புதன், 23 டிசம்பர், 2009

கிழக்கு வெளுத்தது, உன் உள்ளம் போல!

8. கிழக்கு வெளுத்தது, உன் உள்ளம் போல!

அருணோதய காலத்தில் கிழக்குத் திசை வெளுத்து ஜோதிமயமாகக் காண்பதுபோல் உள்ளத்திலே தூய ஒளி பெற்றுக் கண்ணனுடைய அபிமானத்திற்கு விசேஷ உரிமை வாய்ந்தவளாக இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது பெண்களின் கூட்டம். இவள் ஏன் இன்னும் எழுந்திருக்கவில்லை? இவளுக்கும் பொழுது விடிந்தது தெரியவில்லையா?

‘பொழுது விடிந்ததம்மா! எங்களுக்கு மட்டுமா, உனக்கும்தான்!’ என்கிறார்கள். ‘கீழ்வானம் வெள்ளென்று’ என்று தொடங்குகிறாள் ஒருத்தி. ‘ஆகாயத்திலே கிழக்குப் பக்கம் வெள்ளென்று வெளுத்திருக்கிறதே!’ என்று ஒருத்தி பேசியதும் உள்ளே இருப்பவள் ஒன்றும் பதில் பேசாமல் சும்மா இருக்கிறாள்.

‘அதற்குள்ளே இராக்காலம் கழிந்துவிட்டதா என்ன? கீழ்வானம் வெளுத்துவிட்டதா? ஏன் அப்படி?’ என்று கருதியவள்போல் சும்மா இருக்கிறாள். ‘இது உங்களுடைய விபரீத ஞானம்!”திங்கள் திருமுகத்துச் சேயிழையார்” ஆகிய நீங்கள் நீண்ட பொழுதாக கீழ்த்திசையை நோக்கிக் கொண்டிருந்தீர்கள்.அதனால் உங்களுடைய முக சந்திரிகை கிழக்கே போய்த் தட்டிப் பிரதிபிம்பித்து ஒளி தோன்றவும் கூடும். ஆகவே கிழக்கு வெளுத்ததாக நீங்கள் பிரமிக்கவும் கூடும். வேறு அடையாளம் உண்டா?’ என்று உள்ளேஇருப்பவள் தன் மோன வாக்கினால் கேட்பதுபோலத் தோன்றுகிறதாம் வெளியே இருப்பவர்களுக்கு.

எனவே, வேறொரு அடையாளம் சொல்லுகிறாள் ஒருத்தி. எருமைகள் பனிப்புல் மேய்வதற்காகக் கிழக்கு வெளுக்கையில் கறப்பதற்கு முன்னே விடப்படும் வழக்கம் ஒன்று உண்டு. பால் மிகுதியாகக் கறக்கும் என்று இப்படிப் பனிப்புல் மேய விடுகிறார்களாம் ஆயர்கள். கறந்தபின் எருமைகளைப் பகலெல்லாம் மேய வெளியே விடுவதால், முதலில் பனிப்புல் மேய விடுவதைச் ‘சிறுவீடு’ என்று சொல்கிறார்கள்.இதை அடையாளமாகக் குறிப்பிடுகிறாள். ‘எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்!’ என்று அடையாளம் சொல்வதும் உள்ளே இருப்பவள் காதில் விழத்தான் செய்கிறது. மந்தைக்காட்டில் மேய்வதற்கு முன்னே அவரவர் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் எருமைகளை மேய்கைக்கு விடுவதைக் குறிப்பிட்டதன் நோக்கம், இவள் வீட்டைச் சார்ந்த சிறு தோட்டத்தில் எருமைகள் மேய்வதைப் பார்த்தாவது இவள் தெரிந்து கொள்ளட்டும் என்பதுதான்.

ஆனால் இவள் எழுந்து பார்த்தால்தானே? இவளோ கற்பனை உலகில் அல்லவா சஞ்சரிக்கிறாள்? ‘தோழிமாரகளே! உங்கள் முக ஒளிக்குமுன் சிதறிப்போகிற இருட்டின் கூறுகள் அல்லவா உங்களுக்கு எருமைகளாகத் தோன்றுகின்றன? இதுவும் உங்கள் விபரீத ஞானம்தான்!’ என்று கற்பனைச்செல்வி ஒரு கவி பாடக் கூடுமே!

இந்த நிலையில் இப்பெண்கள் ‘தோழி! பொழுது விடியவில்லை என்பதற்கு அடையாளம் ஏதாவது இருந்தால் நீதான் சொல்லு பார்க்கலாம்!’ என்று கூறுவதாக வைத்துக் கொள்ளலாம். அதற்குக் கற்பனை அரசி என்ன பதில் சொல்லக் கூடும் என்றும் பார்க்கலாம். ‘பெண்கள் பெருங்கூட்டமாய்த் துயிலுணர்ந்து வந்து விட்டதாகத் தெரியவில்லையே;என்னைப்போல் வேறு சிலர் துயில் உணர்ந்து எழுந்து வராமலிருப்பதுகூட ஒரு சான்றுதான்!’ என்று உள்ளே இருப்பவள் வாதஞ் செய்வதாகக் கருதுவோம்.

இதற்கு வெளியே இருப்பவர்கள் பதில் சொல்லுவதுபோல் அமைந்திருக்கிறது இச்செய்யுட்பகுதி. ‘மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்’ ‘பெண்கள் பெரும்பாலும் நோன்பிற்கு நீராடப் போகும் பொருட்டுப் புறப்பட்டு விட்டார்கள். அவர்களை நோக்கி நாங்கள் ‘உன்னை விட்டு விட்டுப் போவது உரியதன்று’ என்று சொல்லிப் போகவொட்டாமல் தடுத்து நிறுத்தினோம். பிறகு உன்னை அழைப்பதற்காக வந்து தலைவாசலில் காத்து நிற்கிறோம் என்று சொல்லுகிறார்கள். ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதற்கும் காரணம் சொல்லுகிறார்கள். ‘கோது கலம்உடைய பாவாய்!’ என்ற அழைப்பிலேயே காரணத்தைக் கண்டு கொள்ளுகிறோம். கண்ணனால் கொண்டாடப் பெற்றவள் இவள். எனவே’கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்’ என்று பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

‘அப்பால், பாடிப் பறைகொண்டு ……. தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்’ அந்தப் பெருமான் தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது திண்ணம். ‘கோதுகலமுடைய’ பாவை தங்கள் கூட்டத்திலிருக்கும்போது கண்ணன் அருள் புரிவதில் ஐயமும் உண்டோ என்பது குறிப்பு.

ஆதலால் பெண்ணே! அ ஆ என்று நீ அலறிக்கொண்டு விரைந்து புறப்படவேண்டுமல்லவா? என்று கூறி முடிக்கிறார்கள். நாங்கள் சொல்லுவதை நீ குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை என்பதையும் தெளிவு படுத்துகிறார்கள்.’அ ஆ என்று ஆராய்ந்து அருள்ஏலோர் எம்பாவாய்’ என்ற முடிவுரை கூர்ந்து சிந்திக்கத் தக்கது. இவர்கள் சொல்லுவதை இவள் ஆராய்ந்து பார்த்து ஒப்புக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லுகிறார்கள். எனினும், கண்ணனால் கொண்டாடப்பெறும் கற்பனைச் செல்வி ஆராய்ச்சியின் பெயராலும் பொழுது போக்கிவிடாமல் விரைந்து புறப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்துகிறார்கள்.

அருள் பெற்றவளே! எழுந்து எங்களுக்கு அருள்வாய்!

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாஎன்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்

கண்ணனுடைய அருளுக்கு மிகவும் தகுதி வாய்ந்தவள் என்று மதிக்கப் பெற்றவளை எழுப்பும் பாட்டு இது. இவளை முன்னிட்டுக் கொண்டு சென்றால் கண்ணனுடைய அருள் எளிதாக எல்லாருக்கும் கிடைக்கும் என்ற நோக்கத்துடன் திரண்டு வந்து அழைக்கிறார்கள் என்று கருதலாம்.

‘கோதுகலம்’ என்பது “கௌதூஹலம்” என்ற வடசொல்லின் விகாரம். ‘ஆசை’ என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக