கோதா ஸ்துதி
சுலோகம் 16
பாசுரம் 16
த்வந்மௌளிதாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்தகல்பித ஸபீதிரஸ ப்ரமோதா|
மஞ்ஜுஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்களதூர்யகோஷம் || .16.
மாலாகி மாலணிதல் வண்கோதாய் வண்டினங்கள்
மாலா முனது குழல்வளைந்த -- மாலையெனச்
சீர்த்தவிசை செய்தல் திருவேநின் மன்றலிசை
வாத்தியத்தி னன்முழக்க மாம். .16.
பதவுரை
விபோ -- விச்வப்ரபுவினுடைய; ஶிரஸா -- சிரஸினால்; த்வந்மௌளிதாமநி -- உன் சிரஸை அலங்கரித்த மாலை; க்ருஹீதே -- க்ரஹிக்கப்பட்டபோது; ஸ்வச்சந்த -- தங்கள் ஸ்வேச்சையாக (இஷ்டப்படிக்கெல்லாம்); கல்பித -- செய்த; ஸபீதரஸ -- ஸஹபான ரஸத்தால்; (எல்லாம் கூடித் தேனைப் பானம் செய்து); ப்ரமோதா: -- அதிக சந்தோஷத்தோடு கூடியனவாக; மஞ்ஜுஸ்வநா: -- இனிய சப்தத்தோடே; மதுலிஹ: -- தேனை ஆஸ்வாதிக்கும் வண்டுகள்; ஸ்வயம் -- தாமாகவே (வேறு ஒருவரும் சொல்லாமல்); ஸ்வாயம்வரம் -- ஸ்வயம்வரமான விவாஹ ப்ரகரணத்திற்குத் தக்கபடி; கமபி -- வர்ணனத்திற்கு அடங்காத மாதுர்யத்தை உடைய ஓர் விசித்ரமான; மங்களதூர்ய கோஷம் -- மங்கள வாத்ய சேவையை; வித்து: -- செய்தன (விதித்துக் கொண்டன)
நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதிக்ரஹிக்கப்படபோது, தேன் வண்டுகள் தங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் வேண்டியமட்டும் ஸஹபானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்களவாத்ய கோஷம் செய்தன.
அவதாரிகை
(1) அனந்தநாதரைப்போல வண்டுக்கூட்டங்கள் தங்கள் சரீரத்தாலேயே குடையாயின. கருடனைப் போலே விசிறியுமாயின என்றார் 14ல். வைஜயந்தியை வண்டுகள் விட்டதைப் பேசினதை உபபாதிக்க முன் சுலோகம் வந்தது. அது முடிந்ததும், மறுபடியும் வண்டுகள் ஆனந்தப்பட்டு ஸ்வயம் செய்யும் வாத்யகோஷ கைங்கர்யத்தை ஸாதிக்கிறார்.
(2) ஸ்வயம்வரத்தில் மங்களவாத்ய கைங்கர்யமும் ஸ்வயமாக வண்டுகளால் வரிக்கப் படுகிறது. எல்லாம் இங்கே ஸ்வயமாகும். வண்டுகள் ஸ்வச்சந்தமாகத் தேனை ஸஹபானம் செய்து களிக்கின்றன. ஒருவரும் அவற்றிற்குத் தேனைப் பானம் செய் என்று தேனை எடுத்துக் கொடுக்கவில்லை, பரிமாறவில்லை. தங்கள் இஷ்டமாகத் தாமே மாலையில் பெருகும் தேனைப் பானம் செய்கின்றன. இந்த ஸ்வயம்வரத்தில் சேஷர்களான யாவரும் தங்கள் தங்கள் இஷ்டத்தை ஆஃவயமாகச் செய்யலாம், போகங்களையும் புஜிக்கலாம். ஸ்வக்ருஹே கோ விசாரோஸ்தி அஸ்யாஜ்ஞா ஸம்ப்ரதீக்ஷ்யதே என்றார் ஜனகர் ஸீதா விவாஹத்தில். "ஸ்வக்ருஹத்தில் யாருக்கு என்ன விசாரம் வேண்டும்? யாருடைய ஆஜ்ஞை எதிர்பார்க்கப் படுகிறது? ஏன் ஸ்வயமாக உங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் இந்த உத்ஸவத்தில் ப்ரவ்ருத்திக்கலாகாது " என்று ஜனகர் கேட்டார். இங்கே அப்படிப் பேசவே அவஸரம் நேரிடவில்லை. எல்லாரும் ஸ்வயமாகவே விவாஹ மங்களத்திற்கு வேண்டிய கார்யங்களைச் செய்கின்றனர். விவாஹத்திற்கு மருஷ்டாந்ந பானாதிகள் அங்கமாகையால் விவாஹபூர்த்திக்காக அதையும் செய்கின்றன. 'விதது' என்பதால் வாத்யகோஷம் செய்ய ஒன்றையொன்று விதித்தன, கட்டளையிட்டன என்றும் கொள்ளலாம். விதியின் பயன் பிறர்க்கு. பரஸ்மை பதப்ரயோகம்.
த்வந்மௌளிதாமநி -- நீ உன் கூந்தலில் சூடிய மாலையானது உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலை.
விபோ:ஶிரஸா -- ப்ரபுவின் சிரஸால். உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலையைத் தம் உத்தமாங்கத்தில் தரிப்பதுதானே இந்த உத்தம ப்ரபுவின் லக்ஷணம்!
ஶிரஸா க்ருஹீதே -- "ஶிரஸா ப்ரதிக்ருஹ்ணாதி வைஸ்வயம்" என்ற வசன க்ரமத்தை இவர் விடாத ப்ரபுவே. எவர் செய்யும் பூஜையையும் இப்படி சிரஸால் க்ரஹிப்பவர். கோதை சூடிய மாலையை இப்படி க்ரஹிக்காமலிருப்பாரோ? தம் ஸ்வச்சந்தமான ஸ்மிருதி வசனப்படி, ஸ்வயமே சிரஸா க்ரஹித்தார். தம்மையே விதித்துக் கொண்டார். இந்த ஸ்வயம்வரத்திலே பெருமாளுடைய சிரஸால் க்ரஹணமும் ஸ்வயம். பெருமாளை ஒருவரும் ப்ரார்த்திக்கவில்லை, விதிக்கவில்லை. அவர் ஸ்வச்சந்தமாக அப்படிச் செய்தார். ராகத்தால் செய்தார். ஸ்வச்சந்த விதானம். மாலையை சிரஸால் க்ரஹித்தபொழுதே "யஸ்யச பாவே பாவ லக்ஷணம்" பாவத்தை இரட்டிக்கும் பாணினி ஸூத்ரமும் இந்த பாவப்ரகரணத்தில் பாவத்தோடு சேருகிறது.
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸப்ரமோதா: -- பல்லாயிரம் வண்டுகளாக சிரோமாலையில் பெருகும் தேனை ரீங்காரம் பண்ணிக்கொண்டு ஸஹபானம் செயெயும்போது தடுப்பாரில்லை, ஓட்டுவாரில்லை. கூட்டங்களான வ்யக்திகளுக்கு ஒரே காலத்தில் அன்னம் இட்டு அவர்கள் புஜிப்பார்கள். பானகாதிகளைக் கூடிப் பானம் செய்வர். இவை ஸ்வச்சந்தமாய்த் தலைமேலேறி அங்கே ஒரேகூட்டமாய்ப் பானம் செய்கின்றன. குமார ஸம்பவத்தில் தன் பேடையான பெண்வண்டை அநுவர்த்திக்கொண்டு ஆண்வண்டு ஒரே குஸும பாத்ரத்தில் ஸஹபானம் செய்தது என்று காளிதாஸர் வர்ணித்தார். அங்கே பரச்சந்தானுவர்த்தன மென்னும் தாக்ஷிண்யம் காட்டப் பட்டது. இங்கே எல்லா வண்டுகளும் ஏககாலத்தில் ஸஹபானம் செய்தன. பானத்தில் ராகமுடையவர் பலபேர்கூடி ஸஹபானத்தை மிகவிரும்புவர். இங்கே இப்படிப் பல்லாயிரம் வண்டுகளும் வாத்தியம் ஸேவிக்கின்றன. வாத்யக்காரர் எல்லோரும் கூடிச் சேர்ந்து விவாஹ ஸமயத்தில் அன்னபானங்களில் அந்வயிப்பர்.
மஞ்ஜுஸ்வநா: -- பானம் பண்ணின தேனிலும் இனிமையான சப்தத்தோடு தேன் சாப்பிட்ட வாயிலிருந்து சப்தம் தேனாகவே வருகிறது. ராகத்திற்கு எல்லையில்லை, தித்திப்புக்கும் எல்லையில்லை.
விதது: ஸ்வயம் -- ஸ்வயமாகச் செய்தன. ஒருவர் ஆஜ்ஞையால் விதிக்கப்பட்டுச் செய்யவில்லை. ஆஜ்ஞா கைங்கர்யமல்ல, விதிக்கப் பட்டதல்ல. அநுக்ஞா கைங்கர்யம். ராகத்தால் ஸ்வயம் செய்தன. 'ஸ்வயம் விதானம் செய்தன' என்பதில் ரஸமுண்டு. பிறர் விதித்துயவில்லை. தாங்களே ஸ்வயம்விதானம் செய்துகொண்டன. எப்படித் தங்கள் ஸ்வச்சந்தத்தால் ஸ்வேச்சையால் தேனைப் பானம் செய்தனவோ, அப்படியே ஸ்வேச்சையால் இக்கைங்கர்யத்தையும் மிக்க களிப்போடு செய்தன. "களம விரளம் ரஜ்யத் கண்டா: க்வணந்து சகுந்தய" "அவ்யக்த மதுரமாக ஓயாமல ராகம் நிரம்பின கண்டத்தோடு பெண் பக்ஷிகள் சப்திக்கட்டுமே. தேவன் ராமன் ஸ்வயமாக இந்தப் பஞ்சவடிக்கு மறுபடியும் எழுந்தருளியிருக்கிறார்" என்று கோதாவரீதேவி விதித்தாள். அப்படி இங்கு விதிக்க அவஸரமில்லை, ஸ்வயம் ராகமிருப்பதால்.
தே -- உன் வண்டுகள். அந்த வண்டுகள். 14வது ச்லோகத்தில் குடையான வண்டுகள். உன் ஸ்வயம்வர ஸம்பந்தமாக
ஸ்வயம்வரம் -- நீ எப்படி நிரவதிகமான ராகத்தோடு உன் மணாளரை வரித்தாயோ, அப்படியே வண்டுகளும் இந்த மங்களவாத்ய ஸேவையை வரித்தன.
மங்களதூர்ய கோஷம் -- மாலை சிரஸால் க்ரஹிக்கப்படும் க்ஷணத்தில் இப்படி வாத்யகோஷம் செய்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக