முதல் அங்கம்
2வது களம்
இடம்
வடபெருங்கோயிலுடையான் சந்நிதி
வில்லிநகர்
கையில் குடலையுடன் பெரியாழ்வார் வருகிறார்.
பெரியாழ்வார்:-- (ஸாஷ்டாங்கமாக வணங்கி யெழுந்து மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி) நாரணா! மஹாப்ரபோ! வடபத்ரசாயிந்! ஸர்வலோக சரண்ய! கருணைக்கடலே! எஞ்சலினென்னுடை யின்னமுதே! நன்மை தீமைகள் ஒன்றுமறியா யான் ஓவாதே நமோ நாரணா என்பேன். தோட்டமில்லவள் ஆத்தொழு ஓடைதுடவையும் கிணறுமிவை யெல்லாம் வாட்டமின்றி உன் பொன்னடிக்கீழே வைக்கின்றேன். அடியேன் உண்ணாநாள் பசியாவதொன்றில்லை. நமோ நாரணா வென்றெண்ணா நாளே எனக்குப் பட்டினி நாள். ஆசையினாலே உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோமகூபங்களாய், கண்ணநீர்கள் துள்ளம்சோர வுன்னை நாள்தொறும் தொழுதேத்தும் நன்மையே எனக்கருள் செய்யவேண்டும். கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் அழுந்திடக் கிடந்துழலு மென்னை வல்வினைகள் மாற்றி, பங்கப்படாவண்ணம் செய்த நின்னருள் கண்டாய் இவ்வுலகினில் மிக்கது. பிரமகுருவாகி வந்து நீயென் வன்னெஞ்சம் புகுந்து, என் சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்த விப்பண்பினை என்னென்பேன்! பையரவினணைப் பள்ளி கொள்கின்ற பரமமூர்த்தி! பெற்ற தாயர் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்த பாவகாரிகள் படர்ந்த விப்பாரினில், மரகதமலை போல் நிலைபெயராமல் நீ படுத்திருக்கும்படி யென்னே! குடையும் செருப்பும் இலாமல், கடியவெங்கானிடைக் கன்றின்பின்போன நின் சிறுக்குட்டச் செங்கமலவடிகள் வெதும்பி, கண்கள் சிவந்து, உடலம் சிதைந்ததனாலோ அயர்ந்து நீ உறங்குகின்றனை! உன்னையிதுகாறும் தனியே விட்டு இருந்த என்னின் மனம் வலியானொருவனுண்டோ! பஞ்சாயுதங்களே! என் சிறுக்குட்டனின் பள்ளியறையைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே! சங்கே!
அறவெறிநாந்தகவாளே! அழகியசார்ங்கமே! தண்டே!
இரவுபடாமலிருந்த வெண்மர் உலோகபாலீர்காள்!
பறவையரையா! உறகல்பள்ளியறைகுறிக்கொள்மின்!
ஆஹா! என்ன அதிசயம்! வானிளவரசு வைகுந்தக் குட்டன் ஆயர் குலக் கொழுந்தாயினன். என்ன கருணை! அவன்றன் கருணை எல்லையை உள்ளவாறு கண்டாரொருவருளரோ! அவன்தான் கண்டனனோ! இதை யறியாதவனுக்கு “ஸர்வக்ஞன்” என்று பட்டமாம்! ஆஹா! எல்லையிருந்திடிலன்றோ அவன் காணமுடியும்! அதனால்தான் அப்பட்டம் அவனுக்கு நிலைத்து நிற்கிறது. ஸர்வேசுவர! உன் உந்திக்கமலத்துள்ளிருந்தும் அயன் நின்னடிக்கமலம் காண்கின்றிலன். அத்தகைய நீ கேவலம் ஆயர் பெண்டிருக்கு அணுக்கனாய் அவதரித்தனையே! இஃதொன்றே உனது கருணைக்கும் ஸௌலப்யத்துக்கு மளவின்மையை நன்குணர்த்துகின்றது. உறி வெண்ணெயுண்டு, ஊரார்களெல்லோரும் காண வுரலோடு கட்டுண்டடிபட்டு, கன்றுகள் மேய்த்து நின் தோழரோடு கலந்துவரும் நினது எளிமைதான் என்ன? இத்தகையனான உன்னைச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த அசோதையின் பாக்கியமே பாக்கியம். உன் பிள்ளைச் சுவையெல்லாம் பெற்றாள் அசோதை. உன் திருவிளையாடல்களைக் கண்டு களிக்குமந் நங்கையின் கண்களே கண்கள். மற்றவை புண்களேயாகும். அதெல்லாம் எனது காலங்களில் நடைபெறக் கூடாதா? அசோதையைப்போல் யான் களிக்கும் நாட்களும் கிடைக்குமோ? இதென்ன பைத்தியம்? அவை நடந்து எத்துணை நாட்களாகிவிட்டன! அதைப்பற்றி யினிநினைப்பதால் யாது பயன்? ஆகிலுமென்ன? எதற்கும் மனந்தானே காரணம்?முற்காலத்தில் யசோதை உனக்கு மலர்சூட்டி மட்டற்ற மகிழ்ச்சிகொண்டதுபோல், யானும் ஏன் மகிழுறக் கூடாது?
ஆநிரைமேய்க்க நீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம் திரிந்து நின்கரிய திருமேனிவாட
பானையில்பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே! செண்பகப்பூச் சூட்டவாராய்.
(என்று ஒரு மாலையை எடுத்து உற்றுப் பார்த்துக் கண்களில் நீர் வடிய)
ஐயோ! இது என்ன பாபம்? யார் இவ்வடாத காரியம் செய்தது? பகவதபசாரத்திற்கல்லவா உள்ளானேன். இதில் என்னைத்தவிர வேறு யாரை நொந்து கொள்வது? கோவிலுக்கு மாலை கொண்டுவருமுன்பே நான் ஏன் கவனித்திருக்கக் கூடாது? ஐயோ! எம்பிரானது திருவுள்ளமிதனால் எவ்வளவு சீற்றங்கொண்டதோ? கேசம் சம்பந்தப்பட்டால் எவ்வளவு அசுத்தம்! இம்மாலையில் அது சம்பந்தப்படவேண்டிய காரணமென்ன? தன்னையறியாமல் எவருடையதேனு மிதில் சேர்ந்துவிட்டதோ? ஆம். அப்படித்தான். நமது இல்லத்தில் ஒருவரும் தன்னையறிந்து இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். (மறுபடியும் மாலையை உற்றுநோக்கிப் பெருமூச்சுடன்) இவ்வளவு நீண்டும் கறுத்துமுள்ள கேசம் கோதையினுடையதுதான். சந்தேகமில்லை. அவள் சகிகளுக்குக்கூட இவ்வளவு நீண்ட கூந்தல் கிடையாது. ஆஹா! அவள்தானா இக்கொடுமையை யிழைத்தனள்? அடி கொடியவளே! அபசாரத்திற்காளாக்கிவிட்டாயே? இக்கொடிய எண்ணம் உனக்கேன் உண்டாயிற்று? தினந்தோறு மிவ்விதந்தான் நீ செய்துவருகின்றனையோ? இன்று நீ அகப்பட்டுக் கொண்டனை. ஹூம்! பகவானுக்குச் சாத்திக் களைந்தபின் மணம் குன்றிவிடுமோ?
சே! இதென்ன எண்ணம்! நமதுகுழந்தை யிவ்வாறு செய்திருப்பாளா? ஒருக்காலுமில்லை. அவள்தான் மஹாபக்தையாயிற்றே! என்னிடம் அழகிய மணவாளன் வைபவத்தை எவ்வளவு குதூகலமாய்க் கேட்பாள்! அவ்வமயம் அவளுக்குண்டாகு மாநந்தக் கண்ணீரையும் மயிர்க்கூச்சலையும் நான் நேரில் கண்டிருக்கின்றேனே! அவளா இவ்வாறு செய்தனள்? இல்லவே இல்லை. ஒருவேளை அவளையறியாமலவளது கேசம் இதில் சம்பந்தப் பட்டிருக்கலாம். அவளபசாரம் செய்யவில்லை. நான்தானவளை நிந்தித்தால் பாகவதபசாரத்திற்கு மிலக்கானேன்.
ஐயோ! நான் மனதை எவ்விதம் சமாதானப் படுத்திக்கொண்டால்தானென்ன? அது நிம்மதி யடையவில்லையே! இக்கேசம் தலையில் சூடிக் களைந்தபொழுது சிக்குண்டறுந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது. இல்லாவிடில் மாலையைச் சுற்றிச்சுற்றி எவ்வாறு இருக்க முடியும்? இது அறியாமையால் நடந்த காரியமன்று. சந்தேகமேயில்லை. ஆஹா! ஸ்திரீகளின் சுபாவந்தானென்ன! அவர்களதியல்பினை யிவ்வுலகினில் யாவரே அறிபவர்? அவர்கள் மனமாழ்கடலினுமாழமுடைத்தே. அக்கொடியவள் பகவானிடம் பக்தியுள்ளவள்போல் எவ்வளவு பாசாங்கு செய்தனள்! நான் உண்மையென்றல்லவா அகமகிழ்ந்திருந்தேன்! எல்லாம் வேஷமா? இதோ உனக்குத் தகுந்த தண்டனை விதிக்கிறேன். இனி விஷ்ணு பக்தியில்லாத வுன்னோடு ஸஹவாஸமே எனக்கு அடுக்காது. (பகவானை நோக்கி) ஸர்வேசுவர! அடியேன் அறியாமையா லிழைத்த அபராதமனைத்தும் பொறுத்தருள வேணும். வேறு புதுமாலைகள் கொணர்ந்து சாத்துகிறேன். (குடலையை எடுத்துக்கொண்டு திரும்பி விடுகிறார்)
(உள்ளிருந்து ஓர் குரல் உண்டாகிறது) ஆழ்வீர்! ஆழ்வீர்! நில்லும்! நில்லும்! போகவேண்டாம், இங்கே வாரும்.
(ஆழ்வார் திரும்பிவந்து கைகட்டி நிற்கிறார்)
அசரீரி:—இதோ உமது கையில் துலங்கு மலங்கல் நின் மகள் கோதை சூடிக் களைந்ததேயாகும். தினந்தோறு மவளிவ்வாறே செய்து வருகின்றனள். நீர் நினைப்பதுபோல் இது பக்தியின்மையாற் செய்த காரியமன்று. பரமபக்தியால் செய்ததாகும். நாமும் தினந்தோறும் மனமுவந்தேற்கிறோம். தினம்போல் இன்று இம்மாலையை கேசத்துடனே சாத்தி எமதுள்ளத்தைக் குளிரவைப்பீராக.
ஆழ்வார்:-- அப்படியேசெய்கிறேன். (அவ்விதம் செய்து கைகூப்பியவண்ணம்) பிரபோ! அடியேன் கோதையிடம் அபசாரப்பட்டு விட்டேன். அதைப் பொறுத்தருள வேண்டும்.
அசரீரி:— அவ்வாறே ஆகுக. என் பிராணநாயகியிடம் புரிந்த அபராதத்திற்குப் பிராயச்சித்தமாக பிரதிதினமும் அவள் சூடிக்களைந்த மாலைகளையே சாத்துவீராக. இதனால் என்மனமுமவள் மனமும் குளிர்ச்சியடையும். போய் வாரும்.
(ஆழ்வார் விடைபெற்று வெளியே வருகிறார்)
ஆழ்வார்:—ஆஹா! என்னே கோதையின் பக்தி! பிஞ்சிலேயே பழுத்து விட்டனள். நமக்கு இன்னமுமவ்வளவு பரிபக்குவமேற்படவில்லை. ஆஹா! “நின் மகள்” என்ற வார்த்தை எவ்வளவு இனிமையாயிருந்தது. பகவான் வாயினால் “நின்மகள்” என்று கூறப்பெற்ற பாக்கியம் ஒன்றே நமக்குப் போதும். அகம் சென்று அவள் வாயால் சூடிக்களைந்த வரலாறு கேட்டு அகமகிழ்கிறேன்.
(செல்கிறார்.)
முதல் அங்கம் இரண்டாவது களம் முற்றிற்று.
(தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக