ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இராமாயண தருமம்


IMG_0001ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள சிந்தாமணி கிராம கர்ணமாக இருந்தவர் ஸ்ரீ எஸ்.கே. ரங்கஸ்வாமி அய்யங்கார். (அதாவது இன்றைய VAO) . இவர் எழுதி 1934ல் வெளியான நூல் இராமாயண தருமம். இராமாயணத்திலே மிக ஆழங்கால்பட்டுத் தான் அனுபவித்தவற்றை இப்படி ஒரு அருமையான நூலாக்கியிருக்கிறார். இந்நூலை ஸ்ரீஹயக்ரீவ சேவக ஆசிரியர் மிகுந்த ஆசையுடன் தன் பத்திரிகையில் தொடராக வெளியிட ஆரம்பித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்போது பல மாதங்களாக அந்த இதழ் வெளிவராத சூழ்நிலையில் இங்கே தொடராக பதிவு செய்ய ஆரம்பிக்கிறேன்.
சில முன்னுரைகள் படங்களாக
IMG_0001IMG_0002IMG_0003IMG_0004IMG_0005IMG_0006IMG_0007IMG_0008IMG_0009IMG_0010IMG_0011

இராமாயண தருமம்.
ராமாயணம் என்ற சொல் வடமொழி.
ராமஸ்ய அயனம் எனப்பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து, சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேத: ஸ்ம்ருதி: ஸதாசார: ஸ்வஸ்யச ப்ரியமாத்மான:
ஏதத் சதுர்விதம் ப்ராஹு: ஸாக்ஷாத் தர்மஸ்ய லக்ஷணம் என தருமத்திற்கு நான்கு ப்ரமாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அதாவது, ஒரு விஷயம், தருமமென நிச்சயிப்பதற்கு அது (1) வேதோக்தமாக இருக்கவேண்டும் அல்லது (2) ஸ்ம்ருதியிலாவது கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லது (3) அது ஸத்புருஷர்களால் அனுஷ்டிக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.  அல்லது (4) அது மனதிற்கு இனிப்பாகவும், ஆனந்தகரமாகவும் இருக்கவேண்டும்.
இந்த நான்கு ப்ரமாணங்களுக்கு ஸ்ரீராமாயணம் பொருத்தமாக இருக்கிறதோ என்னில்,
முதலாவது :-- வேதம்
வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே
மறைகளுக் கிறுதியாவார்.       (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
   அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
    இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும், நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
    இந்த இரண்டு ஆதாரங்களினால், முதலாவது பிரமாணமாகிய வேதத்திற்குப் பொருத்தமாகிறது.
இரண்டாவது:-- ஸ்ம்ருதி
தர்ம சாஸ்த்ர ரதாரூடா வேதகட்கதரா த்விஜா: |
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயு: ஸதர்ம: பரமஸ்ம்ருத:|| (போதாயனாச்சார்)


    வேதத்தை நன்கு அப்யசித்தவர்கள் ஸத்புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச் சொல்லப் பட்டனவை களே ஸ்ம்ருதிகளாம்.
ஸ்ரீராமாயணம் (2வது சருக்கம்)
மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

    (இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர். நீர் செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம் வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டதினால், இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

மூன்றாவது :-- ஸதாசாரம் = (ஸத்புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)

    பாலகாண்டம் முதலாவது சருக்கத்தில் 2 முதல் 4 சுலோகங்களால் வான்மீக முனிவர் நாரத மகரிஷியை நோக்கி, “சுவாமி! இவ்வுலகத்தில், இக்காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசீல்ய குணமும் மற்றும் அனேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத்புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன். அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்யவேண்டும்” என்று வினாவினபோது நாரதமகரிஷி மிகுந்த களிப்புடன் ‘ஓய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்”

இக்ஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோநாம ஜநை:ச்ருத:|
இக்ஷ்வாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமபிரான் என்பவர்தான் என விடையளித்திருக்கிறார். இதனால் ஸ்ரீராமபிரான் ஸத்புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதாசாரம் என்றும் ஏற்படுவதால் மூன்றாவது ப்ரமாணமும் பொருத்தமாகிறது.
நான்காவது:—ஆத்ம ஸந்துஷ்டி
பாட்யே கேயேச மதுரம்
ஹலாதயத் ஸர்வகாத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச | (ராமாயணம்)
    இந்த இராமாயணம் மனதிற்கும் இருதயத்திற்கும் மிக்க களிப்பாக இருக்கின்றது என இராமாயணம் 4-வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
    இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தியாகின்றது.
இனி ஸ்ரீராமாயணத்தில் தருமங்கள் வருணிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்குரிய ஆதாரங்களைக் கவனிப்போம்.  
(தொடரும்)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக