செவ்வாய், 4 அக்டோபர், 2016

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

 

நாட்டேரி ஸ்வாமி வழங்கும்

“சொல்லாமல் சொன்ன இராமாயணம் “

26-09-2016 அன்று நடந்த

54 ஆவது டெலி உபந்யாஸம்

http://www.mediafire.com/download/cqw9dehn0i5qqh3/055_SSR_(26-09-2016)_00_09_15-01_23_45.mp3

அல்லது

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkknXSzu572sloqCDv

திங்கள், 26 செப்டம்பர், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

 

எட்டாங் களம்

இடம் : சீதையின் அந்தப்புரம்

காலம்: நண்பகல்

பாத்திரங்கள்: இராமர், இலக்ஷ்மணர், சீதை

(சீதை ஓர் ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறாள். இராமர், இலக்ஷ்மணர் பின்தொடர வருகிறார். சீதை அவரைக்கண்டு எழுந்து எதிர் செல்கிறாள்)

சீதை: (தனக்குள்) இதென்ன, என் பிராணபதி முகவாட்டத்தோடு வருகின்றார்! ஏதோ விசேஷம் தெரியவில்லை. கேட்டறிவோம். (இராமரைப் பார்த்து) பிராணபதீ! என்ன விசேஷம்? பட்டாபிஷேக காலமாகிவிட்டதே! தங்கள் சுந்தர வதனம் வாட்டமுற்றிருப்பதேன்? தங்களுக்கு இருபுறமும் சாமரை ஏன் வீசப்படவில்லை? சந்திரவட்டக்குடை சிரசின் மேல் ஏன் விளங்கவில்லை? தங்கள் கட்டளைப்படி சுமந்திரர் நீலக்கல் ஒன்றைப் பதக்கத்தில் பதித்துக் கொண்டுவந்து கொடுத்தார். பட்டாபிஷேக சமயத்தில் தரித்துக்கொள்ளலாமென்று வைத்திருக்கிறேன். பட்டாபிஷே முகூர்த்தம் கடந்துவிட்டது போலிருக்கிறதே! பட்டாபிஷேகத்திற்குரிய ஆரவாரம் ஒன்றையுங் காணேனே. எனக்குத் தெரியாமல் தங்களுக்குப் பட்டாபிஷேகமாய்விட்டதா? அப்படியானால் அதற்கேற்ற கோலங்கள் தங்களிடத்துக் காணப்படவில்லையே? அடியாளுக்கொன்றுந் தோன்றவில்லை. ஒருகால் மகுடாபிஷேக நாளை மாற்றி வைத்துவிட்டார்களா?

இராமர்: - ஆம் சீதா! எனது பட்டாபிஷேக தினத்தை மாற்றிவைத்துவிட்டார்கள்.

சீதை:-- அப்படியா? என்றைக்கு மாற்றிவைத்துள்ளார்கள்?

இராமர்:-- பதினான்கு வருஷங்கள் முடிந்தபிறகு.

சீதை:-- ஆ! அவ்வளவு காலம் எட்டியா வைத்துவிட்டார்கள்? நல்லதுதான். அதுவரையில் மாமா அவர்களே ஆண்டுவருவார்கள் போலிருக்கிறது

இராமர்:-- இல்லை, ஜானகீ! அதுவரையில் உனது கொழுந்தன் பரதன் அரசாள்வான்.

சீதை:-- ஆனால் சரி. நாம் இதுவரையில் இருந்ததுபோல் இன்னும் பதினான்கு வருஷகாலம் இருக்கலாம். தாங்கள் என்னைவிட்டுப் பிரியாதிருக்கின், பதினான்கு வருஷமல்ல, அதற்குமேல் எத்தனை வருஷ காலம் பொறுத்துத் தங்களுக்குப் பட்டாபிஷேகமானாலும் எனக்குச் சந்தோஷமே.

இராமர்:-- சீதா! எனக்கும் அது சந்தோஷமாய்த்தான் இருக்கும். ஆனால் நாம் நினைத்தபடி எது முடிகிறது? பட்டமாகாததைப்பற்றி எனக்குக் கிஞ்சித்தும் வருத்தமில்லை. உன்னைவிட்டுப் பிரிந்துறையவேண்டி நேரிட்டிருப்பதை எண்ணியே வருந்துகின்றேன்.

சீதை:-- நாதா! என்ன அது! என்னைவிட்டுப் பிரிந்துறைவதா? எங்கே? ஏன்? பிராணபதி! தாங்கள் கூறுவதின் தாத்பரியம் எனக்குத் தெளிவாக விளங்கவில்லை! என் நெஞ்சு துடிக்கிறது. நேர்ந்ததென்ன? நான் செய்த அபராதங்கள் எவை? அடியாள் அறியத் தெளிவாய்க் கூறுங்கள்.

இராமர்:-- கண்மணீ! கலங்காதே. நேர்ந்த விஷயங்களைக் கூறுகின்றேன் கேள். வெகு காலத்திற்கு முன் தேவலோகத்தில் எனது தந்தை சம்பராசுரனுடன் யுத்தம் செய்தார். யுத்தத்தின் மத்தியில் அவர் களைத்து மூர்ச்சையாயினர். அப்போது அன்னை கைகேயியார் அவருக்கு உபசாரங்கள் செய்து அக்களைப்பை ஆற்றினார்கள். அதற்காகத் தந்தை மனம் மகிழ்ந்து இரண்டு வரங்கள் கொடுத்தார். அன்னையார் அவைகளை அப்பொழுதே பெற்றுக்கொள்ளாது வேண்டியபோது பெற்றுக்கொள்வதாகக் கூறி நிறுத்தி வைத்திருந்தார். அவ்வரங்களிரண்டையும் இப்பொழுது அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவைகளுள் ஒரு வரம் பரதன் பாராள வேண்டுமென்பது. மற்றொரு வரம் நான் பதினான்கு வருஷம் வனவாசஞ் செய்யவேண்டுமென்பது.

சீதை:-- ஆ! (பெருமூச்சு விடுகிறாள்)

இராமர்:-- ஆதலால் என் தம்பி அரசாள்வான். நான் தாய் மனப்படியும், அவர்க்குத் தந்தை கொடுத்த வரப்படியும் பதினான்கு வருஷம் வனவாசஞ் செய்துவருவேன். அதுவரையில் நீ இங்கு இருந்து உன் கொழுந்தர், மாமியார், மாமனார் முதலானவர்கள் மனங்கோணாது நடந்துகொண்டு மனம் வருந்தாதிரு.

சீதை:-- என் பிராணபதி! என்னை முகநோக்கித் தாங்கள் இவ்வாறு மொழிய அடியாள் செய்த பிழை என்னையோ? தாங்கள் இவ்விராச்சியத்தை இழந்துவிட்டீர்களென்றாவது, வனஞ்செல்லும்படி தங்களுக்கு நேரிட்டதே யென்றாவது நான் வருந்தவில்லை. ‘நீ வருந்தாதே, நான் காட்டுக்குப் போகிறேன்’ என்று சொன்னீர்களே, அந்தச் சொல்லானது நஞ்சினும் கொடிதாக என்னை வருத்துகின்றது. ‘வாழ்விலும் தாழ்விலும் உன்னைப் பிரியேன்’ என்று அக்கினி சாக்ஷியாக என்கரத்தைப் பற்றிக்கூறிய உறுதி எங்கு சென்றொளித்தது? அரச பாரத்தால் என்னை அடிக்கடி பிரிய நேருமே என்று நேற்று வருந்திய நெஞ்சம் இன்று கருங்கல்லாகவா மாறிவிட்டது? உடலொன்றுக்கு உற்ற கண் இரண்டுபோல, உயிர் ஒன்றுக்கு உற்ற உடல்கள் இரண்டாய் நாமிருப்பதாகத் தாங்கள் அடிக்கடி கூறியுள்ளீர்களே. கண்ணிரண்டும் ஒரே பொருளைப் பார்ப்பதல்லது, ஒரு கண் ஒன்றையும், மறுகண் மற்றொன்றையும் பார்ப்பதுண்டோ? இல்லையே! அவ்வாறாக, ஓருயிருள்ள நம்மிருவருள் ஒருவர் காடு செல்ல, மற்றொருவர் நாட்டில் வசிப்பது யாங்ஙனம்? என்னைவிட்டுத் தாங்கள் செல்லத் துணிந்தது என்ன நியாயத்தைக்கொண்டு?

இராமர்:-- கண்மணீ! சீதா! காடு செல்லும்படி எனக்குக் கட்டளையே ஒழிய உன்னை அழைத்துச் செல்லும்படி கட்டளையில்லை. உன்னை நான் உடன்கொண்டு செல்வேனாயின், தந்தையின் கட்டளையை மீறியவனாவேன். அன்றியும் தந்தை என்னைக் காடு செல்லும்படி கட்டளையிட்டார்கள். நான் செல்லுகின்றேன். உனக்கு அவ்விதமான கட்டளை ஒன்றுமில்லாதபொழுது நீ காட்டிற்கு வருவது தவறு.

சீதை:-- நாதா! அரசாள்வதற்காகத் தாங்கள் ராஜதந்திரங்களைக் கற்றபோது, இந்தச் சாதுரிய வசனங்களையும் கற்றீர்கள் போலிருக்கிறது! நாம் இருவரும் வேறாய் இருந்தாலல்லவோ என்னைத் தாங்கள் அழைத்துச் செல்வது குற்றமாகும்? உயிரும் உடலும், மரமும் நிழலுமாக நாமிருக்க, ஒருவரையொருவர் அழைக்கவேண்டிய அவசியமென்ன? உயிரற்று உடல் வாழ்வதுண்டோ? மரத்தைவிட்டு நிழல் பிரிவதுண்டோ? இருதலைப் பறவையைத் துரத்தினால் இருதலையும் கொண்டு அது ஓடுமேயொழிய ஒரு தலையை விட்டுவிட்டுப் போவதுண்டோ? அதுபோலத் தங்களை வனஞ்செல்லும்படி ஏவினால் அது என்னையும் ஏவினது போலத்தான்.

இராமர்:-- சீதா! நீ சொல்வது நியாயமே. எனது தந்தையும் தாயரும் முதுமைப் பருவமடைந்தவர்கள்; என்னைப் பிரிந்ததால் மிகவும் ஏக்கமுற்றிருப்பார்கள். வீட்டிற்குத் தலை மருமகளாயிருக்கும் நீ வீட்டிலிருந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைப் புரிந்துகொண்டிருப்பதன்றோ நெறி? அதைவிட்டு நீ என்னைப் பின்பற்றுதல் நெறியன்று. ஆதலால் நீ அவர்களுக்கு உதவியாக இங்கேயே இரு.

சீதை:-- காதலா! இன்னுமா அந்த வார்த்தை? கற்புடை மனைவியர்க்குக் கணவனையன்றி வேறு உற்றாரேது? உறவினரேது? தெய்வந்தானேது? தாயுந் தந்தையும், உற்றாரும் உறவினரும் தாம் செய்த நல்வினை தீவினைகளைத் தாமே அனுபவிப்பார்கள். மனைவி ஒருத்திதான், தனது கணவன் செய்த புண்ணிய பாவங்களைப் பங்கிட்டு அனுபவிப்பவள். ஆதலால் தங்களுக்கு இட்ட கட்டளை எனக்கும் இடப்பட்டதே யாகும். நாமிருவரும் தம்பதிகளாக என்று ஏற்பட்டோமோ அன்றே நம் இருவர் சுக துக்கங்களும் ஒன்றாய் விடவில்லையா? தங்களை விடுத்து என் அன்னைக்கே நான் பணிவிடை புரிந்துகொண்டிருப்பினும் அது என் கற்புக்கு வழுவேயாகும். தாங்கள் இன்னும் என்னைப் புறக்கணித்து விட்டுச் செல்லாமல் தாங்கள் எங்கு செல்கிறீர்களோ அங்கு அடியாளும் வந்து தங்களுக்குப் பணிவிடை செய்யும் பெரும் பாக்கியத்தைத் தந்தருளுங்கள்.

இராமர்:-- சீதா! உன்னுடைய பிடிவாதத்திற்கு நானென்ன செய்வேன்? நீ சொல்வதெல்லாம் ஒருவகையில் நியாயமேயாயினும், நான் செல்லும் இடம் எத்தகையது என்பதைச் சிறிதும் யோசியாது பேசுகின்றனை. காடென்ற பதத்தையே கேட்டறியாத நீ அதனியல்பை எங்ஙனம் அறியப் போகின்றாய்? காட்டில் கல்லும் முள்ளும் நிறைந்திருக்கும்

வற்றியபேய் வாயுலர்ந்து வறள்நாக்கை நீட்டுவபோன்
முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே

இலைதழைகளற்று, வெப்பத்தால் உலர்ந்து கரிந்து நிற்கும் மரங்களைப் பார்த்தால் பேய்கள் நிற்பதுபோல் தோன்றும். அந்த மரங்களின் பொந்திலிருந்து கருநாகங்கள் வெளியே தலை நீட்டி நீட்டிப் பார்த்துவிட்டு உஷ்ணத்துக்காற்றாமல் திரும்பவும் பொந்தினுள்ளே செல்லும். அப்படி அவைகள் தலையை நீட்டி நீட்டி உள் இழுப்பது, பேய்கள் தொண்டை வறண்டு நாக்கை வெளியில் நீட்டி நீட்டி உள்ளிழுப்பது போலிருக்கும். குகைகளிலிருந்து கரடி புலி முதலிய மிருகங்கள் கர்ச்சிப்பது கர்ணகடூரமாயிருக்கும். காடுகள் நிர்மானுஷ்ய மானவைகளானபடியால் அக்கொடிய மிருகங்கள் இங்குமங்கும் அச்சமின்றி விளையாடிக் கொண்டிருக்கும். மனிதர்களைக் கண்டால் துரத்திக்கொண்டு வரும். காட்டில் வசிப்பவர்களுக்கு வேளாவேளைக்குப் போஜனமகப் படுவது கஷ்டம். காயோ, கனியோ, கிழங்கோ கிடைத்ததை உண்டு சந்தோஷப்படவேண்டும். காட்டில் விஷக்காற்றுகள் வீசும். பசி அதிகமாக உண்டாகும். கொடிய பாம்புகள் போகும் வழிகளில் குறுக்கே கிடக்கும். தேள்களும், காட்டு ஈக்களும், கொசுக்களும் அங்கே அதிகம். பேச்சுத் துணைக்கு ஒருவரும் அகப்பட மாட்டார்கள். இப்படிப்பட்ட துன்பங்கள் நிறைந்த இடமே ‘காடு’ என்று சொல்லப்படுவதாகும். இந்தக் காடுகளில் சிலவிடங்களில் மரம் மட்டை ஒன்றுமிராது. வெறும் மணலும் பருக்கைக் கற்களும் நிறைந்திருக்கும். அவ்விடத்தில் காயும் சூரியனின் வெப்பமோ சொல்லி முடியாது.

படியின்மேல் வெம்மையைப் பகரினும் பகருநா
முடியவே முடியமூ டிருளும்வான் முகடும்வேம்
விடியுமேல் வெயிலும்வேம் மழையும்வே மின்னினோ
டிடியும்வே மென்னில்வே றியாவைவே வாதவே.

கண்மணீ! அந்த இடத்தையே பாலைவனமென்று சொல்லுவார். அதன் வெப்பத்தைச் சொன்னால் சொன்ன நா வெந்து போகும். அதில் இருள் வந்தடைந்தால் அந்த இருளும் வெந்துவிடும். இருள் நீங்கி வெயில் வந்தால் வந்த வெயிலும் வெந்துவிடும். அதைக் கவிந்துள்ள வானமும் வெந்துவிடும். அதில் மின்னல் மின்னினாலும் சரி, இடி இடித்தாலும் சரி, மழை பெய்தாலும் சரி, அந்த மழை, மின்னல், இடி யாவும் வெந்துவிடும். அங்கே வேகாத பொருளென்று ஒன்றிராது. உலகையழிக்கத் தோன்றும் ஊழித்தீயும் அக்காட்டில் தோன்றுமானால் வெந்துவிடும். அத்தகைய கொடிய காட்டில் நீ வந்தால் புழுப்போல் துடிப்பையே. அதை நினைத்தாலும் என் மனம் பகீரென்கிறதே. உன் மெல்லிய பாதங்கள் நெருப்புத் தணல் போன்ற அந்தச் சுடுமணலிற் பட்டால் என்னாகும்? தாமரை மலரை நெருப்பில் வாட்டுவதுபோல் அந்தக் காட்டு வெயிலில் வாட்டி வதக்கவோ, உன்னை அழைத்துப் போகச் சொல்கின்றாய்? ஜானகீ! என் வார்த்தையைக் கேட்டு இங்கேதானே இரு. என்னுடன் வர எண்ணாதே. காட்டின் கொடுமையைச் சகிக்க உன்னாலாகாது.

சீதை:-- நாதா! தங்கள் மொழியினும் கொடியதா அக்காடு? பிராணபதீ!

தொடரும் …………..

திங்கள், 19 செப்டம்பர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

19-09-2016 அன்று நடந்த

நாட்டேரி ஸ்வாமியின்

54 ஆவது டெலி உபந்யாஸம்





அல்லது


ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம்

பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1  களம் 7

ஏழாங்களம்

இடம்:--        சுமித்திரையின் அரண்மனைக்குச் செல்லும் வழி
காலம்:--       காலை
பாத்திரங்கள்:--  இராமர், இலக்ஷ்மணர்

இலக்ஷ்மணர்:-- (மிகுந்த கோபாவேசத்தோடு) என்ன அநியாயம் இது! ஒரு பெண்ணால், சகல சற்குண சம்பன்னராகிய எனது அண்ணா தமக்குரிய அரசை இழந்துவிடுகிறதா? வெகு நன்றாயிருக்கிறது! மன்னவர்க்கு மோகம் மண்டை கொண்டுவிட்டது போலிருக்கிறது! இருக்கட்டும் பாதகமில்லை. காரியம் கைமிஞ்சுவதற்குள் என் காதிற்கெட்டிவிட்டது. ஸ்ரீராமபிராற் கிளையவன் ஒருவன் உள்ளானென்பதை உலகமறியக் காலம் கிட்டிவிட்டது. என் கைவில்லிற் பூட்டிய நாணியும், தோளில் மாட்டிய அம்பறாத் தூணியும் உள்ளவரையில் ஸ்ரீராமபிரான் திருமுடியை அபகரிக்க ஒருவராலுமாகாது. பரதா, உன்னைப் பதற அடிக்கிறேன், சீக்கிரம் கேகய நாட்டிலிருந்து வா. சிங்கக்குட்டிக்கிடும் இரையை நாய்க்குட்டிக்கு ஊட்ட எண்ணினாளே அந்த அறிவற்ற பேதை! என்ன கால விபரீதமிது!
புவிப்பாவை பரங்கெடப் போருவந் தோரை யெல்லாம்
அவிப்பானு மவித்தவ ராக்கையை யண்ட முற்றக்
குவிப்பானு மெனக்கொரு கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானு நின்றேனிது காக்குநர் காமின் வந்தே
.
அடி கைகேயி! உனது மகனும் உன் உற்றார் உறவினரும் கூடி வந்தாலும் வாருங்கள். ஸ்ரீராமபிரானுக்குத் துணைவனும் உடன்பிறந்தானும் யார் தெரியுமா? சண்டை செய்யவந்தவர்களைச் சின்னாபின்னப்படுத்திப் பூமி தேவியின் பாரமொழியச் சாடுவோன்; சாடி, அவர்கள் பிணங்களை ஆகாயமளவும் எட்டும்படி குவியல் குவியலாகப் போடுவோன்; உலகிற் கிறைவனும், எனக்குத் தலைவனுமான ஸ்ரீராமச்சந்திரருக்கு முடி சூடுவோன்; அவனே இராமாநுஜன். அவன் உள்ளளவும் முறையற்ற பரதன் நாடாளான்; முறையுள்ள முதல்வன் காடேகான்; மாதின் சூழ்ச்சியும் வெல்லாது; மன்னவன் பேச்சும் செல்லாது; கோசலா தேவியின் துயரமும் மாறும்; இராமபட்டாபிஷேகமும் நிறைவேறும்.
இராமர்:-- (புன்னகையோடு வருகிறார்; இலக்ஷ்மணர் நிற்கும் நிலையைக் கண்டு சற்றுப் பின்வாங்குகிறார். இலக்ஷ்மணர் அவர் பாதத்தில் வந்து பணிகிறார். இராமர் அவரைப் பார்த்து) இலக்ஷ்மணா, உனக்கு மங்களமுண்டாகக் கடவது. என்ன இது! சாந்த சொரூபியாகிய நீ இந்தக் கோலத்தோடு நிற்பதென்ன காரணம்? நாணி பூட்டிய வில் எதற்கு?பாணம் மாட்டிய தூணி எதற்கு? யார்க்கென்ன நேரிட்டது? ஏனப்பா இந்தப் போர்க்கோலம் பூண்டாய்?
இலக்ஷ்மணர்:-- அண்ணா! அயோத்திக்கரசே!
விண்ணாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும்
எண்ணாட்டவர் யாவரும் நிற்கவோர் மூவராகி
மண்ணாட்டுநர் காட்டுநர் வீட்டுநர் வந்த போதும்
பெண்ணாட்ட மொட்டேனினிப் பேருல கத்து ளண்ணா!
சொர்க்க, மத்திய பாதாளம் ஆகிய மூவுலகத்தார்களானாலும், வேறெவ்வுலகத்தவர் களானாலும், உலகைப் படைத்துக் காத்து அழித்து வரும் மும்மூர்த்திகளானாலும் வரட்டும்; என்னைத் தடுக்க அவர்களால் ஆகாது. அண்ணா! இனி இந்த உலகத்தில் பெண்களைத் தலையெடுக்க வொட்டேன். தலைவா! தங்களுக்கு வியாகூலம் வேண்டாம்.
இராமர்:-- இலக்ஷ்மணா! யார் உனக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? ஏன் இந்த பதஷ்டம்? பொறுமையைக் கைவிடாதே.
இலக்ஷ்மணர்:-- அண்ணா, என்ன அநியாயம் இது? பொறுமை எதுவரையும் பொறுக்கும்?
மெய்யைச் சிதைவித்து நின் மெய்ம்முறை நீத்த நெஞ்ச
மையிற் கரியாளெதிர் நின்னைநன் மௌலி சூட்டல்
செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவ ரேனும்
துய்யைச் சுடுவெங் கனலிற்சுடு வான்று ணிந்தேன்.
அரசர் உலகறியக் கூறிய மொழியைப் பொய்யாக்கவும், உண்மையில் தனக்கேற்பட்ட அரசுரிமையை நீக்கவும் கருதிய அந்த வன்னெஞ்சக் கள்ளிக்கெதிரே, தங்களுக்குத் திருமுடி நான் சூட்டுகிறேன். இதைத் தடை செய்யத் தேவர்களே வந்தாலும் வரட்டும். அவர்களைப் பஞ்சையழிக்கும் தீப்போலத் தகித்துவிடுகிறேன். இது நிச்சயம். அண்ணா! பரதனுடைய பக்ஷத்தைச் சேர்ந்தவனாவது அவருக்கு நன்மை தேடுகிறவனாவது இருந்தால் அவன் இருந்த இடமே தெரியாமல் செய்து விடுகிறேன். பொறுமை, பொறுமை என்கிறீர்கள். பொறுமை போதிப்பதற்கு இதுவல்ல சமயம். நாம் அடக்கமாய் இருப்பதனாலேதான் பிறர் நம்மை அலக்ஷியம் செய்கிறார்கள்கைகேயியின் சொல்லைக்கேட்டு நமது தந்தை நமக்கே பகைவராயிருப்பாரானால், அவரையும் சத்துருவாகவே எண்ணி அதற்குத் தகுந்தபடி நடத்த வேண்டியதுதான். தங்களுக்கு உரிய பதவியைத் தங்களுக்குக் கொடுக்க அவர்தாமோ வேண்டும்? அண்ணா!
வலக்கார் முகம்என்கைய தாகவவ் வானு ளோரும்
விலக்கா ரவர்வந்து விலக்கினு மென்கை வாளிக்
கிலக்கா யெரிவித்துல கேழினோ டேழு மன்னர்
குலக்கா வலுமின்றுனக் கியான்றரக் கோடி நீயே
என் கையில் வில்லுள்ளளவும் தேவர்களும் என்னை வந்து தடுக்க மாட்டார்கள். ஒருக்கால் தடுத்தாலும் அவர்களை என் கைவாளுக்கிரையாக்கி, ஈரேழுலகமும் காக்கும் அரசர்க்கதிபதியாய் தங்களுக்கு நான் முடி தருகிறேன். தாங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். புருஷ சிங்கமே! நியாயப்படி தங்களுக்குச் சொந்தமான இந்த நிலத்தை எந்த பாத்தியதையால் அரசர், கைகேயியின் புத்திரனுக்குக் கொடுக்க விரும்புகிறார்? இராச்சியத்துக்கு உடையவர் தாம், உமக்கு உடையவன் நான். நம் இருவரையும் பகைத்துக்கொண்டு பாராள்பவன் எவன்? என் உயிரைக் கொடுத்தானாலும் நான் உங்களுக்கு நாட்டைக் கொடுப்பேன். இது சத்தியம்.
இராமர்:-- தம்பீ! இலக்ஷ்மணா! தாய் சொற்றுறந்தொரு வாசகமில்லை”, “தந்தைசொல் மிக்க மந்திரமில்லைஎன்ற முதுமொழிகளை நீ அறியாதவனல்ல. களர் நிலத்தில் விதை முளைத்ததுபோல உன்னிடத்தில் இந்தக் கோபம் வந்தது ஆச்சரியமாயிருக்கிறதே!
இலக்ஷ்மணர்:-- அண்ணா! இந்த இராச்சியம் முழுதும் தங்களுக்கே என்று தந்தை கூறியிருக்க அதை மாற்றி ஒருத்தி தங்களை வனம்போக்குவதை விடவா நான் கோபம் கொண்டது ஆச்சரியம்?
இராமர்:-- இலக்ஷ்மணா! என்ன பதஷ்டமாகப் பேசுகிறாய்! ஒருத்தி யென்கிறாயே, அது யார் தெரியுமாநம்மைப் பிரியமாய் போற்றுந் தாய்.
இலக்ஷ்மணர்:-- தெரியாமற் சொல்லுகிறீர்கள்! அவள் தங்களைப் பிடித்தாட்ட அரண்மனையை வெகுநாளாய்ச் சுற்றிக்கொண்டிருந்த பேய்.
இராமர்:-- இலக்ஷ்மணா! வேண்டாம் அவ்விதமான துஷ்ட வார்த்தைகள்
இலக்ஷ்மணர்:-- அண்ணா! தங்களுக்கு முடிசூடுகிற வரையில், தாங்கள் சொல்லுவது ஒன்றும் என் செவிக்கேறாது. தங்களிடத்துப் புத்திரன் என்ற வாத்ஸல்யம் சிறிதும் இல்லாத ஒரு தந்தை தங்களைக் காட்டுக்கேகும்படி சொல்வது! தாங்களும் அப்படியே காடு செல்வது! இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் இந்த அற்ப சரீரத்தை வைத்துக்கொண்டு உயிர் வாழ்வதோ! வெகு நன்றாயிருக்கிறது. நான் உயிரோடிருந்தால், என் கண்ணெதிரே தங்களுக்கு இராச்சியத்தைத் தருவதாகச் சொல்லிப் பின் இல்லையென்ற மன்னனுக்கும் எனக்கும் என்ன பேதம்? அண்ணா! அந்தக் கொடியோளாகிய கைகேயியின் சூழ்ச்சி வெல்லுமா? அவள் கேட்டதென்ன இரண்டு வரங்கள்தாமே? அவைகளும் தற்காலம் கொடுக்கப்பட்டன அல்லவே! தந்தை அவளுக்கு சம்பராசுர யுத்தகாலத்தில் வரம் கொடுத்தார். அப்பொழுது நாம் பிறக்கக்கூட வில்லை. அங்ஙனமாக அவ்வரங்கள் நம்மை உபாதிக்க ஏதுவேது? ஒருகால் ஏதுவிருப்பதாக வைத்துக்கொண்டாலும், இரண்டு வரங்கள் கேட்டு எத்தனை வரங்கள் பெறுவது? தங்களுக்கு முடிசூட்டக் கூடாதென்பது ஒரு வரம். பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்பது மற்றொரு வரம். ஆக இரு வரங்களும் சரியாய்ப் போய்விட்டனவே, அதற்குமேல் தாங்கள் காட்டுக்குப் போகவேண்டுமென்பது மூன்றாவது வரம். அதுவும் இன்றே போக வேண்டுமென்பது நான்காவது வரம். காட்டில் பதினான்கு வருஷம் வசிக்க வேண்டுமென்பது ஐந்தாவது வரம். இப்படியே, இரண்டு வரங்கேட்டவளுக்குக் கணக்கில்லாதபடி எத்தனை வரங்கள் கொடுப்பது? அன்றியும் அவ்வரங்களிலொன்று தங்களை வனவாஸம் செய்யும்படி எங்ஙனம் வற்புறுத்தும்? பிள்ளைகள் பெற்றோருக்கு அடிமைகளா? அல்லது அறிவற்ற மிருகங்களா? இவைகளைச் சற்றும் யோசியாது தங்களை வனம் போகச் சொன்னது என்ன மூடத்தனம்!
இராமர்:-- அப்பா, இலக்ஷ்மணா! என்மீது குற்றத்தை வைத்துக்கொண்டு இந்த வீண்வாதங்கள் பேசுதல் தவறு. அம்புங் கையுமாக நிற்குந் தம்பீ! தந்தைமீது ஏது குற்றம்? அரச பாரம் குற்றமும் சுமையும் உண்டாக்கத் தக்கது. இதையறியாமல், நான் தந்தை முடிசூட்டுவதாகச் சொன்னமாத்திரத்தில் தடையின்றி சூடிக் கொள்ளுவதாக ஒப்புக்கொண்டது என் குற்றமல்லவா? தாயைக் கோபிப்பதிலும், தந்தையை வெறுப்பதிலும் சிறிதும் பிரயோஜனமில்லை. இலக்ஷ்மணா! நீ என்மீது வைத்திருக்கும் அன்பும், ஆதரவும் அளவிடற்கரிய வென்பதை நான் அறிவேன். உனது புஜபல பராக்கிரமம் போருக்கஞ்சா வீரம், பொறுத்தற்கொண்ணாத் துயரம் யாவையும் நன்றாய் அறிவேன். அறிந்திருந்தும், அவைகளோடு அடக்கத்தின் அருமையையும், உண்மையின் உயர்வையும் மிகவும் தெளிவாக அறிந்திருக்கின்றேன். ஆதலால் நான் தந்தைக்கடங்காப் பிள்ளையாயிருந்து தரணியாளவும் இசையேன். என்னால் எனது தந்தையின் வாக்குண்மை வழுவவும் சம்மதியேன். மேலும் இவ்வுலகத்தில் நம்மால் ஆவதொன்றுமில்லை. அவனன்றி ஓரணுவும் அசையாது. விதிவழியே எதுவும் நடக்கும். அதற்கு வருந்துவதால் வரும் பயன் சிறிதுமில்லை.
நதியின் பிழையன்று நறும்புன லின்மை யற்றே
பதியின் பிழையன்று பயந்து நம்மைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன்பிழை யன்று மைந்த
விதியின் பிழைநீ யிதற்கென்னை வெகுண்ட தந்தோ
தம்பீ! யார்மேற் குற்றமென்று நீ சீர்மாறிச் சினங்கொள்ளுகின்றாய்? நன்னீரில்லாதது நதியின் குற்றமல்ல; அதுபோல நான் வனஞ்செல்லுவது தருமசொரூபியான தந்தையின் குற்றமுமல்ல; நம்மை வளர்த்தெடுத்த அன்னையினது அறிவின் குற்றமுமல்ல; வேறு எதனால் வந்த குற்றம் என்பையோ? விதியால் வந்த குற்றம். விதியை விலக்க விண்ணவராலுமாகாது. இதை அறியாது நீ வருந்தலாமோ? இந்த அரசும், இந்த வாழ்வும் ஒரு நிலையோ? எல்லாம் கண்மயக்கு.
தெய்வச் சிதம்பரத் தேவோன்தன் சித்தந் திரும்பிவிட்டாற்
பொய்வைத்த சொப்பனமா மன்னர் வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்ட லீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடக சாலையெங்கே? இதுகண்மயக்கே.
சிதாகாசத்தில் கலந்து மறைந்துள்ள அவ்விறைவனது சித்தம் சிறிது மாறுமானால், எல்லாம் சொப்பனம்போல் பொய்யாக மாறிவிடுமே! அப்பால் மன்னர்கள் வாழ்வெங்கே? அவர்கள் போற்றும் செல்வமெங்கே? அவர்கள் இருந்தரசு புரியும் கொலு மண்டபமெங்கே? அவர்கள் மனமினிக்க நடிக்கும் நாடகசாலைகளெங்கே? யாவும் கண்கட்டி வித்தையாய் மாறிவிடுமே! இவ்வளவு மாயமாகிய வாழ்க்கையை மெய்யென்று எண்ணி ஏமாறுவோ ரல்லவா காட்டைவிட நாடு நல்லதென்றும், நாட்டைவிடக் காடு கொடியதெனவும் வருந்துவர்? ஞானம் நிறைந்த மாதவர்க்குக் காடும் நாடும், ஓடும் பொன்னும், உறவும் பகையும் ஒன்றே. பலவகைத் துன்பங்களைப் பயக்கும் பொருளை, அறிவிற் பெரியோர் ஒரு பொருட்படுத்தார்.
தீயாலோ நீராலோ தேர்வேந்தர் தம்மாலோ
மாயாத தெவ்வர் வலியாலோ -- யாதாலோ
இப்பொருள்போய் மாய்கின்ற தென்றுபொருள் வைத்தார்க
ளெப்பொழுது நீங்கா ரிடர்
.   
பொருள் படைத்தவரைத் துன்பம் பற்றிக்கொண்டே யிருக்கும். நாம் அருமையாய்த் தேடிப் பெருமையாய் வைத்துத் திறமையாய்ப் பாதுகாத்து வருந் திரவியம், தீயாலழிகிறதோ? நீராலழிகிறதோ? அல்லது அதை மாற்றரசர் வந்து மாயமாய்க் கொண்டுபோகின்றனரோ? பகைவர் சூழ்ந்து நம்மைப் பதற அடித்துப் பறித்துப் போகின்றனரோ? அன்றி வேறெவ்வகையால் இதற்கு என்ன கேடு வருமோ? ‘ என்று செல்வர்கள் எந்நாளும் ஏங்கி உயிர் மடிவார். இந்தப் பொருளை ஈட்டுவதும் துன்பம், அதைக் காத்தலும் துன்பம். காத்த பொருள் கெட்டாலோ கணக்கில்லாத துன்பம். சீ! சீ! இந்தப் பொருளை அறிவுடையோர் அடைய விரும்புவரோ? விரும்பார்.
ஈண்ட லரிதாய்க் கெடுத லெளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பி னியற்கை மருவி லரும்பொருளை
வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே.
தேடுவதற்கு அரியதும், கெடுவதற்கு எளியதும், பலதுன்பங்களை விளைவிப்பதும், இயற்கையாகத் தனக்கு ஒரு பெருமையு மில்லாததான செல்வத்தை வெறுத்தவர்கள் பெருமையே பெருமை! இந்த அரசையும், இதினால் வரும் சுகசௌக்கியங்களையும் உண்மையென்று நான் ஒருபொழுதும் நினைத்ததில்லை. இதை உண்மையென்று எண்ணியிருந்தாலல்லவா, இப்பொழுது இதை நான் இழந்துவிட்டதாக எண்ணி வருந்தக்கூடும்? ஆதலால் இதைவிட்டுச் செல்வதால் நான் இறையும் வருந்துவேன் என்று எண்ணாதே.
தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென்
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே
பலவகையான தீங்குகளைத் தருவதாகிய செல்வம் எதற்கு? பாடுபட்டுத் தேடிப் புதைத்துவைத்த திரவியம் எதற்கு? நாம் இப்பிறப்பொழித்து இறந்து செல்லுங்கால் காதற்ற ஊசியும் நம்மோடு துணையாக வரப்போவதில்லை. இத்துணைக் கேவலமாகிய செல்வத்தை நீத்து நான் செல்வதை நினைத்து வருந்தாதே. நான் சென்று வருந்துணையும் மனம் ஆறி தம்பியோடுகூட இராச்சியத்தைப் பார்த்திரு.
இலக்ஷ்மணர்:-- (இருகாதையும் பொத்திக்கொண்டு) அண்ணா! அடியேன் காதில் நாராசத்தைக் காய்ச்சி ஊற்றுவதுபோல என்ன வார்த்தை சொல்லுகிறீர்கள்? ! கொல்லன் உலைக்களத்துத் தீயைப்போல் எனக்குப் பெருமூச்சு வருகிறதே! மனம் கொதிக்கிறதே! எவ்வாறு நான் இதை ஆற்றுவேன்! இவ்வளவு கெடுதல்களுக்கும் காரணமாயிருக்கும் அந்தக் கைகேயியின் அறிவுக்கு அறிவு புகட்டுவதும், விண்ணவர்க்கும் விலக்கரிய விதியை விலக்கும் விதியுமாகிய எனது வில்லாண்மையை இன்றே காட்டுகிறேன். தங்களுக்கு முடி நானே சூட்டுகிறேன். வலியற்ற விதியை வலியுள்ளதென்று தாங்கள் சொல்வது தவறு. தந்தையும் கொடியர். தாயேன வந்த அந்தக் கைகேயியும் கொடியள். தங்களுக்கு ஏன் இது புலப்படவில்லை? தர்மவான்களைப் போல் வேஷம் பூண்டு தமது குற்றத்தை மறைப்பவர்களைத் தாங்கள் பார்த்ததில்லையா? தாயும் தந்தையும் தீங்கு நினையாதவர் களாயிருந்தால் முன்னமே தந்த வரம் முன்னமேயே நிறைவேறியிருக்கும். மூத்த குமாரராகிய தங்களைத் தள்ளிவிட்டு இளையானாகிய பரதனுக்குப் பட்டங்கட்ட உலகத்தார்தாம் ஒப்புவரா? தாங்கள் தருமத்தால் மயங்கி வனஞ்செல்லச் சம்மதித்தது சரியல்ல. இதைப் பொறுக்க என்னால் ஆகாது. என் கையில் அம்பும் வில்லு மிருப்பது அழகுக்கல்ல. இதோ அரை நொடியில் எதிர்த்து வந்தவர்களை வதைத்தெறிந்து, தந்தை தாயர் எண்ணத்தை அறுத்தெறிந்து, தங்களுக்கு நான் ஒருவனே நின்று பட்டங்கட்டுகிறேன். இதைத் தாங்கள் க்ஷமித்தருள வேண்டும்.
இராமர்:-- இலக்ஷ்மணா! என்ன யோசனை உனது யோசனை! சந்தோஷத்தாலோ கோபத்தாலோ தாய்தந்தையர் ஒன்று சொன்னால் அதைப் பொறுமையாய் ஏற்றுக்கொள்வதன்றோ சற்புத்திரர்களுக்கழகு! வாயில் வந்தபடி யெல்லாம் பேசிவிடலாமா? நீ வேதவிதியை உணர்ந்தவனல்லவா? தாய் தந்தை மேற் சலித்துக்கொள்வது தகுமா? வேண்டாம், உன் கோபத்தை விட்டுவிடு.
இலக்ஷ்மணர்:-- அண்ணா, எனக்குத் தாய் யார்? தந்தை யார்? வேறொருவருமில்லை. தாயுந் தந்தையும் தலைவரும் தாங்களே! எனக்குத் தெய்வமுந் தாங்களே! தங்களுக்கொருவர் தீங்கு இழைக்க நான் பொறுக்க மாட்டேன். பரதன் பலத்தையும், தந்தை கொடுத்த வரத்தையும் பார்க்கிறேன்.
இராமர்:-- தம்பி! இலக்ஷ்மணா! பதறாமற்கேள். பரதன் என் செய்வான்? தந்தை வரம் கொடுத்தார். வரத்தின்படி அவனுக்கு இந்நிலம் சொந்தமாயிற்று. எனக்கு ஏற்பட்டது வனவாசம். அதை நான் அனுசரிக்க வேண்டியது முறைமை. இதற்கு அவர்களை வெறுப்பானேன்? தம்பியைப் போரில் தொலைத்து, தந்தைக்கு மன வேதனையைக் கொடுத்து, தாயை எதிர்த்து, தேசத்தை ஆள்வதா? சீ! என்ன அபவாதத்திற்கிடமான காரியம்! தருமத்திற்குப் பகையான யோசனை! ஆகாது! ஆகாது! தந்தை சொல்லைக் கடந்து அரசாள்வது எனக்கும் தகுதியல்ல. உனது தந்தையும், தாயும், தலைவனும், தமையனுமாகிய என் சொல்லைக் கடந்து செல்வது உனக்கும் ஏற்றதல்ல. முறைமையறிந்து பொறுமையோடிருக்க வேண்டும். சுமித்திரை அன்னையைப் பார்த்துவிட்டுச் சீதையின் அந்தப்புரம் போகவேண்டும். வா.

(இராமர் போகிறார். இலக்ஷ்மணர் ஒன்றும் பதில்கூறத் தோற்றாதவராய் அடங்கி யொடுங்கி அவரைப் பின்பற்றிச் செல்கிறார்)

.......................      எட்டாங்களம் தொடரும்    ......................................