வெள்ளி, 25 மார்ச், 2011

வேறு எங்காவது உண்டோ?

திருப்புல்லாணி உத்ஸவங்களைப் பற்றி தொடர்ந்து பார்த்து வரும் (விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான்) பெரியவர்களே! திருப்புல்லாணியில் ப்ரும்மோத்ஸவ காலங்களில் சில வழக்கங்கள் கடைப் பிடிக்கப் படுகின்றன.

அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் காளி ஓட்டம் என்னும் நிகழ்ச்சி நடக்கும். மூன்றாம் நாள் இரவில் கோவிலிலிருந்து மரியாதைகளுடன், தளிகை மற்றும் பூசணிக்காய் (பலியாக – முன்னாள்களில் ஆடோ கோழியோ போகுமாம்) இவற்றை மேளதாளத்துடன் ஆலய அதிகாரிகள் திருப்புல்லாணி ஊரை வலம் வந்து அதன்பின் ஊருக்கு வெளியே சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கும் புல்லாணி அம்மன் என்னும் எல்லைக் காவல் தெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு அதன்பின்னேதான் உரிய நாளில் அங்குரார்ப்பணம் செய்து உத்ஸவம் ஆரம்பிக்கும்.

அதேபோல, அங்குரார்ப்பண நாளன்று ரக்ஷாபந்தனம் செய்துகொள்ளும் பட்டர், ஸ்தானிகர் இவர்களுக்கு அடுத்தபடியாக இந்தப் புல்லாணி அம்மன் கோவில் பூசாரிக்கும் மரியாதைகள் செய்து வஸ்திர தானம் அளிக்கப் படும்.

பெரியவர்கள் சிலர் புல்லாணி அம்மனாகத் தான் இங்கு எங்கள் தாயார் முதலில் அவதரித்தாள் என்ற சொல்வதுண்டு. இந்தப் புல்லாணி அம்மன் கோவில் இப்போது ஸ்ரீஜெயராம பட்டரின் பெரு முயற்சியாலும், பூசாரி அரியமுத்துவின் ஒத்துழைப்பாலும் அழகான கற்கோவிலாக உருவாகி வருகிறது. புனருத்தாரண வேலைகள் தொடங்குமுன் ப்ரச்னம் பார்த்ததில் இந்தப் புல்லாணி அம்மன் கோவில் திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதப் பெருமாள் கோவிலுக்கும் முந்தியது என்று வந்தது.

இன்னும் ஒரு கொசுறு தகவல். புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே என்று தினமும் ஸேவிக்கும் அந்தணர்களில் யாருக்கும் புல்லாணி என்று பெயர் கிடையாது. அபூர்வமாக ஓரிரு தெய்வச்சிலைகள் தென்படுவார்கள். ஆனால், இதர ஜாதிகளில், அதுவும் குறிப்பாக தாழ்த்தப் பட்டோர் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கிறோமே அவர்களில் குறைந்த பக்ஷம் பத்தில் ஒருவருக்கு புல்லாணிதான் பெயர்..

இம்மாதிரி வழக்கங்கள் வேறு எந்த ஊர் உத்ஸவாதிகளில் கடைப் பிடிக்கப் படுகிறது?

 

6 கருத்துகள்:

  1. தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
      வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
      எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
      புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”
      - பெரிய திருமொழி 9-4-5

      நீக்கு
  2. நன்றி திரு குமரன்!
    நான் கேட்டிருந்த தகவல்கள் கிடைத்தால் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. புல்லாணி அம்மனா புதுசா இருக்கே! நன்றி ஐயா.!:)

    பதிலளிநீக்கு
  4. கொற்றவை வழிபாட்டின் வெளிப்பாடுதான் புல்லாணி அம்மனாகி இருக்கலாம். நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. “வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
    வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
    எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
    புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”
    - பெரிய திருமொழி 9-4-5

    பதிலளிநீக்கு