செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்--3

முதல் அங்கம்            மூன்றாங்களம்

இடம்    பெரியாழ்வார் திருமாளிகை

(பெரியாழ்வாரும் அவர் மனைவி விரஜையும் பேசிக்கொண்டிருக்கின்றனர்)

விரஜை:—நாதா! உலகப்பற்றை யறவே ஒழித்துவிட்டீர்களே! நமது அருந்தவப் புதல்வி பக்குவ நிலைக்கு வந்துவிட்டனளன்றோ? இன்னும் ஏன் அவளுக்கு மணம்முடிக்க மனங்கொள்ளவில்லை? அதைப்பற்றி உங்களுக்குக் கவலையேயில்லை போலும்!

ஆழ்வார்:—கண்மணி! இல்லாமலென்ன! உலகம் நிறைந்த புகழால் திருமகள்போல் வளர்க்கும் நம் மகளுக்கு நாடுநகருமறிய நல்லதோர் கல்யாணம் செய்யவே நான் கருதுகிறேன். ஆனால் நம் புதல்வி கோதை அறிவிலும், கல்வியிலும், ஒழுக்கத்திலும் இணையின்றி விளங்குகின்றனளன்றோ? அவள் மன மிவ்வுலகில் எவரைத்தான் நாடும்?அழகிலு மறிவிலு மவளுக்குத் தக்க வரன் இவ்வுலகில் ஏது? அதனால்தான் என்ன செய்வதென்றே தோன்றாமல் திகைத்துக் கொண்டிருக்கிறேன்.

விரஜை:- நாதா! பகுத்தறிவற்ற வொரு கொடியுமோர் கோலைத் தழுவிடிலன்றோ வாழுகின்றது? பெண்ணாகப் பிறந்த வொருத்தி இவ்வுலகினில் நாதனிலாமல் வாழுவதெங்ஙனம்?

ஆழ்வார்:—உண்மைதான். ஆனால் கொடியும் தன்னைத் தாங்கவல்ல கோலையே நாடுகின்றது. அணங்கிலும் பேரழகு வாய்ந்த பெண்மணி ஆண்டாளைத் தரிக்க வல்லவொரு கோல் இவ்வுலகினில் எங்கே யுளது? அதனால்தான் இவ்வுலகின்கண் அவள் மனம் பற்றைத் துறந்துவிட்டது.

விரஜை:—ஆகில் அவள் எண்ணமென்ன? மணமே வேண்டாமென்கின்றனளா? பாரதந்திரியமன்றோ பேதையர்க்கழகு.

ஆழ்வார்:—ஆம், அதுகொண்டே அவள் மனம் கோல் தேடியோடும் கொடிபோல் மால் தேடி ஓடுகின்றது. “நாமுகக்கும் தேவர்” என்று நாகணைமிசையான்மிசை கடல்போலும் காமத்தனளாயினள். நம் தந்தை தந்தேவரை வருவிப்பரேல் அது காண்டுமென்றுறுதி பூண்டிருக்கின்றனள். ஆனால் இளமடந்தையாகையால் இவ்வுண்மையை வெளியிட வியலா துழல்கின்றனள்.

விரஜை: – (ஆச்சரியத்துடன்) திருமாலையா! இதென்ன விந்தை! மறையவரும் மறைமுடியுமின்னும் அவர் கழலிணை காணவில்லையே! இஃதென்ன பைத்தியம்? எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விடுவாருமுண்டோ?

ஆழ்வார்:—பேதாய்! அவ்வாறு கூறவேண்டாம். பத்துடை யடியவர்க்கு ஸர்வேசுவரன் மிகவும் எளியவனன்றோ! பிறர்களுக்கவன் அரியவனே! அரசனுக்குச் சத்ரசாமரங்கள்போல அவனுக்கு பரத்வ ஸௌலப்யங்கள் ஒருங்கே அமைந்துள்ளன வென்பதை நீ கேட்டறியாய்போலும்.

விரஜை:—நாதா! என்னவெனிலும் ஈசுவரன் நாயகனா யமைவது இயலாத காரியம். இதற்குப் பிராட்டி சம்மதம் வேண்டாமோ? பிராட்டியார் முகம் நோக்கிய பின்னர்தானே எக்காரியமும் செய்வதவனியல்பு. எனவே இது ஒருநாளும் நடவாது. எதற்கு இந்தப் பேராசை?

ஆழ்வார்:—பேதாய்! அப்படி நினைக்க வேண்டாம். நமது கோதை தன் மனதைக் கொள்ளை கொடுத்ததுபோல அவன் மனதையும் கொள்ளை கொண்டுவிட்டனள். ஆகவே இது நடவாத காரியமன்று.

விரஜை:- நீங்கள் இதை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?

ஆழ்வார்:- ஒவ்வொரு நாளும் மாலுக்கெனக் கொய்த மலர்களை யிவள் சூடிக் காறை பூண்டு, கண்ணாடிகண்டு, தன் கைவளை குலுக்கி, கூறை யுடுத்தி, தன் கொவ்வைச் செவ்வாய் திருத்திப் பின்னர் களைந்து வந்தனள். அம்மலர்களை மலர்மங்கைமணாளன் மகிழ்வுடன் ஏற்று வருகின்றனன். தன் மணாளன் இம்மலர்களைச் சூடியதும் மலர்மகளும் மண்மகளும் அவனைப் பொறாமையுடன் பார்க்கின்றனர். அக்கொடிய பார்வையை அவன் லக்ஷ்யம் செய்யவேயில்லை. நான் நேற்றுக் கொண்டுபோன மாலையில் கேசம் சம்பந்தப் பட்டிருந்ததால் சாத்தாமல் திரும்பினேன். அப்பொழுது தினந்தோறும் கோதை சூடிக் களைந்த மாலைகளையே சாத்தும்படி பகவான் எனக்குக் கட்டளையிட்டார்.

விரஜை:- (ஆச்சரியத்துடன்) அப்படியா? என்ன பெருமை நம் புதல்விக்கு?இவளைப் பெண்ணெனப் பெறும்படி யாம் என்ன நோன்பு நோற்றோமோ?

ஆழ்வார்:- இப்பொழுதாவது தெரிந்ததா? அவள் திருமணத்தைப்பற்றி நினைக்க நாம் கொஞ்சமேனும் அருகரில்லை. திருமார்பனே தேடிவரும் சீர்மையினளன்றோ அவள்? ஆயினுமவ்விருவர் சேர்த்திருக்கும் நம்மாலானதைச் செய்து நாம் ஸத்தைப் பெற வேண்டும்.

விரஜை:-  ஆம். அதற்கென்ன தடை? இதோ! அவளை யெனது இரு கரங்களாலும் மார்புறத் தழுவ வேண்டும். போய் வருகிறேன். விடை கொடுங்கள்

ஆழ்வார்:--  நானும் வருகிறேன்.

(இருவரும் செல்கின்றனர்)

முதல் அங்கம் முற்றிற்று.

திங்கள், 15 ஏப்ரல், 2013

Saranagati deepikai tele-upanyasam dtd 15-04-2013

जन्तोरमुष्य जनने विधि शम्भु दृष्टौ

रागादिनेव रजसा तमसा च योगः।

द्वैपायनप्रभृतयस्त्वदवेक्षितानां

सत्त्वं विमुक्ति नियतं भवतीत्युशन्ति॥ 13

ஜந்தோரமுஷ்ய ஜநநே விதி ஶம்பு த்ருஷ்டௌ

ராகாதிநேவ ரஜஸா தமஸா ச யோக: |

த்வைபாயநப்ரப்ருதயஸ்த்வதவேக்ஷிதாநாம்

ஸத்த்வம் விமுக்தி நியதம் பவதீத்யுஶந்தி.. || 13

இன்று (15-04-2013) தனது “சரணாகதி தீபிகை” டெலி- உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்வாமி மேலே இருக்கும் 13வது ஸ்லோகத்தை விவரிக்கிறார்.

மீடியாபையர் லிங்கிலிருந்து நகலிறக்க 

http://www.mediafire.com/?b6z6766o5l4uxxb

நேரடியாகக் கேட்டு மகிழ

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

சரணாகதி தீபிகை ச்லோகம் 12

त्वां मातरं पितरं सहजं निवासं

सन्तः समेत्य शरणं सुहृदं गतिं च।

निःसीमनित्यनिरवद्यसुखप्रकाशं

दीपप्रकाश सविभूतिगुणं विशन्ति॥१२॥

த்வாம் மாதரம் பிதரம் ஸஹஜம் நிவாஸம்

ஸந்த: ஸமேத்ய ஶரணம் ஸுஹ்ருத³ம் க³திம் ச|

நி:ஸீமநித்யநிரவத்³யஸுக²ப்ரகாஶம்

தீ³பப்ரகாஶ ஸவிபூ⁴திகு³ணம் விஶந்தி ||12||

is the sloka on which Natteri Swamy delivered his tele-upanyasam on 08-04-2013.

It may be downloaded from

http://www.mediafire.com/?91o34nxxt2tccvp

and it may be listened to online here

ஸ்ரீ ஆண்டாள் திருமணம் 2

முதல் அங்கம்
2வது களம்

இடம்
வடபெருங்கோயிலுடையான் சந்நிதி
வில்லிநகர்

கையில் குடலையுடன் பெரியாழ்வார் வருகிறார்.

பெரியாழ்வார்:--  (ஸாஷ்டாங்கமாக வணங்கி யெழுந்து மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி) நாரணா! மஹாப்ரபோ! வடபத்ரசாயிந்! ஸர்வலோக சரண்ய! கருணைக்கடலே! எஞ்சலினென்னுடை யின்னமுதே! நன்மை தீமைகள் ஒன்றுமறியா யான் ஓவாதே நமோ நாரணா என்பேன். தோட்டமில்லவள் ஆத்தொழு ஓடைதுடவையும் கிணறுமிவை யெல்லாம் வாட்டமின்றி உன் பொன்னடிக்கீழே வைக்கின்றேன். அடியேன் உண்ணாநாள் பசியாவதொன்றில்லை. நமோ நாரணா வென்றெண்ணா நாளே எனக்குப் பட்டினி நாள். ஆசையினாலே உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோமகூபங்களாய், கண்ணநீர்கள் துள்ளம்சோர வுன்னை நாள்தொறும் தொழுதேத்தும் நன்மையே எனக்கருள் செய்யவேண்டும். கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் அழுந்திடக் கிடந்துழலு மென்னை வல்வினைகள் மாற்றி, பங்கப்படாவண்ணம் செய்த நின்னருள் கண்டாய் இவ்வுலகினில் மிக்கது. பிரமகுருவாகி வந்து நீயென் வன்னெஞ்சம் புகுந்து, என் சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்த விப்பண்பினை என்னென்பேன்! பையரவினணைப் பள்ளி கொள்கின்ற பரமமூர்த்தி! பெற்ற தாயர் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்த பாவகாரிகள் படர்ந்த விப்பாரினில், மரகதமலை போல் நிலைபெயராமல் நீ படுத்திருக்கும்படி யென்னே! குடையும் செருப்பும் இலாமல், கடியவெங்கானிடைக் கன்றின்பின்போன நின் சிறுக்குட்டச் செங்கமலவடிகள் வெதும்பி, கண்கள் சிவந்து, உடலம் சிதைந்ததனாலோ அயர்ந்து நீ உறங்குகின்றனை! உன்னையிதுகாறும் தனியே விட்டு இருந்த என்னின் மனம் வலியானொருவனுண்டோ! பஞ்சாயுதங்களே! என் சிறுக்குட்டனின் பள்ளியறையைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே! சங்கே!
அறவெறிநாந்தகவாளே! அழகியசார்ங்கமே! தண்டே!
இரவுபடாமலிருந்த வெண்மர் உலோகபாலீர்காள்!
பறவையரையா! உறகல்பள்ளியறைகுறிக்கொள்மின்!

   ஆஹா! என்ன அதிசயம்! வானிளவரசு வைகுந்தக் குட்டன் ஆயர் குலக் கொழுந்தாயினன். என்ன கருணை! அவன்றன் கருணை எல்லையை உள்ளவாறு கண்டாரொருவருளரோ! அவன்தான் கண்டனனோ! இதை யறியாதவனுக்கு “ஸர்வக்ஞன்” என்று பட்டமாம்! ஆஹா! எல்லையிருந்திடிலன்றோ அவன் காணமுடியும்! அதனால்தான் அப்பட்டம் அவனுக்கு நிலைத்து நிற்கிறது. ஸர்வேசுவர! உன் உந்திக்கமலத்துள்ளிருந்தும் அயன்  நின்னடிக்கமலம் காண்கின்றிலன். அத்தகைய நீ கேவலம் ஆயர் பெண்டிருக்கு அணுக்கனாய் அவதரித்தனையே! இஃதொன்றே உனது கருணைக்கும் ஸௌலப்யத்துக்கு மளவின்மையை நன்குணர்த்துகின்றது. உறி வெண்ணெயுண்டு, ஊரார்களெல்லோரும் காண வுரலோடு கட்டுண்டடிபட்டு, கன்றுகள் மேய்த்து நின் தோழரோடு கலந்துவரும் நினது எளிமைதான் என்ன? இத்தகையனான உன்னைச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த அசோதையின் பாக்கியமே பாக்கியம். உன் பிள்ளைச் சுவையெல்லாம் பெற்றாள் அசோதை. உன் திருவிளையாடல்களைக் கண்டு களிக்குமந் நங்கையின் கண்களே கண்கள். மற்றவை புண்களேயாகும். அதெல்லாம் எனது காலங்களில் நடைபெறக் கூடாதா? அசோதையைப்போல் யான் களிக்கும் நாட்களும் கிடைக்குமோ? இதென்ன பைத்தியம்? அவை நடந்து எத்துணை நாட்களாகிவிட்டன! அதைப்பற்றி யினிநினைப்பதால் யாது பயன்? ஆகிலுமென்ன? எதற்கும் மனந்தானே காரணம்?முற்காலத்தில் யசோதை உனக்கு மலர்சூட்டி மட்டற்ற மகிழ்ச்சிகொண்டதுபோல், யானும் ஏன் மகிழுறக் கூடாது?

ஆநிரைமேய்க்க நீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம் திரிந்து நின்கரிய திருமேனிவாட
பானையில்பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே! செண்பகப்பூச் சூட்டவாராய்.

(என்று ஒரு மாலையை எடுத்து உற்றுப் பார்த்துக் கண்களில் நீர் வடிய)

   ஐயோ! இது என்ன பாபம்? யார் இவ்வடாத காரியம் செய்தது? பகவதபசாரத்திற்கல்லவா உள்ளானேன். இதில் என்னைத்தவிர வேறு யாரை நொந்து கொள்வது? கோவிலுக்கு மாலை கொண்டுவருமுன்பே நான் ஏன் கவனித்திருக்கக் கூடாது? ஐயோ! எம்பிரானது திருவுள்ளமிதனால் எவ்வளவு சீற்றங்கொண்டதோ? கேசம் சம்பந்தப்பட்டால் எவ்வளவு அசுத்தம்! இம்மாலையில் அது சம்பந்தப்படவேண்டிய காரணமென்ன? தன்னையறியாமல் எவருடையதேனு மிதில் சேர்ந்துவிட்டதோ? ஆம். அப்படித்தான். நமது இல்லத்தில் ஒருவரும் தன்னையறிந்து இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். (மறுபடியும் மாலையை உற்றுநோக்கிப் பெருமூச்சுடன்) இவ்வளவு நீண்டும் கறுத்துமுள்ள கேசம் கோதையினுடையதுதான். சந்தேகமில்லை. அவள் சகிகளுக்குக்கூட இவ்வளவு நீண்ட கூந்தல் கிடையாது. ஆஹா! அவள்தானா இக்கொடுமையை யிழைத்தனள்? அடி கொடியவளே! அபசாரத்திற்காளாக்கிவிட்டாயே? இக்கொடிய எண்ணம் உனக்கேன் உண்டாயிற்று? தினந்தோறு மிவ்விதந்தான் நீ செய்துவருகின்றனையோ? இன்று நீ அகப்பட்டுக் கொண்டனை. ஹூம்! பகவானுக்குச் சாத்திக் களைந்தபின் மணம் குன்றிவிடுமோ?

     சே! இதென்ன எண்ணம்! நமதுகுழந்தை யிவ்வாறு செய்திருப்பாளா? ஒருக்காலுமில்லை. அவள்தான் மஹாபக்தையாயிற்றே! என்னிடம் அழகிய மணவாளன் வைபவத்தை எவ்வளவு குதூகலமாய்க் கேட்பாள்! அவ்வமயம் அவளுக்குண்டாகு மாநந்தக் கண்ணீரையும் மயிர்க்கூச்சலையும் நான் நேரில் கண்டிருக்கின்றேனே! அவளா இவ்வாறு செய்தனள்? இல்லவே இல்லை. ஒருவேளை அவளையறியாமலவளது கேசம் இதில் சம்பந்தப் பட்டிருக்கலாம். அவளபசாரம் செய்யவில்லை. நான்தானவளை நிந்தித்தால் பாகவதபசாரத்திற்கு மிலக்கானேன்.

      ஐயோ! நான் மனதை எவ்விதம் சமாதானப் படுத்திக்கொண்டால்தானென்ன? அது நிம்மதி யடையவில்லையே! இக்கேசம் தலையில் சூடிக் களைந்தபொழுது சிக்குண்டறுந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது. இல்லாவிடில் மாலையைச் சுற்றிச்சுற்றி எவ்வாறு இருக்க முடியும்? இது அறியாமையால் நடந்த காரியமன்று. சந்தேகமேயில்லை. ஆஹா! ஸ்திரீகளின் சுபாவந்தானென்ன! அவர்களதியல்பினை யிவ்வுலகினில் யாவரே அறிபவர்? அவர்கள் மனமாழ்கடலினுமாழமுடைத்தே. அக்கொடியவள் பகவானிடம் பக்தியுள்ளவள்போல் எவ்வளவு பாசாங்கு செய்தனள்! நான் உண்மையென்றல்லவா அகமகிழ்ந்திருந்தேன்! எல்லாம் வேஷமா? இதோ உனக்குத் தகுந்த தண்டனை விதிக்கிறேன். இனி விஷ்ணு பக்தியில்லாத வுன்னோடு ஸஹவாஸமே எனக்கு அடுக்காது. (பகவானை நோக்கி) ஸர்வேசுவர! அடியேன் அறியாமையா லிழைத்த அபராதமனைத்தும் பொறுத்தருள வேணும். வேறு புதுமாலைகள் கொணர்ந்து சாத்துகிறேன். (குடலையை எடுத்துக்கொண்டு திரும்பி விடுகிறார்)

     (உள்ளிருந்து ஓர் குரல் உண்டாகிறது) ஆழ்வீர்! ஆழ்வீர்! நில்லும்! நில்லும்! போகவேண்டாம், இங்கே வாரும்.

(ஆழ்வார் திரும்பிவந்து கைகட்டி நிற்கிறார்)

அசரீரி:—இதோ உமது கையில் துலங்கு மலங்கல் நின் மகள் கோதை சூடிக் களைந்ததேயாகும். தினந்தோறு மவளிவ்வாறே செய்து வருகின்றனள். நீர் நினைப்பதுபோல் இது  பக்தியின்மையாற் செய்த காரியமன்று. பரமபக்தியால் செய்ததாகும். நாமும் தினந்தோறும் மனமுவந்தேற்கிறோம். தினம்போல் இன்று இம்மாலையை கேசத்துடனே சாத்தி எமதுள்ளத்தைக் குளிரவைப்பீராக.

ஆழ்வார்:--  அப்படியேசெய்கிறேன். (அவ்விதம் செய்து கைகூப்பியவண்ணம்) பிரபோ! அடியேன் கோதையிடம் அபசாரப்பட்டு விட்டேன். அதைப் பொறுத்தருள வேண்டும்.

அசரீரி:— அவ்வாறே ஆகுக. என் பிராணநாயகியிடம் புரிந்த அபராதத்திற்குப் பிராயச்சித்தமாக பிரதிதினமும் அவள் சூடிக்களைந்த மாலைகளையே சாத்துவீராக. இதனால் என்மனமுமவள் மனமும் குளிர்ச்சியடையும். போய் வாரும்.

(ஆழ்வார் விடைபெற்று வெளியே வருகிறார்)

ஆழ்வார்:—ஆஹா! என்னே கோதையின் பக்தி! பிஞ்சிலேயே பழுத்து விட்டனள். நமக்கு இன்னமுமவ்வளவு பரிபக்குவமேற்படவில்லை. ஆஹா! “நின் மகள்” என்ற வார்த்தை எவ்வளவு இனிமையாயிருந்தது. பகவான் வாயினால் “நின்மகள்” என்று கூறப்பெற்ற பாக்கியம் ஒன்றே நமக்குப் போதும். அகம் சென்று அவள் வாயால் சூடிக்களைந்த வரலாறு கேட்டு அகமகிழ்கிறேன்.

(செல்கிறார்.)

முதல் அங்கம்  இரண்டாவது களம் முற்றிற்று.

(தொடரும் )     

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

ஸ்ரீஆண்டாள் திருமணம் 1

ஸ்ரீ ஆண்டாள் சகாயம்
1937ல்
ஆழ்வார்திருநகரி
திருமலைநல்லான்
ஸ்ரீஇராமகிருஷ்ணய்யங்கார்
இயற்றிய

மார்கழி நோன்புஅல்லதுஸ்ரீ ஆண்டாள் திருமணம்.
-----------------
இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவாய்ப்பாடி, ஸ்ரீரங்கம்.

பாத்திரங்கள்

கண்ணன்  ---                                 தலைவன் – பின்  ரங்கராஜன்
கருடன், நற்செல்வன்    ---               நண்பர்கள்
விதூஷகன்
பெரியாழ்வார்  ----                          தலைவி தந்தை
ஆதிநாராயண கோபர்,              |     திருவாய்ப்பாடிக் கிழவர்கள்
அனந்த கோபர், கேசவ கோபர்  |
பாஜந்யன்    --- மழைத்தேவன்
திருவேங்கடாச்சாரியார், கிழவர்  --- ஸ்ரீவில்லிப்புத்தூர் கிழவர்கள்
வஸிஷ்டர், சுகர், வியாஸர், நாரதர் – திருவாய்ப்பாடிக்கு வந்த  
                                                              முனிவர்கள்

                         பெண்கள்
ஸ்ரீ ஆண்டாள்  ----                                  கதாநாயகி
அநுக்கிரகை, சுசீலை ---                         தோழிகள்
விரஜை     ----                                         தலைவியின் தாய்
நப்பின்னை   ---                                     கண்ணன் மனைவி
ரங்கநாயகி  ---                                       ரங்கராஜன் மனைவி
                               மற்றும் ஆய்ச்சியர்கள்


முதல் அங்கம்  --- முதற்களம்

நேரம் – மாலை            இடம் – சோலை

ஸ்ரீ ஆண்டாளும் அனுக்கிரகையும் வருகின்றனர்

ஆண்டாள்:--  சகி! இச்சோலையைப் பார்! என்ன நேர்த்தி! எத்துணை வனப்பு! அதிலும் மாலை நேரம். தங்கத்தை உருக்கியதுபோன்ற தன் செங்கிரணங்களை, ஏழைகள் குடிசைகளிலும், உத்யானத்திலும், பரிதி பரப்பிக் கொண்டிருக்கிறான். எங்கு பார்த்தாலும் தங்கக்கொடிகள், தங்கப்புஷ்பங்கள், தங்கப்பறவைகள். இவ்வுலகம் அழியக்கூடியதாதலால் வெறுக்கத்தக்கதென்று வேதாந்திகள் கூறுகின்றனரே, அது இயற்கைச் சுவை யறியாதார் வாதம் என்பதெனது அபிப்ராயம். தினந்தோறும் தங்கக் கதிரினைக் கதிரவன் இங்ஙனம் வீசவில்லையா? ப்ரளய காலத்திலும் இவைகளை யழிக்க மனமில்லாமல் ரஸிகக்கடவுள் தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றுகிறான்.
அநுக்கிரகை:-  ஆம்! இயற்கையினில் எவர் மனந்தானீடுபடாது? இவ்விதமிருப்பது வழக்கந்தான் என்று அலக்ஷியம் செய்யும் மூடர்கள்தான் இதை வெறுக்கின்றனர். முற்றும் துறந்த முனிவர்கள்கூட இயற்கையினில் தம் திடமனதைக் கொள்ளை கொடுத்துவிடுகின்றனர்.  இஃது அவர்கள் இன்மொழியை ஆராய்ந்தால் நன்கு புலனாம். என்? நின் தந்தையும்கூட இயற்கையன்னைக்கே தங்கவி முழுதும் கப்பம் கட்டி விட்டனரன்றோ? இக்கொடியைப் பார். இக்கொள் கொம்பை எவ்வளவு இறுகத் தழுவுகிறது. இதில் வைத்த நாட்டத்தைத் திருப்ப யாரால் முடியும்?
ஆண்டாள்:- (ஆச்சரியத்தோற்றத்துடன் அதைப் பார்த்தவண்ணம்) சகி! நெடுநாள் பிரிந்த மணாளனை யணையும் பெண்மணி போன்று, இக்கொடி கொம்பைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அம்மடந்தையரின் மந்தஹாஸத்தை மலர்ந்த மலர்கள் பரிஹஸிக்கின்றன. மலர்களில் ததும்பும் தேனைப் பருகும் வண்டினங்கள் இனிது முரல்கின்றன. தென்றலுக்கசையும் அசைவு அதைத்தலையசைத்துப் புகழ்வதையொக்கும்.  இக்கொம்பை விட்டுப் பிரிந்தால்  “பிரியிற்றரியேன்” என்னும்  உத்தம நாயகிகள்போல இக்கொடி என்ன பாடுபடும்? பிரியேன் என்ற பெருமையால் அன்றோ இது அந்தமில் பேரின்பத்தை யநுபவிக்கிறது! உயரிய தம்பதிகளின் காதலின் மேம்பாட்டை யிக்கொடி நன்கு விளக்கிக் காட்டுகிறது.
அநுக்கிரகை:—(புன்னகையுடன்) நீ கூறுவது முற்றிலும் பொருந்தும். ஆனால் உன்னுடைய வார்த்தை நீ யிதைக்கண்டு பொறாமைப்படுவதை விளக்குகின்றது.
ஆண்டாள்:--  இல்லை சகி! நான் பொறாமைப்படவில்லை. உண்மையிலேயே இவ்வுலகினில் காதலுக்கிணை கிடைக்கவே கிடைக்காது. அதனால்தான் கவியரசர்கள்  அதனையே கையாளுகின்றனர். உலகிற் சிறந்தவையெல்லாம் கவிவாணர்களதின் மொழிகட்கிடமாவதியல்பேயன்றோ? ஸ்வாமியான பரமாத்மாவிடம் தாஸர்களான ஜீவாத்மாக்கள் செலுத்தும் பக்திக்குக் காதல்தான் தகுந்த திருஷ்டாந்தம். “ஞானிக்கு நான் பிரியன் எனக்கவன் பிரியன்” என்றான் கீதாரியன்.  இக்காதலின் உண்மையை யறிந்தே முற்றும் துறந்த முனிவர்களும் மறு ஜன்மம் கோபிகைகளாகப் பிறந்து கண்ணனை யநுபவித்தனர்.  முனிவரினும் பன்மடங்கு ஞானாதிகரான “பராங்குசர்” முதலிய நம் பெரியோரும் மறுபிறவி வரையிலுங்கூடத் தாங்க இயலாமல் அதே பிறவியில் ஆணாயிருந்தும் உண்மைப் பெண்டிர் நிலைமை எய்தி பரமாத்மாவிடம் காதல்கொண்டு உருகி நைந்தனர் எனின் காதலின் மேம்பாட்டை யான் இயம்பவும் வேண்டுமா?
அநுக்கிரகை:—ஆணாயிருந்தும் பெண்மையுற்ற பெரியோரினும் நீ பெரியை. ஏனெனில் உண்மையிற் பெண்மகளாகவே தோன்றிய நின் காதல் அவர்களுடைய காதலிலும் சீரியதா மன்றோ?
ஆண்டாள்:--  (சிறிது கோபத்துடன் தலை குனிந்து) நான் காதல் கொண்டேனா? யாரிடம்? இஃதென்ன விந்தை? நானறியாமல் என் காதலை நீ தெரிந்துகொண்டு விட்டனை போலும். இனியிதுபோன்ற அடுக்காத சொற்களை விடுக்காதே.
அநுக்கிரகை:--  ஏன் மறைக்கின்றனை? நீ நின் காதலனைக் காணாமற் படும்பாடுகளையெல்லாம் நான் நன்கறிவேன். நின் முகம் வெளுத்திருக்கிறது, ஒளி மழுங்கவில்லை. இதன் காரணம் விரஹத்தைத் தவிர வேறு ஏதாகவிருக்க முடியும்? நோயில்லாமல் உன் உடம்பு இளைக்கக் காரணம் யாது? நீ அடிக்கடி பெருமூச்சு விடுகின்றனையே, எதற்காக?  நீ ஏன் இப்பூஞ்சோலைக்கு அடிக்கடி வர விரும்புவதில்லை? குயிலோசையிலும் தென்றற்காற்றிலுமுள்ள பயந்தானே? அழகிய மணவாளனைப்பற்றிப் பேசும்போதெல்லாம் நின் மேனியிற் றோன்றும் மயிர்க்கூச்சலை யான் பன்முறை கண்டிருக்கிறேன். எனவே நின் மனதைக் கவர்ந்த கள்வன் அவனேயென நான் நன்கு அறிவேன். மேலும் இலக்குமன்போல் பிள்ளைப் பருவத்திலேயே பெருமாளிடம் பற்றுக்கொண்ட நீ அவன் திவ்ய வைபவங்களைப் பாடினால்மட்டுமே உறங்குவாயென்று உன் தந்தைகூற நாம் கேள்விப்படவில்லையா?  பாலியத்திலேயே இவ்விதமாயின் இப்பொழுது  --- அதாவது இந்த யௌவன தசையில் அவனிடம் பற்றுக் கொள்ளவில்லை என்பது ஏற்கற்பாலதாமோ?
ஆண்டாள்:—(தலைகுனிந்து)  சகி! நீ யென்னை இவ்வாறு பரிஹஸிக்கவோ இங்கு வந்தனை? பரிஹஸிக்கும் ஆற்றான் இல்லாத பழியைச் சுமத்துவதில் நீ கொஞ்சமும் அஞ்சுவதில்லை. நான் மறுத்திடிலோ ஒன்றுக்குப் பத்து வார்த்தை! அம்மா! போதும், நிறுத்திக் கொள்.
அநுக்கிரகை:- (புன்னகையுடன்) நீ யென்ன கூறினாலும் உண்மையை மறைக்க முடியுமோ? பிரிவாற்றாமை முற்றியபின்னர் நீயே வலியக் கூற வேண்டியிருக்கும். அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன். (சிறிது தூரம் சென்று பூக்கொய்கிறாள்)
ஆண்டாள்:—(தனக்குள்) சகியை நான் சினந்து கூறிவிட்டேன். வேறு வார்த்தையாடி என் சகியின் உள்ளமுவக்கச் செய்கிறேன். (வெளியில்) சகி! இச்சோலைக்கு ஈடு இவ்வுலகினிலேயே இல்லையென்கின்றனரே! இது உண்மைதானா? உன்னபிப்பிராயம் என்ன?
அநுக்கிரகை:—இச்சோலையைவிடப் பன்மடங்கு வனப்பு வாய்ந்த மற்றுமோர் சோலை யிருக்கிறது.
ஆண்டாள்:—அஃதெங்கேயுளது? அதை நான் காண அவாவுறுகிறேன்.
அநுக்கிரகை:--  அச்சோலை வெகு தூரத்திலில்லை. ஆழ்ந்த நாவியெனும் வாவியுடன் கூடியதும், மூன்று மடிப்புகளாகிய படிக்கட்டுக்களுடையதும், தோள்களென்னும் கொடிகளுடன் கூடியதும், கண்களென்னும் வண்டினங்களுடையதுமான நினது வடிவமே அச்சோலை. நின் வடிவச் சோலைக்கும், இச்சோலைக்கும் நெடுவாசியுண்டு என்பதெனதபிப்பிராயம்.
ஆண்டாள்:--  பரிஹஸிப்பது உன் பிறவிக்குணம் போலும்!
அநுக்கிரகை:— சகி! இங்கே என் பக்கம் வா. மணமலிமலர்களிங்கு மிகுந்திருக்கின்றன. பொற்கொடியாளான வுன்னையிக் கொடி, தன் வண்டொலியால் அழைக்கின்றது.
ஆண்டாள்:--  இங்கில்லாவிடிலன்றோ அங்கே வரவேண்டும்!
அநுக்கிரகை:--  ஆமா சகி! வரவேண்டாம். வந்தால் வண்டினங்கள் இம்மலர்களைவிட்டு நின் முகமலரின்கண் வீழ்ந்து “அதரமது”வைப் பருகி விடும். தேவர்கட்கெல்லாம் கடல் கடைந்தமுதமெடுத்தீந்த வள்ளலுக்கெனச் சேமித்துவைத்திருக்கும் மதுவைக் கேவலம் வண்டினங்கள் பருகக் கொடுப்பது நியாயமாகுமா?
ஆண்டாள்:--  சகி! உனக்கென்னாற் பதிற்கூற வியலாது. (என்று வேறோர் இடம் சென்று) சகியின் சாமர்த்தியந்தானென்ன! எவ்வளவு புத்திக்கூர்மையும் ஊஹமும் அவளுக்கு! என் விரஹ வேதனையை அவள் எவ்வாறோ அறிந்துகொண்டனளே? நான் எவ்வளவு மறைத்தாலுமவள் ஒப்பவில்லை.  இன்னாரிடம் காதல் கொண்டேனென்னும் உண்மையைத் துணிந்து பணிக்கின்றனள். ஆஹா! காமத்தீ யுள்புகுந்து கதுவக், கங்குல் யாமங்களில் தென்றலுக்கிங்கிலக்காய் நான் படும்பாடு மறைத்தற்குரியதோ? மெல்லமெல்ல  மலயாநிலம் வந்து வீசவே என் விரஹாநலம் விரைந்து பொங்கி யெழுகிறது. காற்றுக்கும் நெருப்புக்கும் ஸ்நேகமுண்டு என்று உலகினிற் கூறுகின்றனர். இவ்வுண்மையை என்போன்ற விரஹிதான் முதன்முதலில் உணர்ந்திருக்க வேண்டும். இவ்வனம் “வசித்தற்கினிய சோலை” எனும் மாற்றம்வெறும் ஏமாற்றமாகவே முடிந்தது. இதைக் காமதேவன் தன் கூரிய கணைகள் வைக்கும் படைச்சாலையாகவே யான் கருதுகின்றேன். ஆஹா! காமதேவனின் மஹிமை அளவிடற்கரிது. கடவுளாலுமவன் கட்டளையைக் கடக்க முடியாது. காமதேவா! என்னைக் கலக்க வேண்டாம். தொழுது முப்போதுமுன்னடி வணங்கித் தூமலர் தூவி யேத்துகின்றேன். பாற்கடல் வண்ணனென் கண்ணனுக்கே பணிசெய்து வாழவருள் புரிவாய். அம்மாயனுக்கன்றி மானிடவர்க்கென்று பேச்சுப்படில் யான் வாழகில்லேன் கண்டாய் . இது நிச்சயம். கேசவ நம்பியைக் கால்பிடிப்பாளென்னு மிப்பேறே எனக்கருளவேண்டும். அந்தோ! காமன் கழலடி வணங்கியு மென்னையேன் அவன் படைகள் அடர்க்கின்றன.  இதோ இக்குயிலின் கோலாஹலம் ஆலாஹலத்திலும் கொடிதாயுளது. ஏ குயிலே! என்று மிக்காவிலிருந்து என்னைத் ததர்த்தாதே. யான் என்புருகி நெடுங்கண்களிமை பொருந்தாமல் பலநாளாகத் துன்பக் கடலில் புக்குழல்கிறேன். அன்புடையாரைப் பிரிவதாலுண்டாகும் நோயை நீயும் அறிகின்றிலையோ? நற்பொழில்வாழ் நற்குயிலே! அக்கார்வண்ணக் கண்ணன் வரக் கூவ வேண்டும். இன்றேல் என் பொன்வளைகளைக் கொண்டு தருதல் வேண்டும். இரண்டித்திலொன்றைத் திண்ணமாய் நீ செய்தாக வேண்டும். இன்றேல் இப்பூங்காவில் வாழவொட்டாது நான் விரட்டுவேன். பூவிதழ்கள் மெல்லியனவன்றுஉண்மையில் அவை கத்தி முனையிலும் கூரியனவே. சந்தனம் என் தனத்திற்குச் செந்தணல்தான். பகலிலுள்ள வேதனையைவிட இரவு என்னை மிகவும் துன்புறுத்துகிறது. ஓர் கங்குல் ஆயிரமூழிகளே. அதிலும் சுக்கிலபக்ஷமாகில் கேட்கவேண்டியதில்லை. என்கதி அதோகதிதான். திங்கள் ஊடறுத்தென்னை நலியும் முறை மிகப் பெரிது. அமாவாஸையில் மறைந்த மதி மறுபடியும் ஏன் உதிக்கிறான்? பாபிகள் இவ்வுலகை எளிதில் விடுவதில்லை. ஆஹா! உலகில் தீயோர் வேஷம் வெகு விசித்திரமானது. சந்திரன் எவ்வளவு கொடியவன்! அவன் குளிர்ந்தவனாகக் கொண்டாடப் படுகிறான். இவன் கொடுமையை இவ்வுலகறிவதில்லை. நஞ்சரவமும் இவன் வெப்பந் தாங்கமாட்டாமலன்றோ இவனையுமிழ்ந்து விடுகிறது. இக்கொடியோன் தன் கிரணங்களாற் பனி என்னும் புனைபெயர் பூண்ட நெருப்புத் தணல்களை வாரிக்கொட்டுகிறான். இதை யாரால் பொறுக்க முடியும்? எல்லாமறிந்தவக்கள்வன் என் நிலைமையை மட்டும் உணர்கிலனோ? பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதற் காசையினால் கொங்கை கிளர்ந்து குமைந்து குதூகலித்து என்னாவியை ஆகுலம் செய்யவும், அவனிதை உணராதவன்போல் பஞ்சினும் மெல்லிய வரவணையில் திருமகளுடன் கூடிக் களிக்கின்றனனே. இது நியாயமாகுமா? தீமை செய்யும் சிரீதரா! நான் தினந்தோறும் உனக்கு மலர்மாலை சூட்டிப் பரிவுடன் தருகின்றேனே. நீ மட்டுமேன் என் கூந்தலில் மலர் சூட்டக் கூடாது? இன்றாவது வந்தெனதாசையை நிறைவேற்றித் தரவேண்டும். இன்றவன் வருவானாவென்று கூடலிழைத்துப் பார்ப்போம் (கீழே அமர்ந்து கூடலிழைக்கிறாள்)
பூமகன்புகழ் வானவர் போற்றுதற்
காமகன் அணிவாணுதல் தேவகி
மாமகன்மிகு சீர்வசுதேவர்தம்
கோமகன்வரில் கூடிடுகூடலே.
(இதற்குள் அநுக்கிரகை வந்துவிடுகிறாள்)
ஆண்டாள்:--  (சடக்கெனவெழுந்து) சகி! எவ்வளவு நேரம்! நான் போதுமான பூக்கொய்துவிட்டு நின் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கிறேனே!
அநுக்கிரகை:-  என் வரவை எதிர்பார்க்கத் தனியிடம் வேண்டுமா? நீ யெதிர்பார்க்கு மக்கார்க்கடல்வண்ணனைத் திண்ணமாய் நீயென் உதவியின்றி நண்ணமுடியாது. பிராணசகிக்குக்கூட மறைக்கும் ரஹஸியம் ஒன்றுண்டு போலும்.
ஆண்டாள்:—கோபக்குறியோடு பார்க்கிறாள்.
அநுக்கிரகை:--  சகி! தனியே பூக்கொய்யாமல் ஏதோ நினைந்து உருகியதால் இங்ஙனம் உன்னை நான் கூறினேன். இதற்கேன் கோபம்? (கையைப் பிடித்துக் கொள்ளுகிறாள்)
இருவரும் செல்லுகின்றனர்.
முதல் அங்கம் முதற்களம் முற்றிற்று.