செவ்வாய், 29 டிசம்பர், 2009

நாணாதாய்! நாவுடையாய்!

14. நாணாதாய் ! எழுந்திராய்!

‘நான் எல்லாருக்கும் முன்னே எழுந்து வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்!’ என்று ஏற்கனவே சொல்லியிருந்தவள், அந்த வார்த்தையை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது பெண்கள் கூட்டம். இப்போது பின்வரும் உரையாடல் நிகழ்வதாகக் கருதலாம்.

                ‘நாங்கள் உன் வீட்டு வாசலில் வந்து நெடும்போதாக நின்று கொண்டிருக்க, நீ சுகமாக உறங்கிக் கொண்டிருக்கிறாயே!’

‘பொழுது விடியவேண்டாமா?’

‘பொழுது விடிந்ததையும் தெரிந்து கொள்ளாமல் தூங்குகிறாயா?’

‘அதற்குச் சாட்சி?’

‘அம்மா ! உன் புழைக்கடைத் தோட்டத்திலேயே சாட்சி இருக்கிறது!’

‘என்ன சாட்சியோ?’

பெண்கள் பாடுகிறார்கள்;

உங்கள் புறங்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

               உள்ளே இருப்பவள் ‘உங்கள் மயக்கம்தான் அதற்குக் காரணம்!’ என்கிறாள். தன் வீட்டு வாசலில் வந்த குதூகலத்தால் அவர்கள் கண்கள் மலர்ந்தனவாம். அவர்கள் விரும்பியபடி இவள் முகம் காட்டாததாலும், வாதப் போரில் தோற்றுப் போனதாலும் அவர்களில் பலர் வாய்களும் மூடிப்போயிருக்க வேண்டும் என்கிறாள். அதனால்தான் செங்கழுநீர் மலர்ந்ததாகவும், ஆம்பல் கூம்பினதாகவும் அவர்கள் பிரமித்ததாகக் கூறுகிறாள்.

     தலைவாசலில் நின்று வீட்டிற்குள்ளே புகுவதற்கும் வழி பெறாது தவித்துக் கொண்டிருப்பவர்கள் இவள் வீட்டுப் புழைக்கடையில் செங்கழுநீர் மலர்ந்திருப்பதையும் ஆம்பல் கூம்பியிருப்பதையும் அறிந்துகொண்டது தான் எப்படி? அதனால்தான் இவர்களைப் பரிகசித்து உள்ளே இருப்பவள் பதில் சொல்லுவதாக ஊகித்துக் கொள்ள இடம் இருக்கிறது. இவர்களோ பொய் சொல்லவும் இல்லை. மற்றை இடங்களில் உள்ள வாவிகளில் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் குவிந்திருப்பதைப் பார்த்துக்கொண்டு வந்திருப்பதால், இவள் வீட்டுப் புழைக்கடைத் தோட்டத்து வாவியிலும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று நிச்சயித்துப் பேசுகிறார்கள்.

             ‘உங்கள் புறங்கடைத் தோட்டத்து வாவியுள்’ என்று இவர்கள் தொடர்பை விட்டுப் பேசுவதுபோல் பேசுவதற்குக் காரணம் இவள் இன்னமும் துயில் உணராது உறங்கிக் கொண்டிருக்கிறாளே என்பதுதான். இப்படித் தோழமைக்கு உரிய அன்பை மறந்து பேசத் தொடங்கிய போதிலும், உள்ளுக்குள்ளே அன்பிற்கு ஒரு குறைவும் இல்லை.

         புழைக்கடைத் தோட்டத்து வாவி குறித்து இவர்கள் பேசியதை இவள் நம்பவில்லை என்று தெரிந்து கொண்டதும் வேறொரு அடையாளம் சொல்லுகிறார்கள்:

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
 
தங்கள் திருக்கோவில் சங்குஇடுவான் போகின்றார்

      காவியாடை புனைந்து வெண்ணிறமான பற்களையுடைய துறவிகள் தங்களுடைய கோயிலில் சங்கு இடும் பொருட்டுப் போகிறார்களே, அது ஒரு சாட்சி என்கிறார்கள். பண்டாரங்கள் தங்கள் கோயிலில் பூஜைக்குச் சங்கு ஊதப்போவதை இங்கே இவர்கள் குறிப்பிடுவதாகக் கருதலாம். அவர்கள் கோயில்களையும் ‘திருக்கோயில்’ என்று குறிப்பிடுவது இவர்கள் சமரச உணர்ச்சியைக் காட்டுகிறது. அதாவது, ஆண்டாள் இவர்கள் வாயிலாகத் தன்னுடைய சமரச உணர்ச்சியை வெளியிடுகிறாள் எனலாம்.

             இங்கே குறிப்பிடும் துறவிகளை வைணவத் துறவிகள் என்று கருதுவோரும் உண்டு. கோவில் கதவைத் திறக்கும்போது மங்களச் சங்கு ஊதுவதை இங்கே குறிப்பிடுவதாகக் கருதலாம். கோவில் கதவைத் திறவுகோலிட்டுத் திறப்பதையும் சங்கிடுதல் என்று குறிப்பிடுவதுண்டு. இந்த அடையாளமும் உள்ளே இருப்பவளுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று கண்டதும், வெளியே இருப்பவர்கள் ஆத்திரம் அடைந்து பேசுகிறார்கள்.

‘நங்காய்! நீ எங்களிடம் சொன்னது என்ன? இப்போது செய்வது என்ன? எல்லாருக்கும் முன்பு படுக்கையை விட்டுக் குதித்து எழுந்து ஓடிவந்து எழுப்புவேன் என்றாயே! இப்போது உன்னை எழுப்ப வந்தவர்களையும் எதிர்த்துப் பேசுகிறாயே!’ என்றெல்லாம் சுடச்சுடப் பொருள் படும்படி பேசுகிறார்கள்.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
என்று எவ்வளவு ஆத்திரமாய்ப் பேசுகிறார்கள்.

       ‘நீ எழுந்து வராமல் போனாலும் குற்றமில்லை: வாயால் அளந்தபடி ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கொஞ்சமும் வெட்கப்படவு மில்லையே, அம்மா!’ என்பதை உள்ளடக்கித்தான் சுருக்கமாக ‘நாணாதாய்!’ என்கிறார்கள். இன்றைய பாஷையில் ‘அடி, சொரணை கெட்டவளே!’ என்று கூப்பிடுகிறார்கள் எனலாம்.

      ‘நாணாதாய்! நாவுடையாய்!’ என்று பரிகசிப்பவர்கள் இவளை இதற்குமேலும் பரிகசிக்க ‘பெண்களில் சிறந்தவள்’ என்று பொருளுடைய ‘நங்காய்’ என்ற விளியையும் உபயோகிக்கிறார்கள்.

முன்னே வந்து எழுப்புகிறவளா நீ?

உங்கள் புறங்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்குஇடுவான் போகின்றார்
எங்கள் முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாஉடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

விளக்கம்

பொழுது விடிந்ததற்குச் சாட்சியை உங்கள் வீட்டுப் புழைக்கடையிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அங்கே தோட்டம் இருக்கிறது: வாவி இருக்கிறது. வாவியுள் செங்கழுநீர்ப்பூக்கள் மலர்ந்திருக்கும் அழகைப் பார் என்கிறார்கள். அந்த அழகே பொழுது விடிந்ததற்கும் சாட்சி என்கிறார்கள். ஒருவன் வாழ, ஒருவன் தாழ்ந்திருப்பதையும் காண்கிறோமல்லவா? அந்த விதமாக, செங்கழுநீர் மலர ஆம்பல் கூம்பியிருப்பதையும் சாட்சியாகக் காட்டுகிறார்கள். தவத்தவர் சங்கிடுவதைப் புழைக்கடைக்கும் போகாமல் படுத்த படுக்கையிலிருந்தே கேட்கலாம் என்கிறார்கள்.

‘நாணாதாய்! நாவுடையாய்!’ என்று ஏசியும், ‘நங்காய்!’ என்று புகழ்ந்தும் பேசுவதில் இவர்களுக்கு இடையே உள்ள நட்பு எவ்வளவு இனிமையாகப் புலனாகிறது பாருங்கள்!

----------------------------------------------------------------------------------------

இங்கு அடியேனுக்கு ஒரு சந்தேகம். பொதுவாக பழைய நூல்களை வலையேற்றுகையில் அவற்றுள் உள்ள எதையும் மாற்றாமல் – பல நேரங்களில் அச்சுப் பிழை என்று தெரிந்தும்கூட- உள்ளது உள்ளபடியே எழுதுவது அடியேன் வழக்கம். இங்கும் அதைப் போலவே “புறங்கடை” என ஆசிரியர் எழுதியபடியே இட்டிருக்கிறேன். ஆனால், இதுவரையில் பார்த்த படித்த பல்வேறு திருப்பாவைப் புஸ்தகங்களிலும் “புழக்கடை” என்றே கண்டுவந்திருக்கிறேன் இங்கு புறங்கடை என்றிருப்பது பாடபேதமா அச்சுப்பிழையா? .யாராவது சொல்வீர்களா?

1 கருத்து: