ப. ரெ. திருமலை அய்யங்கார் முகவுரையின் இறுதிப் பகுதி.
கோப்த்ருத்வவரணமாவது -- 'நீ எனக்கு ரக்ஷகனாக வேண்டும்' என்று பிரார்த்தித்தல் இதற்குக் காரணம் ஈச்வரன் ஸமர்த்தன், காருணிகன் என்று தெளிகை. இத் தெளிவு உண்டானால் 'நீ ரக்ஷிக்கவேண்டும்' என்று ப்ரார்த்திக்கை தானே ஸித்திக்கும். இதற்கு விரோதி ஈச்வரன் தயாதிகுணம் அற்றவனாகையாலே உதாஸீநன் என்று நினைத்தல். இதற்கு பலம் பலங்கொடுக்கவேண்டும் என்று ஈச்வரனுக்குத் திருவுள்ளம் உண்டாதல். ஈச்வரன் ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தனாய் பரம காருணிகனாய் இருந்தாலும் இச் சேதனன் தனக்கு ஸ்வரூப ப்ராப்தமான மோக்ஷத்தை இழந்து அநாதிகாலம் ஸம்ஸார ஸாகரத்தில் முழுகி அழுந்தித் துயர் உற்று இருந்தாலும் அவன் அர்த்தியாதே கொடுத்தால்தான் புருஷார்த்தம் கொடுத்தவனாக மாட்டான் ஆகையாலே நாம் ரக்ஷிக்கவேண்டும் என்று அபேக்ஷிக்கவேண்டியது கடமையாய் இருக்கிறது. ஆகையால் இந்த கோப்த்ருத்வ வரணத்துக்குப் பலங்கொடுக்கவேண்டும் என்று ஈச்வரன் திருவுள்ளமாகை பலம். இது இல்லையானால் ஈச்வரனுக்குத் திருவுள்ளம் இரங்காதாகையாலே பலம் கொடான் என்று நினைத்து அதனால் ப்ரபத்தியில் இழியா தொழிவன். இவ்வழியாய் இது அங்கமாகிறது. இது ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்தித் துன்புற்று அகிஞ்சனனாய் ப்ரபதநம் பண்ணுமவனுக்கு ஈச்வரன் ஸமர்த்தன், காருணிகன், ரக்ஷகன் என்கிற தெளிவோடு கூடிய மனத்தினாலே அநுஷ்டான காலத்தில் தானே உண்டாகும். இவ்வைந்தும் ப்ரபத்தியென்னும் ந்யாஸவித்யைக்கு அங்கம். இவ்வைந்து அங்கங்களுக்கும் விரோதியாகக் கீழ்ச்சொன்னவை ஐந்தும் நீங்கப்பெறுகை உபாங்கமாகும்.
இவ்வைந்து அன்றியில் நிவ்ருத்தி தர்மங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாய் ஸாத்விகத்யாகம் என்று ஒரு அங்கம் உண்டு. அதாவது, இக்கர்மத்தை யான் செய்யவில்லை; இதன் பலம் என்னுடையதல்ல; இதற்கு யான் ஒன்றையும் பலமாகக் கோரவில்லை; ஒரு பலத்துக்காக இதை யான் செய்யவில்லை என்ற அபிஸந்தியோடே "ஸர்வேச்வரனே ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகளில் தன்னதீனனாயுந் தனக்கே சேஷனாயும் உள்ள என்னைக் கொண்டு தன்னுடைய ஸாமக்ரிகளாலே தன்னை ஆராதிப்பதற்காகவே தனக்குச் சேஷமான இக்கர்மத்தைத் தன் ப்ரீதிக்காகவே தானே செய்துவைக்கிறான்" என்று துவக்கும்போதும் "செய்துவைத்தான்" என்று முடிக்கும்போதும் அநுஸந்திக்கை. இது இங்கே அங்கங்களுக்கும் உண்டு, அங்கிக்கும் உண்டு. இதற்குக் காரணம் நாம் எம்பெருமானுக்குச் சேஷபூதர் என்றும், அவனுக்குப் பராதீனர் என்றும் தெளிகை. இதற்கு விரோதி தனக்கொரு பலம் வேண்டும் என்று அபேக்ஷிக்கை. இவ்விரோதி நீங்குகை, இதற்கு உபாங்கமாம். இவ்வுபாங்கங்களால் அங்கங்களுக்கும் அங்கங்களால் அங்கியும் நிறைவேறும்.
அங்கியாவது ஆத்மநிக்ஷேபம். அதாவது, ஸர்வ சேஷியாய் ஸர்வரக்ஷகனாயிருக்கும் ஈச்வரனுக்கு நாமும் சேஷபூதராகையாலே, நம்முடையவும், நம்மைச் சேர்ந்தவர்களுடையவும் ரக்ஷணத்திலும் ரக்ஷண பலத்திலும் நமக்கு ஸம்பந்தம் இல்லை என்று தெளிவுடன் அத்யந்த பாரதந்த்ரியத்தோடே கூடின சேஷத்வாநு ஸந்தானமும், ரக்ஷணபாரத்தை அவனிடத்தில் வைக்கையும்; இதில் பரந்யாஸம் முக்யமாகையாலே பரஸமர்ப்பணம், பரந்யாஸம் என்பர். 'நீயே ரக்ஷிக்கவேண்டும்' என்று ப்ரார்த்திக்கையாலே ப்ரபத்தி, சரணாகதி என்பர். கீழ்ச்சொன்ன அஷ்டாங்க யோகத்தை உபாயபக்தி என்றும், இங்குச்சொன்ன ப்ரபத்தி என்னும் ஷடங்கயோகத்தைப் பலபக்தி (ஸாத்யபக்தி) என்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். பாப புண்யங்கள் ப்ராரப்தம் என்றும் அப்ராரப்தம் என்றும் இருவகைப்படும். இவன் செய்த கர்மங்கள் அனந்தமாயிருக்கையாலே அவற்றில் சிலவற்றைப் பிரித்து 'இவற்றை முன்னம் அநுபவிக்கட்டும், பின்னால் மற்றதைச் சில சில பிரிவாய் அநுபவிக்கச் செய்யலாம்' என்று வைக்கையாலே பலங்கொடுக்கத் தொடங்கியவை ப்ராரப்தங்களாம். ஏனையவை அப்ராரப்தங்களாம். அப்யுபகத ப்ராரப்தம் என்றும், அநப்யுபகத ப்ராரப்தம் என்றும் ப்ராரப்தங்கள் இரண்டு வகை. ப்ராரப்தங்கள் சிலவற்றை அந்தந்த ஜன்மங்களில் அநுபவிப்பதாக இசைந்து வருகையாலே அவை அப்யுபகத ப்ராரப்தங்கள். மற்றவை அநப்யுபகத ப்ராரப்தங்கள். அஷ்டாங்க யோகமானது அப்ராரப்த கர்மங்களை மட்டுமே நீக்கும். ப்ரபத்தி அப்யுபகத ப்ராரப்தம் நீங்கலான மற்ற எல்லா கர்மங்களையும் நீக்கும். இப்பிரபத்தியால் ப்ரஸந்நனான ஸர்வேச்வரன் தான் உபாயாந்தர ஸ்தாநத்தாலே நின்று மோக்ஷம் கொடுக்கும். அதாவது, இவன் ப்ராரப்தாவஸாநம் வரையில் பக்தியோகம் செய்தால் தான் கொடுக்கும் மோக்ஷத்தை இன்று ஒருகால் இவன் ப்ரபத்தி செய்வதால் தான் ஸந்தோஷித்து அந்த பக்தி யோகத்தின் ஸ்தானத்தில் தான் நின்று இவன் கேட்ட காலத்தில் மோக்ஷம் கொடுக்கிறான் என்கை. இப்ரபத்தி ஸகல பலத்துக்கும் ஸாதநம்.
இந்யாஸ வித்யைச்ருதிகளில் பலவாறு புகழ்ந்து விதித்திருக்கிறது; பகவத் சாஸ்திரங்களிலும், ஸ்மிருதிகளிலும், இதிஹாஸ புராணங்களிலும் இது ப்ரகாசிதம். ஆதிமுதல் அந்தம் இச் சரணாகதியையே முக்கியமாகச் சொல்லுகையாலே இதிஹாஸோத்தமமான ஸ்ரீ ராமாயணத்தை சரணாகதி ஸாரம் என்றும் தீர்க்க சரணாகதியென்றும் மேலோர் சொல்வது. ப்ரபந்ந ஸந்தானகூடஸ்தரான நம்மாழ்வார் வானமாமலைத் திருவடிகளிலே ஸாங்கமாக ரக்ஷாபர ஸமர்ப்பணம் பண்ணுகிற 'நோற்ற நோன்பிலேன்' என்கிற திருவாய் மொழியிலே இவ்வங்காங்கிகள் அடைய அருளிச் செய்யப்பெற்றுள்ளன.
உலகம் வாழவேண்டும் என்ற உத்தம நோக்கத்துடன் சீரார் தூப்புல் திருவேங்கடநாதன் பிராகிருதம், ஸம்ஸ்கிருதம், தமிழ் முதலிய பாஷைகளில் பாலர் முதல் கற்றுக் கடைத்தேறும் வண்ணம் அநேக கிரந்தங்கள் செய்துள்ளனர். "ஸ்ரீரங்கத்தில் ஓர் புறச்சமயி வைஷ்ணவ மதத்தைத் தூஷித்து, அதை ஸ்தாபித்துக்கொண்டபிறகு திருவத்யயனோத்ஸவத்தை நடத்தக் கடவதென்று உத்ஸவத்தை நிறுத்திவைக்க, அங்குள்ளார் அவனை ஜயிக்கமுடியாமல் பெருமாள் கோயிலினின்றும் இவரை வரவழைத்தார்கள். இவர் அங்கு எழுந்தருளி அவனை வென்று உத்ஸவத்தை நடப்பித்தார். இப்படி இவர் வேதாந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தமையால் ஸ்ரீரங்கநாதன் வேதாந்தாசார்யர் என்கிற பட்டப்பெயரையும், ஸ்ரீரங்கநாச்சியார் இவர் பாண்டித்யத்தை மெச்சி ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்கிற பட்டப் பெயரையும், அங்குள்ள பெரியோர்கள் கவிதார்க்கிகசிம்மம் என்கிற பட்டப் பெயரையும் இவருக்கு ப்ரஸாதித்தார்கள். இவரது ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர என்னும் பட்டப் பெயரைப் பொறாமல் அநேகர் தம் தம் தந்த்ரங்களில் இவருடன் வாதம் செய்து ஸர்வ ப்ரகாரத்தாலும் பராஜிதரானார்கள். இவருடைய ப்ரபாவத்தை வைபவ ப்ரகாசிகை முதலியவைகளில் கண்டு கொள்வது. இவரை வடக்குத் திருவீதிப்பிள்ளை குமாரரான பிள்ளை லோகாசார்யர் முகமாக அக்காலத்துள்ள சில பெரியோர்கள் ப்ரபத்தி சாஸ்த்ரார்த்தத்தை ஸங்கிரஹமாக ச்லோக ரூபமாய்ச் செய்து தரும்படி கேட்க, இவர், ந்யாஸ விம்சதியைச் செய்தருளி அதன் அநுஷ்டாந ப்ரகாரத்தைத் தெரிவிக்கும்படி இக்கிரந்தத்தையும் (ந்யாஸ தசகம்) அருளிச் செய்தார். (ந்யாஸ தசகம், நூலாசிரியர் வரலாறு, பக்கங்கள் 32-33. விஜய வருடம் புரட்டாசி மாதம் 1893)
ந்யாஸம் என்பது ஓர் வித்யை. அது மோக்ஷோபாயங்களில் ஒன்று. அது விஷயமான தசகம் -- பத்து. பத்து சுலோகங்கள் அடங்கிய கிரந்தம். ஆகவே அதற்கு ந்யாஸ தசகம் என்று திருநாமமாயிற்று. அதில் த்வயத்தின் அர்த்தமும் ஸங்க்ரஹிக்கப்பெற்றிருக்கிறது. முதல் மூன்று சுலோகங்களில் பூர்வ கண்டத்தின் பொருளும், மேல் ஒரு சுலோகத்தில் உத்தரகண்டத்தின் அர்த்தமும், மேல் ஐந்து சுலோகங்களில் உத்தர க்ருத்யத்தின் ப்ரகாரமும் இறுதி ச்லோகத்தில் ஸாத்விக த்யாகமும் நிரூபிக்கப்பெற்றுள்ளது.
தனக்குவமையில்லாத சீரும் சிறப்பும் எய்தி ஓங்கி விளங்கும் "ந்யாஸதசகம்" தமிழில் சுலோகம், பதவுரை, பொழிப்புரை விசேட விளக்கவுரை இவற்றினோடு "சரணாகதி மாலை" என்ற திருநாமத்துடன் இச்சங்கத்தின் ஐம்பத்தைந்தாவது வெளியீடாகப் பிரசுரிக்கலாயிற்று.
இம்மாலைக்குப் பூரணபொருள் உதவி புரிந்த புண்ணியர் ஸ்ரீமான் கே. பாஷ்யம் அய்யங்கார் அவர்கள் அட்வொகேட், சென்னை. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயாபிவிருத்தியில் விசேட நன்னோக்கு உடையவரும், நன்மனத்தரும், சிறந்த தேசிக பக்தரும் ஆகிய அவரும் அவரது உற்றார் உறவினரும் மேன்மேலும் திருவருள் பெற்று இன்புறுவாராக.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக !
ஸ்ரீரங்கவிலாசம், ப.ரெ. திருமலை அய்யங்கார்
அம்பத்தூர் , காரியதரிசி.
27-9-1953.
{ முகவுரையே மறுபடி மறுபடி படிக்குமாறு அமைந்துள்ளதை கவனித்திருப்பீர்கள். தசகத்திற்குள் போகும் முன்னால், முகவுரையில் குறிப்பிட்டவற்றை ஓரிரு நாட்கள் மீண்டும் படித்து உள்வாங்கிக் கொள்வோம். அதன்பின் 61 பக்கங்களில் விரியும் நூலின் விளக்கத்தை தினமும் இங்கு அனுபவிக்கலாம். 10ம் தேதி முதல் ஆரம்பிக்கிறேன்.}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக