ஶ்ரீ மஹாபாரத வினா விடை
முதல் பாகம்
ஆரண்ய காண்டம்
வினா 83 முதல் 101 வரை
வினா 83.- அர்ஜுனன் இவ்வாறு வந்து சேர்ந்த பின்பு பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?
விடை.- நான்கு வருஷம் அர்ஜுனனோடு பாண்டவர்கள் குபேரனது உத்தியான வனங்களில் கிரீடித்துக்கொண்டு வந்தார்கள். இதன் பின்பு பாண்டவர்கள் கந்தமாதன பர்வதத்தைவிட்டுக் கீழே இறங்க யத்தனிக்கையில் லோமசர் அவர்களுக்கு வேண்டிய புத்திமதிகளைச் சொல்லிவிட்டு ஸ்வர்க்கத்தை நோக்கிச் சென்றனர். வருகிற வழியில் அனேக இடங்களைத் தரிசித்துக்கொண்டு பாண்டவர்கள் யமுனா நதிக் கரையில் உள்ள ஒரு மலையருகில் வந்து சேர்ந்தார்கள்.
வினா 84.- அங்கு என்ன விசேஷம் நடந்தது? அது எவ்வாறு முடிந்தது?
விடை... அங்கு பீமன் காட்டுவழியாய் விளையாடிக்கொண்டு வெகு உல்லாஸமாய் வருகையில் ஒரு பெரிய மலைப்பாம்பைக் கண்டு அதைப் பிடிக்க அருகே போனான். அப்பொழுது அந்தப் பாம்பிற்கு முன்னமே இருந்த அனுக்கிரஹப்படி, இவன் அதன் சுற்றில் அகப்பட்டு உடனே மூர்ச்சைபோய் தனது பலம் முழுவதையும் இழந்து விட்டான்.
வினா 85.- இந்தப் பாம்பு யார்? இவர் ஏன் பாம்பானார்? யார் இவருக்கு இவ்வாறு அநுக்கிரஹித்தது?
விடை... இந்தப் பாம்புதான் பாண்டவரது மூதாதைகளுள் ஒருவராகிய நகுஷராஜா. இவர் 100-அசுவமேதயாகம் செய்து இந்திரபதவிக்குத் தகுந்தவராக, இவருக்கு இந்திரப்பட்டம் கிடைத்தது. அங்கு சென்றும் இவருக்குக் காமம் தீராதிருந்ததால் உடனே இந்திராணியைப் பெண்டாளவேண்டும் என்ற கெட்ட எண்ணம் வர, வழக்கப்படி ஸப்தரிஷிகள் சிவிகை தூக்க நகுஷன் இந்திராணி வீடு நோக்கிச் சென்றான். போகும்பொழுது அவன் “ஸர்ப்ப ஸர்ப்ப" (வேகமாய்ப் போகட்டும்) என்று ஸப்தரிஷிகளை மதியாது அதட்ட, அவர்களுள் அகஸ்தியருக்குக் கோபம் வந்தது. அவர் “நீ மலைப்பாம்பாய்ப் போகக்கடவாய்” என்று சபித்தார். அப்பொழுது நகுஷன் அகஸ்தியருக்குத் தயவு வரும்படியாய் நடந்து கொண்டபடியால் அவர் “நீ இந்த மலைப்பாம்புருவில் எதைப் பிடித்த போதிலும் அதற்கு உள்ள பலம் எல்லாம் போய்விடட்டும். கடைசியில் ஒரு மஹானிடமிருந்து ஆத்மஞான விஷயங்களை நீ அறிந்து சாபத்தினின்றும் நீங்குவாய்” என்று அனுக்கிரஹித்தார்.
வினா 86.- இவ்வாறு பலமிழந்து தத்தளிக்கும் பீமனை யார் எவ்வாறு விடுவித்தது? பாம்பின் கதி என்னவாயிற்று?
விடை.- இவ்வாறு கஷ்டப்படும் பீமனை தர்மபுத்திரர் தாம் தேடிக் கொண்டுவரும் வழியில் கண்டார். உடனே பாம்பை நோக்கிப் பீமனை விட்டுவிடவேண்டும் என்று கேட்க அது ஆத்மஞான விஷயமாய் அனேகம் கேள்விகள் கேட்டது. அப்பொழுது தர்மபுத்திரர் எல்லாவற்றிற்கும் தகுந்த விடைகொடுக்க உடனே பாம்பு பீமனை விட்டுவிட்டு நகுஷரூபந்தரித்து ஸ்வர்க்க லோகம் சென்றது.
வினா 87.- நகுஷனாகிய மலைப்பாம்பு தர்மபுத்திரரைக் கேட்ட முக்கிய கேள்விகளும் அதற்கு அவர் கொடுத்த விடைகளும் என்ன? அதன் பின்பு என்ன நடந்தது?
விடை.- பிராம்மணன் யார்? ஸத்யம், தர்மம், தயை, தபஸ் முதலிய நற்குணங்கள் வாய்ந்தவன் சூத்திரனாகிலும், அவனே பிராமணன். நாம் அவசியம் அறிய வேண்டியதென்ன? ஸுகதுக்கரகிதமாய் தம்மை அடைந்தவருக்குத் துக்கநிவர்த்தி செய்யும் தன்மை வாய்ந்த பரம்பொருளே நாம் அவசியம் அறியவேண்டிய வஸ்து. இதன்பின்பு தர்மபுத்திரர் நகுஷனை அநேக கேள்விகள் கேட்டு தனக்கிருந்த ஸந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டார். இதன் பின்பு பாண்டவர்கள் வனத்தை அடைந்து அங்கு சிலகாலம் வஸித்துக் கடைசியில் காம்யக வனத்தில் பிரவேசித்தார்கள்.
வினா 88.- அங்கு யார் பாண்டவர்களைப் பார்க்க வந்தது? அப்பொழுது என்ன விசேஷம் நடந்தது?
விடை.- கிருஷ்ணபகவான் தமது பட்டஸ்திரீகள், ஸுபத்திரை, அபிமன்யு ஆகிய இவர்களோடு பாண்டவர்களைப் பார்க்க வந்தார். அதன் பின்பு மார்க்கண்டேய மஹாமுனியும் அங்கு தற்செயலாய் வந்து சேர, அவரை அரிய விஷயங்களைப் பற்றிப் பேசும்படியாக யாவரும் வேண்டிக்கொண்டார்கள்.
வினா 89.- மார்க்கண்டேயர் முதலில் எவ்வெவ் விஷயங்களைப்பற்றிச் சுருக்கமாய் எடுத்துரைத்தார்?
விடை.- ஸுகம் மனிதனது புத்தியை மயக்கி உண்மை அதில் படாதவண்ணம் செய்யும் தன்மை உடையது, துக்கமோ அவ்வாறின்றி மனிதனது அஞ்ஞானம், துரபிமானம் முதலிய கெட்டகுணங்களை வேறோடு அறுத்து மனத்தைச் சுத்தி செய்யும் தன்மையையுடையது. உள்ளத்துறவுடையவர்களுக்கு அஸாத்தியமானது ஒன்றுமில்லை. வைவஸ்வதமனுவின் சரித்திரம், யுகங்களின் ஸ்வபாவங்கள், யுகப் பிரளயம், அதில் தாம் வடபத்திர சாயியான பகவானது வயிற்றில் 14 லோகங்களையும் கண்ட அற்புதக் காட்சி, அப்பொழுது பகவான் தமது ஸ்வரூபத்தை வெளியிட்ட வைபவம், கலியுக தர்மம், அதன்பின் கிருத யுகம் வரும் விதம், இராஜதர்மம் ஆகிய இவ்விஷயங்களைப்பற்றி மார்க்கண்டேய மஹாமுனி விஸ்தாரமாய்த் தர்மபுத்திரருக்கு எடுத்துரைத்தார்.
வினா 90.- இதன் பின்பு எந்த அரிய விஷயத்தைப்பற்றி மார்க்கண்டேயர் எவ்வாறு பேசினார்?
விடை.- உள்ளபடி தானம் செய்தல் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை நாரதருக்கும் யயாதியின் பேரர்களாகிய அஷ்டகர் முதலியவருக்கும் நடந்த ஸம்வாதமூலமாய் நன்கு விளக்கினார்.
வினா 91.- எந்த ஸந்தர்ப்பத்தில் நாரதருக்கும் யயாதி பேரர்களுக்கும் ஸம்வாதம் ஏற்பட்டது?
விடை.- விசுவாமித்திர வம்சத்தில் பிறந்த யயாதி பேரனாகிய அஷ்டகன் ஒரு அசுவமேதயாகம் செய்தான். அதைப் பார்க்க யயாதியின் மற்றப்பேரப் பிள்ளைகளாகிய பிரதர்த்தனன், வஸுமனஸ், சிபி என்பவர்கள் வந்திருந்தார்கள். யாகத்தின் முடிவில் நால்வரும் ஒரு இரதத்தில் எறிக்கொண்டு போகையில் எதிரே நாரதர்வரக்கண்டு அவரையும் தமது இரதத்தில் ஏற்றிக் கொண்டார்கள். இக்காலத்தில் தான் நாரதருக்கும், இவர்களுக்கும் ஸம்வாதம் உண்டாயிற்று.
வினா 92.- "நாங்கள் நால்வரும் புண்ணிய விசேஷத்தால் ஸ்வர்க்க மடையப் போகிறோம். யார் எங்களுள் புண்யம் குறைந்து முதலில் பூமியில் விழப்போகிறார்கள்?” என்று கேட்ட யயாதி பேரனுக்கு நாரதர் என்ன மறுமொழி சொன்னார்? இதனால் நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டியது?
விடை... 'அஷ்டகன் முதலில் விழுவான். ஏனெனில், இவன் ஒரு காலத்தில் என்னை ஊருக்கு வெளியில் இரதத்தில் ஏற்றிக்கொண்டு போகையில் நான் அனேகவர்ண பேதங்களையுடைய பசுக்களைக் கண்டேன். அப்பொழுது இவன், இவைகள் தான் தானங்கொடுத்த பசுக்கள் என்று பெருமை பாராட்டினான். ஆகையால் இவன் முதலில் ஸ்வர்க்கத்திலிருந்து விழுவான் என்றார். இதனால், நாம் தானம் செய்யுங்கால் அதைப்பற்றிக் கர்வமடையாதிருக்கவேண்டும் என்பது விளங்கும்.
வினா 93.- மீதி இருக்கும் மூவரில் எவன் முதலில் கீழே விழுவான் என்ற பேரனுக்கு நாரதர் என்ன மறுமொழி சொன்னார்? இதனால் நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டியது?
விடை... “பிரதர்த்தனன் முதலில் விழுவான். ஏனெனில் இவன் வீட்டில் நான் சிலநாள் வஸித்துக்கொண்டிருக்கையில் நாங்களிருவரும் ஒருநாள் இரதத்தில் ஏறிக் கொண்டு வெளியே புறப்பட்டோம். போகும்வழியில் ஒரு பிராமணன் வந்து அரசனை ஒரு குதிரை வேண்டும் என்று யாசித்தான். அரசன் அரண்மனைக்குப் போனதும் குதிரையைத் தருவதாகச் சொல்லிப்பார்த்தான். பிராமணன் கேளாது தனக்கு அப்பொழுதே ஒரு குதிரை அவசியம் வேண்டுமேன்று கேட்க, தேரில் கட்டியிருந்த ஒரு குதிரையை அவிழ்த்துக்கொடுத்தான். இதே மாதிரியாக வேறு மூன்று பிராமணர்கள் வர, அவர்களும், பிடிவாதமாய் இருந்தது கண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குதிரையைக்கொடுத்து விட்டு அவன் தானே இரதத்தை இழுக்கத் தொடங்கினான். இழுக்கும்பொழுது பிராமணர்கள் கேட்கத்தகுந்த வஸ்து இனி என்னிடம் ஒன்றுமில்லை என்று சொல்லி அரசன் அசிரத்தையைக் காட்டினான். இதனால் தான் அவன் இரண்டாவதாகப் பூமியில் விழுவான்" என்று நாரதர் சொன்னார். எவ்வளவு சிறந்த தானத்தைச் செய்தபோதிலும் கொஞ்சம் அசிரத்தை இருக்குமாயின் அது கெட்டுப்போகும் என்பது இதனால் விளங்கும்.
வினா 94.- "மீதி இருக்கும் இருவரில் எவன் முதலில் ஸ்வர்க்கத்திலிருந்து விழுவான்" என்று கேட்ட பேரனுக்கு நாரதர் என்ன பதில் சொன்னார்? இதனால் நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டியது?
விடை. வஸுமனஸ் கீழே விழுவான். ஏனெனில், இவன் ஒருகாலத்தில் யாகம் செய்து ஒரு அழகிய இரதத்தை வரவழைத்தான்; அதை நான் புகழ்ந்து பேசினேன். அப்போழுது இவன், 'இது தங்களுடையதே' என்றான். இவ்வாறு நான் வேறு மூன்று ஸமயங்களில் அந்த இரதத்தைப் புகழ்ந்து பேசியும், அரசன் 'இது தங்களதே' என்று வாய்வார்த்தையாய்ச் சொன்னானே ஒழிய இரதத்தை எனக்குக் கொடுக்கவில்லை. இதனால் தான் இவன் முன்றாவதாக விழுவான்' என்று நாரதர் மறுமொழி சொன்னார். இதனால், யாசிப்போர் நோக்கமறிந்து செய்யாத தானம் பிரயோஜனமில்லை என்பது விளங்கும்.
வினா 95.- நாரதர், சிபி ஆகிய இருவருள் யார் முதலில் கீழே விழுவார்கள்? என்று கேட்க குபேரனுக்கு நாரதர் என்ன மறுமொழி சொன்னார்? இதனால் நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டியது?
விடை.- "நான் முதலில் கீழேவிழுவேன், சிபி ஸ்வர்க்கத்தில் நெடுங்காலம் வாழ்வான், ஏனெனில், சிபி விட்டிற்கு ஒரு நாள் ஒரு பிராம்மணன் போஜனம் வேண்டும் என்று வந்தான். சிபி தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, பிராமணன் உன் பிள்ளையைக்கொன்று கறி சமைத்து எனக்குச் சோறிட வேண்டும்' என்று கேட்டான். உடனே சிபி அவ்வாறே செய்து ஸாமான்களை எடுத்துக்கொண்டு அதிதியைத் தேடப்புறப்பட்டான். போகும் வழியில் அந்த அதிதி அரண்மனையுட் புகுந்து தனது ஸொத்துக்கள் எல்லாவற்றையும் கொளுத்தி நாசம் செய்வதாகச் சிபி கேள்விப்பட்டான். இப்படி செய்துகொண்டிருக்கும் பிராமணனிடம் சென்று கோபங்கொள்ளாது சிபி 'சாப்பாடு தயாராய் இருக்கிறது' என்று மஹாவிநயத்துடன் சொல்ல, அவர் நீயே அதைப் புஜி' என, அரசன் மனங்கலங்காது அதைப் புஜிக்கத் தொடங்கினான். உடனே பிராம்மணர் அரசனதுகையைப் பிடித்துக்கொண்டு அவனது பொறுமையைக் கொண்டாடி அவனை வெகு மரியாதைசெய்து மறைந்தார். பிரம்மாவே அரசனது குணத்தைப் பரிசோதிக்க இவ்வுருக்கொண்டு வந்தது. இம்மாதிரிச் சிறந்த தானத்தைச் செய்ததால் சிபி நெடுங்காலம் ஸ்வர்க்கத்தில் வாழ்வான் என்று நாரதர் சொன்னார். இதனால், தானம் செய்யுங்கால் எவ்வளவு கஷ்டம் வந்தபோதிலும் மனங் கலங்காது பொறுமையோடு தைரியமாய்த் தானம் செய்தல் வேண்டும் என்பது விளங்கும்.
வினா 96.- இதன் பின்பு என்ன அரிய விஷயத்தைப்பற்றி மார்க்கண்டேயர் என்ன கதை சொன்னார்?
விடை...ஒவ்வொருவனும் அவனவனது தர்மத்தை ஒழுங்காய் நடத்தவேண்டியது. ஒருவனது தர்மம் தாழ்ந்ததாய் இருந்ததினால் அவனுக்கு ஒரு தாழ்வுமில்லை. அதை நன்றாய் நடத்தாமல் போனால் தான் அவனுக்குத் தாழ்வு, மேலான தனது தர்மத்தை அரைகுறையாய்ச் செய்பவனைவிடத் தாழ்ந்த தனது தர்மத்தை ஸரியாய்ச் செய்பவன் சிறந்தவன்' என்கிற விஷயத்தைப்பற்றி கெளசிக பிரம்மசாரி தர்மவ்யாதனிடம் உபதேசம் பெற்ற கதையைச் சொன்னார்.
வினா 97.- கெளசிகப் பிரம்மசாரி யார்? இவன் ஸ்வபாவம் என்ன? அது எவ்வாறு வெளிவந்தது?
விடை.- அவன் காட்டில் சென்று ஹடயோகாதிகள் பழகிக் கொண்டு தவம் செய்து வந்த ஒரு பிரம்மசாரி; அவன் மகா கோபமும் கர்வமும் நிறைந்தவன். அவன் ஒருநாள் மரத்தடியில் யோகாப்யாஸம் செய்துகொண்டு இருக்கையில் அவனுக்கு நேரே, மேலே இருந்த கொக்கு ஒன்று அவன் தலையில் எச்சமிட்டது. இதனால் அவனுக்கு அடங்காக் கோபம் உண்டாக அந்தக் கொக்கைக் கண்விழித்து அண்ணாந்து பார்த்தான். உடனே கொக்கு சாம்பலாய் விழுந்தது. இதைக்கண்டதும் கெளசிகப் பிரம்மசாரிக்கு அநியாயமாய் ஒரு உயிர்ப் பிராணியைக் கொன்று விட்டோமே என்ற துக்கம் ஒரு பக்கமும், தனது தபஸ் இவ்வளவாவது பலித்ததே என்ற கர்வமொருபக்கமும் பாதிக்கத் தொடங்கின.
வினா 98.- இந்தக் கர்வம் எவ்வாறு வெளிவந்து எவ்வாறு பங்க மடைந்தது?
விடை.- இப்படிக் கொக்கை எரித்துவிட்டு மத்தியான ஸமயத்தில் அருகிலிருந்த கிராமத்துள் பிக்ஷைக்குச்சென்று ஒரு வீட்டு வாசலில் 'பவதீ பிக்ஷாந்தேகி' தாயே பிக்ஷையை யாசிக்கிறேன்) என்று சொல்லிக்கொண்டு நின்றான். அங்கு வெகு நாழிகை கெளசிகன் காத்திருக்க வேண்டி வந்தது. அதன் பின்பு அந்த வீட்டு எஜமானி யம்மாள் இவனுக்குப் பிக்ஷை கொண்டுவந்து போட்டாள். அவளை இவன் வெகு கோபமாய்க் கண்விழித்துப் பார்த்தான். அதற்கு அவள் “என் கணவனே எனக்குச் சிறந்த தெய்வம். அவர் பசியோடிருப்பதைக் கண்டு அவருக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்துவிட்டுப் பின்பு உமக்குப் பிக்ஷை கொண்டு வந்தேன். பிராமணர்களை நான் அவமதிப்பவள் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. என்னை மன்னிக்கவேண்டும்' என்று நயமாய்ச்சொன்னாள். இப்படிச் சொல்லியும் கோபம் தணியாது கெளசிகன் மறுபடியும் அந்தப் பதிவிருதையை வெருட்டி நோக்கினான். அப்பொழுது அவள் 'நான் கொக்கல்ல ஐயா. என்னை ஏன் இப்படி எரிப்பவர்போல் நோக்குகிறீர். எனக்கு உமது யோகமும் தெரியாது, உமது தபஸும் தெரியாது. நான் ஆராதிக்கும் தெய்வம் எனது கணவனே. இந்த ஆராதனையால்தான் நீர் காட்டில் செய்த காரியம் எனக்குத் தெரியவந்தது. கோபம் சண்டாளம். இவ்வாறு இதை நீர் விட்டுவிடாது வைத்து வளர்ப்பீராகில், உமக்கு கேடுண்டாகிக் கடைசியில் உமது தபஸு யாவும் கெட்டுப்போகும்' என்று புத்திமதி கூறினாள்.
வினா 99.- இந்தப் புத்திமதியைக் கேட்டதும் கெளசிகன் ஸ்திதி என்னமாயிற்று? பதிவிருதை என்ன சொன்னாள்?
விடை.- கெளசிகனுக்குத் தனது அறியாமை விளங்கியதும் வெட்க முண்டாகித் தலைகுனிந்துவிட்டான். கேவலம் இந்தப் பதிவிருதைக்கு உள்ள ஞானதிருஷ்டியும், சாந்தமும், தான் தபஸ்வியாயினும் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் அவன் மனதைப் பாதிக்கத்தொடங்கியது. உடனே மஹா விநயத்துடன் 'அம்மணி இன்னும் உனக்கு இந்த விஷயத்தில் தெரிந்தவைகளை நான் கேட்டு நல்லவழிக்கு வரும்படி வெளியிடு என்று கெளசிகன் கேட்டான். பதிவிரதை 'ஐயா எனக்கு இவ்விஷயங்களைப் பற்றி அதிகமாய்த் தெரியாது. உமக்கு மேல் தெரிய வேண்டுமானால் மிதிலா நகரத்தில் தர்மவியாதன் என்ற ஒரு கசாப்புக் காரனிருக்கிறான் ; அவனை அடுத்துக் கேட்டால் அவன் உமக்குத் தகுந்தபடி விடைகொடுப்பான்' என்று சொல்லிவிட்டு விட்டுக்குள் சென்றாள்.
வினா 100.- இதன் பின்பு கெளசிகன் என்ன செய்தான்? அங்கு என்ன விசித்திரத்தைக் கண்டான்?
விடை.- பதிவிரதா ஸ்திரீயினது மேன்மையை அறிந்த கெளசிகன் தர்மரகஸியங் களை நன்கு உணர மிதிலா நகரம் தர்ம வியாதனிடம் போவதாக எண்ணித் தனது கர்வம் முதலியவைகளை அடக்கத் தீர்மானித்தான். அப்படியே இவன் மிதிலா நகரம் செல்ல, அங்கு ஒரு கசாப்புக்கடையில் வியாதன் வியாபாரம் செய்து கொண்டிருப்பதை ஜனங்கள் மூலமாய்க் கேட்டறிந்து கெளசிகன் அங்கு போய் ஒதுங்கி ஓரிடத்தில் நின்றான். இதை யறிந்த தர்மவியாதன் தனது இடம்விட்டு எழுந்து பிராம்மணனுக்குத் தகுந்த மரியாதைகள் செய்துவிட்டு “நீர் ஒரு பதிவிரதா ஸ்திரீயிடமிருந்து வருகிறவர். நீர் என்ன எண்ணத்தோடு இங்கு வந்திருக்கிறீர் என்பதும் எனக்குத் தெரியும்' என்று சொல்லிவிட்டு, அவரை ஒரு ஆஸனத்தில் உட்காருவித்தான். அதன் பின்பு தர்மவியாதன் தன் வேலையைப் பார்க்கப் புகுந்தான். பிராம்மணன் இந்த பாபத்தொழிலைச் செய்யும் வியாதனுக்கு இந்த ஞான திருஷ்டி எவ்வாறு வந்ததென்று வியந்துகொண்டிருந்தான்.
வினா 101.- பின்பு தர்மவியாதன் எவ்வாறு என்ன விஷயங்களைக் கெளசிகனுக்கு உபதேசித்தான்?
விடை.- தன் வேலை முடிந்த பின்னர் பிராம்மணரை தன் விட்டிற்கு அழைத்துப் போய் கெளசிகனுக்கு, ஸ்வதர்மா சரண ரகஸியம், தர்மம் ஸ்வரூபம் அதிஸூக்ஷமம், ஆகையால் தர்மா தர்ம விவேகம் வருதல் மிகக் கஷ்டம், மாம்ஸ பக்ஷணத்தின் உண்மையான நிலை, கர்மம், மறுபிறப்பு, தேவாஸுரஸம்பத், மனோ நிரோதம், திரிகுண ஸ்வரூபம் ஆகிய அரிய விஷயங்களை எடுத்துச் சொன்னான். இதன் பின்பு தனது குலதர்மமாகிய கசாப்புத் தொழிலை ஸரியாய்ப்பார்ப்பதும், தனது தாய் தந்தையரைப் பேணலுமே தான் செய்யும் தபஸ். இதனால் தான் பதிவிரதை சொன்னதை அறியும்படியான சக்தி தனக்கு வந்தது என்று வியாதன் சொல்லி தனது கிழவரான தாய்தந்தையரைக் கெளசிகனுக்குக் காட்டினான். இந்த உபதேசத்திற்கே ஆரண்ய பர்வத்தில் வியாதகீதை என்றுபெயர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக