தசரதன் புலம்பல் தொடர்கிறது
அங்கம் 1
களம் 4
தசரதர்:- அடி இரக்கமற்றவளே! களம் 4
வாய்தந் தேனென் றேனினி யானோ வதுமாற்றேன்
நோய்தந் தென்னை நோவன செய்து நுவலாதே
தாய்தந் தென்னத் தன்னையி ரந்தாற் றழல்வெங்கட்
பேய்தந் தீயு நீயிது தந்தாற் பிழையாமோ?
உனக்கு வாக்குக் கொடுத்ததுண்மை, அதை மறுக்கவில்லை. வீணாய் என் மனம் நோவத்தக்க மொழிகளைக் கூறி என் மனத்தைப் புண்படுத்தாதே. ‘தாயே, தந்தையே’ என்று கெஞ்சினால் கொடிய பேயுமிரங்குமே! என் வேண்டுகோளுக்கு நீ சிறிது இரங்கலாகாதா? இராமன்மேல் ஏன் உனக்கிந்த விரோதம்? அவன் உனக்குச் செய்ததென்ன அபராதம்? ஏனடி தேடிக்கொள்ளு கிறாய் வீண் அபவாதம்? அடி கைகேயி! சற்றே மனமிரங்கு. நான் உனக்கு இரண்டு வரங்கள் கொடுத்தேனல்லவா? நீ எனக்கு ஒரே ஒரு வரம் கொடு.
கைகேயி:- வெகு நன்றாயிருக்கிறதே! இரண்டு வரங்கள் கொடுத்தீர்கள் என்பது உண்மை. அவை இன்னும் நிறைவேறவில்லை. அதற்குள் என்னிடம் ஒரு வரங்கேட்டுக் கொடுத்த வரங்களை மாற்றி விடவா? இப்படி ஏய்க்கும் வித்தைகளை எப்பொழுது கற்றீர்கள்? தாங்களே வரங்களைக் கொடுத்து விட்டீர்கள். இனி அவைகளைத் தாங்களே மாற்றுவதென்றால் அப்புறம் சத்தியம் யாரிடம் நிலை பெறும்?
தசரதர்:- அடி கருணையற்றவளே! பாவம் நிறைந்தவளே! பழிக்கஞ்சாதவளே! அற்பமதி படைத்தவளே!
நின்மக னாள்வான் நீயினி தாள்வாய் நிலமெல்லாம்உன்வய மாமே யாளுதி தந்தேன் உரைகுன்றேன்
என்மக னென்கண் ணென்னுயி ரெல்லா வுயிர்கட்கும்
நன்மக னிந்த நாடிற வாமை நயவாயோ?
இந்த இராச்சியத்தை உன் மகனே ஆளட்டும். நீயே சர்வாதிகாரமும் செலுத்தடி. உலகமெல்லாம் உன்வசமே இருக்கட்டும். நீயே ஆண்டனுபவி. இப்பொழுதே கொடுத்து விடுகிறேன். தடையில்லை. நீ எனக்கு ஒரே ஒரு உபகாரம் செய். என் காதற்குமாரன், என் கண்ணேயனையன், என் உயிரினும் மேலோன், எல்லோர்க்கும் இனியன், இளைஞன் இராமன் இந்நாட்டைவிட்டுக் காட்டுக்கேகாத வண்ணம் செய். இந்த ஒரு உபகாரம் செய்தாலுன்னை என்றும் மறவேன். சற்றே மனமிரங்கடி கண்ணே! இராமன் பிறந்த அருமையும் வளர்ந்த பெருமையும் உனக்குத் தெரியாதா? அவன் தேரின்மீதும் யானையின் மீதும் குதிரையின் மீதும் செல்வதுபோக மெல்லிய திருவடி தரையிற்பட நடந்து காட்டில் எவ்வாறு செல்வான்? பரிசாரகர்கள் விதவிதமாய்ப் பாகம் செய்ய, இனிய உணவையே உண்டு பழகிய அவன், கார்ப்பும் கைப்புமான காட்டுக் கனிகளையும் கிழங்குகளையும் எவ்வாறு புசிப்பான்? விலையுயர்ந்த ஆடைகளை உடுத்துச் சுகமான பஞ்சணையில் துயின்ற அவன், மரவுரி உடுத்துக் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுத்தரையில் எவ்வாறு படுப்பான்? கைகேயி!
மெய்யே யென்றன் வேரற நூறும் வினைநோக்கிநையா நின்றே னாவுமு லர்ந்தே னளினம்போல்
கையா னின்றென் கண்ணெதிர் நின்றுங் கழிவானேல்
உய்யே னங்கா யுன்னப யம்மென் னுயிர்சொன்னேன்
என்குலம் வேரற்றுப் போய்விடுமே யென்றெண்ணி யெண்ணி என் மனம் புண்ணாகிறதே! ஏ, பெண்ணரசி! என் நாவுலருகிறது! மொழி குழறுகிறது! ஆவி அயர்கிறது! என் செல்வன், நளின நேத்திரன், பங்கய வதனன், கமலக் கண்ணன், தாமரைத்தாளன், உருவுற்ற காமன், மருவற்ற இராமன், என் கண்ணுக்கெதிரே காட்டிற்குச் செல்வானேல் நான் உயிர் வைத்திரேன். ஏ, சுந்தரவதனீ! தந்திரவசனீ! நான் உன்னபயம். என் உயிரைக் காப்பாற்றுவது உன் கடன், சொல்லிவிட்டேன். உன் மதுரவாக்கால் இராமன் வனம் போகா வரமொன்று கொடுத்தென்னைக் காத்தருள்.
கைகேயி:- ஏன் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம்? இராமன் காட்டுக்குச் செல்வதால் என்ன கெடுதல்? முன்னம் விசுவாமித்திரருடன் அவனைக் காட்டுக்கனுப்பினீர்களே, அப்பொழுது அவன் என்ன கெட்டுவிட்டான்? எவ்வளவோ கீர்த்தியை அடையவில்லையா? அப்பொழுதும் இவ்விதந்தானே ஏதோ உலகம் முழுகிப் போய்விட்டதுபோலப் பரிதவித்தீர்கள். வசிஷ்டர் நியாயங்களை எடுத்துக் கூறிய பிறகல்லவா உங்களுக்குச் சமாதானப் பட்டது! இப்பொழுதும் நான் கூறுவதற்குப் பதிலாக வசிஷ்டராவது வேறு யாராவது கூறினாலனுப்பி விடுவீர்கள். நான் கூறியதாலல்லவா ‘இவள் வார்த்தையைப் பெரிதாய் மதித்து இராமனைக் காட்டுக்கனுப்புவதா’ என்று எண்ணிக் கலக்கமுறுவதாக நடிக்கின்றீர்கள்? அந்த நடிப்பெல்லாம் வேண்டாம்.
தசரதர்:- அடி பாவீ! மனைவியென்று வந்த மறலி! இராஜ ஸ்திரீயென்று உருவெடுத்து வந்த கொடுமையே! விஷங்கலந்த பானத்தை நல்ல பானம் என்று எண்ணிப் பருகியவன்போல், அழகுள்ள உன்னை நல்லவள் என்று எண்ணி மோசம் போனேனே! மதிகெட்டு உன்னை மனைவியென்று மணஞ் செய்தேனே! காதுக்கினிதாய்க் குழலூதி வேடர்கள் மானைக் கொல்வதுபோல, மதுரமொழிகளால் என்னை மயக்கிக் கொன்றாயே! அடி வஞ்சகி! அறியாமையால் உன்னை நான் காப்பாற்றியது என் கழுத்திற் சுருக்கிட்டுக்கொள்ள ஒரு கயிற்றை முடிபோட்டு வைத்திருந்தது போலாயிற்றே! ஐயோ! என்ன துக்கம்! என்ன கஷ்டம்! என்னாற் பொறுக்கமுடியவில்லையே! உலக நிந்தனைக்காளாகவோ நான் பிறந்தேன்! ஒரு பெண்ணின் உரைகொண்டு உயிர்களுக்குக் கண்ணினும் மேலான மைந்தனை வனம்போக்கும் என்னைப்போல் மூடனுமுண்டோ! ‘அரசனாகிய தசரதன் கிழவனாயிருந்தாலும் பெண்புத்தி கேட்பவன்; பெரிய மூடன்; தனது மனைவியின் மனத்தைச் சந்தோஷப்படுத்தி வைக்கும்பொருட்டுத் தன் அருமைக் குமாரனைக் காட்டிற்கு அனுப்பி விட்டான்’ என்று ஊரார் என்ன நிந்திக்கப் போகின்றார்கள்.
என் கண்மணி இராமன், விரதத்தாலும், பிரமசர்யத்தாலும், குருசேவை யாலும் இத்தனை நாளாக எவ்வளவோ சிரமப்பட்டுக் கடைசியிற் சுகப்படுங் காலத்தில் மீண்டுங் கஷ்டப்படப் போகின்றானே! ஐயோ! என் அருமை மைந்தன், ‘நீ காட்டிற்குப் போ’ என்று நான் சொன்னமாத்திரத்தில் எதிர் வார்த்தை சொல்லாமல் ‘நல்லது, கட்டளைப்படி செய்வேன்’ என்று உடனே புறப்பட்டுப் போய்விடுவானே. அவன் என் உண்மைக் கருத்தின்னதென அறியானே. என் சொல்லைத்தட்டி, ‘நான் காட்டிற்குப் போகமாட்டேன்’ என்று எனது இராமன் மறுத்துச் சொல்வானாயின், அது எனது மனத்திற்குச் சந்தோஷமாயிருக்குமே. அவன் அப்படிச் சொல்லானே! இனி அரைக் கணமும் இங்கு நில்லானே! அவன் காட்டிற்குச் சென்றபிறகு எல்லாருடைய நிந்தையும், என் மனச்சாட்சியும் என்னை எமபுரத்துக்கு அனுப்புமே!
ஏவம் பாரா யினைமுறை நோக்கா யறமெண்ணாய்ஆவென் பாயோ வல்லைம னத்தா லருள்கொன்றாய்
நாவம் பாலென் னாருயி ருண்டா யினிஞாலம்
பாவம் பாரா தின்னுயிர் கொள்ளப் படுகின்றாய்
எனக்குப் பத்தினியாய் வந்த பாதகி! கேகயன் மகளாய் வந்த காதகி! நான்படும் துன்பத்தையும் நோக்காய்! நான் உன் கணவன் என்பதையும் நினைக்கின்றாயில்லை. தரும நெறியையும் சிந்திக்கின்றாயில்லை. இரக்கமுமில்லாதிருக்கின்றாய். ஏ, வஞ்சகி! அருளையுங் கொன்றாய்! அம்பனைய உன் நாவால் என் ஆருயிருண்டாய்! இடந்தெரியாமல் உன்னிடம் அபிமானம் வைத்ததற்காக நான் இப்போது வருந்துகிறேன். என்னிடத்தில் பக்தியும், தன் குமாரனிடத்தில் அன்பும், எல்லாரிடத்தும் ஆதரவும் உடையவளாயிருக்கும் அந்தப் பதிவிரதா சிரோமணி கோசலைக்கு உன்னால் அபராதியானேனே! ‘இராமனுக்கு இராச்சியமில்லை, அவன் காட்டுக்குப் போய்விடுவான்’ என்று கேள்விப் பட்டதும் சுமித்திரை நடுங்கி விடுவாளே! நாயகா! என்று என்னைக் கூப்பிடுவதற்கும் அவள் நாக்கூசுமே. அந்தோ! பேதையான சீதை இரண்டு துக்கங்களைக் கேட்கப் போகிறாள். அவை யாவை யென்றால், இராமன் காட்டிற்குப் போகலும், என் உயிர் உடம்பை விட்டு ஏகலுமாம். ஆ! அப்பொழுது அவள் என்ன பாடுபடுவாள்! ஓ, குழந்தாய், சீதா! உன் அன்பனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கேள்வியுற்றதும் நீ எவ்வாறு துடிப்பாயோ, என்ன நினைப்பாயோ, எங்ஙனம் பதைப்பாயோ, மனம் பொறுப்பாயோ, உயிர் துறப்பாயோ!
ஏ இராமச்சந்திரா! நான் தந்தையானது உனக்கோ, உன் துன்பத்துக்கோ! ‘ஆதிசேடனைப்போல் அறிவும், காமனைப்போல் அழகும், ஆண் சிங்கம்போல் ஆண்மையும், மதயானை போல் நடையும், மார்த்தாண்டன் போல் வாய்மையும், கற்பக விருக்ஷம்போல் கொடையு முடையவனே! பொறுமை, அன்பு, ஆசாரம், ஒழுக்கம், ஊக்கம், சாந்தம், சற்சனநேயம் முதலான நற்குணங்களுக்கு இருப்பிடமே! உயிர்க்கு முடிவு நேரிடுமாயினும் உண்மையே கூறுவதும், உறுதியே சொல்லுவதும், இன்சொல்லே பேசுவதும், இதமே செய்வதும், பயனுள்ள காரியங்களையே பாராட்டுவதுமாகிய நற்செய்கைகளை உடையவனே! மாதா பிதாக்களது மனக்குறிப்பறிந்து, அவரிச்சையின் வழிநடந்து மகிழும்படி செய்வையே! இளமைப் பருவத்திற் றானே எல்லாமறிந்தவனென்று கண்டோர் கொண்டாடவும், கேட்டோர் மனங்களிக்கவும் இளவரசனாயிருக்கும் உனக்குத் தீங்கிழைக்கவோ நான் உனக்குத் தந்தையானேன்! பதிவிரதா சிரோமணிகளாகிய இரு மனைவியர் மனங் கலங்கவும், உரிமை மகன் அரசிழந்து ஆரண்யஞ் செல்லவும், அருமை மருகி ஆவி சோரவும், மன்பதைகள் துன்பமுறவும், அசுரரை வென்று அமரர்க்கரசளித்து அறுபதி னாயிரமாண்டு அறம் வழுவாது அரசு செலுத்திய ஒரு மன்னன் மாளவும் நேர்வது ஒரு பெண்ணாலல்லவா? ஆ, பெண்கள் கெட்டார்கள்! வெகு துஷ்ட குணம் உள்ளவர்கள்! தமது காரியத்தையே விரும்புகிறவர்கள்! ஐயோ! எல்லாப் பெண்களையும் நான் ஏன் வீணாக நிந்திக்க வேண்டும்? பரதனுடைய தாயாகிய இவள் குணமே இப்படி இருக்கின்றது. பெண் என்று பிறந்தால் எல்லோரும் பெண்களாய் விடுவார்களோ?
ஏண்பா லோவா நாண்மட மச்ச மிவையேதம்பூண்பா லாகக் காண்பவர் நல்லார் புகழ்பேணி
நாண்பா லோரா நங்கையர் தம்பா னணுகாரே
ஆண்பா லாரே பெண்பா லாரோ டடைவம்மா.
நங்கையர்க்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நான்குமே தமக்கு ஆபரணமாகக் கொண்டவர்களே பெண்களெனப் படுவார். அவர்கள் பெருமை அளவிடற்கரியது. அவர்களுக்குத் தங்கணவரே தெய்வம். பிறருக்கு அக்கற்புடைய மகளிரினும் பொற்புடைய தெய்வம் வேறு வேண்டுவதில்லை. அவர்கள் மழை பெய்யென்றாற் பெய்யும். அவர்கள் சொல்வது நன்றாயினும் தீதாயினும் தப்பாமற் பலிக்கும்.அத்தகைய பெண்களே வீட்டிற் கணிகலம் போல்பவர்கள். அவர்கள் இல்லாத மனை, நற்சிந்தையில்லாத நெஞ்சும், கிருபையில்லாத கண்ணும், பயனில்லாத சொல்லும், மணமில்லாத மலரும் போன்றமாகும். இந்த நற்குணங்களில்லாத பெண்கள் பெண்களாகார். ஆண்மக்களே யாவர். ஆண் மக்களினும் கீழ் மக்களாவார். ஏ, கைகேயி! அந்தக் கீழ் மக்களுக்கெல்லாம் கீழாகிய நீ எனக்கு மனைவி யென்று எங்கிருந்து வந்தாய்? எனக்குத் தீமை செய்யும் சத்துருவாகி, என்னைக் கொல்லும்பொருட்டே யமன்போல நீ என்னுடன் வீட்டில் வசித்து வந்தனை. கொடிய விஷமுள்ள சர்ப்பத்தை வளர்ப்பதுபோல நானும் இத்தனை நாள் உன்னை வளர்த்து வந்தேனென்பதில் சந்தேகமில்லை. அடி நீலி!
ஒன்றா நின்ற வாருயி ரோடு முயிர்கேள்வர்பொன்றா முன்னம் பொன்றின ரென்னும் புகழல்லால்
இன்றோர் காறு மெல்வளை யார்தம் மிறையோரைக்
கொன்றா ரில்லை கல்லுதி யோநீ கொடியோளே?
உலகத்தில் கற்புடைய மாதர் தம் கணவரிறந்து போவதறிந்தால் மனம் பொறாது தம் உயிரைத் துறந்திருக்கின்றனர். கணவனிறந்தால் அவனோடு உடன்கட்டை யேறும் ஸ்திரீகளைக் கண்டிருக்கிறேன். ஆனால் கொண்ட கணவனைக் கொல்லத் துணிந்தவள் நீ ஒருத்திதானடி. புருவமுங் கண்ணு மூக்கும் புலப்பட எழுதிவைத்த தோற்றுருத்தியாகிய உன் உருவத்தில் மயங்கிக் கெட்டேன். நானும் இராமனும் இல்லாமற்போன பிறகு, நீயும் பரதனும், நகரத்தையும் தேசத்தையும் அழித்து அரசாண்டு எனது சத்துருக்களை மகிழச்செய்ய உலகம் ஒப்புமா? ‘நான் உன்னுடைய நாயகன், நீ எனக்கு அடங்க வேண்டிய மனைவி’ என்ற மரியாதை சற்றேனும் இன்றி வெகு கொடிய கருத்துடன்எனது நாசத்திற்கு வழி தேடினையே! அன்பற்றவளே! துயரும் துன்பமும் மூட்டுபவளே! ஏன் உனது பற்கள் வாயினின்றும் உதிரவில்லையோ தெரியவில்லை! இராமன் ஒரு கணத்திலாவது உன்னைக் கடிந்து பேசியது உண்டா?கடிந்து பேசுதல் இன்ன தன்மைத்தென்றாவது அவனுக்குத் தெரியுமா? ஆ! ஆ! குணத்இல் பக்ஷமுள்ளவனும் எப்பொழுதும் யாரிடத்தும் இனிமையாகவே பேசுகிறவனுமான இராமனிடத்தில் ஏனடி இவ்வண்ணமான கெட்ட எண்ணம் கொண்டாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக