இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் சிலர் அடியேனை மன்னிக்க வேண்டும். இதில் ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3 என்ற தலைப்பில் ஜனவரி 7ம் தேதி இட்ட பதிவு பாதியில் நிற்கிறது. கவனக்குறைவாக அடுத்த பகுதிக்குச் சென்றிருக்கிறேன். அதனால் இந்தப் பகுதியை த்வைத சம்ப்ரதாய ஸித்தாந்தத்தின் தொடர்ச்சியாகப் படிக்க வேண்டுகிறேன். விடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு குமரன் அவர்களுக்கு நன்றி.
த்வைத ஸித்தாந்த ப்ரகரணம் (தொடர்ச்சி)
மனுஷ்யோத்தமர்கள் த்ருண-ஜீவர், தத்வ்யதிரிக்த- ஜீவர் என்று இருவகைப்பட்டிருப் பார்கள். த்ருண - ஜீவர் ப்ரஹ்மத்தின் 'ஆத்மா' என்கிற ஒரு குணத்தை உபாஸிக்கிறவர்கள் இவர்கள் அபரோக்ஷ-ஞானம் பிறந்த பிறகு தேஹநாசாநந்தரம் இங்கேயே முக்தியை அடைகிறார்கள். த்ருண-ஜீவரைக் காட்டிலும் வேறுபட்ட மனுஷ்யோத்தமர் ப்ரஹ்மத்தின் ஸத், சித், ஆநந்தம், ஆத்மா என்கிற நான்கு குணங்களை உபாஸிப்பார்கள். இந்த முக்தி-யோக்யர்கள் மோக்ஷ-ஸாதன அநுஷ்டானத்தால் மோக்ஷத்தை அடைய யோக்யதையுடையவர்கள். இவர்கள் ஸதாசாரம், பகவத் பக்தி முதலான நல்ல குணங்களை யுடையவராயிருப்பார்கள். இவர்களில் சிலருக்கு சில காலத்தில் துர்குணம் உண்டாவது அஸுராவேசத்தாலே.
எப்போதும் ஸுக-துக்கங்களைக் கலந்து அனுபவிப்பார்கள் நித்ய ஸம்ஸாரிகள். இவர்கள் புண்ய-கர்மங்களால் ஸ்வர்க்கம் போவதும், பாப-கர்மங்களால் நரகம் போவதும், பூலோகத்திற்கு வருவதுமாக சுற்றிக் கொண்டேயிருப்பார்கள்.
தமோயோக்யர் தைத்யர், அஸுரர், பிசாசர், மனுஷ்யாதமர் என்று நான்கு விதம். இவர்கள் முடிவில் நித்யமான நரகத்திலேயே விழுந்துவிடுவார்கள். இவர்கள் பகவானிடத்திலும், பகவத் பக்தர்களிடத்திலும் த்வேஷம், துராசாரம் முதலான துர்க்குணங்களையுடையவராயிருப்பர்.
ஜீவாத்மாக்கள் எல்லாரும் ஞான ஆநந்த-ஸ்வரூபர்கள். மிகவும் அணு-பரிமாணமுடைய வர்கள். பகவானுக்குக் கிங்கரர்கள். முக்தி-யோக்ய-ஜீவர்களில் ஸ்தாவர ஜீவர்களைக் காட்டிலும் பசு-பக்ஷ்யாதி-ஜங்கம-ஜீவர்கள் பக்தி, பகவத் ப்ரியத்வங்களிலும், அதன் மூலமாக மோக்ஷதசையில் வரும் ஆநந்தானுபவத்திலும் மேற்பட்டவர்கள். இவர்களைக் காட்டிலும் மனுஷ்யர் உத்தமர்; இவர்களைவிட ப்ராஹ்மண-மனுஷ்யர் உத்தமர்; இவர்களைக் காட்டிலும் சக்ரவர்த்திகள் நூறுபங்கு குணாதிகர். சக்ரவர்த்திகளைக் காட்டிலும் மனுஷ்ய-கந்தர்வர் நூறு பங்கு குணாதிகர்கள். இப்படியே மேல் மேல் சதுர்முக-ப்ரஹ்ம-பர்யந்தமான ஜீவர்கள் ஞானாதிகளில் தாரதம்யமுள்ளவர்கள். இந்த தாரதம்யம் இந்த ஸித்தாந்தத்திற்கு முக்யாம்சம்.
மோக்ஷமாவது ஸ்வரூப-ஆநந்த-அனுபவம். இந்த அனுபவம் ஸம்ஸார-தசையில் கர்மத்தா லுண்டான ப்ராக்ருத-தேஹ-ஸம்பந்தத்தால் தடைபட்டு பகவதனுக்ரஹத்தால் மோக்ஷ-தசையில் இந்தத் தடை நீங்கியபிறகு வைகுண்டலோகத்தில் வரும். இதில் ஜீவர்களில் அவரவர்கள் யோக்யதைக்குத் தக்கப்படி சிலருக்கு ஸாலோக்யமும், சிலருக்கு ஸாமீப்யமும், சிலருக்கு ஸாரூப்யமும், சிலருக்கு ஸாயுஜ்யமும் வரும்.
ஸாலோக்யமாவது (सालोक्य) :-- வைகுண்டலோகத்தில் எங்கேயாவது இருந்து யதேஷ்டமான போகத்தை அனுபவிப்பது.
ஸாமீப்யமாவது( सामीप्य) :- பகவத்-ஸமீபத்திலிருந்து யதேஷ்டமானபோகத்தை அனுபவிப்பது.
ஸாரூப்யமாவது (सारूप्य):-பகவானைப்போல் நான்கு கைகள், சங்கு, சக்கரம் முதலியவைகளை யுடையவர்களாய் யதேஷ்டமாய் போகத்தை அனுபவிப்பது.
ஸாயுஜ்யமாவது(सायुज्य.) :-பகவானுடைய சரீரத்தில் ப்ரவேசித்து யதேஷ்ட போகத்தை அனுபவிப்பது. இப்படி முக்தர்கள் எல்லாரும் தாரதம்யமுள்ளவர்களாயிருப்பார்கள்.
இந்த மோக்ஷத்திற்கு பக்தியோடு கூடின பகவதுபாஸனம் ஸாதனம். இந்த உபாஸனம் மனுஷ்யோத்தம-கணம் முதல் ப்ரஹ்ம-கணம் வரையில் ஏக-குணோபாஸனம், சதுர்-குணோ பாஸனம், அநேக குணோபாஸனம் என்று பஹுவித-தாரதம்யத்தோடு கூடியதாயிருக்கும்.
ப்ரத்யக்ஷம், அநுமானம். ஆகமம் என்னும் இவை மூன்றும் வஸ்துக்களை அறிவதற்கு ஸாதனமான ப்ரமாணங்கள். ஸர்வ- வேதங்களுக்கும் பொருள் பரப்ரஹ்மமே என்று இந்த ஸித்தாந்தத்தில் ஒப்புக்கொள்ளப்படுகிறது.
இந்த ஸித்தாந்தத்தில் ஜீவ-ப்ரஹ்மங்களுக்கு ஸ்வரூப-பேதம் ஒப்புக்கொள்ளுகிற படியால் இது த்வைத-ஸித்தாந்தம் என்று சொல்லப்படுகிறது.
த்வைத-ஸித்தாந்த ப்ரகரணம் முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக