ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஶ்ரீ மஹாபாரத வினா விடை 17

வினா 70 முதல் 82 வரை

வினா 70.- இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ எந்த தீர்த்த விசேஷத்திற்குச்‌ சென்றார்கள்‌?

விடை.- உத்தாலகரிஷி ஆசிரமத்தருகிலிருக்கும்‌ தீர்த்தம்‌ சென்றார்கள்‌. இங்கு, லோமசர்‌ உத்தாலகரது பிள்ளையாகிய சுவேத கேதுவும்‌ அவரது பேரனாகிய அஷ்டாவக்கிரரும்‌ ஜனக ஸபைசென்று அஷ்டாவக்கிரரது தகப்பனாரைத்‌ தர்க்கத்தில்‌ வென்று ஸமுத்திரத்துள்‌ அழுத்தி வைத்திருந்த பந்தி என்ற ஜனகஸபை வித்வானைத்‌ தர்க்கத்தில்‌ அஷ்டாவக்கிரர்‌ வென்று தன்‌ தகப்பனாரை அடைந்த விசேஷக்‌ கதையைச்‌ சொன்னார்‌.

வினா 71- இவ்வாறு தீர்த்தயாத்திரையின்‌ கடைசியில்‌ பாண்டவர்கள்‌ எங்குச்‌ சென்றார்கள்‌?

விடை... வடக்குத்‌ திக்கிலிருக்கும்‌ கந்தமாதன பர்வதத்தை நோக்கிப்‌ பாண்டவர்கள்‌ சென்றார்கள்‌. போகும்‌ வழியில்‌ திரெளபதிக்குக்‌ கஷ்டம்‌ தோன்ற, கடோற்கசனை அவர்கள்‌ வரவழைத்து அவளைத்‌ தூக்கிச்செல்லும்படி ஏவ அவனும்‌ அவ்வாறே செய்தான்‌. மற்றைய பாண்டவர்களைக்‌ கடோற்கசனோடு வந்த இராக்ஷஸர்கள்‌ தூக்கிச் சென்றார்கள்‌. இவர்கள்‌ கந்தமாதன பர்வதம்வந்து சிலநாள்‌ அங்கு வஸித்தார்கள்‌.

வினா 72.- அங்கு என்ன விசேஷம்‌ நடந்தது? அது எவ்வாறு முடிந்தது?

விடை... அங்கு அர்ஜுனனைக்‌ காணவேண்டும்‌ என்சிற ஆவலோடு பாண்டவர்களும்‌ திரெளபதியும்‌ இருக்கையில்‌ ஒரு இளம்‌ காற்று ஆயிரதளங்கள்‌ அமைந்த ஒரு தாமரைப்‌ புஷ்பத்தைத்‌ திரெளபதிமுன்‌ கொண்டுவந்து போட்டது. அவள்‌ பீமஸேனனிடம்‌ அந்தப்‌ புஷ்பம்‌ வேண்டும்‌ என்கிற தனது இஷ்டத்தைத்‌ தெரிவித்தாள்‌. உடனே பீமன்‌ புஷ்பம்‌ கொண்டு வருவதற்காக அது வந்த திக்கை நோக்கிப்‌ புறப்பட்டான்‌.

வினா 73.- இவ்வாறு பீமன்‌ புஷ்பம்‌ கொண்டுவரப்‌ போனவிடத்தில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை. தனது தம்பி பீமன்‌ வருவதையறிந்த கதலீ வனத்திலிருந்த ஹனுமார்‌ அவனுக்கு நன்மை செய்ய எண்ணி அவன்‌ வரும்வழியை மறித்துக்கொண்டு நின்றார்‌. பீமன்‌ ஹனுமாரிடம்‌ வந்து சிங்கனாதம்‌ செய்ய, அவர்‌ கவனியாதவர்போல்‌ அசிரத்தையாய்க்‌ கண்ணைவிழித்துப்‌ பார்த்து "நீ இதோடு நிற்கவேண்டியது தான்‌. மேலே போக உன்னால்‌ முடியாது. என்னோடு ஸுகமாய்க்‌ கொஞ்ச காலம்‌ இருந்துவிட்டு கீழே திரும்பிப்‌ போ” என்றார்‌. உடனே பீமனுக்கும்‌, ஹனுமாருக்கும்‌ ஒரு தர்க்கம்‌ உண்டாயிற்று.

வினா 74.- இந்தத்‌ தர்க்கம்‌ எப்படி முடிந்தது?

விடை... இதன்‌ முடிவில்‌ ஹனுமார்‌ தனக்கு எழுந்திருக்க முடியவில்லை என்றும்‌, தன்னை வேண்டுமானால்‌ தாண்டிக்‌ கொண்டு போகலாம்‌ என்றும்‌ சொன்னார்‌. பீமன்‌ இதற்கு இசையவில்லை. அதன்பின்பு அவர்‌ தாம்‌ கிழவர்‌ என்றும்‌, தமது வாலைத்தூக்கி வேறோரிடத்தில்‌ வைத்து விட்டுப்‌ போகலாம்‌ என்றும்‌ சொல்ல அவன்‌ தனது இடதுகையால்‌ வாலை அசைத்தான்‌. அது அசையாதது கண்டு தனது முழுப்‌ பலத்தோடு தூக்கிப்பார்த்தான்‌. உடனே தனது ஹீனஸ்திதியை அறிந்து “நீர்‌ யார்‌" என்று மஹா வினயத்தோடும்‌, பக்தியோடும்‌ பீமன்‌ கேட்டான்‌. அதற்கு ஹனுமார்‌ தனது பிறப்பு, தான்‌ இராமருக்காகப்‌ பட்டபாடுகள்‌ முதலியவைகளை ஆதியோடந்தமாகச்‌ சொன்னார்‌. உடனே பீமன்‌ தனது தமயன்‌ காலில்‌ அடியற்ற மரம்போல்‌ விழுந்து மஹாவிநயத்தோடு எழுந்து நின்றான்‌.

வினா 75.- இவ்வாறு நின்ற பீமனுக்கு ஹனுமார்‌ என்ன சொன்னார்‌?

விடை.- பீமனுக்கு ஹனுமார்‌ கிருத யுகத்தில்‌ ஜாதி பேதமே இல்லை என்றும்‌, அவரவர்கள்‌ தமது தர்மத்தைத்‌ தாமே நடத்திவந்தார்கள்‌ என்றும்‌, திரேதா யுகத்தில்‌ தர்மம்‌ கால்வாசி குறைந்தபடியால்‌ யாகாதிக்‌ கிருதுக்கள்‌ ஏற்பட்டன வென்றும்‌, நான்கு வர்ணங்கள்‌ ஏற்பட்டு தர்மங்கள்‌ நன்றாய்‌ நடந்து வந்தன வென்றும்‌, துவாபர யுகத்தில்‌ தர்மம்‌ பாதியாய்‌ விட்டது என்றும்‌, வேதங்கள்‌ நான்காய்ப்‌ பிரிந்தன வென்றும்‌, கர்மாக்கள்‌ அதிகரித்தன என்றும்‌ ஸ்மசான வைராக்யாதி ஆபாஸ வைராக்கியங்களால்‌ ஸன்னியாஸு முண்டாயின என்றும்‌, கலியுகத்தில்‌ தர்மத்தில்‌ கால்பாகந்தான்‌ இருக்கும்‌ என்றும், இதனால்‌ ஜனங்களுக்குப்‌ பலம்குறையும்‌ என்றும்‌, ஸகல வியாதிகளும்‌ அவர்களைப்‌ பீடிக்கும்‌ என்றும்‌, கர்மாக்கள்‌ நஷ்டமாகும்‌ என்றும்‌, எடுத்துரைத்தார்‌. பின்பு பீமனுக்கு ஹனுமார்‌ தமது விசுவரூபத்தைக்‌ காட்டினார்‌. இதன்‌ பின்பு நான்கு வர்ணத்தாரது தர்மங்களையும்‌ விஸ்தாரமாய்‌ எடுத்துச்சொல்லிப்‌ பீமனைக்‌ கட்டிக்கொண்டு அவனது சிரமத்தைத்‌ தீர்த்து வைத்தார்‌. அதன்பின்பு தாம்‌, யுத்த ஸமயங்களில்‌ அர்ஜுனனது கொடியில்‌ வந்திருந்துகொண்டு தமது அட்டஹாஸம்‌ முதலியனகளால்‌ எதிரி ஸேனையைப்‌ பயப்படுத்துவதாக வாக்களித்தார்‌. கடைசியில்‌ ஹனுமாரிடமிருந்து ஸெளகந்திகத்‌ ‌ தாமரை ஓடை இருக்கும்‌ இடத்தைத்‌ தெரிந்துகொண்டு பீமன்‌ குபேரனது இருப்பிடம்‌ வந்து சேர்ந்தான்‌.

வினா 76.- அங்கு வந்து பீமன்‌ என்ன செய்தான்‌? அங்கு என்ன பிரமாதம்‌ விளைந்தது?

விடை.- அங்குள்ள புஷ்பங்களைப்‌ பறிக்க யத்தனிக்கையில்‌ அவ்வோடையைக்‌ காத்துவந்த இராக்ஷஸர்களிடம்‌ தனது காரியத்தைப்‌ பீமன்‌ சொல்லிவிட்டு நிர்பயமாய்‌ தாமரைகளைப்‌ பறிக்கத்‌ தொடங்கினான்‌. அப்பொழுது இராக்ஷஸர்களுக்கும்‌ பீமனுக்கும்‌ பிரமாத யுத்தமுண்டாயிற்று. அதில்‌ குபேரனது ஸேவகர்‌ தோல்வியடைந்து எஜமானனிடம்‌ ஸமாசாரத்தைத்‌ தெரிவிக்க அவர்‌ பீமனுக்குப்‌ புஷ்பம்‌ பறிக்க அனுமதி கொடுத்து விட்டார்‌.

வினா 77.- இங்கு இவ்வாறிருக்க தர்மபுத்திராதிகள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- தர்மபுத்திரர்‌ இருக்குமிடத்தில்‌ அனேக அபசகுனங்கள்‌ உண்டாகத்‌ திரெளபதியினிடமிருந்து பீமன்‌ போன விடத்தை அறிந்துகொண்டு எல்லோரும்‌ கடோற்கசன்‌ முதலிய இராக்ஷஸாது ஸகாயத்தால்‌ ஸெளகந்திகத்‌ தாமரை ஓடைவந்து, பீமன் செய்த கோரயுத்தத்தைக்‌ கண்டு மகிழ்ந்து குபேரனது உத்திரவின்பேரில்‌ அங்கேயே இவர்கள்‌ அர்ஜுனன்‌ வரவை எதிர்பார்த்துக்‌ கொண்டிருந்தனர்‌.

வினா 78.- இங்கிருந்து பாண்டவர்கள்‌ எங்கு சென்றார்கள்‌? அங்கு என்ன விபரீத முண்டாய்‌ என்னமாய்‌ முடிந்தது?

விடை.- பாண்டவர்கள்‌ பதரிகாசிரமம்‌ சென்று வஸிக்குங்கால்‌ ஒருநாள்‌ பீமன்‌ வெளியில்‌ போயிருக்கும்‌ தருணத்தில்‌ தர்மபுத்திரர்‌, நகுலன்‌, ஸகாதேவன்‌, திரெளபதி இவர்களை ஒரு இராக்ஷஸன்‌ தூக்கிக்கொண்டுபோய்‌ விட்டான்‌. இவன்‌ பெயர்‌ ஜடாஸுரன்‌. இவன்‌, வெகுநாளாகப்‌ பிராம்மண உருவத்தோடு பாண்டவர்களது ஆயுதம்‌ முதலியவைகளை ஸமயம்பார்த்துக்‌ கொள்ளை கொள்ள வெண்டும்‌ என்கிற எண்ணத்தோடு, கூடவே வந்து கொண்டிருந்தான்‌. இப்பொழுது ஸமயம்‌ வாய்த்ததும்‌ இவ்வாறு செய்யக்‌ கொஞ்ச நாழிகையில்‌ பீமன்‌ வந்து சேர்ந்தான்‌. தனது ஸஹோதரர்‌ முதலியவர்களைக்‌ காணாது பீமன்‌ அட்டஹாஸம்‌ செய்ய இராக்ஷஸன்‌ பயத்தால்‌ தான்‌ எடுத்துப்‌ பொனவர்களை கீழேவிட்டு விட்டான்‌. உடனே பீமனுக்கும்‌ ஜடாஸுரனுக்கும்‌ பெரிய யுத்தம்‌ உண்டாக கடைசியில்‌ ஜடாஸுரன்‌ பீமனால்‌ ஸம்ஹரிக்கப்‌ பட்டான்‌.

வினா 79.- இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ எந்த ஸ்தலங்களுக்குச்‌ சென்றார்கள்‌? பின்பு என்ன நடந்தது?

விடை.- நரநாராயணாள்‌ ஆசிரமத்தைவிட்டு வடக்கேயுள்ள கைலாஸம்‌, மைனாகம்‌ முதலிய மலைகளைப்பார்த்துக்‌ கொண்டு மறுபடியும்‌ கந்தமாதனம்‌ வந்து ‌ ஹரிஷ்டஸேனர்‌ என்ற ரிஷியின்‌ ஆசிரமத்தில்‌ வஸித்தார்கள்‌. அங்கு சில சிறந்த புஷ்பங்கள்‌ வர திரெளபதி பீமனை அவைகளைப்போன்ற புஷ்பங்களைக்‌ கொண்டு வரும்படி ஏவினாள்‌. உடனே பீமன்‌ குபேரனது அரண்மனை அருகில்‌ சென்று தனது சங்கத்தை ஊத அங்குக்‌ காவலாய்‌ இருந்த யக்ஷ ராக்ஷஸ‌ கந்தர்வர்கள்‌ சண்டைக்கு வந்தார்கள்‌. அவர்கள்‌ தோல்வி யடைந்தவுடன்‌ மணிமான்‌ என்ற குபேரனது ஸ்நேகிதனாகிய இராக்ஷஸாதிபதி யுத்தத்திற்குவர, கோரயுத்தம்‌ ஆரம்பித்தது. இதையறிந்த பாண்டவர்கள்‌ ஆயுதபாணிகளாக திரெளபதியை ஹரிஷ்டஸேனரிடம்‌ விட்டுவிட்டு பீமனுக்கு ஸஹாயமாக வந்தார்கள்‌. இதில்‌ மணிமான்‌ இறந்தான்‌. தர்மபுத்திரர்‌ சண்டையை நிறுத்திவிடும்படி சொல்லிக்கொண்டிருக்கையில்‌ குபேரனுக்கு யுத்தத்தில்‌ அனேகம்‌ பேர்‌ மாண்டு போனது தெரியவர, அதிக கோபத்தோடு தனது இரதத்திலேறிக்கொண்டு வந்தான்‌. பாண்டவர்களைக்‌ கண்டதும்‌ அவனுக்குக்‌ கோபந்தணிய பீமனைப்‌ புகழ்ந்து பேசினான்‌.

வினா 80.- இவ்வளவு கஷ்டம்‌ வந்தும்‌ தன்‌ கோபத்தைப்‌ பாராட்டாது இருந்ததற்குக்‌ குபேரன்‌ என்ன காரணம்‌ சொன்னான்‌? கடைசியில்‌ அவன்‌ என்ன சொன்னான்‌?

விடை... ஒருகாலத்தில்‌ குசாவதியில்‌ ஒரு தேவ ஸபை கூடியது. அதற்கு எனது இராக்ஷஸர்‌ முதலிய பரிவாரங்களோடு நான்‌ போனேன்‌. வழியில்‌ யமுனைக்‌ கரையில்‌ அகஸ்தியர்‌ தபஸு செய்துகொண்டிருந்தார்‌. அப்பொழுது என்னுடன்‌ ஆகாயத்தில்‌ வந்துகொண்டிருந்த இராக்ஷஸாதிபதியாகிய மணிமான்‌ என்ற என்‌ ஸ்நேகிதன்‌ அகஸ்தியர்மேல்‌ உமிழ்ந்தான்‌. உடனே அகஸ்தியர்‌ மிகுந்தகோபத்தோடு மணிமானுக்கு மனிதனால்‌ சாவு வரட்டும்‌ என்றும்‌, இவ்வாறு மணிமானது பரிவாரங்கள்‌ இறப்பதைக் கண்டதும்‌ என்‌ பாபம்‌ நீங்கும்‌ என்றும்‌, மணிமான்‌ முதலிய இராக்ஷஸர்களது ஸந்ததிகளை இச்சாபம்‌ தொடராது என்றும்‌ எடுத்துரைத்தார்‌' என்று குபேரன்‌ சொன்னான்‌. கடைசியில்‌ பீமன்‌ செய்தது மாத்திரம்‌ அநியாயம்‌ என்றும்‌ அதற்காகத்‌ தர்மபுத்திரர்‌ பீமனைக்‌ கண்டிக்கவேண்டும்‌ என்றும்‌ அவன்‌ சொல்லி முடித்தான்‌.

வினா 81.- இவ்வாறு பாண்டவர்கள்‌ ஸுகமாய்‌ கந்தமாதன பர்வதத்தில்‌ வஸித்துக்‌ கொண்டிருக்கையில்‌ யார்‌ வந்து சேர்ந்தார்கள்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை... மாதலியால்‌ நடத்தப்பட்ட இந்திரனது இரதத்தில்‌ அர்ஜுனன்‌ இந்திரலோகத்திலிருந்து பாண்டவரிடம்‌ வந்து சேர்ந்தான்‌. எல்லாருக்கும்‌ தகுந்தபடி மரியாதைகள்‌ செய்த பின்பு, தான்‌ பரமசிவன்‌ முதலிய தேவர்களிடமிருந்து அஸ்திர விசேஷங்களைப்‌ பெற்றுக்கொண்ட மாதிரியை எடுத்துச்‌ சொன்னான்‌.

வினா 82.- இவ்வாறு அர்ஜுனன்‌ சொல்லி முடித்ததும்‌ பாண்டவர்களிடம்‌ யார்‌ வந்து என்ன சொன்னார்கள்‌? அதன்மேல்‌ என்ன நடந்தது?

விடை... இந்திரன்‌ தனது இரதத்தில்‌ ஏறிக்கொண்டு வந்து தன்லோகத்தில்‌ அர்ஜுனனால்‌ நடத்தப்பட்ட திவ்யகாரியங்களை ஒருவாறு சுருக்கிச்‌ சொல்லி விட்டுத்‌ தனது லோகம்‌ சென்றான்‌. பின்பு தர்மபுத்திரர்‌ அர்ஜுனனிடமிருந்து நிவாதகவச காலகேயாளோடு அவன்‌ செய்த யுத்தத்தை விஸ்தாரமாகத்‌ தெரிந்து கொண்டார்‌. அதன்‌ பின்பு அர்ஜுனன்‌ தான்‌ தேவதைகளிடமிருந்து பெற்ற அஸ்திரங்களை எல்லாருக்கும்‌ காண்பித்து, அவைகளை உபயோகிக்கும்‌ விதம்‌ தேவர்களிடம்‌ இருந்து தான்‌ அறிந்தபடி அவர்களுக்கு எடுத்துரைத்தான்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக