வியாழன், 8 மார்ச், 2012

வைத்தமாநிதி 13

திரிசகடம் சாடியது

நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே,
ஏடுஅலர் கண்ணியினானை,
பொன்போல் மஞ்சனம் ஆட்டி,
கொந்தக்குழலைக் குறந்து புழுகு அட்டி
தந்தத்தின் சீப்பால் குழல் வாரி,
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூச்சூட்டி,
சங்கின் வலம்புரியும், சேவடிக் கிண்கிணியும்,
அங்கைச் சரிவளையும், நாணும், அரைத்தொடரும்,
அழகிய ஐம்படையும், ஓதக் கடலின்ஒளி முத்தின் ஆரமும்,
கான்ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்,
வான்ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்,
கச்சொடு பொற்சுரிகை, காம்பு கனகவளை,
உச்சி மணிச்சுட்டி, இணைக்காலில் வெள்ளித்தளை,
ஒண்தாள் நிரைப் பொற்பூவும்,
மெய்திமிரும் நாணப்பொடியோடு மஞ்சளும்,
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும், சிந்தூரமும்,
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
அணிவித்து, அமுது ஊட்டி,
மாணிக்கம் கட்டி, வயிரம் இடை கட்டி,
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்,
பேணி வஞ்சனையால் வந்த
பேய்ச்சி முலை உண்ட அஞ்சன வண்ணனை
ஆய்ச்சி வளர்த்தி,
”தாமரைக் கண்ணனே ! தாலேலோ!
சுந்தரத்தோளனே! தாலேலோ!
தூமணி வண்ணனே! தாலேலோ!
அழேல்! அழேல்! தாலேலோ!
அரவுஅணைத் துயில்வாய் தாலேலோ!”
என்று செஞ்சொல்லால் தாலாட்டி,

தடக்கையன் கண் துயில் கொள்ளக் கருதி கொட்டாவி கொள்ள,
மாதர்க்கு உயர்ந்த யசோதை யமுனை நீராடப்போக,
சேடன், திருமறுமார்பன்
கள்ளக் குழவியாய் தாளை நிமிர்த்து திருவடியால்,
முன் நண்ணாத வலிமிக்க கஞ்சன் புணர்ப்பினில்,
வேண்டும் சேப்பூண்ட சகட உருவம் கொண்டுவந்த,
கடிய சகட அசுரர் தளர்ந்தும் முறிந்தும்
உடல் வேறாப் பிளந்து வீய. திரிசகடம் பாறிவீழ,
தளர்ந்து உதிர, சாடி, பண்ணை கிழிய
திருக்கால் ஆண்டு உதைத்தான்.

அதுகண்டு அஞ்சிய
ஏர்ஆர் கிளிக்கிளவி அசோதைதான் வந்து,
”உள்ளவாறு ஒன்றும் அறியேன்” என்று,
எம்பிரான் தன்மேனி சொல்ஆர வாழ்த்தி,
”என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்
அங்ஙனம் ஆவார்களே” என்று சொல்லி,
நின்று ஏத்தி, சீர்ஆர் செழும்புழுதிக் காப்பிட்டு,
செறிகுறிஞ்சித் தார்ஆர் நறுமாலைச் சாத்தற்குத் தான்
பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தான்.

3 கருத்துகள்:

  1. very nice compilation of Divya Prabandham. Can be published as a book after completion.

    Dasan

    v s satagopan

    பதிலளிநீக்கு
  2. Swamin,
    Vaittha manithi has already been published as a book from which only I am sharing. Please go back to the first part to know about the author etc

    பதிலளிநீக்கு
  3. Swamin,
    Vaittha manithi has already been published as a book from which only I am sharing. Please go back to the first part to know about the author etc

    பதிலளிநீக்கு