அங்கம் 5 களம் 4
நான்காம் களம்.
---------XXX-------
இடம்: நந்திக்கிராமத்துக்குச் செல்லும் வழி
காலம்; பிற்பகல்.
பாத்திரங்கள்: பரதர், சத்ருக்நர், சுமந்திரர், வசிஷ்டர் முதலியோர்
(பரதர் இராமரது திருப்பாதுகைகளைச் சிரத்தில் வைத்துக்கொண்டு வருகிறார்.)
பரதர்; (வசிஷ்டரை நோக்கி,) சுவாமீ! அயோத்தியிற் போயிருக்க எனக்கு விருப்பமில்லை. என் அண்ணா இல்லாத அயோத்தி, அயோத்தியாக எனக்குத் தோற்றவில்லை. ஆதலால், நான் அதையடுத்த நந்திக்கிராமத்தில், தக்கதோரிடத்தில் தங்கச் சிம்மாதனம் அமைத்து, அதன்மீது என் அண்ணனுடைய ஸ்ரீபாதுகைகளை வைத்து, அவைகட்குப் பட்டாபிஷேகம் செய்வேன். அப்பால் நான் இராஜாங்க விஷயமாகப் புரியும் ஒவ்வொரு காரியங்களையும் அவைகட்கு விண்ணப்பித்து இராஜ்ய பரிபாலனம் செய்யக் கருதியுள்ளேன்.
வசிஷ்டர்:-- பரதா, உனது பக்தியை நான் என்னென்று சொல்லுவேன்! பிதுர்பக்தியில் உனது தமையனும், சகோதர பக்தியில் நீயுமே இவ்வுலகிற் சிறந்தவரானீர்கள். உங்களுக்கு வாய்த்த தந்தையைப்போல் வேறொரு தந்தையையும், உங்களைப்போல வேறு சகோதரர்களையும் காண்பதரிது. இக்ஷ்வாகு குலத்தின் கீர்த்தியைப் புதுப்பிக்கவென்றே நீங்கள் உதித்துள்ளீர்கள். அன்பின் இலக்ஷணத்தை உலகிற்குப் போதிக்கவந்த குருமூர்த்திகளாயினீர்கள். உங்களுக்கு சர்வாபீஷ்ட சித்திகளும் உண்டாகட்டும். நல்லது, உன் விருப்பப்படியே செய். அயோத்தியில் சுமந்திரர் இருந்து உனது ஆணைப்படி விவகாரங்கள் அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கட்டும்.
பரதர்:-- கிருதார்த்தனானேன். (சுமந்திரரை நோக்கி,) மந்திரீ! நல்ல சுப முகூர்த்தத்தில் பாதுகா பட்டாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆதலால், நீர் அயோத்தி சென்று, பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய சாமக்கிரியைகள் யாவும் சேகரித்து வாரும்.
சுமந்திரர்:-- அப்படியே
பரதர்:-- (வசிஷ்டரை நோக்கி,)சுவாமீ, சுபமுகூர்த்தம் ஒன்று பார்த்துச் சொல்ல வேண்டுகிறேன்.
வசிஷ்டர்:-- பரதா, முன் வைத்த அந்தப் புஷ்ய நக்ஷத்திரமே நல்லது. ஏதோ விதிவசத்தால் அது தவறியதே ஒழிய வேறன்று. அந்நக்ஷத்திரம் மிகவும் சுபகரமானதே.
சத்ருக்நர்:-- சுபநக்ஷத்திரமென்பதில் யாது தடை? திருமுடி யபிஷேகத்திற்குக் குறித்த அந்நக்ஷத்திரத்தின் பயனாகத்தானே திருவடியபிஷேகம் சித்தித்தது! ஸ்ரீபாத பூசையே அடியார் வேண்டுவது. ஆதலால்தான் அடியேங்களுக்கு அப்பாக்கியம் எய்துவதாயிற்று. இதனினும் அந்த நக்ஷத்திரம் விளைக்கும் சுபகாரியம் வேறென்ன?
பரதர்:-- தம்பீ! நன்று சொன்னாய். நன்று சொன்னாய்.
[யாவரும் போகின்றனர்.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக