திங்கள், 29 நவம்பர், 2010

திருத்தாள் மாலை

தூயநான் மறையின் தொன்முடி துலங்கும்
        சுந்தரச் சோதியார் திருத்தாள்
ஆயிரங் கண்ண னரனய னாதி
         யனைவருந் தொழுதெழுந் திருத்தாள்
நேயமார் தூய மாதவர் நெஞ்சில்
        நிலையுற நிலவுசெய் திருத்தாள்
பேயனே னாமிப் பேதையே னகத்தும்
        பிரிவறப் பிறங்கிடுந் திருத்தாள்.                                 (1)

சுட்டிய தூணிற் றோன்றியக் கணமே
      சுடரெழக் குதிகொளுந் திருத்தாள்
கிட்டிய கேடன் கனகனை மாளக்
      கிடத்து மாவூருடைத் திருத்தாள்
ஒட்டிய மைந்த னுரையினை மெய்ப்பித்
      துவந்தவன் தொழுதெழுந் திருத்தாள்
மட்டிலா வினையேன் மனத்திலு மன்ன
      மகிழ்ந்தருள் பரப்பிய திருத்தாள்.                      .2.

ஒளிவடி வேந்தி யடியிரந் தோங்கி
      யுலகெலா மளந்தருள் திருத்தாள்
களமிகக் கமலங் கொண்டயன் துலக்கக்
      கங்கையைக் கான்றதோர் திருத்தாள்
வளமிக வழங்கு மாவலி சிரத்தே
      வைப்புற மகிழ்ந்தருள் திருத்தாள்
எளியனே னிருளா ரிவ்வித யத்து
      மிலங்கிடத் தலங்கொளுந் திருத்தாள்.              .3.

திருமகள் வருடச் சிவந்தலர் திருத்தாள்
        செவ்வியத் தாமரைத் திருத்தாள்
வரமது வேண்டி யணுகிய வானோர்
      வணங்கிட மகிழ்ந்தருள் திருத்தாள்
தருமசிந் தையனாந் தசரதன் மனையில்
       தவழ்ந்தலங் கரித்தருள் திருத்தாள்
கருமியேன் வினைகள் களைந்தருள் வானென்
      கருத்தினுங் கனிந்தமர் திருத்தாள்.                      .4.

தூயமா முனிவன் கௌசிகன் பின்னர்த்
     தொடர்ந்து கானடந்தருள் திருத்தாள்
சாயலாண் மங்கை யகலிகை சாபந்
      தவிர்த்தருள் பவித்திரத் திருத்தாள்
தீயவ ரரக்கர் பூண்டொடு தீவான்
       செறிவன முகந்தருள் திருத்தாள்
பேயனே னேனும் பெரும்பதந் தனையான்
        பெற்றிட  வருள்செயுந் திருத்தாள்.                       .5.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக