட்டின் வகையான தொகை யிலக்கம்” “மற்றுமெல்லாம்விளங்கக்காட்டும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம். ‘திருமாறன் கருணைஎன்றதே ப்ரபந்தஸாரம், நாலாயிரதிவ்யப்ரபந்தஸாரம், தேசிகப்ரபந்தஸாரம், கீதாஸாரம்: இந்த ஸாரம் ப்ரபந்தஸார உரையில் விரிக்கப்பெறும்.  இதிற் பாடல்;  18.
   19   ஆஹாரநியமம்:- இது அடியார்களுக்கு உணவு நெறியை விளக்கும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்,  உயிர்க்கு நல்லுணர்வு போல், உடலுக்கு நல்லுணவு. நல்லுணர்வுக்கும் நல்லுணவுக்கும் உற்றுள்ள ஒற்றுமை தோற்ற நல்லுணர்வை உபதேசித்தது போல் நல்லுணவையும் உபதேசித்தார்.  சாரீரக சித்தாந்த நயத்தை இங்கும் காண்க.  இதிற் பாடல் 21.

            ஆகப்ரபந்தங்கள் 19க்குப் பாடல் 405.  தேசிகப்ரபந்தம் என்னும் இம்மாலை ஞானப்பெருந்தகவோர் சம்பிரதாயத்தில் தோன்றி விளங்கும் தூய்மையும், இதன் பொது நூன்மையும், வேதாந்த உள்ளக்கருத்தில் உரைத்துரைத்த முத்தமிழ்சேர்ந்த மொழித்திருச்சிறப்பும், தத்துவம் உபாயம் புருஷார்த்தம் என்பனவற்றின் தன்மையும் நன்மையும் இனிமையும் இதில் விளங்கும் நலமும், இதன் வகை முதலியனவும் இங்குக் கூறப்பட்டன.  மற்றும் கூறவேண்டியவைகள் ப்ரபந்தஸார முன்னுரையில் கூறப்பெறும்.

மாறிலா மகிழின் மாலை மன்னன்வாய் மொழியின் கந்தம்
நாறநான் மறையி னுள்ளக் குருத்தினில் நறவம் வைத்துத்
தேறிமா தவன லத்தா ளிறைநிலை தூப்பு லண்ணல்
ஆறுநீள் சேது பந்தம் அருளினான் சரணவள்ளல்.

அன்னவன் கையின் மெய்யாய் அருளிறைப் பொருளின் மாலை
பொன்னெனப் புனிதர் போற்றிப் புந்தியுட் புனைந்து பேணும்
நன்னர்கண் டிறைஞ்சி நல்லா சிரியர்தா ணலம் தெண்ணி
இன்னுரை நவின்றா னன்பன் கேசவ னீது நன்றே.

ஸர்வம் சுபம்.