வியாழன், 17 டிசம்பர், 2009

விரதமும் விருந்தே

2. விரதமும் விருந்தே

எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கும்போது, 'இவைகளை நான் செய்யமாட்டேன், இவைகளைச் செய்வேன்' என்று சில நியமங்களை மேற்கொள்கிறோமல்லவா? காரியசித்திக்காகச் சில பழக்கங்களை விடுகிறோம்: சில பழக்கங்களைப் பற்றிக் கொள்ளுகிறோம். இதைக் காரியசித்திக்கு உரிய நோன்பு என்று சொல்லலாம். ஆய்க்குலச் சிறுமிகளும் இத்தகைய சில விதிகளையும் விலக்குகளையும் பாவை நோன்பை முன்னிட்டுஅனுஷ்டிப்பதாகத்தீர்மானிக்கிறார்கள்.
'பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடு'வோம் என்பதை அதிமுக்கிய விதியாகக் கொள்கிறார்கள். 'நாட்காலை நீராடி' என்பது இரண்டாவது விதி. அடிபாடி அன்பு நீராடி அகத்தைத் தூய்மை செய்துகொண்டு, புறத்தூய்மைக்காக நாட்காலை நீராடுகிறார்கள். இவர்கள் மூன்றாவது விதி யாக "ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி" என்பதைக் கொண்டிருக்கிறார்கள். இந்த விதிகளை 'உய்யுமாறு எண்ணி உகந்து' மேற்கொள்கிறார்கள்.

விதிகளுடன் விலக்குகளும் வேண்டுமல்லவா? நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்கிறார் கள். 'மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்' என்கிறார்கள். நோன்பு முடியும்வரை நெய்யும் பாலும் உண்பதில்லை என்ற விரதம் பூண்டவர்கள், கண்ணுக்கு மை எழுதியும் கூந்தலுக்குப் பூச்சூட்டி யும் அலங்கரித்துக் கொள்வதில்லை என்றும் தீர்மானிக்கிறார்கள். ஆபரணங்களாலும் அழகு செய்துகொள்வதில்லை என்ற விலக்கு நியமத்தை நாம் உய்த்துணர வைக்கிறது இந்தச் செய்யுட் பகுதி.

அலங்காரம் செய்து கொள்ளாதது மட்டுமா? –அகத்தின் அழகை அலங்கோலமாக்கிக் கெடுத்துக் கொள்வதில்லை என்றும் தீர்மானிக்கிறார்கள். 'செய்யாதன செய்வோம்' –அதவது பெரியோர்கள் செய்யாதவற்றைச் செய்யமாட்டோம்—என்கிறார்கள். 'தீக்குறளைச் சென்று ஓதோம்' – அதாவது , தீமை விளைக்கும் கோட்சொற்களைச் சென்று சொல்லமாட்டோம் – என்கிறார்கள். இவையெல்லாம் விலக்கும் நியமங்கள்.

அலங்காரம் செய்துகொள்ளமாட்டோம் என்பது தாற்காலிக விலக்கு. 'செய்யாதன செய்யோம்' என்பதும், 'கோள் சொல்லமாட்டோம்' என்பதும் எப்போதும் விலக்கத்தக்க நியமங்களாகவே இவர்களால் மேற் கொள்ளப் பட்டன என்று ஊகிக்கலாம்.

இப்படியெல்லாம் தாங்கள் கொண்டாடும் பாவை நோன்பிற்குச் சில நியமங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் இந்தப் பெண்கள். இவற்றைக் 'கிரிசைகள்' (கிரியைகள்') என்கிறார்கள். இவை இவர்களுடைய நோன்பிற்குரிய கிரியைகள். இவற்றைச் 'செய்யும் கிரிசைகள்' என்று சொல்கிறார்கள். 'செய்யும் கிரிசை'களில், மேற்கொள்ளும் கிரியைகளுடன் விடும் கிரியைகளையும் சேர்த்துப் பேசுகிறார்கள். விடும் கிரியைகள் மட்டுமா? ஒரே அடியாக விட்டு விட வேண்டிய கிரியைகளும் (செய்யாதன செய்யாமல் இருப்பதும், கோள் சொல்லாமலிருப்பதும்) 'செய்யும் கிரிசை'களில் சேர்த்துப் பேசப்படுவதைக் காண்கிறோம்.

வாழ்வதற்கு மேற்கொள்ளும் நோன்பு இது. நல்ல கணவனை அடையவேண்டும் என்பதும், நாடு செழிக்க மழை பெய்யவேண்டும் என்பதும் இந்த நோன்பின் இரட்டை நோக்கம். குடும்பம் நடத்துவதற்கு இல்லாளுக்கு இசைந்த நல்ல கணவன் வேண்டுமல்லவா? நாடு ஒரு விரிந்த குடும்பம்தான். நாட்டில் செழிப்பு இல்லாவிட்டால் வீட்டிலும் செழிப்பு இல்லை. நாடும் வீடும் ஒருங்கே நலம் பெறுவதற்கு நோற்கப்படும் இந்த நோன்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்களை, "வையத்து வாழ்வீர்காள்!" என்று இப்பெண்கள் அழைக்கிறார்கள்.

வாழும் முறை தெரிந்து உலகத்தில் வாழவேண்டும். அப்படி வாழ்கிறவன் மண்ணுலகை விண்ணுலகாக்கிக் கொள்வான் என்றும், வானுறையும் தெய்வம்போல் வாழ்க்கை நடத்துவான் என்றும் திருவள்ளுவர் சொல்லுகிறார். இந்தப் பாவை நோன்பில் கலந்து கொள்ளும் ஆய்க்குலச் சிறுமியர் கண்ணன் தோழமையால் ஆய்ப்பாடியைச் சொர்க்கம் ஆக்குகிறார்கள் – ஆண்டாள் தன் பாவனையின் முதிர்ச்சியால் ஸ்ரீவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாய் ஆக்கிக் கொண்டதுபோல!

இந்தப் பெண்களுக்கு விதிவிலக்குகளோடு கூடிய இந்த நோன்பில் சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை. 'நெய் உண்ணோம், பால் உண்ணோம்' என்கிறார்களே, இத்தகைய உண்ணாவிரதமும் இன்பம்தானா? –என்று கேட்கலாம். உண்ணும் சோறும் பருகும் நீரும் இவர்களுக்குக் கண்ணனாக இருப்பதால், உண்டவர்கள் 'உண்ணா விரதம் பூண்டோம்' என்று கூறுவது போன்றதுதான் இந்நிலையும் எனலாம். உண்டார்க்கு உண்ண வேண்டுமா?

உண்மை என்னவென்றால், இவர்கள் இந்த நோன்பையும் இதற்குரிய விதிவிலக்குகளையும் அனுபவிக்கத்தான் செய்கிறார்கள். துறவும் போகம்தான் இவர்களுக்கு! 'அடிபாடி......நெய்யுண்ணோம்' என்ற போக்கில்தான் இவர்கள் பேச்சு அமைந்திருக்கிறது. பரமன் அடி பாடியதும் 'எல்லாம் கண்ணன்!' என்ற மனநிலை வாய்த்துவிடுகிறது. எனவே, நெய்யுண்ணாமலிருப்பதும் பால் பருகாமலிருப்பதும் இவர்களுக்குத் துறவும் அல்ல, தியாகமும் அல்ல! கண்ணன் அடிமலரே தலைக்கு அணி என்று கருதுபவர்களுக்கு மலர் சூடுவதும் ஆபரணம் அணிவதும் அலங்காரமாவதுதான் எப்படி? இனி இப்பாட்டை நோக்குவோம்.

வாழப்பிறந்தவர்களே ! நோன்பு நோற்போம் !

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றுஒதோம்

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி

உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்.

இந்தப்பாட்டில், பாவை நோன்பு நோற்பதற்கு உரிய நியமங்கள் தெரிவிக்கப் படுகின்றன. எந்தப் பெருங் காரியத்தில் ஈடுபடுவோரும் அந்தக் காரியம் கைகூடும்வரையில் சில நியமங்களை மேற்கொள்ளுவது பிரசித்தம். இந்த நியமங்களில், பற்றிக் கொள்வன சில; விடவேண்டியவை சில. இந்தப்பெண்களும் அத்தகைய சில நியமங்களைச் சங்கற்பித்துக் கொள்கிறார்கள்.---அதாவது பற்றும் கிரியைகளையும் விடும் கிரியைகளையும்.

இவர்கள் பற்றிக்கொள்வன: (1) பரமன் அடி பாடுதல், (2) காலை நீராடுதல், (3) ஐயமும் பிச்சையும் கைகாட்டுதல், (4) உய்யும் வழியை எண்ணி உகந்திருத்தல். இவர்கள் விட்டுவிடுவன: (1) நெய், பால் உண்ணாதது, (2) மையாலும் மலராலும் அலங்கரித்துக் கொள்ளாதது, (3) செய்யத் தகாத காரியங்களைச் செய்யாமல் இருப்பது, (4) கோள் சொல்லாமல் இருப்பது. இவற்றுள் முதல் இரண்டும் தாற்காலிகமானவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக