தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறியாதார் யாருமிருக்க முடியாது. 50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அவரது தேசீயமும் தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஜாதித் தலைவராகவே தெரியும் (உபயம் -- ஓட்டு வங்கியை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்ட குறுகிய புத்தி அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள்.) ஆனால் அவரது தேசீயத்தையும், தெய்வீகத்தையும் அறிந்தவர்களில்கூட எத்தனை பேருக்கு அவரது தமிழ்ப்புலமையும், தமிழாராய்ச்சித் திறமையும் தெரியுமோ தெரியாது. மதுரகவி நூல்களைப் படித்துக் கொண்டிருக்கையில், மதுரகவி வழிவந்தவரும், அனேகமாகத் தேவர் திருமகனாரால் பெரிதும் பண்படுத்தப் பட்டவருமான திரு கோவிந்தராஜன் எழுதிய குறிப்பு ஒன்றைப் படித்தேன். நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து கொள்ளாத தேவரின் அந்த முகத்தை அனைவரும் அறிய இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தொடர்வது திரு கோவிந்தராஜன் எழுதியது.
"ஒரு நாள் (மதுரை) அங்கயற்கண்ணி ஆலயத்திற்குச் செல்லும்போது ஆடி வீதியில் உள்ள திருக்குறள் மண்டபத்தில் திருக்குறள் பற்றி தேவர் பேசுவதைப் பார்த்து மாணவனாக இருந்த நான் ஆச்சர்யப்பட்டேன். அரசியலில் முடிசூடாமன்னனாகத்திகழ்ந்த முத்துராமலிங்கத்தேவருக்கு திருக்குறளைப் பற்றி என்ன தெரியும்? இந்தப் பாரத புண்ணிய பூமியில் முழு அரசியல் பற்றியும், ஓரளவு ஆன்மீகம் பற்றியும் சொற்பொழிவு ஆற்றியவர், குறளைப் பற்றி என்ன பேசிவிடப் போகிறார் என்று அமர்ந்த நான் மெய்மறந்தேன். அரசியல்வாதியான அவர் திருக்குறளின் மூலைமுடுக்கெல்லாம் சென்று திருக்குறளுக்குப் புத்தம் புதிய விளக்கத்தைத் தந்தது எனக்கு வியப்பு. அன்று அவர் பேசிய பேச்சுக்களை குறிப்பெடுக்கும் வசதியும், வழக்கமும் இல்லாமல் போய்விட்டன.ஆனால் எனது ஞாபகத்தில் இருந்து தேவர் பேசிய பேச்சின் கருத்தை ஓரளவு தருகிறேன். (தேவர் பேச்சு ஆரம்பம்)
''கற்றறிந்த பல அறிஞர் பெருமக்கள் இந்தச் சபையிலே வீற்றிருப்பதைப் பார்க்கிறேன். திருக்குறளில்
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக் கூலிதரும்.
என்பது ஒரு அரிய குறள். திருக்குறளுக்கு உரை சொல்லுகின்றவர்கள் முதலில் ஆன்மீகத்தை ஒத்துக் கொள்ளவேண்டும். ஆன்மீகத்தை ஒத்துக்கொள்ளாவிட்டால் பல குறள்களுக்குப் பொருள் தெரியாமல் அல்லது பொருந்தாமல் போய்விடும். அல்லது தவறான பொருளைக் கூற வேண்டி வரும். நான் மெத்தப் படித்தவன் அல்ல. தமிழ் மொழி ஒரு அளப்பரும் சலதியாகும். எவ்வளவுதான் கற்றாலும் அது கைம்மண்ணளவேதான் ஆகும். நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்குச் சிறிது ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் திருக்குறளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அப்போது சில குறள்களுக்குத் தவறான உரைகள் சொல்லியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் குறள் 'ஆள்வினை உடைமை' என்ற அதிகாரத்தில் உள்ளது.
திருவள்ளுவர் ஒரு உலக மகா கவி. உலகில் உள்ள கவிஞர்களில் தலைசிறந்தவர்.'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாரதியார் வள்ளுவனை வானத்திற்கே கொண்டுபோனார். இது முற்றிலும் சரியே. வள்ளுவர் உள்ளத்தில் இருந்து தோன்றிய கருத்துக்கள் அருள் வாக்குகள் அமுத வாக்குகள் ஆகும். அவை மக்கள் எல்லாரையும் கவரும் தன்மை உடையவை. அந்தக் கருத்துக்களின் நுட்பத்தையும் திட்பத்தையும் மாண்பையும் எண்ணி எண்ணி வியக்காமல் எவரும் இருக்க முடியாது. அவர் கூறிய மொழிகள் அனைத்தும் பொய்யாமொழிகள் ஆகும். அவர் கூறியவை பொன்மொழிகளாகும். எந்த நாட்டிற்கும், எக்காலத்திற்கும், எந்த மக்களுக்கும் திருக்குறள் என்ற இந்த முழு நூல் முழுக்க முழுக்கப் பொருத்தமுடையது. இதனால் உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் இந்த அரிய திருக்குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இரட்டை வரிப் பாக்களிலே, ஏழு சொல்லிலே இந்த உலகத்தையே வள்ளுவப் பெருந்தகை அடக்கி இருக்கிறார்.
கடுகைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக்
குறுகத் தரித்த குறள்.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்.
என்று திருக்குறள் பெருமையுடன் பேசப்படுகிறது. வேதப் பொருளை விரகால் விரித்து உலகோர் ஓதத் தமிழால் உரை செய்தார். இம்மை, மறுமை இரண்டிற்கும் எழுமைக்குச் செம்மை நெறியில் தெளிவு பெற எல்லாப் பொருளும் இதன்பால் உள. இதன்பால் இல்லாத பொருள் எதுவும் இல்லை. ஓதற்கு எளிதாய், உணர்தற்கு அரிதாய், வேதப்பொருளாய் மிக விளங்கிப் பொய்யாமொழிக்கும் பொருள் ஒன்றே. பரந்த பொருளெல்லாம் பார் அறிய வேறு தெரிந்து திறந்தோறும் சேரும் என்றெல்லாம் பல்வேறு புலவர்கள் பாராட்டிப் புகழப் பெருமை பெற்றவர் திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்.
நற்பலகை யொக்க இருக்க
உருத்திர சன்ம ரெனவுரைத்து வானில்
ஒருக்க ஓ வென்றதோர் சொல்.
என்ற இந்தத் திருவாக்கு விண்ணில் இருந்து வள்ளுவப் பெருந்தகையைப் பாராட்டி அசரீரியாக வந்தது. இங்கே இவைகளை எடுத்துக் காட்டுவது அடியேனுடைய புலமையை எடுத்துக் காட்ட அல்ல. வள்ளுவர் எத்தகைய அறிஞர், புலவர் சிந்தனையாளர் என்பதை எடுத்துக் காட்டவேயாகும். இங்கு வீற்றிருக்கிற அறிஞர்களும், சான்றோர்களும் இதை நன்கு அறிவர். இல்லாத ஒன்றைச் சொல்லிவிட வில்லை. இருப்பதையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன்.
இங்கு கூடியிருப்பவர்களே ! இத்தகைய வள்ளுவப் பெருந்தகை "தெய்வத்தால் ஆகாதெனினும்" என்று எழுதியிருப்பாரா என்பதை அறிஞர் பெருமக்களாகிய உங்களையெல்லாம் சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறேன். தெய்வத்தால் ஆகாதெனினும் என்று வள்ளுவர் பாடியிருப்பார் என்று அடியேன் ஒருபோதும் எண்ணவில்லை. நீங்களும் அப்படியே எண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகாதது என்று ஒன்று உலகத்தில் இருக்குமா? உண்டா?
புலவர் பெருமக்களே! அறிஞர்களே, சான்றோர்களே! சற்றுச் சிந்தியுங்கள்.! சிந்தியுங்கள்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருமான் காலத்தில் இன்று உள்ளது போல காகிதம், பேனா, பென்சில் இருக்கவில்லை. ஆயினும் நம் முன்னோர்கள் தங்களது சிந்தனைகளைக் கருத்துக்களை, ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள். எழுத்தாணியைப் பாராத இளைஞர்கள் பலர் இங்கு இன்று இருக்கக் கூடும். எழுத்தாணி இருந்தாலும் எழுத்தாணி பிடித்து எல்லாரும் எழுதிவிட முடியாது. இதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதுவார். அவ்வாறு எழுதியவர் செய்த தவறுதான் என்று அடியேன் இதைக் கருதுகிறேன். 'படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்' என்பது போல.
இந்தக் குறளை வள்ளுவர் பெருமான் இவ்வாறுதான் பாடியிருக்கக் கூடும் என்று அடியேன் மெத்தப் பணிவுடன் கூறுகிறேன். இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. உலகில் சர்வ வல்லமை உள்ள தெய்வத்தால் ஆகாத செயல் ஒன்று இருக்க முடியுமா? இறைவன் மிகப் பெரியவன். அவன்முன் நாம் தூசி மாத்திரம். ஓரணுவும் அவனன்றி அசையாத காரணத்தால் அவனைச் சர்வேஸ்வரன் என்று அழைக்கிறோம். ஆகவே அந்தக் குறள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
தெய்வத்தால் ஆகும் எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
"ஆகா" என்பதைப் புலவர்கள் ஆ + கா என்று பிரித்து நேர்,நேர் என்று சொல்லி தேமா என்று வாய்பாடு கூறுவர். ஆகும் என்ற சொல்லையும் ஆ+கும் என்று பிரித்தால் நேர், நேர் என்றும் கூறலாம். மா முன் நிரை அசை வரும் வாய்பாடு அகும். ஆகவே தளையும் தட்டவில்லை. தெய்வத்தால் ஆகும் என்ற முடிவிற்கு நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகுமென்பதே சரி. தெய்வத்தால் ஆகும் என்ற கருத்தே வள்ளுவப் பெருந்தகைக்கு ஏற்புடையதாகும் என நினைக்கிறேன். சான்றோர்களாகிய நீங்களும் இக்கருத்தை ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்புகிறேன்."
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
என்ற குறளுக்கு தேவர் பெருமகனார் அளித்த இன்னொரு விளக்கத்தையும் திரு கோவிந்தராஜன் எழுதியுள்ளார். அதை வேறொரு நாள் இங்கு எழுதுகிறேன்.
good news
பதிலளிநீக்கு