ஞாயிறு, 6 டிசம்பர், 2009

சந்தவசந்தத்திலிருந்து

கூகுள் முழுமத்தில் சந்தவசந்தம் என்னும் ஒரு குழு. மரபுக்கவிதை அங்கு மிகவும் கற்றறிந்த தமிழ்வல்லார்களால் தினமும் அரங்கேறும். திரு அனந்த் எழுதி இன்று வந்திருக்கும் ஒரு பகுதி இங்கே.

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine....
மரபில் நகைச்சுவை - 35

- அனந்த்

முன்குறிப்பு: தானோ பிறரோ தேர்ந்தெடுத்த துணையோடு இல்லற வாழ்க்கை நடத்துவோரின்பெருமையை வள்ளுவர் பெருமான் அறத்துப் பாலில், இல்லறவியல் என்னும் தலைப்பில், இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் (--அதிகாரம் யாருக்கு என்று அன்னார்குறித்திலர்-), அழகுபடப் பத்துக் குறட்பாக்களில் கூறியுள்ளார். அந்தப் பாக்களை ஒட்டி, எமக்குத் தெரிந்த இல்வாழ்க்கைச் சிறப்பை யாம் எடுத்துரைக்க விழைந்தனம். அதன் விளைவாக எழுந்த குறட்பாக்களை உங்களோடு பகிர்ந்து மகிழவும் அவாக் கொண்டனம். கீழே காணும் குறட்பாக்கள் வள்ளுவனார் தந்த அதே வரிசையில் (-பத்தாவது பாட்டைத் தவிர-), அவற்றின் சொல்லழகும் சுவையும் குன்றாவண்ணம் அமைக்கப்பட்டவை,(என யாம் நம்புகின்றனம்). ஐயமுறுவோர் திருக்குறளைக் கையிலேந்தி ஒப்பிடுவாராக.

<> இல்(லா) வாழ்க்கை <>

இல்வாழ்வான் என்பான் மணம்புரியா நண்பர்கள்
  எல்லோர்க்கும் சோறளித்தல் ஏற்பு (1)

துறந்தாரும் தூரத்து உறவான பேரும்
  கறந்திடுவார் இல்வாழ்வான் காசு (2)

தன்புலனில் தாரத் துடன்பகைத்த நண்பனுக்கு
  உன்புலமே வீடென் றுணர்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
அழியாமற் காத்தல் அரிது (4)

துன்பும் துயரும் உடைத்தாய இல்வாழ்க்கை
முன்பிருந்த ஜாலிக்(கு) எதிர் (5)

கடனெனக் காண்பதே இல்வாழ்க்கை அ·தை
உடன்தீர்க்க இல்லை வழி (6)

வறுத்தாட்டி இல்வாழ்க்கை வாட்டிடின் வாயில்
புறத்தேபோய்க் கூவென் றழு (7)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்வோன் களிப்பிற்கு
அயலாகி நிற்கும் அசடு (8)

ஆற்றொழுக்கு நாசிக் குழவிசேர் இல்வாழ்க்கை
  நோற்பாரின் நோன்மை உடைத்து (9)
(நோன்மை = தவம், பெருமை, பொறுமை, வலி; இங்கு இறுதிப் பொருளில் பயிலும்)

கடிஜோக்குக் கேற்றதோர் கேலிப் பொருளாய்
அடிபடும்இல் வாழ்வான் தலை (10)

******
இலக்கணக் குறிப்பு: திருக்குறளைப் போன்ற ஈரடி, 7 சீர்ப் பாடல்கள் பலநகைச்சுவைக் கவிதைகளைப் பார்த்திருக்கிறோம். இந்த மின்னிதழில் முன்னம் வெளியான என்னுடைய சில ’கடிக்குறள்’ பாக்களைப் (அடியும் முடியும் <http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine....>, இன்னா பத்து<http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine....>) போல, மேலுள்ள பாடல்கள் குறள் வெண்பாவின் இலக்கணம் வழுவாமலும், மேலதிகமாகத் திருக்குறள் ’இல்வாழ்க்கை’ அதிகாரத்திலுள்ள பாடல்களின் அமைப்பைக் கூடியவரை பின்பற்றியனவாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.

இலக்கணமல்லாத குறிப்பு: முன்குறிப்பில் காணும் தமிழ் நடையைக் கண்டு ஓடாமல் இதுவரை படித்ததற்கு நன்றி. ”மரபில்” நகைச்சுவை என்ற தலைப்பைக் கண்டு நுழைந்தபின், இத்தகைய தமிழ் நடையைக் கண்டு பயந்தால் எப்படி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக