8. திருவரங்கனைத் தொழுதமை
மறையொடு தமிழு மோதி வழியெலாம் மதுர நாதம்
நிறைவுற மணக்கால் நம்பி நடந்தனன் நிலவெ ழுப்பி
இறையவன் யாமு னன்பின் வளர்தரு மிரவி யேபோல்
நெறியினன் முந்தை யீந்த வைப்பினை நேடிச் சென்றான். .72.
ஆளவந்தார் நம்பியைத் தொடர்ந்து சென்றார். நம்பி நடக்கும்போது எங்கும் அவரது நிலவு பரவியது. இவரைத் தொடரும் ஆளவந்தார் வளரும் சூரியனைப் போல இயங்கினார். முந்தை – பாட்டன், நாதமுனி. வைப்பு – பொருள்.
தெருளதன் திரிபு தானும் மறலிதன் சினமு மென்றும்
அருகுறாப் பெற்றி வாயு மரங்கமா நகரி லெங்கும்
வருபுனல் நீத்த மேபோல் வளர்தரும் பத்தர் மண்ட
நிருபன், “என் பாட்ட னெற்கே வைத்ததாந் நிலனி” னென்றான். .73.
திருவரங்கத்தில் அடியார்களது குழுவினைக் கண்ட ஆளவந்தார், “எனது பாட்டனார் எனக்காக வைத்தருளிய தலம் இதுவே” என்றார். பெற்றி – பெருமை. நல்லறிவு மங்குதலும் யமனது சினமும் காணலாகாதன இத்தலத்தில். அருகு உறா –அணுகாதவாறு. எற்கு – எனக்கு. என் பாட்டன் எற்கு வைத்த நிலன் இது ஆம் -----------.
வளைமதி ளேழு தம்முள் வளைதரு முறைவி னுள்ளே
வளைவணப் பணியின் பாற்கண் வளர்தருங் கோம ளத்தை
வளைதனு நம்பி காட்ட வளர்தரும் பத்தி வாய்ந்தான்
வளைதலே காணாப் புத்தி யாமுனன் மகிழ்ந்து கண்டான். .74.
நம்பி திருவரங்கப் பெருமானை ஆளவந்தார்க்குக் காட்டியமை. வளை மதிள் – சூழ்ந்துள்ள மதிள்கள். உறைவு – ஆலயம். வளை வண பணி – சங்குபோல் வெளுத்த ஆதிசேஷன். கோமளத்தை – கண்ணுக்கு இனியனை. வளை தனு – வயதால் வளைந்த மேனியுடைய. வளைதலே காணா புந்தி – கோணாத புத்தி.
விதுமுகன் நம்பி மிக்கோன் தன்கரம் பற்றி, “மேலோய்!
மதிநலன் வாய்ந்த மாண்பர் வகுத்தநற் றமிழை யீட்டும்
மதுகர முய்த்த தேனை மாந்துமிம் மிறைவன் காண்டி
நிதியிதே குரவ னென்பால் வைத்ததாங் கொள்க” என்றான். .75.
நம்பி ஆளவந்தாரிடம், “ இவன்றான் நான் சொல்லிய நிதி” என்று இறைவனைக் காட்டினார். விதுமுகன் நம்பி – சந்திரன் போன்ற முகம் வாய்ந்த மணக்கால் நம்பி. மதிநலன் வாய்ந்த மாண்பர் – ஆழ்வார்கள். தமிழை – அருளிச் செயல்களை. ஈட்டும் – சேர்க்கும். மதுகரம் – வண்டு. உய்த்த தேன் – வெளியிட்டருளின நாலாயிரத்தின் சுவை. காண்டி – காண்பாய். குரவன் (நாதமுனி) என்பால் வைத்த நிதி இது ஆம், கொள்க.
தூமனன் நம்பி காட்டச் சூழ்தருஞ் சோதி தன்னுள்
தாமரை மலர டங்கச் சார்ந்தசெவ் வடிகள் கண்டான்
ஏமநற் சோதி யேந்துந் திருவரை யாடை கண்டான்
தேமலர் பூத்த வுந்தி தன்னொடுஞ் செல்வி தோயும், .76
மணியனை மார்பு கண்டான் வதமு மிலங்கக் கண்டான்
மணிமயக் குழைகள் கண்டான் மலர்தருங் கண்கள் கண்டான்
பணிமிசை யம்பு யக்கை படர்புகர் மௌலி காட்டிப்
பணிமினீர் இவனே நாதன் என்பபோற் படியக் கண்டான். .77.
மலர்மிசை யெழுந்த கோனும் மலைமகள் பங்கி லுற்ற
சலம்புனை சடையி னானுஞ் சதமகன் றானு மேத்தும்
நலம்பெயு மிறைவன் றன்னை நம்பிதன் னருளிற் காட்ட
மலர்தருங் கண்ணிற் கண்டு மாந்தின னெழிலை யன்பன். .78.
ஆளவந்தார் இறைவனை ஆபாதசூடம் அநுபவித்தமை. தூமனன் – தூய மனத்துடைய ஆளவந்தார். ஏம நல் சோதி – பொன்னின் ஒளி. மணி அனை – மணியையொத்த; பணிமிசை – ஆதிசேடன்பால். (கை) படர் புகர் மௌலி காட்டி …. நாதன் – பரந்த சோதி வாய்ந்த திருமுடியைக் காட்டி, இம்முடியுடையவனே நாதன். கை … என்ப போல் படியக் கண்டான்-------. மலர்மிசை…..கோன் – பிரமன். மலைமகள் – பார்வதி தேவி. சடையினான் – பரமசிவன். சதமகன் – இந்திரன்.
படியிலாக் கருணை காட்டும் பரனையிக் குரிசிலேத்தி,
”மடிவிலா வான நீத்து வளநதிப் புளினந் தன்னிற்
படிறுவாய் மக்க ளுய்யப் படிந்தனை பாந்தள் பாலே
அடியனேன் நின்னை யண்டி யுய்ந்திட வருள்க வண்ணால்! .79.
“மண்ணுளா ருய்ய வாகும் மறைதமை யளித்த னைநீ
பண்ணவன் மரபி லென்னைப் பண்பெழத் தோற்றுவித்தாய்
திண்ணமாம் ஞான மேற்றான் திருவடி நிழலி லென்னை
எண்ணலா வகையி னுய்த்தே உயர்த்தினை இறைவ!” என்றான். .80.
இறைவனிடம் ஆளவந்தார் தமது மகிழ்ச்சியைக் கூறி, தாம் இவனையே யண்டி வாழவேண்டுமென இறைஞ்சியமை. வானம் நீத்து . வளநதி – காவிரி. புளினம் – மணல்திட்டு. படிறு – வஞ்சகம், கொடுமை. பண்ணவன் மரபு – பெரியோனாகிய நாதமுனியின் வமிசம். திண்ணமாம் ஞானம் ஏற்றான் – குலையாத அறிவு வாய்ந்த மணக்கால் நம்பி.
மனையோ வாழ்சுழல் மகவோ
வன்திரை உறவோ கடுவளியாய்
வினைசே ரைம்பொறி திமியே
யாய்மலி வெள்ளப் பவக்கடலை
இனிதே கடந்துய்யப் புணையாய்
வருதிரு மாலோ னிணையடியே
துளிநீர் புகலெனத் தூயோன்
யாமுன னேற்றான் தொழுதனனே. .81.
ஆளவந்தார் திருமாலின் திருவடியே புகலாகப் பற்றியமை. இல்லற வாழ்க்கை ஓர் ஆழ்கடல். மனை ஆழ் கடல் –. மகவு – மக்கள். வன் திரை – கொடிய அலைகள். உறவு – சுற்றத்தார். கடு வளி – வலி மிக்க காற்று. வினைசேர் ஐம்பொறி – வினைகளைக் குவிக்கும் ஐந்து பொறிகள். திமி – பெரிய மீன். பவம் கடலை – சம்சாரமாகிய பெருங்கடலை. புணை – தெப்பம். “துன்பக்கடற் புக்கு வைகுந்தனென்பதோர் தோணி பெறாதுழல்கின்றேன்” என்ற சூடிக் கொடுத்த நாச்சியார் வாக்கு நோக்குக. கடந்து உய – கடந்து உய்ய.
“
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக