நன்றி: புதிய தலைமுறை இதழ் செப்டம்பர் 15, 2011
தென்னக ரயில்வேயின் சென்னைக் கோட்டமும் ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினரும் இணைந்து தென்னக ரயில்வே கோட்டத்தின் பிரத்யேக இணைய தளத்தில் இரயிலில் தொலைந்து போன பொருட்களைத் திரும்பப் பெற கூடுதல் சேவை ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
இந்த சேவை மூலம் ரயில் அல்லது ரயில் நிலையத்தில் தவற விட்ட தங்களது உடைமைகளை இணையதளத்தில் அடையாளம் கண்டு மீட்டுக் கொள்ளலாம். இந்தச் சேவையினை அறிமுகப் படுத்திப் பேசிய சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் எஸ். ஆனந்தராமன், “ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கண்டெடுக்கப் படும் பொருட்களின் வரவு தொடர்ச்சியாக உள்ளது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையப் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் படும். அவைகளை உரியவர்கள் தங்கள் அடையாளங்களைச் சொல்லி மீட்டுக் கொள்ளலாம். இவ்வாறு சேர்ந்த பொருட்கள் ஒரு வாரம் அங்கிருக்கும். பிறகு, காணாமல் போன பொருட்களுக்கான அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பொருட்களின் தன்மைக்கேற்ப 90 நாட்கள் வரை பாதுகாக்கப் படும். இந்தச் செயல்களை எளிமைப் படுத்தும் வகையில் இப்போது கூடுதல் வசதியாக இணைய சேவையும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட புதிய இணைய முகவரிக்குச் சென்று அங்கே உள்ள விவரங்களை சரிபார்த்து உங்களது உடைமைகளை மீட்டுக் கொள்ளலாம்” என்றார்.
இந்தப் புதிய இணையப் பக்கத்தில் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட தேதி, தொடர்வண்டி எண் அல்லது ஸ்டேஷன் பெயர், மேலும் கண்டெடுக்கப்பட்டது என்ன பொருள், அது யாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது போன்ற தகவல்கள் இருக்கும். அவற்றைச் சரிபார்த்து உங்களது அடையாளங்களைச் சொல்லி பொருட்களை மீட்டுச் செல்லலாம்.
செய்யவேண்டியவை:-
www.sr.indianrailways.gov.in என்கிற இணையப் பக்கத்திற்குச் சென்று about Sr/Department/Security/ Chennai Division என்கிற சுட்டியை தட்டவும். பிறகு,
view section content என்கிற சுட்டியைச் சொடுக்கவும்.
இப்போது, Recovery of unclaimed articles by RPF என்ற சுட்டி தோன்றும். இதையும் சொடுக்கினால்,
Recovered Articles Detail (PDF) தோன்றும். (இது ஒரு டாக்குமெண்ட் பக்கம். இதைப் பார்க்க கணிணியில் ஃளாஷ் ரீடர் அவசியம்) இப்போது உங்களின் தவறிய பொருட்களை அடையாளம் கண்டு திரும்பப் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக