மூன்றாம் பாசுரத்தின் தொடர்ச்சி
இப்படித் தமிழ்மரபை யொட்டிப் பாசுரார்த்தம் பெறுவதோடு நிற்காமல் இன்னும் சற்று ஆழ்ந்து பார்த்தால் சில சப்த ஸ்வாரஸ்யங்களால் வேறு ரஸமான அர்த்தங்களும் தோன்றுகின்றன. “அனங்கர்” என்று மரியாதை தோற்ற உபயோகிக்கப்பட்ட சொல் ஸாதாரண மன்மதனைச் சொல்வதோடுகூட “ஸாக்ஷாத் - மந்மத - மந்மத:” என்று சொல்லவல்ல அழகப்பிரானார் தம்மையே குறிக்கிறது எனக் கொள்ளலாம். அவருடைய பூங் கரும்பாவது அழகிய திருப்புருவங்கள். “இன்னுயிர்க்கு ஏழையர்மல் வளையும் இணை நீலவில் கொல்˜ மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல்˜” என்று நம்மாழ்வார் எம்பெருமானுடைய திருப்புருவங்களை சங்கித்தபடி. அப்பூங் கரும்பிலிருந்து விடப்பட்ட பாணங்கள்போல் இருக்கின்றன திருக்கண் மலர்களின் கடாக்ஷங்கள். தேவநாயக பஞ்சாசத்தில் “அம்ருத - வர்ஷ - நிபை: அபாங்கை:” என்று அம்ருதவர்ஷமாக வர்ணிக்கப்பட்ட கடாக்ஷங்கள் இங்கே புஷ்பவர்ஷமாக வர்ணிக்கப் பெறுகின்றன. விரஹ தாபம் தீரும்படி குளிரக் கடாக்ஷிக்கிறான் என்று சொன்னபடி நல்ல வேத வித்துக்களான மஹான்கள் வசிக்கும் அயிந்தைமாநகரில் கோயில் கொண்டவனாயிற்றே என்று எண்ணி ஆசைப்பட்டு மோசம் போனேன் என்றும் இழிவார் இழிக என்று ஆசைப்பட்டவர்களெல்லாம் வாருங்கள் என்று சொன்ன வார்த்தையை நம்பி இந்நிலை வந்தது என்றும் விப்ரலம்ப ச்ருங்காரமாக வைத்துப் பொருள் கொள்ளுவதோடு நில்லாமல் ஸத்ஸஹ வாஸத்தாலும் தன் ஸங்கல்பத்தாலும் தன்னை விரும்புவாரைத் தானும் விரும்பிக் குளிரக் கடாக்ஷிக்கிறான் என்று ஸம்ச்லேஷதசா விஷயமாகவும் அர்த்தம் கொள்ளலாம் பெரும்பாலும் நாயிகாபாவம் விச்லேஷ தசையிலேயே கைக்கொள்ளப் படுகிறது. ஸம்ச்லேஷரஸமும் த்வனிக்கும்படியாக விச்லேஷ தசையைப் பேசும் பாசுரம் அழகாக அமைந்திருக்கிறது. அயிந்தைமாநகரிலுள்ள மெய்யடியார்கள் ஸ்ரீதேசிகன் காலத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்பதை “மொழிவார் மொழிவன மும்மறை யாகும்” என்றதிலிருந்து ஒருவாறு ஊஹிக்கலாம். க்ஷேத்திர மஹிமையால் அவர்களுக்கு இப்பெருமை கிடைத்தது என்றும் பொருள் கொள்ளும்படி “மும்மறை ஆகும் அயிந்தை” என்று பிரயோகிக்கப் பட்டிருக்கிறது. இப்படிப் பட்ட மஹான்கள் வஸிப்பதாலேயே எம்பெருமானும் இதை உகந்து இங்கே நித்யவாஸம் பண்ணுகிறான் என்பதும் ஸூசிதம். இப்படி பகவத் ஸாந்நித்யமும் பாகவதஸம்ருத்தியும் மலிந்து கிடந்ததாலேயே ஸ்ரீதேசிகன் நெடுநாள் இங்கே வாஸம் செய்யத் தீர்மானித்திருக்கவேண்டும் என்றும் அறியலாம்.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த க்ஷேத்திரத்தில் வந்தது மட்டுமன்றி எம்பெருமான் இங்கே நிலையாகநின்றான்; அதுவும் ஒரு இன்னமுதக் கடலாக என்று இரண்டாம் பாதத்தில் கூறப்படுகிறது. “கடலொப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்” என்கிறபடி அளவிட வொண்ணாமைக்கும் காம்பீர்யத்துக்கும் கடல்போல் விளங்குகிறார். ஆனால் உப்புக்கடலன்று; அமுதக்கடல்; இன்னமுதக்கடல். இது ஓர் அபூதோபமை.. “அலையற்ற ஆரமுதக்கடல்” என்பதுபோல ஸ்ரீதேவநாதனுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஒரு விலக்ஷணமான அம்ருத ஸாகரம் போல் விளங்குகிறது என்கிறார்.
இழிவார் இழிக --- நிற்கிற நிலையிலிருந்தே அனைவரையும் கூவி அழைத்து உங்களுக்காகவே நான் இங்கே வந்து நிற்பது என்று பேசாமல் பேசினாராயிற்று. “இழிவார்” என்பதால் ஆசைமட்டும் இருக்குமாகில் அனைவருக்கும் இழிய அதிகாரம் உண்டு என்று கிடைக்கிறது..
விழிவார் அருள் மெய்யர் -- திருக்கண்களிலிருந்து வெள்ளமிடும் அருளையுடைய மெய்யர். “இழிவார் இழிக” என்று கூறியதை மெய்யாக்கிக் கொடுக்கும் கண்களைக் கொண்டு அடியவர்க்கு மெய்யராகிறார்.
மெல்லடி வேண்டிய மெல்லியள் -- சரணகமலமாகையால் மெல்லடி மிருதுவான பாதம்; அதை விரும்புவோரும் கூட மெல்லியர் (மிருதுவான தன்மையர்) ஆகிறார்கள் என்று சொல்லும்படி திருவடிகளின் மார்த்தவம் இருக்கிறது. “மெல்லடி வேண்டியபடியால் மெல்லியள் ஆனாள்” என்று ரஸோக்தி. “மெல்லியள்” என்ற ஸ்திரீ லிங்கமான பதமும் கடைசிப்பாதமும் இப்பாசுரம் நாயிகா பாவ விஷயம் என்பதைக் காட்டுகின்றன. பெண்பேச்சிலும் தன் பேச்சு, தாய்ப்பேச்சு, தோழிப்பேச்சு என்று பல வகை யுண்டு. “மெல்லியள்” என்று படர்க்கைச் சொல்லாக இருப்பதால் இது தாய் அல்லது தோழியின் பேச்சாக இருக்க வேண்டும். நாயகி மன்மத பாணத்துக்கு இலக்கானமையைக் கூறுவதால் அந்தரங்கத் தோழியின் பேச்சு என்று சொல்வது பொருந்தும்.
பொழிவார் ---- பூமழையே --- இவள் மென்மை கண்டு இரங்காமல் மன்மதன் தன் அம்பு மழையைப் பொழிகிறான். மன்மதமன்மதன் இவளது மென்மைக்கேற்ப மிருதுவான புஷ்பங்களை எய்கிறான் என்று த்வனி. ஸாதாரண மன்மதன் தன் பாணங்களை எய்து ஒரு தலைவிக்கு ஒரு தலைவனிடத்தில் ஆசையை விளைவிப்பான். மன்மத மன்மதனான இவனோ தன்னிடத்திலேயே ஆசையை உண்டாக்கி அதை விருத்தி செய்கிறான் என்ற வேறுபாடும் காணத் தக்கது. இவ்விதமே இன்னும் பல ரஸமான அர்த்தங்களைப் பொதிந்து கொண்டிருக்கும் இன்னமுதக் கடல் இந்தப் பாசுரம் என்பதை ரஸிகர்கள் அனுபவித்து அறியலாம்.
பாசுரம் 4 தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக