ச்ருதப்ரக்ஜ்ஞாஸம்பந்மஹிதமஹிமாந: கதி கதி
ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதிகுஹரகண்டூஹரகிர:
அஹம் த்வல்பஸ் தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி
த்வதாயத்தம் ரங்கக்ஷிதிரமணபாதாவநி விது:
ஸ்ரீமதாண்டவன்: ஏ பாதுகையே! சாஸ்திரங்களையறிந்து இயற்கையாகவே புத்திசாலிகளாயும், கேட்கிறவர்களுக்கு மிகவும் இன்பமாகப் பேசக்கூடியவர்களாயுமிருக்கிற எவ்வளவோ பெரியவர்கள் உன்னை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள். ஒன்றும் தெரியாத நான் அவர்களைப் போலவே தாறுமாறாகவே பிதற்றுகிறேன். அப்படிப் பிதற்றுகிறதும் உன் அதீனம்தான் என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.
ஸ்ரீ ல.ந்ரு.: ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சாஸ்திர ஞானமும், புத்தியும் உடைய பெரியோர்கள் உன்னைப் பற்றி, இனிய சொற்கள் கொண்டு ஸ்தோத்திரம் இயற்றுவர். ஒன்றுமே தெரியாத நானும் ஸ்தோத்திரம் இயற்ற முனைந்தேன். என் பிதற்றலையும் நீ ரஸிப்பாய்.
யதேஷஸ்தௌமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி ததோ
மஹிம்ந: கா ஹாநிஸ்தவ மம து ஸம்பந்நிரவதி:
சுநா லீடா காமம் பவது ஸுரஸிந்துர் பகவதீ
ததேஷா கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தாபரஹித:
ஸ்ரீமதாண்டவன்: ஞானம், சக்தி,பலம்,ஐச்வர்யம்,வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களை உடைத்தாயிருக்கிற பெருமாளுடைய திருவடியைக் காப்பாற்றுகிற பாதுகையே! நாய் கங்கையில் தண்ணீர் குடித்தால் அதற்கு இகபர ஸௌக்கியமுண்டாகிறது. கங்கைக்குக் கொஞ்சமேனும் குறைவில்லை. அதுபோல நான் உன்னை ஸ்தோத்திரம் பண்ணினால் உனக்கு ஒன்றும் குறைவில்லை. எனக்கு ஸகல ஸௌக்கியங்களும் வருகிறது.
ஸ்ரீ ல.ந்ரு.: பெருமாளின் திருவடியைக் காக்கும் பாதுகையே!ஒன்றுமே தெரியாத நான், உன்னைப் பற்றி ஸ்தோத்திரம் இயற்ற முயல்வது, உன்னுடைய பெருமைக்கு எந்தக் குறைவையும் உண்டாக்காது. கங்கை நீரை ஒரு நாய் நக்கிக் குடித்தால் கங்கைக்குத் தாழ்வு உண்டாகுமா? மாறாக நாயின் வேட்கை அல்லவா தீருகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக