திங்கள், 2 ஆகஸ்ட், 2010

இதுதாண்டா காமன்வெல்த் ஊழல், இதுதாண்டா மோசடி!



வெப்துனியாவிலிருந்து

இப்போதெல்லாம் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்வதுதான் ஃபேஷன். நல்ல விலை உயர்ந்த டிரெட்மில்லின் விலை இன்றைய சந்தை நிலவரப்படி ரூ.7லட்சம். ஆனால் ரூ.9.75 லட்சம் கொடுத்து டிரெட்மில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. நாம் உட்காரும் நாற்காலி அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் என்ன பெரிய ரூ.2000 இருக்குமா? ஆனால் ஒரு நாற்காலியின் விலை ரூ.8000த்திற்கும் மேல். 165 லிட். குளிர்ப்பதனப் பெட்டி எவ்வளவு இருக்கும் மிஞ்சிப்போனால் ரூ.8000 இருக்குமா? ஆனால் அதுவே வாடகைக்கு ரூ.42,000 என்றால் எப்படி இருக்கும்? இதெல்லாம் வடிவேலு நடித்த 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் நகைச்சுவைப்பகுதிகள் அல்ல. இதுதான் காமன்வெல்த் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு மோசடி!

காமன்வெல்த் என்பதில் வெல்த் எப்போதும் காமன் கிடையாது என்ற கேலிச் சொற்றொடர் உண்டு. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு தேசத்தின் 'மரியாதையை'க் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் ஊழலும் மோசடியும் செய்து காமன்வெல்த்தை தனிவெல்த்தாக மாற்றி வருவது சுதந்திர இந்தியாவின் தனிச்சிறப்புப் பொருளாதார மண்டலம் போலும்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டா அதிலும் ஊழல், ஹாக்கி இந்தியாவா அதிலும் ஊழல், கால்பந்து, தடகளம், கில்லித்தாண்டு, கோலிகுண்டு, பம்பரம் என்று எதனை இவர்கள் 'மேம்படுத்த' விரும்பினாலும்,அது தங்களது சொத்து மேம்பாட்டிற்குத்தான் என்பதாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

பெருமையுடன் செய்தியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரை அழைத்துக்காட்டிய புதிய, "மேம்படுத்தப்பட்ட' நேரு விளையாட்டரங்கில் உள்ள பளுதூக்கும் விளையாட்டரங்கத்தின் மேற்கூரை பல்லிளித்து விட்டது. மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகி மைதானத்தை நீர்மயமாக்கியுள்ளது இந்த காமன்வெல்த் விளையாட்டு ஒப்பந்தங்களி நிகழ்ந்துள்ள கோடிக்கணக்கான சுருட்டலுக்கு ஒரு எளிய உதாரணம்!


இன்னும் நோண்டினால் நிறைய வெளிவரும், இதனால்தான் மணிசங்க‌ர் ஐயர் இந்த விளையாட்டுப் போட்டிகள் தோல்வியடைந்தால் நல்லது என்றும், இது பற்றி தான் பின்னால் கூறுகிறேன் என்றும் கூறினார். ஆனால் பின்னால் ஒன்றும் கூறத்தேவையில்லை. இப்போது வெளிவரும் தகவல்களே போதுமானதாக உள்ளது இந்த ஊழல்களின் ஆழத்தை புரிந்துகொள்ள.

வீரர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக டிரெட்மில் வாங்குவதில் ஊழல் என்று செய்தி ஊடகங்கள் இப்போது தெரிவித்துள்ளன. அதாவது டிரெட்மில் எந்திரத்தை வாங்க 9.75 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் நல்ல விலை உயர்ந்த டிரெட்மில்லின் விலை ரூ.7 லட்சம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக