“ திருவரங்கத்தில் “நம் சடகோபருக்கு” முதன்மை, தலைமை. வைகுந்தத்தில் “நம்பெருமாளுக்கு” முதன்மை, தலைமை. இவ்விரு முதன்மையுள்ளும் இவ்விரு தலைமையுள்ளும், இறைவனாகிய பரன் முதன்மை பெரிதா காதலனாகிய புருடோத்தமன் தலைமை பெரிதா, அல்லது, அடியாராகிய சடகோபர் முதன்மை பெரிதா, காதலியாகிய சடகோபநாயகியின் தலைமை பெரிதா, என்றதுதான் சேடியாகிய இறைவனும் சேடராகிய சடகோபரும் வேதமூர்த்திகளாய் ஒன்றிச் செய்யும் முடிவு காணாததோர் ஆநந்தமீமாஞ்சை (பேரின்ப ஆராய்ச்சி). அருளில் சேடனோடு ஒன்றிய சேடியின் பெருமை மிக்கதா, அன்பில் சேடியோடு ஒன்றிய சேடனின் பெருமை மிக்கதா? சேடிக்கு சேடன் ஆருயிராகும் அருமை மிக்கதா? சேடனுக்கு சேடி ஆருயிராகும் அருமை மிக்கதா? சேடி இறைமையில் உலகம் யாத்துள்ளதா? சேடன் அடிமையில் உலகம் யாத்துள்ளதா? இறைவன் நல்கும் அபயம் மிக்கதா? அடியார் புரியும் அஞ்சலி மிக்கதா? ஈதே அவ்வாராய்ச்சி. ஒன்றோடொன்று நிலைபேர்க்கலாகாது ஒன்றிநிலைத்துள்ளதால் அவ்விருமையின் ஒருமையே தேற்றம். அஃதே விசிட்ட ஒருமை. அத்தேற்றம் தெளிதற்கே அவ்வாராய்ச்சி. “உடனாயிருவரும் நோக்குவாம், உடனாயிருவரும் நுகர்வாம், உடனாயிருவரும் வீரியம் செய்வாம், யாமோதுமிதே தேசுடைத்தாக, இருவரும் அன்பே செய்யக் கடவோம்” (உபநிடதம் தமிழ் செய்தது) என்று மயர்வற மதிநலம் அருளும் குருவாயும் அருளப்பெறும் சீடனாயும் உபநிடதம் தானே செய்யுமோர் ஆநந்தமீமாஞ்சை ஈதே. “புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீயென், செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் – அவிவின்றி – யான் பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாய் உள்ளு” “ஆரென்னை ஆராய்வார் ……. நங்கண்ணனும் வாரானால்” என்று சடகோபரும், “ஞானியெனப் பெறுவானென தாருயிர், தாளிது வென்மதம் தானொன்றாமே” “ஞானியெனப்பெறு மாமனப் பெரியோன் பெறுதற்கரிய வென் பெரும்பேறேயாம்” என்று பரம் பொருளும் சேர்ந்து செய்யும் மீமாஞ்சை அதுவாகும்.”
இது யார் எழுதியதாயிருக்கும் என யூகிப்பது அடியேன் வலையைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு சிரமமாயிருக்காது. அடியேன் யாருடைய பரம ரசிகன் என்பது இங்கே பலருக்கும் தெரிந்த ஒன்றே. இது நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அவர் பதிப்பித்த முதலாயிரத்துக்கு அவரே “அருளிச் செயல் மான்மியம்” என்ற தலைப்பில் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. கிட்டத் தட்ட ஒரு வருடத்துக்கும் மேல் தேடி, நான்கு நாட்களுக்கு முன் கண்டெடுத்த பொக்கிஷம். 46 பக்கங்களில் 46 மாதங்கள் படிக்க வேண்டியவற்றை அடக்கி வைத்திருக்கும் அற்புதக் கருவூலம். இதைப் பற்றி அடியேனிடம் சொல்லித் தேட வைத்தவர் ‘ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவக” ஆசிரியர் ஸ்ரீ T.C. ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி. இது கிடைத்த சந்தோஷத்தில் வரும் ஐப்பசி மாத இதழிலிருந்தே இந்த “அருளிச் செயல் மான்மியம்” முன்னுரையை “ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவக”வில் தொடராக வெளியிட அவர் முடிவு செய்திருக்கிறார். முழுவதும் படித்து ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. இதுவரை சந்தாதாரர்களாக இல்லாதவர்கள் hayagreeva_tcs@yahoo.co.in க்கு மெயில் அனுப்பி சந்தா விவரங்கள் அறிந்து இதை முற்றாக அனுபவிக்கலாம்.
இப்படி எழுத கண்டிப்பாக ஸ்ரீ ஆர். கேசவ அய்யங்காரால் மட்டுமே முடியும் என்று யூகித்திருப்பீர்கள் இல்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக