புதன், 11 நவம்பர், 2009

திருவருட்சதகமாலை

திருவருண்மாலை" அரங்கேற்றுவிழாவில் இச்சங்க மஹா வித்துவான் பண்டித சிந்தாமணி கோபாலாசாரியார் "சிறப்புப் பாயிர"மாகப் பாடித் தந்த எட்டுப் பாக்கள் பின்வருமாறு:---
பாற்க டற்றிரு மருவு மார்பினன் பார்பு கழ்திரு வேங்கட
மாற்சீர் பேரருட் சதகம் செய்தனன் வாழ்தென் பாண்டிசீர் கேசவன்
நாற்க வித்தமிழ்ப் புலவன் பண்ணினில் ஞால மேழுமே வாழவே
போற்றி யின்றதை யரங்க மேற்றுசீர் புண்ணி யத்தின மாதலின்.  .1.

அச்சி றப்பினை யடியே னாவினா லாழ்ந்து தேர்ந்துநூல் செப்புவன்
கச்சி தூப்புலார் குருவாம் தேசிகன் கால்பி டித்தவ னருளினால்
மெச்சு சங்கமா வவையோர் போற்றதன் மேன்மை தன்னையே விளங்கவே
நச்ச ராவின துயர்சி ரந்தனி னன்ன டம்பயி லருளினை.    .2.

துய்ய செந்தமிழ்த் துறைக ளுக்கெலாம் தூய பேரிலக் கியமதாய்
பொய்யில் பாடலிற் புனித தோத்திரம் பொற்ற மிழ்தனில் சுவைமிக
செய்ய சொன்னயம் பொருண யம்தொனிச் சீர்ந யந்தெழுத் தளவுகள்
மெய்ய மோனையோ டெதுகைச் சீருடன் மேல்வி சித்திர மிளிர்வதாய்  .3.

செய்யுள் சீர்பல வுயர்வா யோங்கிட சீரார் பத்தியாங் கடலென
வெய்ய கல்லுமே வுருகும் வண்ணமே மேனி லாவிய நடைதனில்
உய்யப் பாடியே யுலகுக் கீந்தனன் ஓங்கு முத்தமிழ்க் கடலெனும்
துய்ய தேசிகன் சடகோ பன்மனம் துங்கச் சீருட னுகக்கவே     .4.

நன்னூற் சீரினை யுயர்பா லென்கெனோ நால்வே தப்பொரு ளென்கெனோ
முன்னோர் நீதிநூற் சமய மென்கெனோ முன்வே தத்திசை யென்கெனோ
சொன்ன வர்வினை கெடுக்குஞ் சீருறு தூய்மா நன்மருந் தென்கெனோ
பின்னி டுஞ்சுரர் நுகரும் பாற்கடல் பேர்நற் சீரமு தென்பனால்.      .5.

ஆழ்வார் சீரடி யவர்க்குக் கூறியவாழி யானருட் சீரினை
வாழ்வா மென்றுகே சவன்றான் காட்டிபார் வாழ வேயதை முதலென
தாழ்வி லாதுயர் திருமால் தாளிணை தன்னில் சீர்சர ணடைந்துபின்
சூழ்கொ டும்வினை யறுத்து வாழ்மினோ துன்பம் போமிதி லென்றனன்.  .6.

தேசி கன்வட மொழியிற் செய்தயா சீரார் நற்சத கத்தினை
மாசி னற்றமி ழியற்றுங் காரணம் மன்னு மானிடர் வேண்டவே
கேசி யாமசு ரனைமுன் வெல்லுயர் கேச வன்னதை யும்பரார்க்
காசில் சீர்வகை யருளி னானதை யன்பி லின்றவ னுதவினான்    .7.

சித்திர பானு சிறந்ததுலா வோணத்தில்
பத்திரசப் பவ்வமெனப் பார்புகழ --- அத்தனுயர்
வேங்கடமால் திருவருணூல் மேன்மையாய் கேசவன்றான்
ஓங்கரங் கேற்றினா னுவந்து.             .8.

    இத்தகைய சீரும் சிறப்பும் எய்தி ஓங்கி விளங்கும் "தயாசதகம்" தமிழில் சுலோகம், "திருவருண்மாலை"ப்படி பாட்டு, பொழிப்புரை, இவற்றினோடு "திருவருட் சதகமாலை" என்ற திருநாமத்துடன் இச்சங்க வெளியீடாகப் பிரசுரிக்கலாயிற்று.
    இச்சீரிய மாலை வெளியீட்டிற்குப் பூரணவுதவி புரிந்த வள்ளலாரைப்பற்றிச் சற்றுக்கூறுவேன் இங்கு.
தென்றமிழ் நாட்டினைக் குறித்துக் கல்வியிற் பெரிய கம்ப நாடர்
அத்திருத்தகு நாட்டினை யண்டர்நா
  டொத்திருக்கு மென்றாலுரை யொக்குமோ
  எத்திறத்தினு மேழுலகும் புகழ்
  முத்துமுத்த மிழுந்தந் துமுற்றமோ
               --- (
கிட்கிந்தா, ஆறுசெல்படலம் 53)

எனப் புகழ்கிறார்.”பூழியர்கோன் தென்னாடுமுத்துடைத்து”
பாண்டிநாட்டுச் சிறப்பு
நல்லம்பர் நல்ல குடியுடைச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து – நல்லரவப்
பாட்டு டைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்
(பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, நச்சினார்க்கினியருரை)

சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும்
சங்கப் புலவருந் தழைத்தினி திருந்த(து)
மங்கலப் பாண்டி வளநா டென்ப.
    (நன்னூல், சங்கர நமச்சிவாயப் புலவர் விருத்தி)
என்ற அறிஞர் பாடலால் நன்கு அறியலாம்.

வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
  பண்பிற் றலைப்பிரிதல் இன்று.
        -- (பொருட்பால், ஒழிபியல், குடிமை 5)
என்னும் திருக்குறளுரையில் ஆசிரியர் பரிமேலழகியார், “ பழங்குடி” என்பதற்குத் “தொன்று தொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார்” என்று உரை கூறித் “தொன்று தொட்டு வருதல் – சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்” என விளக்கியுள்ளார். இதனாலும், வான்மீகி பகவான் ஸ்ரீராமாயணத்து,சுக்ரீவன் வானர சேனையை நாடவிட்ட தருணத்துப் பாண்டியர் செல்வச் சிறப்பையும் அவரது கபாடபுரத்தையும், எடுத்தோதுதலாலும் பாண்டியரின் பழமை நன்குணரலாம்.

  சரணாகதி தர்மம் விளைந்த பெருநிலமாகவும், கருணாகரப் பெருமாள் ஸர்வ ஜீவர்க்கும் அபயப் பிரதானம் அருளிய திருப்பதியாகவும் தருப்ப சயனனாய்த் திருக்கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் திருப்புல்லாணியும், “கோவையின் றமிழ் பாடுவார் தொழுந்தேவதேவன் திருக்கோட்டியூர்” என்று சிறப்பித்தருளப் பெற்றதும், ஸ்ரீவைஷ்ணவ பரமாசாரியராகிய ஸ்ரீபெரும்பூதூர் வள்ளலின் ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பிக்கும், “அல்வழக் கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமான துங்கன்” என்று கொண்டாடப் பெற்ற செல்வ நம்பிக்கும், அவதாரத் தலமான திருக்கோட்டியூரும், பொன்னும், முத்தும், இட்டுச் செய்த ஆபரணம் போலே சூடிக் கொடுத்த நாச்சியாரும், சீரணிந்த பாண்டியன்றன் நெஞ்சு தன்னில் துயக்கறமால் பரத்துவத்தைத் திறமாய்ச் செப்பி வாரணமேல் மதுரை வலம் வரவே வானின் மால் கருட வாகனனாய்த் தோன்றத் திருப்பல்லாண்டு பாடி வாழ்த்திய பெரியாழ்வாரும், அவதரித்த தலமாயும், வட பெருங்கோயிலுடையான் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூரும், மாலுகந்தவாசிரியரான நம்மாழ்வார் அவதரிக்குமேற்றம் பெற்ற திருக்குருகூர்ப்புரியும், திருவாத வூரடிகளால் “பத்த ரெல்லாம் பார்மேற் சிவபுரம் போற் கொண்டாடு முத்தரகோச மங்கையூர்'” என்று போற்றிய திருவுத்தரகோச மங்கைத் தலத்தையும், அன்பர்க்கே யவதரிக்கு மாய னிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுர கவியாரைப் பெறும் பேறும் பெற்ற திருக்கோளூர் முதலான ஈரொன்பது திருமால் திருப்பதிகளையும் தன்னுட் கொண்டதும், அபிநவ கவிநாதனாகிய கம்ப நாட்டடிகள் வந்து துதிக்கின்ற நாடாயும் விளங்கி வருவது தென்பாண்டி நன்னாடு.
அமிசசந்தேசம் என்னும் அரிய அழகிய தம் நூலில் திருவேங்கடநாதன் எனும் கவிவாதி சிங்கத் தேவன் பின்வருமாறு கூறுகிறார்.
தவத்தினால் விளங்கும் திருவாலவாயுடையரான பரமசிவனிடத் தினின்றும் தெய்வப் படைகளை யடைந்த பாண்டிய தேசத் தரசர்களுடைய பிரபாவத்தினால் தாங்கள் சிறையிலிருந்ததை நினைத்து பயமடைந்த மேகங்கள் காலத்தில் வருஷிப்பதால் நிறைந்த பயிர்களையுடையதும், குபேர பட்டணத்தைக் காட்டிலும் அதிகமான செல்வச் சிறப்புடையதும், யாகம், தானம், தவம் முதலிய புண்ணியங்களுக்கிருப்பிடமான பட்டணங்களினாலும், கிராமங்களாலும் அலங்கரிக்கப் பெற்றது பாண்டிய தேசம். பவழக்காடுகளுடன் கூடிய அந்நாட்டு எல்லையிலுள்ள ஆழி காட்டுத் தீயினாற் சூழ்ந்த காடு போலவும், ஸந்த்யா ராகத்தோடு கூடிய ஆகாசம் போலவும், சிந்தூரத்துடன் கூடிய யானை போலவும், பீதாம்பரத்தினால் ஸேவிக்கப்பட்ட நாராயணன் போலவும், மின்னலோடு கூடிய மேகம் போலவும், ஒரு சரீரத்துடன் கூடிய ஆண் பெண் உருவமான மிதுநம் போலவும் தோன்றும். பாண்டிய தேசத்துப் பெண்கள் முத்துக்களின் சூர்ணங்களினால் விளங்குகிற திலகத்தையுடையவர்களாகக் காணப் பெறுவர்
    இவ்வித பழம்பெருமை நிறைந்துள்ள பாண்டி நன்னாட்டின்கண் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் அக்கிரஹாரம் பிள்ளையார்குளம். இந்நல்லூரில் அந்தணச்சிரேட்டரும், வைணவகுல திலகரும், பரோபகாரியும், எமது மறை புகழும் பாரத்வாஜ கோத்திரத்துதித்தவரும், பந்து பரிபாலனத்திற் சிறந்தவரும் ஆகிய  பி.ஆர். நாராயணய்யங்கார் ஸ்வாமி எல்லா நற்குணங்களும் கல்வியும் நிறையப் பெற்றவரும்  கற்பினுக்கணியாய்த் திகழ்ந்தவருமாகிய சுந்தரி அம்மையாருடன் இல்லறமாகிய நல்லறத்தை நன்கு நடத்தி வந்தார். அருமறையுச்சியுள் ஆதரித்தோதும் அரும்பிரமம் திருமகளோடு வருந்திருமால் என்று மறைமுடித் தேசிகனார் அருளிச் செய்தபடி பொன்னருளோடும் அப்பூமகளோடும் புகழ நிற்கும் சிங்கவேள் மாலோலன் மாணடி தொழுதேத்தும் மாசில் மனந்தெளி முனிவராயும், முக்கோற்பகவரில் முதல்வராயுமுள்ள நம் ஸ்ரீ அழகிய சிங்கரின் திருவடிகளை வாழ்த்தும் நல்லன்பர்கட்கு நற் பூஷணமாய் விளங்கிய நன்மையோனே இத்திரு நாராயணய்யங்கார் என்ற சீரியர். இவரது திறமையைக் கண்டு உவந்த உள்ளத்தனான அனந்த பத்மநாபன் தனதேயான திருவிதாங்கூர் ஸம்ஸ்தானத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இவரை அமர்த்தி அந்த ஸேவையைப் பெற்றுத் திருவுள்ளம்  பூரிப்பவனானான். இத்தம்பதிகளின் நற்குண நற்செய்கைகள் அளவிட முடியா. இவர் தம் அருமருந்தன்ன நற் புதல்வர் ஸ்ரீமான் என். கிருஷ்ணய்யங்கார்  மாடமாமயிலைத் திருவல்லிக்கேணியைத் தன்னுட் கொண்ட சென்னை மாநகரில் மவுண்ட் ரோட் ஜெனரல் பாட்டர்ஸ் ரோட்டின் கணுள்ள அஸோஸியேட்டட் ட்ரேட்ஸ்ஸின் உரிமையாளராவர். இவர் உழைப்பால் உயர்ந்த உத்தமராகி, தன்னைப் போல் சீரிய நற்குண நிலயமாய் நிற்கும் ஸௌபாக்கியவதி ஜானகி அம்மாளை வாழ்க்கைத் துணையாகக் கொண்டவராய் அனைவரும் நன்கு கொண்டாடும் செம்மலாய் விளங்கி வருகிறார். இவரது வேங்கடேச பக்தி நிகரற்றது. இவர் இச்சீரிய சங்கத்துப் பேரபிமானிகளுள் ஒருவர். இம்மாண்பர் கருவிலேயே திருவுடையராய்த் திகழ்கின்றார் என்பது இத் "திருவருட் சதக மாலை" வெளிவர பூரண உதவி புரிந்தமையாலே என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைத்துலகும் அறிந்து அனுபவித்தற்குரியது.
    தனக்குவமையில்லாத இச்சீரிய நற்பணியாற்றித் திகழும் இந்நன்னெஞ்சரும் இவரது உற்றார் உறவினரனைவரும் ஸ்ரீ அழகிய சிங்கரின் பூரணவருள் பெற்று இன்புறுவாராக. "திருவருட்சதகமாலை"யை உலகம் பெற்று உய்யுமாறு உதவிய கிருஷ்ண ஜானகிச் செல்வி மாலோல திருவேங்கடத்தான் முதலாய திவ்ய தேசத் தெம்பெருமான்களுடைய பரிபூர்ணவநுக்ரஹத்தால் அதிவிரைவில் உலகுய்யத் திருவயிறு வாய்த்து நன் மக்களைப் பெற்று மகிழ்வாராக.
    "மதியருண் மகிழ்ம ணங்கொண் மங்கலச் சங்க நாதம்
       பதியெனும் பரமர் தூப்புற் புனிதனா மொருவ னூதும்
       கதியினீ ருதவு நீரின் கதகநற் சதக முன்னூல்
       ததியர்செந் தமிழி சைக்கண் கேசவன் தெரியத் தந்தான்."
    " வேய்ங்குழ லோசை யென்கோ விடைமணிக் குரலி தென்கோ
       தீங்கவி நிரத மென்கோ திப்பியர்க் கமுத மென்கோ
      வேங்கட விமல னூட்டும் யாழ்நரம் பின்ப மென்கோ
      ஓங்களி யமல னீந்த வொளியருட் சதக நூலே."


பொங்கும் மங்கலம்
எங்கும் தங்குக.



ஸ்ரீரங்க விலாசம்,                            ப.ரெ. திருமலை அய்யங்கார்
   அம்பத்தூர்.                                                 காரியதரிசி
  27-1-1952


……….(நூலின் முன்னுரை, முகவுரைகள் இன்றுடன் முடிந்தன, நாளை முதல் நூலிலிருந்து தினமும் நான்கு பாடல்களாக இங்கு இடுவேன்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக