சனி, 20 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

||ஸ்ரீ||
ஸ்ரீரங்கநாத பாதுகாவின் பழைய இதழ்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் 1970களில் வங்கீபுரம் நவநீதம் ஸ்ரீராமதேசிகாசார்யார் (ஒப்பிலியப்பன் ஸந்நிதி) ஸ்வாமி  எழுதி வந்த “ஸ்ரீபாதுகா சாம்ராஜ்யம்” என்னும் நெடுந்தொடர் ஸ்வாமி தேசிகனின் “ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்” நூலுக்கு ஒரு அருமையான சுருக்கமான அறிமுகமாக, படிக்காதவர்களையும் தினமும் பாராயணம் பண்ண வைக்கும் அற்புதமான விளக்கமாக அமைந்திருந்ததையும் படித்து வியந்தேன். பழைய ஸ்ரீரங்கநாத பாதுகா இதழ்களையோ, அவற்றையெல்லாம் தொகுத்து ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் வெளியிட்டுள்ள குறுந்தட்டுகளையோ படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்காகவும், முழுவதும் ஒரே நேரத்தில் கொடுத்தால் படிக்க நேரம் இல்லாதவர்களுக்காகவும், அந்த நெடுந் தொடரை இங்கு சிறிது சிறிதாக எழுதி வரலாம் என்று நினைத்து பதிவிட ஆரம்பிக்கிறேன். இனி ஸ்ரீ ஸ்ரீராமதேசிகாச்சார் ஸ்வாமியின் “ஸ்ரீபாதுகா சாம்ராஜ்யம்”
|| ஸ்ரீ: ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
ஸ்ரீ பாதுகா சாம்ராஜ்யம்
(வங்கீபுரம் நவநீதம் ஸ்ரீராமதேசிகாசார்ய ஸ்வாமி
ஒப்பிலியப்பன் ஸந்நிதி
)
1. முன்னுரை
உலகில் எத்தனையோ கவிகள் வடமொழியில் பற்பல காவ்யங்களையும் நாடகங்களையும் இயற்றியுள்ளார்கள். அவையெல்லாம் வடமொழிக்குச் செய்த அருந்தொண்டே யாகும். அவர்களுள் தலைசிறந்து விளங்கியவர்களாய் மஹா கவிகளென்று நம் தேசிகனாலும் புகழப்பட்ட சில கவிகள் உண்டு. அவர்கள்தாம் காளிதாஸன், பவபூதி முதலியவர்கள். அவர்கள் சில புண்ய புருஷர்களையும் இராமன் முதலிய தெய்வங்களையும் நாயகராக அமைத்து அழகிய கவிகளைப் பாடி உலகுக்குத் தருமங்களை அறிய உதவி புரிந்ததையும் வடமொழியில் புலமை பெற்றவர்கள் அவர்களின் நூல்களையே முதலில் கற்றுத் தேர்ச்சி பெறுவதையும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. இலக்கிய முறையில் அவர்களின் தொண்டு போற்றுதற்கு உரியதேயாயினும் அவர்கள் இலக்கியச் சுவையையே முதன்மையாகக் கொண்டு அதற்கு ஏற்ற சொற்களைத் தொடுத்து நூல்களை இயற்றினார்களே அன்றி, பகவானுடைய பெருமையை விளக்கி மக்களுக்கு நல்வழி காட்டும் தோத்திரங்களின் வடிவத்தில் நூல்களை இயற்றவில்லை. காவ்ய உருவில், நாடக வடிவில், தோத்திர முறையில், தத்துவ விளக்க வழியில், நீதிநெறியில், இன்னும் பலவகைகளில் வடமொழி – தமிழ்மொழி – பிராகிருதம் – மணிப்ரவாளம் ஆகிய மொழிகளில் எம்பெருமானுடைய பெருமையை விளக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு எல்லை கூறமுடியாத அளவுக்கு நூல்களை இயற்றிய மஹா புருஷர் உலகில் ஒருவரே என்பதை உலகம் மகிழ்வுடன் ஏற்கும். அந்த மஹாநுபாவர் நம் வேதாந்த தேசிகனே என்பதைக் கூறவும் வேண்டுமோ?   
2. மற்ற காவியங்கள்
ஸ்வாமி தேசிகன் பற்பல பழமொழிகளைக் காட்டிச் சிலேடைச் சொற்களை அமைத்து “ஸுபாஷிதநீவி” என்னும் காவ்யத்தை யும், இராமபிரான் பிராட்டிக்குத் தூது விடும் பொருளைக் கொண்ட “ஹம்ஸ ஸந்தேசம்” என்ற ஒரு சிறந்த காவ்யத்தை யும் , கண்ணனது சரிதையை முழுதும் விளக்கும் “யாதவாப்யுதயம்” என்னும் ஓர் அற்புதப் பெருங்காவ்யத்தையும் அருளிச் செய்து மஹோபகாரம் செய்தருளினார். இவையன்றி ஹயக்ரீவ ஸ்தோத்ரம் முதலிய இருபத்தெட்டு ஸ்தோத்ரங்களையும் பல்வகை விருத்தங்களில் அருளிச் செய்து ஆஸ்திகர்களின் அநுஸந்தானத்துக்கு வழி செய்தருளினார். ஸ்வாமி திருவாக்கினின்று அவதரித்த ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தைப் பற்றி இப்பொழுது பேசி மகிழலாம்.
(தொடரும்)

வியாழன், 18 பிப்ரவரி, 2016

திருப்புல்லாணி பங்குனி ப்ரும்மோத்ஸவம்

New Doc 27_1

திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் பங்குனி ப்ரும்மோத்ஸவம் வரும் மன்மத பங்குனி 2ம் நாள் (15-03-2016) அன்று த்வஜாரோஹணத்துடன் துவங்க உள்ளது. 18-3-2016 நான்காம் திருநாள் இரட்டை கருட ஸேவை. ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி. அன்று காலை பெருமாள் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்துக்கு எழுந்தருளி விசேஷ அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளி இரவில் ஸ்ரீபட்டாபிராமன் உடன்வர இருவரும் இரட்டை கருட வாகனத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருள்வர்.  20-3-2016ல் திருக்கல்யாண உத்ஸவம். 23-3-2016ல் திருத்தேர் உத்ஸவமும், 24-3-2016ல் பெருமாளும் இராமனும் சேதுக்கரை எழுந்தருளி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் அதன்பின் பெருமாள், இராமன், சக்கரத்தாழ்வார் மூவருக்கும் சேதுக்கரை ஸ்ரீஹனுமார் சந்நிதியில் ஏக ஆசனத்தில் திருமஞ்சனமும், கூடவே ஹனுமாருக்கும் திருமஞ்சனமும் நடைபெறும். 25-3-2016ல் ஸ்ரீவானமாமலை மடத்துக்கு, பெருமாள் பிராட்டிமாருடன் விடையாற்றி உத்ஸவத்துக்கு எழுந்தருளி விசேஷ அலங்கார திருமஞ்சனமும் நடைபெறும். உத்ஸவத்தில் சென்னை ஸ்ரீவரவரமுனி சம்பந்தி கைங்கர்ய சபையினரால் அருளிச் செயல் கைங்கர்யம் நடைபெறுகிறது. உத்ஸவத்தின் அனைத்து தினங்களிலும் ஸ்ரீமத் ஆண்டவன் நியமனப்படி, ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ததீயாராதனம் இருவேளையும் நடைபெறும். அனைவரும் வந்து பெருமாள் உத்ஸவத்தில் கலந்து கொள்ள திருப்புல்லாணிவாசியாக அழைக்கிறேன்.

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

15-02-2016 அன்று நாட்டேரி ஸ்ரீராஜகோபாலாசார்யார் ஸ்வாமி நிகழ்த்திய 25வது  "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" டெலி உபந்யாஸம் . பால காண்டம் இன்றுடன் நிறைவுற்றது.


http://www.mediafire.com/listen/xeq2f3a61lr6y2k/025__SSR_%2815-02-2016%29%282%29.mp3

அல்லது
http://1drv.ms/1U7jyiy

திங்கள், 1 பிப்ரவரி, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம் 24

நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்தி வரும் "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 24ஆவது டெலி உபந்யாஸம் (01-02-2016 நடந்தது) கேட்டு/ நகலிறக்கி அனுபவிக்க
http://www.mediafire.com/listen/tjdtsimxtdickr5/024_SSR_(01-02-2016).mp3

அல்லது
http://1drv.ms/1VAGN2W

இன்றும் தொடர்வது பாலகாண்டம்.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

நாட்டேரி ஸ்வாமியின் "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 23ஆவது டெலி உபந்யாஸத்தைக் கேட்டு ரசிக்க / நகலிறக்க
http://www.mediafire.com/listen/dy6wberdia22r9f/023_SSR_%2822-01-2016%29.mp3

அல்லது

http://1drv.ms/1Qoz1Yw