ஞாயிறு, 21 டிசம்பர், 2008

திருவருட்சதகமாலை கேசவ ஐயங்கார் முகவுரை

||ஸ்ரீ:||

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

முகவுரை

வாழவுல கேழுமொரு வேதமுடி வள்ளல்

யாழினிசை விள்ளமுத வெள்ளமென நல்கும்

ஆழியொடு சங்கமில காதிபர னங்க

ளேழுமலை யண்ண லரு யோதியெழு வாமே.

                                                    தயாசதகம் (அருணூறு) என்ற இப்பனுவல் வேதாந்த தேசிகரால் ஸ்ரீநிவாஸப் பரம்பொருளாகிய திருவேங்கடமுடையான் திருவருள் விஷயமாய் வடமொழியில் அருளிச்செய்யப்பட்டது. இது வணக்கப் பதிகம், முதன்மைப் பதிகம், கற்புப்பதிகம், அடைவுப்பதிகம், உதவிப்பதிகம், சீலப்பதிகம், வீற்றுப்பதிகம், ஆற்றற்பதிகம், தோற்றப்பதிகம், பேற்றுப்பதிகம் என முறையே முக்கியப்பொருள் பொதியச் செய்ந்நன்றி விண்ணப்பப்பா, நூற்பயன் கூறும்பா, திருநாமப்பா, முதலிய மேலெண் பாக்களுடன் கணக்கால் நூற்றெட்டுத் திருவிருத்தங்கள் அமைந்துள்ள சந்தமிகும் பதிகம் பதிகமதாகிய பேரருள் சதகமாகும். முதற் பதிகம் அநுஷ்டுப்,இரண்டாம் பதிகம் ஆர்யை, மூன்றாம் பதிகம் ஔபச் சந்தஸிகம்,நான்காம் பதிகம் மாலிநீ, ஐந்தாம் பதிகம் மந்தாக்ராந்தை, ஆறாம் பதிகம் நர்த்தடகம், ஏழாம் பதிகம் சிகரிணீ, எட்டாம் பதிகம் ஹரிணீ, ஒன்பதாம் பதிகம் ப்ருத்வீ, பத்தாம் பதிகம் ஸிம் ஹோந்நதை என்னும் விருத்தங்களிலும் , மேலெண் பாக்கள் ஸிம் ஹோந்நதை, மாலிநீ, சார்த்தூல விக்ரீடிதம் என்னும் விருத்தங்களிலும் யாக்கப் பெற்று, ஓசை யுயர்த்துப் பொருள் பொதிந்து கவி நலந்திகழும் திருவருணூறிதாகும். ஊன்றிப் பரவி யொக்க நடக்கும் கவியினழகு ஒப்பற்ற தென்பது மிகையாகாது. சிகரிணீ, ஹரிணீ என்னும் விருத்தங்களில் மாக்கவிஞர்கள் பலரும், வருந்தியே நடந்துள்ளார்கள். கிந்ந : கிந்நச்சிக ரிஷு கதம் நியஸ்கந்தாஸி என்றும் சகித ஹரிணீ ப்ரேக்ஷணா என்றும் அக்குறிப்பை ஒருவாறு சுட்டியுள்ளார்கள். இத்திருச் சதகத்து அவை சீர்மல்கும் பெற்றி நோக்கியே களிகூரற் பாலது. ஆர்வத்தருளும் பொருளின் பொதிவுக் கேற்பக்கூறும் சொல்லும் கருடகதிபோல் வட்டமிட்டுச் சூழ்ந்தெழுமாறே ஒலிநயமும் ஒளிமிளிர்வும் ஒன்றிப் பொலியும் சீர்த்தி புலவர்க்குக் கண்கூடேயாம்.சேகாநுப் ராஸத்து நர்த்தடகம் பேரெழில்காட்டும் திருவிருத்தமொன்றை இங்கு எடுத்துக் காட்டுவாம்.

ம்ருது ஹ்ருதயேதயே ம்ருதித காமஹிதே மஹிதே

த்ருதவிபுதே புதேஷுவித் தாத்மதுரே மதுரே

வ்ருஷகிரி ஸார்வபௌவ் மதயி தேமயிதே மஹதீம்

புவகநிதே நிதேஹி பவமூல ஹராம் லஹரீம்.

சொற்றிருவும் பொருட்டிருவும் ஒக்கப் பொலியும் திருமறையே ‘தயாசதகம்.’

      அருளின்வடிவளேதருமவரும்பயனாகியதிருமகள்என்பாள்.அவள்தனிக்கேள்வனே

ஸ்ரீநிவாஸன். மறை புகல் என்னும் மறைமுடித் தருமமும் அதன் அரும்பயனும் அனைவர்க் கும் அம்மையப்பராகிய அத்திப்பிய தம்பதியாரே ஆவர். திருக்கலந்த மார்பனே அருள் கலந்த  ஆளரி. அருண்மை திருமாட்சி. ஆண்மை அரிமாட்சி. ஒப்புயர்வற்ற ஆண்மையும் ஒப்புயர்வற்ற அருண்மையும் பதிபத்தினியராய் எண்பெருக்கந் நலத்திணை பிரியா  தொன்றி  நின்ற உயர் நிலையே பரத்துவ நிலை. அந்நிலை ஸர்வ சரீரப் பொருள் ஒன்றுக்கே உறும். ஆதலின் ஸர்வ சரீரப் பொருள் என்றதே பரம்பொருள். தனதுடம்பாகிய உலகத்துக்குத் தானே ஓருயிராய் விளங்கும் பெற்றியதே அஃதாம். அதன் உடம்பென்றே அவரப் பொருள்யாவும் பொருளாகும். அஃதே அவற்றின் தன்மை. ஆதலின் உலகனைத்தையும் உடம்பென ஆண்டு காக்கும் இயல்புடைய தத்துவமே பரதத்துவமாகும். அதன் ஆணை காத்து அதனடிக் கீழமர்ந்து புகுந்து காப்புப் பெறும் தத்துவமே அவரதத்துவமாகும். காக்கும் இறையின் குணங்கட்கு இறைமை சான்ற திருக்குணமே அருட்குணமாம். அத்தகைப் பேரருள் பொதிந்து விளங்கும் இயல்வினனாகிய பெருந்தகையாளனே திருப்பரன் என்றதே இப்பேராசிரியர் இச்சதகத்துத் தேறியதோர் திண்ணம். இதை 53, 61, 68, 69 முதலிய திருவிருத்தங்களை நோக்கிக் கண்டு  கொள்க. ஸர்வசரீரியாகிய இறைப் பொருட்கே அருள் என்றது இறைக்குணமாக கூறும். ஸர்வ சரீரியிடத்தே அருள் என்ற திருக்குணம் அளவு கடந்தும் வாசியற்றும் பொதிந்து விளங்கும்.  அத்திருக்குணங் கொண்டே ஸர்வ சரீரியாகிய திருப்பரன் தன் சரீரமாகிய உயிரனைத்தையும் தன்கண் ஒன்றச் செய்து தன்னையே யொக்கச் சமன் செய்விக்கும் தனிப் பெரு வள்ளலாய்த் திகழ்வான். அபயமளிக்கும் வள்ளலே அண்ணல். அவனே பரன். பரன் அபயமளித்துக் காப்பான். அவரன் சரணம் புகுந்து காப்புப் பெறுவான். அத்தகைப் பேரருளாளனே திருப்பரன். அவனே காரணனாகும் நாரணனென்பான். அவன் நின்று விளங்கும் மலையும் நாரண மலையாம். வேங்கடமலை, வேதமலை, சேடமலை, அஞ்சனமலை, திருமலை, சிங்கமலை, ஏழுமலை, விடபமலை, நெடியோன்மலை, அண்ணல்மலை முதலிய  திருநாமங்கள்  அந்நாரண மலைக்குள்ளன. திருவரியே மலையப்பன் விஷ்ணு : பர்வதா நாமதிபதி : கிரிஷ்டா: யஸ்யோருஷு த்ரிஷு விக்ரமணேஷு என்று மறை தானே அறையா நின்றது. பரத்துவம் விளங்கும் மலையாதலின் திருமலையொன்றே நாரணமலை, வேதமலை என்னப்படும். வாக்கியத்தை நோக்க நாரணமலையென்றும், வாசகத்தை நோக்க வேதமலையென்றும் ஓதப் பெறும். ஆதலின் மலை என்ற சொல் திருவேங்கடத்தையும் , மலையப்பன் என்ற சொல் திருவேங்கடமுடையானையும் உணர்த்தா நின்றன. பிரணவமே வாசகம். நெடியோனே வாச்சியன். அவனே ஸ்ரீநிவாஸன். அஃதோர்ந்துணர்க.

    இறுக்கமே ஆண்மை. உருக்கமே அருண்மை. ஆண்மையிறைமை இறுக்கமாகும். அஃதே கோன்மை. ஸத்யா ததிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம். (மெய்ந்நெறி கடந்தாரைக் கிளையுடன் களைந்திடுவேன்.) என்று இறுகுமதே அஃதாம். பெண்மை யிறைமை இரக்கமாகும். அஃதே அருண்மை கார்யம் கருண மார்யேண நகச்சிந் நாபராத்யதி. (வழுப்பாடில்லார் எவருமிலர். இரங்கி அருள் செய்தலே ஆரியரின் கடமைப்பாடாகும்) என்று உருகுமதே அஃதாம். இறைமைக்கே இறுக்கமும், உருக்கமும் உற்றனவாகும். இரண்டும் அளவு கடந்து முழுதொன்ற நின்ற மறைப் பொருளே இறைப்பொருள். ஆண்மைத் தலைமைப் பொருள் அரி. அவனே புருடோத்தம நம்பி. பெண்மைத் தலைமைப் பொருள் திரு. அவளே நாரியுத்தமை, நங்கை. நம்பியும் நங்கையும் எக்காலும் எந்நிலையிலும் பிரியகில்லார். பிரித்து நிலையில்லை. அத்தகைய பிரியா நிலையே இறைநிலை. ஒன்றையொன்று அவாவித் தழுவிக் கொண்டே நிற்கும். திரு நங்கையைக் கொம்பென நோக்கும் நம்பியே குரிசில். அரி நம்பியைக் குரிசிலென நோக்கும் திரு நங்கையே கொம்பு. கொம்பும் (அருண்மையும்) குரிசிலும் (ஆண்மையும்) ஒன்றிப் பம்பிய பெருமாட்சியே மறைமுடி. நல்லன்பர்க் கருளும் திருக்காட்சி. இச்சதகத்து 84ம் திருவிருத்தத்தை நோக்குக. அவ்விருமையின் ஒருமையென்னும் திருமணமொன்று நோற்றுப் புரிவித்த வித்தகனே விசுவாமித்திரன் (உலகுக்கன்பன்) என்பான். அவ்விருமையின் ஒருமையே ஒருமையாகும். “கோலமலர்ப் பாவைக் கன்பாகிய வென்னன்பேயோ” என்றதே அது. அவ்வொருமையே விசிட்ட வொருமை. முரண்பாடு அறும் ஒருமை அஃதொன்றே. அஃதே பேரன்பினொருமை. அந்தணரந்திய ரெல்லையினின்ற அனைத்துலகத்தையும் வாசியின்றி நலம்பெற வாழ்விக்கும் ஒருமை அஃதேயாம். “ஸ்ரீநிவாஸன்” என்பது அவ்வொன்றின் திருநாமம். அஃதே பரம்பொருள். அப்பொருள் சுரக்கும் திருவே அருள். ஸ்ரீநிவாஸன் திருவருளின் நீர்மையைக் கலக்கமறத் தெளிவித் தருளிய பேராசிரியரே வேதாந்த தேசிகர்.அவ்வொருமையும் அந்நீர்மையும் ஒக்கத்தெளிக்கும் கதகமே இத்தயாசதகமாகும். வேறுபாடுகள் மிகுந்துள்ள அவ்வுலகம் முரண்பாடற்றுப் பேரன்பு நெறியாகும் மறைபுகனெறிக்கண் திருப்பரனடிக் கீழமர்ந்து புகுந்து அடியாராகி அவ்வடியாரெனும் உறவில் ஒக்கக் கலந்து துறவின்கண் தொண்டு பூண்டு இருமையும் வழுவாது நல் வாழ்வுற்று மகிழுமாறு மறைமுடித் தேசிகனார் இத் திரு வருட்சதகத்தைப் பணித்துள்ளார். திருவருளின் பணியென்றே இதை ஒருவாறு தமிழ் செய்துள்ளோம். முதநூலின் கருத்தையும் குறிப்பையும் விரித்து விளக்கும் முறையில் இது செய்யப் பெற்றுள்ளது. திருவேங்கடமுடையான் உகந்தருள்வானாக். திருவருள் பொலிக ! திருவருட்சதகம் பொலிக !

ஆழிமா மாதுடன்

வாழுமா வேங்கடத்

தாழியா னாரருள்

வாழியாழ் வார்களே.

                         கேசவய்யங்கார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக