புதன், 9 மே, 2018

அன்பில் ஸ்ரீ கோபாலாசார்யார் ஸ்வாமியின் அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம்


' அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன் '- அடியரான லோகஸாரங்கர் இவருக்கு ஆட்பட்டு இவரை தோளில் தூக்கிக் கொண்டு சென்றிருக்க, அவருக்கு இவரை ஆட்படுத்தினதாகப் பாடுவது எப்படி, பொருந்துமென்று சங்கை வரலாம். இவ்விஷயத்தை.  ஊன்றி ஆராய வேண்டும்..நடந்த வ்ருத்தாந்தத்திற்கு இந்த வார்த்தை முழுவதும் ரஸமாகப் பொருந்தும்படி பொருள் கொள்ளவேண்டும். ஸ்வாமியின் ஆஜ்ஞை தனக்கு எவ்வளவு அப்ரியமாயிருந்தாலும், இறாய்க்காமல் அதற்கு இணங்குவது தான் ஆட்பட்ட தாஸனுக்கு முக்ய லக்ஷணம். ‘என் தோள் மேலேறு' என்றால், அது தனக்கு அத்யந்தம் அப்ரியமாயினும், அந்தச் சொல்லைக் கேட்கவேண்டும். தன்னிஷ்டம் என்பதை அடி யோடு தள்ளி, ஸ்வாமி இஷ்டத்தையே நிறைவேற்ற வேண்டும். ராமதாஸரான பரதர், கைகேயி  ‘ராஜந்' என்று சொல்லுகையில் மிகவும் புண்பட்டார். அது அவருக்கு அருந் து தம். दासभूतोभविष्यामि (தாஸ பூதோபவிஷ்யாமி) [' நான் பூர்ண ஸந்தோஷத்தோடு ராமனுக்குத் தாஸனாகப் போகிறேன் '] என்று தாயாரிடம் சபதம் செய்தார் ; அப்படியே தாஸரானார். 'ராஜ்யத்தை நீ ஆளத்தான் வேண்டும்’ என்று இவரை ராமன் திருப்பி விடுகையில், அவருக்குத் தாஸரானபடியால் அதற்கு உடன்பட்டார். ராமனுக்கு ஆட்பட்ட தாஸராக இருந்ததேதான் அவர் ராஜ்யம் ஆண்டதற்குக் காரணம். திருப்பா ணாழ்வார் ஒருக்காலும் ஸ்ரீரங்கத்தை மிதிக்கத் - துணியாதவர். ஸ்ரீரங்கத்வீபத்தை மிதிக்க ஸம்மதியாதவரும், அம் மண்ணை மிதிக்க அஞ்சியவருமான அவர், விப்ரரான முனியின் தோளை மிதிக்க ஸம்மதிப்பரோ? அவருக்குத் தாம் ஆட்பட்ட தாஸ ரானதால் தான், அவர் சொல்வது இவருக்குக் - கடோரமாயிருந்தும், அதற்கு உடன்பட்டார். அவரிடத்தில் தாஸ்யகாஷ்டையைப் பற்றியது தான் அவர் அநுமதிப்படி உலகமறிய அவர் தோளிலே. 'அரங்கம் சென்றதற்குக் காரணம். 'உலகறிய....... உலோக சாரங்கமாமுனி தோள்தனிலே வந்து’ என்பது ப்ரபந்தஸாரம். அரங்கத்தில் ஸர்வ லோக ஸாக்ஷிகமாக இந்த விசித்ரக் காட்சி.

2) ப்ருகு  மஹர்ஷியின் அடிபதிந்தது திருமார்பில். ஸ்ரீவத்ஸரான இவ்வாழ்வார் நித்யஸ்தாநத்தில் ப்ருகு வென்னு மடியார் திருவடியை இவர் தாங்கி அவ்வடியாருக்காட்பட்டவர்.

 3) தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு அடுத்த அவதாரம் இவ்வாழ்வார். அரங்கனைத்தவிர ‘மற்றுமோர்  தெய்வமுண்டோ ' என்று கேட்டவர் அரங்கன் தொண்டரே உத்தம தெய்வமென்று துணிந்து அவர் அடிப்பொடியானார். பக்தாங்க்ரி ரேணுவுக்கு அடுத்த அவதாரமான இவர், தாமும் அடியார்க் காட்பட்டு, தொண்டரடிப்பொடி யாகுமாசையை முதற் பாசுரம் முதலடியிலேயே காட்டுகிறார்.

4) அடியார்க்குத் தன்னை யாட்படுத்துவதில் ருசியுள்ள அரங்கனாகிய பித்தன் வரித்து க்ருபையால் பாகவத தாஸனாக்கினாரென்பதை நினைத்து விமலனென்று அவரைப் புகழ்கிறார். தனக்குத் தாஸராயிருப்பவர் பிறருக்கு ஸ்வாமியாவதை சாமாந்ய ப்ரபுக்கள். ஸஹியார்.  இவர் விலக்ஷணமான ப்ரபு வென்று ஆச்சரியப்படுகிறார்.

5) 'மலம்' என்பது சம்சயம். அச்யுதனை ஸேவிப்பவர்க்கு மோக்ஷம் கிடைத்தாலும் கிடைக்கும், கிடையாமற்போனாலும் போகும். அச்யுதன் பக்தர்களைப் பரிசர்யை செய்வதில் இன் புறுபவர்க்கு அதில் சம்சயமே கிடையாது. அடியார்க்கு ஆட்படுத்துவதால் தனக்கு மோக்ஷம் கிடைப்பதில் சம்சயத்தை நீக்குகிறார் என்று ஸூசகம்.


“விண்ணவர் கோன்” :- ' காண்பனவும் உரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய  காதல்' என்றும், 'கோவலனும் கோமானுமான வந்நாள் குரவைபுணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு சேவலுடன் பிரியாத பேடை போல் சேர்ந்து ' என்றும் முநிவாஹந போகப் பாசுரங்களின்படி, கண்ணனிடமே இவ்வாழ்வாருக்குக் காதல் மிகுதி. கொண்டல் வண்ணன் கோவலனாய்  வெண்ணெயுண்ட வாயன் இவருள்ளத்தைக் கவர்ந்ததால் இவர் கண்களும் மனமும் அங்கு லயித்து, இவருக்கு பூமவித்யையிற் கூறிய மோக்ஷலயம் கிடைத்தது. விண்ணவர் கோனும் இவருக்குக் கோவலக்கோன் என்று அநுபவம். அண்டர் கோன் என்று முடிவிலும் ‘கோன்’ என்றே அநுபவம்.

விரையார் பொழில் வேங்கடவன் :- (1) ஆதிமூர்த்தி வானின்றிழிந்து மத்தியில் திருமலையில் அவதரித்து, அரங்கத்தில் பள்ளிகொண்டருளினார். சந்தி ரஸத்தில் இவ்வாழ்வார் முழுகுகிறார். வாநரருக்கும் நரருக்கும் எப்படி சந்தி சமாகமம் நேர்ந்தது என்று பிராட்டி ஆச்சரியப்பட்டாள். அரங்கத்தரவணையான் கர்ப்ப க்ருஹத்தில் ஸ்வப்நத்திலும் நேரக்கூடாததான ஒரு சந்தி இவருக்கு நேர்ந்ததில் இவருக்கு விஸ்மயம். ஸ்வப்நத்தை விழிப்புக்கும் தூக்கத்திற்கும் நடுவிலுள்ள ஓர் சந்தி, சந்த்யம் என்பர். சந்தியில் ஏற்படுவது 'சந்த்யம்’ . ஸ்வப்நத்தில் சேராததெல்லாம் சேர்வது போல் புலப்படும். தூக்கத்தில் ப்ரஹ்மத்திற்கும் ஜீவனுக்கும் ஓர் நெருங்கிய ஸம்ச்லேஷம் ச‌ந்தி). மனம் அஹங்காரம் முதலியன ஜீவனைத் தொடாமல் , ப்ரஹ்மத்தினிடம் ஜீவன் தாய்மார்பில் ப்ரஜை போல் வாத்ஸல்யத்தால் அணைக்கப்பட்டு, மெய்ம்மறந்து, சரமமற்று சுகப்படும் சமயம். ப்ரஹ்மத்தோடு நேரும் அந்த சந்தியில் ஜாதிபேதம், துஷ்டர் ஸாது முதலிய பேத மொன்றுமில்லை. ப்ரஹ்மத்தால் கெட்டியாய் அணைக்கப்பட்டு, மெய் மறந்திருக்கும் தூக்க சமயத்தில் 'திருடன் திருடனல்ல;' 'பாபி பாபியல்ல ; சண்டாளன் சண்டாளனல்ல ' என்று உபநிஷத்து கூறுகிறது. பெருமாள் தன்னைத் தருவித்துத் தனக்கு அவரோடு ஏற்படுத்திய சந்தி ரசத்தில் ஆச்சர்யப்படும் இவ்வாழ்வார் திரும்பவும் திரும்பவும் பலவாறாக சந்தி ரசத்தில் ஈடுபடுகிறார். வேங்கடம் ஓர் சந்தி ஸ்தானம். 'வானவர்கள் சந்தி செய்ய நின்றான்' என்று அங்கு மண்ணோரும் விண்ணோரும் வந்து ஒக்கத் தொழுது சந்தி செய்யுமிடம் ; அரங்கன் ஆடையும் அந்தி . போல் நிறம் ' - அந்தி ஓர் சந்தி. “உந்தி” நடு மேனி யிலிருந்து மேலும் கீழும் சந்தி செய்கிறது. 'तत्रारूढैर् मेहति मनुजैः स्वर्गिभिश्वावती सत्वोन्मेषात् व्यपगतपिंथस्तारतम्यादिभिः । (தத்ராரூடைர்மஹதி மநுஜை: ஸ்வர்கிபிஸ்சாவ தீர்ணை: ஸத்வோமேஷாது வ்யபகதமிதஸ் தாரதம்யாதிபேதை :) என்று ஹம்ஸ சந்தேசத்தில் வடவேங்கடமாமலையில் வானவர் இறங்கி வந்தும், மண்ணோர் ஏறிவந்தும் சாந்தி செய்து சத்வம்  தலையெடுத்துத் தாரதம்ய மன்றியில் தொழுவது வர்ணிக்கப்பட்டது.

2) பெருமாள் திருவடி வாரத்தில் நிற்கையில் “तं ब्रह्मगन्धःप्रविशति” (தம் ப்ரம்மகந்த : ப்ரவிசதி (கௌஷீதகி உபநிஷத்து) என்றது போல ப்ரஹ்ம பரிமளம் வீசி இவருள் புகுகிறது. இங்கே திருக்கமலபாதத்தின் அநுபவம். ' वेलातीतश्रुति परिमळं पादाम्भोजम्” (வேலாதீதச்ருதி பரிமளம் பாதாம்போஜம்)(பகவத்தியான ஸோபாநம்) என்றதுபோல ஸர்வ கந்தனுடைய கந்தம் அலைத்து வீசுகிற அநுபவம். பரம பதத்தி லிருந்த ப்ரஹ்மகந்தம் அவதரிக்கும் பெருமாளுடன் கூட வேங்கடப் பொழில்களில் அமர்ந்து “கடியார் பொழிலரங்கத்தில்” அமர்ந்தது. ஸர்வ கந்தனுடைய திருமேனியி லிருந்தும் ப்ரஹ்ம கந்தம் வீசுகிறது. ''துளபவிரையார் கமழ் நீண்முடி எம் ஐயனார் '' என்று திருமுடி வாசனை அ நு ப வ ம்.

3) वहते वासनां मौळिबन्धे (வஹதே வாஸா நாம் மௌளிபந்தே) யோகத்தில் சுபமான வாசனைகள் முக்யம்)

4) இவருக்கு அடுத்த அவதாரமான கலியன், 'விரையார் திருவேங்கடவா' என்று பாடியதும் இதையொத்தது. “வேயேய் பூம்பொழில் - சூழ்.'

திங்கள், 7 மே, 2018

அன்பில் ஸ்ரீ கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்

3) அமலத்வமென்பதை ஆன‌ந்தாத்ய‌திக‌ர‌ண‌த்தில் நான்கொடு ஐந்தாவ‌தாக‌ ஸூத்ர‌காரர் ஸூசித்திருப்ப‌தும‌ன்றி, அக்ஷ‌ர‌த்ய‌திக‌ர‌ண‌த்தில் அதை ம‌றுப‌டியும் த‌னியாக‌ வ‌ற்புறுத்துகிறார். அம‌ல‌த்வ‌ம் என்கிற‌ நிர்த்தோஷ‌த்வ‌ம் மிக‌வும் முக்ய‌மென்ப‌து ஸூத்ர‌காரர் திருவுள்ள‌ம். அது கார‌ண‌ம்ப‌ற்றி முத‌லிலேயே “அம‌ல‌ன்” என்று அனுஸ‌ந்திப்ப‌து.
            4) ஆதிய‌ஞ்சோதியான‌ ப‌ர‌வாஸுதேவ‌ விக்ர‌ஹ‌மும், ம‌ற்ற‌ விப‌வ‌ (அவ‌தார‌) மூர்த்திக‌ளும், அந்த‌ர்யாமி மூர்த்திக‌ளும், அர்ச்சா மூர்த்திக‌ளும் ஒன்றென்றே சொல்லலாம். ஆதிய‌ஞ்சோதி யிலிருந்து ம‌ற்ற‌வை எல்லாம் உதித்து, முடிவில் அதிலேயே ல‌யிக்கும். பெருமாள் உல‌க‌த்திற்கு ஆதிகார‌ண‌மாவ‌துபோல், ம‌ற்ற‌ திவ்ய‌ விக்ர‌ஹ‌ங்க‌ளுக்குப் ப‌ர‌விக்ர‌ஹ‌மான‌ ஆதிமூர்த்தி கார‌ண‌ம். “ஆதி” என்று அதையும் ஸூசிக்கிறார்.
ஆதிம‌றை யென‌வோங்கு ம‌ர‌ங்க‌த் துள்ளே
ய‌ருளாருங் க‌ட‌லைக்க‌ண் ட‌வ‌ன் ந‌ம் பாண‌ன்
                                                               (ப்ர‌ப‌ந்த‌சார‌ம்)
என்ப‌தையும் நினைக்க‌வேணும்.
               5) “அம‌ல‌ன்” என்ப‌தால் “விஜ்ஞான‌ம்” என்றும் ஏற்ப‌ட்ட‌து. விஜ்ஞான‌மும் ஆதியுமான‌ ப‌ர‌வாஸுதேவ‌ன் ரூப‌ங்க‌ளே ம‌ற்ற‌  வ்யூஹ‌ ரூப‌ங்க‌ளும் என்று சொல்லும் விஜ்ஞாநாதிபாவ‌ ஸூத்ர‌த்தை “அம‌ல‌ன் ஆதி” என்று ஸூசித்து, பாஞ்ச‌ராத்ர‌ ப்ராமாண்ய‌த்தை ஸூத்ர‌காரர் ஸ்தாபித்ததை ஸூசிக்கிறார். அதைக்கொண்டு அர்ச்சாதிக‌ளுக்கு திவ்ய‌ ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌த் த‌ன்மையை ஸ்தாபிக்க‌ வேண்டும்.
               6) निर्वाणमय एवायमात्माज्ञानमयो अमल: (நிர்வாண‌ம‌ய‌ ஏவாய‌ மாத்மாஞான‌ம‌யோ அம‌ல‌:) என்ற‌ப‌டி ஜீவ‌ ஸ்வ‌ரூப‌மும் அம‌ல‌ம். ப்ர‌க்ருதி ம‌ல‌த்தைப் போக்கிவிட்டால், அம‌ல‌மான‌ ஜீவாத்ம ஸ்வ‌ரூப‌ அம‌ல‌மான‌ ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்திற் புகுந்து பிரியாக் க‌ல‌வி பெறுகிற‌து. ந‌ம்முடைய‌ அம‌ல‌ ஸ்வ‌ரூபாதிக‌ளையும் அனுஸ‌ந்தான‌ம் செய்ய‌வேண்டும். அம‌ல‌னென்று அத‌ன் நினைவும் சேரும். “ஆதி” மூல‌ கார‌ண‌ப் பொருள். அத்தாவான‌ ஸ‌ம்ஹ‌ரிக்கும் பொருள். அம‌ல‌த்வ‌ம் இருவ‌ருக்கும் ஒருவாறு கூடுவ‌தாக‌ச் ச‌ங்கித்தாலும் ஆதிகார‌ண‌த்வ‌ம் ப‌ர‌னுக்கே யுள்ள‌து. “அம‌ல‌ன்” என்று ம‌ட்டும் சொன்னால், ஜீவ‌னுக்கும் ஒரு விதத்தில் அது பொருந்திவிடுமென்று ச‌ங்கை வ‌ரும். ஆதி கார‌ண‌த்வ‌ம் ஈச்வ‌ர‌ ல‌க்ஷ‌ண‌ம். “ஆதி” என்ப‌த‌ற்கு முற்பாட‌ன் என்றும், “ஆதீய‌தே” – எல்லோராலும் ப‌ரிவுட‌ன் போற்ற‌ப் ப‌டும்ப‌டி ஸ்ப்ருஹ‌ணீய‌ன் என்றும் பிள்ளை அருளிய‌ ர‌ஸ‌ம். பிரான் – ர‌க்ஷ‌க‌ன் ஸ்திதி கார‌ண‌த்வ‌த்தைத் த‌னியே நிரூபிக்கிறார். ஸ்வாமித்வ‌த்தையும் கூறுகிறார். 

வியாழன், 3 மே, 2018

அன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்


அமல னாதிபி ரானடி யார்க்கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமல னின்மல னீதிவானவ னீண்ம திளரங்கத்தம்மான் றிருக்
கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே
.  (1)

(   1)அமலன் – தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்து பெருமாளை யணுகுவதால் பெருமாளுக்கு என்ன அவத்யம் விளையுமோவென்று மிகக் கவலை. நம் ஞானத் தெளிவினால் அக்கவலையை நிவர்த்திக்கிறார். பெருமாளுக்கு ஒன்றும் ஹேயமில்லை. எல்லாம் அவருக்கு அனுகூலமே. அவர் உபயலிங்கர். அகிலஹேய ப்ரத்யநீகர். அவர் ஸ்வபாவத்தாலேயே அமலர். யாதொரு மலமும் தன்னைத் தீண்ட முடியாத ஸ்வபாவமுடையவர். அவர் எல்லார் ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக ஓர் விக்ரஹத்தோடு வஸிப்பவர். न ततो विजिगुप्सते (ந ததே விஜிகுப்ஸதே) அவர் எவர் நெஞ்சினுள்ளும் நெருங்கி உட்புகுந்து வஸிக்கக் கூசுவதில்லை. இந்த அற்புதமான ஸ்வபாவத்தைத் திரும்பவும் திரும்பவும் நினைந்து பேசுவதும், தம்மால் வரக்கூடிய அவத்யத்திற்குப் பயந்தே. “அமலன்”, “நிமலன்”, “விமலன்”, “நின்மலன்’ “அரங்கத்தமலன்” என்று இச்சிறு கிரந்தத்தில் ஐந்து தடவை “மலமற்றவன்”, “மலம் நெருங்கக்கூடாத ஸ்வபாவ சக்தியுடையவன்” என்கிறார். “வளவேழுலகில்” போல் பயந்து உடனே பரிஹரித்துக் கொள்கிறார். பெருமாள் திருமுன் நிற்பதே இவருக்கு ஸங்கோசமாயிருக்கிறது. மிகவும் விரைவாகத் தம் ப்ரபந்தத்தை முடித்துவிட ஆசைப்படுகிறார். பெருமாள் நிர்ப்பந்தத்தை எத்தனை நாழிகைதான் இவர் ஸஹிப்பார்? நீண்டதொரு க்ரந்தம் செய்யத் தெரியாதவரல்லர். ஒரே தசகம் பாடி உடனே மோக்ஷத்தைப் பெறுவதால் அகன்று போவதற்கும் போதில்லை.

2) ஆதி என்று காரணத்வத்தைத் தொடக்கத்திலேயே அனுஸந்தித்துப் பேசுகிறார். சில வித்யைகளில் காரணத்வத்தையும் சேர்த்து அனுஸந்திப்பதில் ருசி. कारणं तु ध्येय: (காரணம் து தயேய:) (அதர்வசிரஸு) என்றபடி த்யானத்திற்கு விஷயமான பொருள் ஆதிகாரணமே. ஆகிலும் காரணத்வத்தை சேர்த்தும் சேர்க்காமலும் உபாஸிக்கலாம். இவர் காரணத்வத்தைச் சேர்த்து உபாஸிப்பதில் ருசியுள்ளவர். உலகத்திற்குக் காரணமாவதில், விகாரம் அசுத்தி ஸம்பந்தம், ஸாவயவத்வம் ஜடத்வம் முதலிய பல தோஷங்கள் வரக்கூடும். அந்த தோஷங்கள் ஒன்றும் வருவதில்லை, ப்ரஹ்மம் காரணமாகவிருந்தும் தன் சுத்தியைக் கொஞ்சமேனும் விடுவதில்லை, அசுத்தியென்பது தீண்டுவதேயில்லை என்று சோதக வாக்கியங்கள் நமக்குத் தெளிவிக்கின்றன. காரணத்வத்தை “ஆதி” என்று சொல்லுவதற்கு முன்பே, இவர் “அமலன்” என்று அசுத்தி ப்ரஸங்கத்தை வாரணம் செய்கிறார். ஸத்யத்வம், ஞானத்வம், அநந்தத்வம், ஆநந்தத்வம், அமலத்வம் என்னும் ஐந்து குணங்கள் ஸர்வ வித்யைகளிலும் உபாஸ்யம். இந்த குணங்களின் அறிவில்லாமல் ப்ரஹ்மத்தின் அறிவே சித்திக்காது. सत्यं ज्ञानमनन्तं भ्रह्म (ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம) (ஆனந்தவல்லி) “அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம், அதீர்க்கம்” (ப்ருஹதாரண்யகம் – அக்ஷரவித்யை), “அசப்தமஸ்பர்சம்” (கடவல்லி),  முதலிய சோதக வாக்யங்கள் “அமலன்” என்பதால் தொடக்கத்திலேயே ஸூசிக்கப் படுகிற அழகு மிக ரஸிக்கத் தக்கது. தைத்திரீயத்திலும் . सत्यं ज्ञानमनन्तं भ्रह्म (ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம)(ஆனந்தவல்லி) என்று முதலில் சோதக வாக்கியத்தைப் படித்து, பிறகு लस्माद्वा एतस्मादात्मन आकाशस्स्संभूत: आकाशद्वायु” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசத்வாயு:) என்று காரண வாக்யத்தைப் படித்தது. आनन्दादय: प्रधानस्य (ஆனந்தாதய: ப்ரதானஸ்ய) என்ற ஸூத்திரத்தில் ஆநந்தத்வம், ஸத்யத்வம், ஞானத்வம், அனந்தத்வம் என்ற குணங்களை எல்லா வத்யாநிஷ்டரும் உபாஸித்தே தீரவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இங்கே “அமலன்” என்றது அந்த நாலுக்கும் உபலக்ஷணம். நிர்த்தோஷத்வம் மிகவும் முக்யம். ஆகையால் அதை முதலில் பேசி மற்ற நான்கையும் உபலக்ஷண முறையாக ஸூசிக்கிறார். இங்கே ஸூசிக்கும் ஆனந்தத்வத்தை “என் அமுதினை” என்று முடிவில் ஸ்பஷ்டமாகக் கூறுகிறார். ஆனந்தத்தோடு முடிக்கிறார். एतं आनन्दमयमात्मानानं उपसंक्रम्य (ஏதம் ஆனந்தமயமாத்மாநம் உபஸம்க்ரம்ய) என்றபடிக்கு यत्र नान्यत्पश्यति (யத்ர நாந்யத் பஸ்யதி) என்று நிரதிசய ஸுகத்தையும் விளக்கும் பூமவித்யைப் படிக்கும் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத, அதீதமான ஆனந்த ப்ரஹ்ம ப்ராப்தியோடு முடித்துத் தாமும் பேரின்ப முடிவு பெற்றார்.

வியாழன், 19 ஏப்ரல், 2018

அன்பில் ஸ்ரீ கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்


        ஸ்ரீவத்ஸத்தைப்பற்றி பாகவதம் தசமஸ்கந்தம் முடிவில், ப்ருகுமஹர்ஷி பொறுமை பரீக்ஷை மூலமாய்ப் பரத்வ பரீக்ஷை செய்த கதையொன்றுண்டு. அடியாராகிய ப்ருகுமஹர்ஷியின் அடியடையாள மென்ற ப்ரஸித்தியோடு ஸ்ரீவத்ஸம் என்ற மரு விளங்கவேண்டுமென்று பெருமாள் அனுக்ரஹம். ஸ்ரீவத்ஸத்தை ஸ்ரீதேவி வத்ஸன் போல – குழந்தையைப்போல – லாளநம் செய்ததாகவும், அதனால் ஸ்ரீவத்ஸம் என்று திருநாமம் என்றும் ஸ்ரீசங்கராசார்யார் விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்தில்** பாடுகிறார். திருமருவும் திருமார்பில் ப்ருகுவின் பாதம் உதைத்தது. அந்தப் பாத சிந்ஹத்தை பகவான் நித்யமாய் ஸ்ரீவத்ஸ வ்யாஜ்யத்தால் வஹிக்கிறார். இது பெருமாள் தன்னை அடியார்க் காட்படுத்தும் முறையைக் காட்டின வழி. ‘திருவார மார்பதன்றோ’ என்று இவ்வாழ்வாரே, திரு மருவின மார்பில் ஸ்ரீவத்ஸத்திற்கும் இடம் கொடுத்த பெருந்தன்மையி லீடுபடுகிறார். லோகஸாரங்க முனியின் தோளில் எழுந்தருளுகையில், இவர் திருவடிகள் அம்முனிவர் மார்பில்தானே ஸ்பர்ஸித்திருக்க வேண்டும்! பக்தரான ப்ருகு மஹர்ஷியின் பாதம் பெருமாள் திருமார்பில் ஸ்பர்ஸித்து ஸ்ரீவத்ஸம்போல் அபிமானமேற்பட்டது போல், இந்த ஸ்ரீவத்ஸாம்சர் பாதம் பக்தரான லோகஸாரங்க முனிவர் மார்பில் ஸ்பர்சித்தது. 

               இவர் கண்ணனைப்போல ரோஹிணீ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். “காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற் பாண்பெருமாள்” என்றபடி, இவரும் சடகோபரைப்போல் க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமே வடிவெடுத் துதித்ததுபோல் இருந்தவர். कृष्णतृष्णा  तत्व- मिवोदितम् (க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம்) (பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்) என்று நம்மாழ்வார் விஷயத்தில் பட்டர் ஸாதித்தது இவருக்கும் பொருந்தும். “தீவிர க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம்” என்று “கடியகாதல்” என்பதால் ஸூசநம். முக்தி பலம் பெற்ற கடைசிப் பாசுரத்தில் “கொண்டல்வண்ணன் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்” என்று பாடுகிறார். अन्तकालेतु मामेव स्मरन् मुक्त्वा कळेबरन्| य: प्रयाति स मद्भावं यातिनास्त्यत्र संशय; || (அந்தகாலேது மாமேவ ஸ்மரந் முக்த்வா களேபரம்| ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதிநாஸ்த்யத்ர ஸம்சய:) என்பது கீதை.

               இந்த ப்ரக்ருதி மண்டலத்தை விட்டுப் பரமபதம் பெற, பகவானுடைய அர்ச்சிராதி கதி ஸாமாந்யமான மார்க்கம். அர்ச்சிஸு முதலிய அதிவாஹிக கணங்கள் பகவந் நியமநத்தால் வஹநம் செய்பவர். சிலருக்கு வேறு வேறு வழியாக வஹநமென்று அதிகரண ஸாராவளியில் चैद्यादीनाम् (சைத்யாதீ நாம்) என்கிற ச்லோகத்தில் காட்டப் பட்டது. சிசுபாலாதிகளுக்கும், அயோத்தி நகர் சராசரங்களுக்கும் வெவ்வேறு விதமாக மோக்ஷமடைய வழிகள் ஏற்பட்டன. சிலருக்கு கருட வாஹனம், இவருக்கு முனி வாஹனம்.

               “பாண்பெருமாள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்! சீர்மறையின் செம்பொருள் செந்தமிழா லளித்த பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள் “ என்றபடி இவர் பாசுரங்கள் வேதாந்த ஞானம் முழுமையும் உட்கொண்டவை. யோகாப்யாஸம் செய்து செய்து பகவத் குணங்களைப் பரவசமாய்ப் பாடிப் பாடி இவர் தத்வ ஞானம் மேலும் மேலும் வளர்ந்தது. “வேதநூற் பிராயம் நூறு” “பாதியு முறங்கிப் போகும்”. ஐம்பது வருஷம் ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற லயமாக இருக்கும் என்றார். இவர் பிராயம் ஐம்பதே. இவரது பிராயமான ஐம்பது வருஷமும் இவருக்கு யோகஸமாதி லயமாகவும் கான லயமாகவுமாகவே சென்றது. நாரதருக்கு ஞானத்தையும் ஐச்வர்யத்தையும் தம்மிடம் ஸ்நேஹ பாவத்தையும் கேசவன் தந்ததாக அவர் अदान्मे ज्ञानमैश्वर्यम् स्वस्मिन्भावं च केशव: (அதான்மே ஞான மைச்வர்யம் ஸ்வஸ்மின் பாவம் ச கேசவ:)(ஸ்ரீபாகவதம் 1-5-39) என்று கூறினார். இத்திருப்பாணாழ்வாருடைய ஞானமும் ப்ரேம பாவமும் அளவற்றவை. இவருடைய பத்துப் பாசுரங்களிலும் ஜ்வலிக்கும் ஞான பக்திகளை அனுபவிப்போம்.       

தொடரும்
** ஸ்ரீசங்கர பகவத் பாதரின் "ஸ்ரீவிஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்துக்கு
அன்பில் ஸ்வாமியின் அருமையான விரிவுரை
http://thiruppul.blogspot.in/search/label/sri%20vishnu%20pathaadhi%20kesaantham
உள்ளது. விரும்புபவர்கள் அங்கு படிக்கலாம்