செவ்வாய், 11 அக்டோபர், 2011

A Demo in our village

இந்த சந்தைப்படுத்துதல் --- மார்க்கெட்டிங் என்றால் எளிதாகப் புரியுமோ – வளர்ச்சிதான் எவ்வளவு அபாரமாய் இருக்கிறது! 30, 40 வருடங்களுக்கு முன் ஒரு காஷ்மீர் குசும், அல்லது பாண்ட்ஸ் பவுடர் விளம்பரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருப்பு வெள்ளையில் படம் என்கிற பேரில் கரேல் என்று ஒரு ப்ளாக்குடன் வரும். ஜெமினி எஸ்.எஸ். வாசன் முயற்சியால் அன்றே பல விதமான விளம்பர உத்திகள் பயன்படுத்தப்பட்டு அவரால் விளம்பரப் படுத்தப் பட்ட பொருட்கள் அமோகமாக விற்பனையானதாம். அதன் பின் படிப் படியாக முன்னேறி, அடுத்த கட்டமாக விளம்பரக் குறும் படங்கள் சினிமா காட்சிகளுக்கு முன் காட்டப்பட்டு முதலில் வரவேற்பைப் பெற்றாலும் பின்னால் சலிப்பையும் உண்டு பண்ணின. அதிலும் திரைப்படம் தலைவலி தருவதற்கு முன்னமேயே வரும் சாரிடான் விளம்பரங்களை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். அச்சுக் கலைகள் வளர வளர விளம்பரங்களும் கண்ணைக் கவரும் வண்ணம் பத்திரிகைகளில் வர ஆரம்பித்துப் பின்னர் மல்ட்டி மீடியா தொழில் நுட்பங்களால் தொலைக் காட்சிகளில் சில நொடிகளுக்குப் பல்லாயிரம் ரூபாய் கட்டணத்தில் வர ஆரம்பித்து இன்று பல விளம்பரங்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைக் காட்டிலும் சுவையாக உள்ளன. எனக்கு ஒரு விசித்திரமான நண்பர் விளம்பரங்கள் முடிந்து நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது ரிமோட்டை அழுத்தி அடுத்த சானல் விளம்பரத்தைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். மனம் கவர்கின்ற வகையில் வரும் விளம்பரங்கள் இடையில் முகம் சுளிக்க வைக்கின்ற , இலை மறைவு காய் மறைவாய்ச் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் அம்பலப் படுத்தி ஆபாசத்தின் எல்லையைத் தொடும் சில விளம்பரங்களும் உண்டுதான். இப்படி ஊடகங்களின் வாயிலாக விளம்பரம் காணாது என்று அடுத்த கட்டமாக தங்கள் பொருட்களைச் சந்தைப் படுத்த இப்போது நேரடி செயல் விளக்கம் demo என்ற ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாளைக்கு ஒரு ஏழெட்டுப் பேராவது கழுத்தில் டையுடன் ஒரு பெரி…..ய்ய பையைத் தூக்கிக் கொண்டு வந்து நின்று வீட்டுக் கதவைத் தட்டி ஏதேனும் ஒரு பொருளை  இயக்கிக் காட்டி எப்படியாவது அதை நம் தலையில் கட்டப் படாத பாடு படுவது பலர் அறிந்ததே. இது போதாது என்று இந்த டெமோக்களுக்கென்றே அவ்வப்போது கண்காட்சிகள் வேறு. அவ்வளவு பெரிய சாம்சங் நிறுவனப் பிரதிநிதியையே சென்னை ரிச்சி தெருவில் சாலை ஓரத்தில் அவர்களது ஏதேனும் ஒரு  தொலைக் காட்சிப் பெட்டியையோ கம்ப்யூட்டர் மானிட்டரையோ வைத்துக் கொண்டு கூவி அழைப்பதைப் பார்க்கலாம். இப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள மார்க்கெட்டிங் சிற்றூர்களில் எப்படி? இங்கு காய்கறி வெட்டும் கத்திதான் அடிக்கடி சாலை ஓரங்களில் டெமோ செய்யப்படும். வியாபாரி கையில் படு வேகமாய்ச் சுழன்று நிமிடத்தில் ஒரு கிலோ முட்டைக் கோஸை தேங்காய்ப்பூ போல வெட்டும் அந்தக் கத்தி அதை நாம் ஆசையுடன் வாங்கி வந்தால் ஆடாமல் அசையாமல் நின்று, காயை வெட்டாமல் நம் விரலை வெட்டும்.
ஆனால் இன்று ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தேன். ஒரு  மாட்டு வண்டி நிறைய சுட்ட செம்மண் அடுப்புகளை ஒரு வியாபாரி கொண்டு வந்து தெரு ஓரத்தில் கடை பரத்தினார். அட பாவமே!ஊரெல்லாம் காஸ் அடுப்பு என்று கிராமமே மாறிப் போன நிலையில் இந்த அடுப்பை யார் வாங்கப் போகிறார்கள் என்று சற்று இரக்கத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நம்மால் இரக்கம்தானே பட முடியும்? 44ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கரைப்போல் செய்யமுடியுமா? நினைத்ததுபோல உடனடியாக யாரும் வாங்க வரவில்லை. தனி அடுப்பு, DSC03294கொடி அடுப்பு,, கொடி அடுப்பை இணைத்துக் கொள்ளும் அடுப்பு, பால் அடுப்பு என்று வித விதமான அடுப்புகள். நகர்ப்புர வாசிகள் மறந்தே போனவை.  அரை மணி நேரம் கழித்து வியாபாரி மெள்ள ஒரு அடுப்பைப் பற்ற வைத்து அதனுடன் ஒரு கொடி அடுப்பையும் பற்ற வைத்து அதில் சோறு பொங்க ஆரம்பித்தார். அடியேனுக்குத் தான் பொறுக்காதே! அவரிடமே கேட்டேன். “ என்ன செய்கிறீர்கள்” என்று. அவர் சொன்னார் “ நான் சமைத்தது மாதிரியும் இருக்கும். அடுப்பு எப்படி எரிகிறது என்று போகிற வருகிறவர்கள் பார்க்கிற மாதிரியும் இருக்கும்”  அட! இது பிரமாதமான டெமோவாக இருக்கிறதே என்று சிரித்தேன்.
DSC03298 ஆனால் அவர் விவரமானவர் என்பது அடுத்த சில நிமிடங்களில் தெரிந்தது. அடுப்பு எரிவதை வந்து நின்று கவனித்த ஒரு அம்மா பேரம் பேசி ஒரு அடுப்பை வாங்கிச் சென்றார். அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் கூட்டமாய் வந்தார்கள். “தைப் பொங்கலுக்குத் தேடி அலைய முடியாது.” என்று சொல்லி வீட்டிற்கு ஒன்றாய் வாங்கிச் செல்ல சோறு பொங்கி வியாபாரி சாப்பிட்டு முடிவதற்குள், அடுப்பு எல்லாம் வித்துப் போச்சு. 


DSC03296DSC03295
DSC03297

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக