புதன், 18 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தர காண்டம் 23

முப்பத்தொன்பதாவது ஸர்க்கம்

[இராவணன் வாலியின் வாலில் கட்டுண்டது

      இப்படி இருக்குங்கால், ஒரு ஸமயம், வாலியினால் பரிபாலிக்கப்படும் கிஷ்கிந்தைக்குச் சென்று, ஸ்வர்ணமாலையை அணிந்துள்ள வாலியை ராவணன் போருக்கு அழைத்தான். அப்பொழுது, அங்கிருந்து வாலியின் மந்திரியும், தாரையின் பிதாவுமான தாரன் என்ற வானரன் ராவணனைப் பார்த்து, ''ராக்ஷஸர் தலைவனே! வாலி இப்பொழுது இங்கில்லை. அவன் நான்கு ஸமுத்திரங்களுக்கும் சென்று, ஸந்த்யோபாஸனம் செய்யப் போயிருக்கிறான். இன்னும் ஒரு முஹூர்த்த காலத்திற்குள் திரும்பி வந்துவிடுவான். நீ அம்ருதத்தைக் குடித்தவனாக இருந்தபோதினும், உன்னால் வாலியை வெல்ல முடியாது. அவனைப் பார்த்தவுடன் உனது உயிர் உடலை விட்டு அகன்றுவிடும். இதோ பார், இந்த வெளுப்பான எலும்புக் குவியல்கள் வாலியுடன் போரிட்டு மடிந்தவர்களுடையவை. ஒரு முஹூர்த்த காலம் இங்கிருந்தால், நீ வாலியைக் காணலாம். அதற்குள்ளாகவே நீ மரணமடைய விரும்பினால், தெற்கு ஸமுத்திரத்திற்குச் சென்றிருக்கும் வாலியை நாடிச் செல்" என்றான்.

        இதைக் கேட்ட ராவணன் தாரனைப் பயமுறுத்தி, உடனே புஷ்பக விமானத்திலேறித் தெற்கு ஸமுத்திரத்தை நோக்கிச் சென்றான். அங்கு மேருமலை போலவும் இளங்கதிரவனைப் போலவும் பிரகாசித்துக் கொண்டு ஸந்த்யோபாஸனம் செய்துகொண்டிருந்த வாலியை ராவணன் பார்த்து, விமானத்திலிருந்து கீழே இறங்கி, வாலியை அப்படியே பிடித்துக்கொள்ளக் கருதி, ஓசைப் படாமல் அடிமேல் அடி வைத்து அவனருகில் சென்றான். இதனைத் தற்செயலாகக் கீழ்க்கண்ணால் கண்ட வாலி, அவனது கெட்ட எண்ணத்தை அறிந்து, அசைவற்று அங்ஙனமே நின்றான். அப்பொழுது கையினால் பிடிப்பதற்கு எளிதான அவ்வளவு ஸமீபத்தில் ராவணன் வந்தவுடன், வாலி தான் பின் பின்புறமாகத் திரும்பியிருக்கையிலும் தன்னைப் பிடிக்கக் கைநீட்டிய ராவணனை, ஸர்ப்பத்தை கருடன் பற்றுவது போலக். கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, அப்படியே, ஆகாசத்தில் எழும்பினான். அப்பொழுது ராவணன் பற்களால் கடித்து நகங்களால் கீறி, வருத்தமுண்டாக்கியபோதிலும், வாலி அதனை ஒரு பொருட்டாக மதியாது, காற்றானது மேகத்தை அடித்துச் செல்வது போல் வேகமாகச் சென்றான். அதனைக் கண்ட ராவணனின் அமைச்சர்கள் அவனை விடுவிக்குமாறு கூறிக்கொண்டு வேகமாக வாலியின் பின் சென்றனர். அப்பொழுது அவர்கள் வாலியை அணுக முடியாமல் அவனுடைய கைகால்களுடைய வேகத்தினால் அடியுண்டு களைப்புற்றுப் பின்தங்கினர்.

        வாலி இவ்வாறு ராவணனைக் கக்கத்தில் இடுக்கியவாறே அனேகமாயிரம் யோஜனை தூரம், ஆகாய மார்க்கமாக வாயுவேக மனோவேகத்துடன் மற்றுள்ள மூன்று ஸமுத்திரங்களுக்கும் சென்று, ஸந்த்யோபாஸனம் செய்து கிஷ்கிந்தையை அடைந்தான்.


        அங்கு உபவனத்தில் இறங்கிய வாலி, ராவணனைக் கக்கத்திலிருந்து கீழே தள்ளி, அவளைப் பார்த்துப் பல தரம் சிரித்து, "ஐயா, தாங்கள் இப்பொழுது எங்கிருந்து வருவது?" என்று கேட்டான், வாலியினுடைய செய்கையைக் கண்டு வியப்படைந்த ராவணன், மிகவும் களைப்புற்று, கண்களை மருள மருள விழித்து, வாலியைப் பார்த்து, "மிகவும் பலவானான வானரேந்திரனே! நான் லங்காதிபதியான ராவணன். உன்னுடன் போர் புரியக் கருதி இவ்விடம் வந்தேன். வந்த இடத்தில் இப்படி அலைக்கழிக்கப்பட்டேன். உனது வலிமையே வலிமை! உனது பராக்கிரமமே பராக்கிரமம்! புலியானது பசுவைப் பற்றுவது போல நீ என்னைப் பற்றிக்கொண்டு, நான்கு ஸமுத்திரங்களையும் சுற்றி வந்தாய். உனது பலம் ஒப்பற்றது. ஹே வானர ராஜனே! நான் உன்னுடன் அக்கினிஸாக்ஷிகமாக நட்புக் கொள்ள விரும்புகிறேன். போகபோக்கியங்கள் அனைத்தும் இனி என்றென்றும் நம் இருவருக்கும் பேதமின்றிப் பொதுவாகவே இருக்கக்கடவன" என்று கூறி வேண்டினான். வாலியும் அப்படியே ஆகுக என்று கூறி  ஆமோதித்தான். அப்பொழுதே அவ்விருவரும் தீ வளர்த்து ஒருவரையொருவர் கட்டித் தழுவி அக்கினி ஸாக்ஷியாக நட்புச் செய்துகொண்டு ஸகோதரர் போலானார்கள்.

        பிறகு ராவணன் கிஷ்கிந்தையில் ஒரு மாதகாலம் தங்கியிருந்து தன் மந்திரிகளுடன் இலங்சை போய்ச் சேர்ந்தான்.

        "ஸ்ரீராமசந்திர! இப்படியாக வாலியின் பலமானது நிகரற்றது அப்படிப்பட்ட பலவானான வாலியும் உன்னால் வதம் செய்யப் பட்டான்" என்று அகஸ்தியர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக