செவ்வாய், 12 ஜனவரி, 2010

சிற்றஞ் சிறுகாலே

29. உயிர்நிலைப் பாட்டு

தங்கள் தனிப்பெரு நோக்கத்தைப் ‘பறை பறை’ என்று மறைத்துப் பேசி வந்த ஆய்ச்சியர் இந்தப் பாசுரத்திலே அதன் புதைபொருள் இதுதான் என்று கண்ணனிடம் தெளிவாகச் சொல்லி விடுகிறார்கள். இதில் திருப்பாவையின் பரம தாத்பரியம் தெளிவாக்கப் படுகிறது.

‘சிற்றஞ்சிறுகாலை’ என்று தொடங்குகிறது இந்தப் பாசுரம். ‘சிறு பிள்ளைகளாகிய நாங்கள் காலையில் வரவில்லை. சிறு காலையிலும் வரவில்லை; சிற்றஞ்சிறுகாலை என்று சொல்லத்தக்க அதிகாலை வேளையிலேயே எழுந்து பனியைப் பாராமல், குளிரைப் பாராமல் வந்திருக்கிறோம். இதிலிருந்தே எங்கள் மனநிலையை நீ தெரிந்து கொள்ளலாம்’ என்பது குறிப்பு.

‘மாடு மேய்த்துப் பிழைக்கும் குலத்தில் பிறந்திருக்கிறாய் நீ. எங்களுடைய கைங்கரியத்தைப் பெற்றுக்கொண்டால்தானே உன்னுடைய இந்தப் பிறவி பயன் பெறுவதாகும்?’ என்கிறார்கள்.

பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது!

ராஜாதிராஜனும் தேவாதிதேவனுமாகிய பரம்பொருள் மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்திருக்கிறான் என்றால், அதன் பயன் தன் எளிமையைப் புலப்படுத்தும் முறையில் தங்களை ஆட்கொள்வதுதான் என்கிறார்கள். இறைவன் பிறப்பிலி --- அதாவது, பிறப்பு இல்லாதவன். அவன் பிறக்கிறான், தாழ்ந்தார்க்கும் முகம் காட்டவே பிறக்கிறான். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காகத் தங்களைப் பணி கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என்கிறார்கள்.

‘உலகம் கோன் இல்லாத மந்தை அல்ல!’ என்பது பரம ஞானிகள் கண்ட உண்மை. இந்தக் கோனைப் ‘பேராயன்’ என்கிறார் ஆழ்வார்களில் ஒருவர். பேராயன் ‘சிற்றாயர் சிங்க’மாகத் தோன்றியிருக்கிறான் இப்போது. ‘பொன்னாடை புழுதி படியலாகாதே!’ என்று பரமபதத்திலேயே தங்கி விடவில்லையாம். இந்த உலகிலும் மறைகள் ஓதிக் காணாத நிலையில் மாடு மேய்ப்பவர் காணும்படி வந்திருக்கின்றானாம். அப்படியிருக்க, ‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது’ என்கிறார்கள். ‘போகாது’ என்றால் போகலாகாது என்று பொருள்படும்.

இப்படி வேண்டிக்கொண்ட ஆய்ச்சியரை நோக்கி, ‘பெண்களே! அது இருக்கட்டும்; நீங்கள் மார்கழி நீராட்டத்திற்கும் நோன்பிற்கும் உபகரணமாய்க் கேட்டவற்றைத் தருகிறேன்; பறை முதலியன தருகிறேன்’ என்கிறான் கண்ணன். அதுகேட்ட ஆய்ச்சியர்கள் தாங்கள் ‘பறை’ என்று சொன்னதன் உட்கருத்து வேறு என்கிறார்கள். ‘பறை பறையல்ல!’ என்கிறார்கள்.

இற்றைப் பறைகொள்வான்
அன்றுகாண் கோவிந்தா!
என்கிறார்கள்.

‘அப்படியானால் நீங்கள் விரும்பும் பறைதான் எது?’ என்று கண்ணன் கேட்கக் கூடுமல்லவா? அதற்குப் பதில் சொல்லுகிறார்கள் ஆய்ச்சியர்கள். ‘உன்னிடம் நாங்கள் யாசிப்பது உன்னைத் தான்!’ என்கிறார்கள். ‘நாங்கள் விரும்புகிற பறை உனக்கு நாங்கள் ஆட்செய்ய வேண்டும் என்பதுதான்’ என்கிறார்கள். உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று ஐயம்திரிபு இல்லாமல் பேசுகிறார்கள்.

‘உன்தன்னோடு உற்றோமே ஆவோம்!’ என்று அந்த உறவை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

உற்றோமே ஆவோம்
  உனக்கேநாம் ஆட்செய்வோம்

என்று தங்கள் இதய ஏட்டிலே எழுதா மறையாக எழுதிக் கொண்டிருந்ததை அப்படியே படித்துக் காட்டுகிறார்கள்.

இந்த இப்பிறவிக்குத் தானா இவர்கள் உறவுகொள்ள விரும்புகிறார்கள், குற்றேவல் புரிய விரும்புகிறார்கள்?

எற்றைக்கும் ஏழ்ஏழ்
பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்
உனக்கேநாம் ஆட்செய்வோம்

என்று பிரார்த்தனை செய்து கொள்ளுகிறார்கள்.

‘இந்தக் “காமம்” தவிர வேறு காமங்களை இறைவா! நீ மாற்றி அருள வேணும்’ என்று முடிவாகப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். ‘இதுதான் எங்கள் அந்தரங்க விருப்பம்; பறை என்பதும் நோன்பு என்பதும் வியாஜம்தான்!’ என்கிறார்கள்.

இந்த உத்தேசத்தைத் தெளிவுபடுத்திக் காட்டுவதற்குப் பீடிகையாகத்தான்,

பொற்றா மரைஅடியே
போற்றும் பொருள்கேளாய்
என்கிறார்கள்.

மற்றைப்படி, ‘ஒரு பிரயோஜனம் கொண்டுபோக வந்தோம் அல்லோம்’ என்று சொல்லுகிறார்கள். ‘எல்லா உறவும் நீயே! நீ உகந்தபடியே பணி செய்து கொண்டிருப்போம்’ என்று திருப்பாவையின் தனிப்பெருங் கொள்கையை முடிவாக வெளியிடுகிறார்கள் இப்பாசுரத்திலே.

உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்

சிற்றஞ் சிறுகாலை வந்துஉன்னைச் சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

விளக்கம்.

‘பறை, பறை’ என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள், அந்தப் பறை வியாஜம்தான் என்பதைத் தெளிவாக முடிவுகட்டிப் பேசுகிறார்கள் இப்போது. ‘பறை’ என்று நோன்பு நோற்பதைக் குறிப்பிட்டார்கள். நோன்பிற்கு வேண்டிய பறை முதலியவற்றைக் கண்ணன் தரவேண்டும் என்றார்கள். இப்போது கண்ணன் அன்பே தாங்கள் கருதிய பொருள் என்று உறுதி கூறுகிறார்கள்.அன்பிலே மலரும் பணிதான் தங்களுடைய வேண்டுகோளின் உயிர்நிலை என்கிறார்கள்.

திருப்பாவையின் தனிப்பெரு நோக்கம் இந்த உயிர்நிலைப் பாட்டில் வெளியிடப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக