ஞாயிறு, 20 டிசம்பர், 2009

இடையூற்றுக்கும் இடையூறு உண்டு.

5. இடையூற்றுக்கும் இடையூறு உண்டு.

எந்த நல்ல காரியத்துக்கும் இடையூறுகள் குறுக்கிடுவது உண்டு. பெரிய பெரிய காரியங்களுக்குப் பெரிய பெரிய இடையூறுகள் வந்து குறுக்கிடுவதையும் காண்கிறோம். எனவே இக்கன்னியருள் ஒருத்தி இத்தகைய கேள்வி ஒன்றை எழுப்பினாள். 'நாம் நெடுநாளாகச் செய்திருக்கும் பிழைகள் பாவங்கள் எல்லாம் இன்று நாம் செய்யக் கருதும் இந்த நல்ல காரியத்துக்கு இடையூறு விளைக்கலாமே!' என்றாள். அந்த இடையூறுகளை யெல்லாம் அநாயாசமாகத் தொலைத்து எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பதற்கு ஒரு ராஜ வழி இருக்கிறது என்கிறாள் விசேஷ நம்பிக்கையுள்ள ஒரு பெண்.

சுருங்கச் சொன்னால், நாம ஸங்கீர்த்தனம் பண்ணுவதே அந்த வழி என்கிறாள். பகவத் நாம ஸங்கீர்த்தனமும் பண்ணிக் காட்டுகிறாள். பகவானைக் காட்டிலும் பகவானுடைய திருப்பெயர் நமக்குப் பக்கத்திலிருந்து பெற்ற தாய்போல் உபகரிக்கிறது என்று மட்டும் சொல்லவில்லை; நாம ஸங்கீர்த்தனத்திலிருந்து பிறக்கும் சக்தி சாமானியமல்ல என்கிறாள். அது தீயாகிப் பாவங்களை யெல்லாம் நீறாக்கிவிடும் என்கிறாள்.

எத்தகைய பாவத்தையும் எரித்துவிடுமா? இது ஒரு கேள்வி. காட்டுத் தீயைப் பற்றிக் கேட்டிருக்கிறீர் களா? அது பச்சை மரங்களையும் பஸ்மம் ஆக்கி விடுகிறதல்லவா? நாம ஸங்கீர்த்தனமும் பாவங்களனைத்தை யும் உருமாய்த்து ஒழியச் செய்துவிடும் என்கிறாள்.

நாம ஸங்கீர்த்தன வழிக்கு ஒரு முன்மாதிரியாகவும் பேசுகிறாள். "மாயனை" என்று தொடங்குகிறாள். 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்று பாடுகிறாள்.

மேலும் நாம ஸங்கீர்த்தனம் செய்கிறாள். யமுனைத் துறைவன் என்கிறாள். ஆயர்குல மணி விளக்கு என்கிறாள். தாமோதரன் என்கிறாள். இவை பொருள் பொதிந்த பெயர்கள் மட்டுமல்ல, பொருள் புதைந்த பெயர்களும்கூட. முதல் முதல் மாயன் என்ற பெயரைத்தான் பாருங்கள்: இறைவனுடைய வழிகளும் செயல்களும் மாயமானவை – அதாவது ஆச்சரியமானவை.

'வடமதுரை மைந்தன்' என்ற திருப்பெயரைப் பாருங்கள். 'தந்தை காலின் பெருவிலங்க தாள் அவிழ, நள் இருட்கண் வந்த எந்தை' என்பதை மைந்தன் நினைவூட்டுகிறான். இவன் பிறக்கும்போதே தாய் தந்தையர்களின் கால் விலங்குகள் இற்று முறிந்து போய் விட்டனவாம். இது பிறந்த மிடுக்கு. பிறகு இம் மைந்தன் பருவம் நிரம்பு முன்னே அசுர மாமனாகிய கம்சனை வதைத்த மிடுக்கையும் காண்கிறோம்.

ஆயர்குல விளக்கு என்று பெயரிட்டு அழைப்பதிலும் புதை பொருள் உண்டு. வேதம் ஓதியும் காண முடியாத கடவுளை மாடு மேய்த்துக் கண்டுகொண்டார்களாம் ஆயர்கள். மறைக்கு முன்னே சென்று மறைந்தவன் மாட்டுக்குப் பின்னே ஆய்ப்பாடி காண நடந்து சென்றானாம். இத்தகைய எளிமையை உணர்த்துகிறது இப்பெயர்.

'தாமோதரன்' என்ற பெயரின் பொருள் மேலும் விசேஷமானது. 'கயிற்றுத் தழும்பை வயிற்றில் உடையவன்' என்பது இப் பெயரின் பொருள். யசோதை கட்டிய கயிற்றுத் தழும்பை வயிற்றில் உடையவனாக இருந்தான் கண்ணன் என்றால், பகவானுடைய எளிமைக்கு எத்தகைய நினைவுச் சின்னம் பாருங்கள்! இந்தத் தாமோதரனை, "தாயைக் குடல் விளக்கம் செய்த்தா மோதரனை" என்கிறாள் கோபியருள் ஒருத்தி. தன் பிறப்பினால் பெற்ற வயிற்றுக்குப் பெருமை தந்தான்; தன் வயிற்றுத் தழும்பினால், தாயை வாழ்வித்தான்; உலகையும் வாழ்வித்தான்.

இனி, இப் பெயர்களைக் கோத்து இவள் நாம ஸங்கீர்த்தனம் செய்து காட்டுவதைப் பார்க்கலாம். "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினிற் தோன்றும் அணி விளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்ததா மோதரனை" .... இப்படி நாம ஸங்கீர்த்தனம் செய்யும்போது, மனத்தினால் சிந்தித்து வாயினால் பாடும்போது, ஒரு சக்தி பிறக்கிறது நெஞ்சினிலே; அது தீயாக ஜொலிக்கிறது; காட்டுத் தீயாகக் கனன்று நிமிர்ந்து பொங்குகிறது. இந்தத் தீக்கு முன் எந்தக் கடினமான பாவமும் நிற்க முடியாது; இவள் இதற்குமுன் செய்த பிழையும் பாவமும் பஞ்சாகித் தீய்ந்து ஒழிந்து போகும் என்கிறாள்.

இப்போது செய்ய வேண்டியது, அகத் தூய்மையுடன் நாம ஸங்கீர்த்தனம் செய்யவேண்டியதுதான். அகத் தூய்மைக்கு அறிகுறியாகத் தூய மலர்களையும் தூவித்தொழுது பேறுபெறக் கூடும் என்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக, "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" பிழையும் பாவமும் நீறாகிவிடும் என்கிறாள். சாம்பலுமின்றி மாய்ந்து போகும் என்பதையும் குறிப்பாக உணர்த்துகிறாள்.

முன்பு செய்த பிழைகள் மட்டுமா? – இனிமேல் நம்மை அறியாமல் நேரிடத்தக்க பாவங்களும் தீய்ந்து போகும் என்கிறாள். ஆகையால் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டு அல்லது பாடிக் கொண்டு நோன்பிலே இறங்கி, இந்த வியாஜத்தாலே இறைவனை இடையூறின்றி அடைய முடியும் என்று கூறி முடிக்கிறாள்.

தீயினில் தூசு!

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனை

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றளவும்

தீயினில் தூசு ஆகும் செப்பலோர் எம்பாவாய்.

விளக்கம்

இவர்கள் நோன்பில் இறங்கிக் கண்ணனை அடைய விரும்புகிறார்கள் அல்லவா? ஆனால் ஏற்கனவே செய்திருக்கும் பிழைகளின் விளைவு இந்த நற்செயலுக்கு இடையூறு ஆகாதா? இப்படி ஒரு வினா எழக்கூடுமல்லவா? பிழைகளாகிய விரோதிகளைப் போக்கிக் கொண்டு வந்துதான் இத்தகைய நோன்பினில் இறங்க வேண்டும் என்பதில்லை; அப்படிக் கூறுவதில் பொருளுமில்லை; பயனுமில்லை. நாம ஸங்கீர்த்தனத்தில் இன்புற்று ஈடுபடவே பிழைகள் எல்லாம் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகிவிடுமாம்.

ஏற்கனவே செய்த பிழைகள் மட்டுமா? – இனிமேல் நேரக் கூடிய பிழைகளும் தீயினில் பஞ்சு படும்பாடு படும் என்கிறாள் ஞானம் உடைய சிறுமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக