ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 20

ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை

ஆரண்ய பர்வம்

வினா 115 முதல் 125 வரை

வினா 115.- இங்கு ஸுகமாய்‌ வஸிக்குங்கால்‌ இவர்களுக்கு என்ன ஆபத்து வந்தது?

விடை... பாண்டவர்கள்‌ ரிஷிகளது காவலில்‌ திரெளபதியை வைத்துவிட்டு வேட்டையாடி பிராம்மணர்களுக்கு வேண்டிய ஆகாரங்களைத்‌ தினம்‌ கொண்டுவரப்‌ போவது வழக்கம்‌. அப்படிப்‌ போயிருக்கும்‌ ஒரு நாளில்‌ அங்கு பாண்டவர்களது தங்கை துச்சலையின்‌ புருஷனாகிய ஜயத்‌ரதன்‌ என்ற ஸிந்துதேசாதிபதி வர, தனியே யிருக்கும்‌ திரெளபதியைக்‌ கண்டு அவன்‌ மோஹித்தான்‌. தன்னாலியன்ற மட்டும்‌ திரெளபதியைத்‌ தன்பெண்சாதியாகும்படி கேட்டுக்கொண்ட போதிலும்‌, அவள்‌ இசையாதது கண்டு, அவளை ஜயத்ரதன்‌ பலவந்தமாய்‌ தனது இரதத்தில்‌ ஏற்றிவைத்துக்கொண்டு தன்‌ இராஜ்யத்தை நோக்கிச்‌ சென்றான்‌. இவனைத்‌ தடுக்க முடியாமல்‌ தெளம்யர்‌ முதலிய பிராம்மணர்கள்‌ தத்தளித்தார்கள்‌.

வினா 116.- திரெளபதியை யார்‌ எவ்வாறு மீட்டுக்கொண்டு வந்தது? ஜயத்ரதன்‌ கதி என்னமாயிற்று?

விடை... பாண்டவர்கள்‌ வந்ததும்‌ தெளம்யர்‌ முதலியவர்கள்‌ நடந்த ஸங்கதியைச்‌ சொல்ல, அவர்கள்‌ உடனே ஜயத்ரதன்‌ போனவழியை நோக்கிப்போனார்கள்‌. அங்கு ஜயத்ரதன்‌ திளெபதியைக்‌ கொண்டுபோவதைக்‌ கண்டு, அவனைத்தோற்கடிக்க, அவன்‌ ஓடத்தலைப்பட்டான்‌. உடனே அவனைப்‌ பீமன்‌ சென்று பிடித்துவந்து மூர்ச்சை போகும்படி அடித்து, ஐந்து குடுமிவைத்துப்‌ பாண்டவர்களது அடிமை யென்று அவனைச்‌ சொல்லும்படி செய்து, தர்மபுத்திரரது காலில்‌ விழுந்து மன்னிப்பு கேட்கும்படி செய்தான்‌. தர்மபுத்திரர்‌ சுத்த மனதோடு அவனை உடனே விடுவித்து "இம்மாதிரி காரியம்‌ இனிமேல்‌ செய்யாதே” என்று புத்திமதிகூறி அனுப்பிவிட்டார்‌

வினா 117.- அவமானப்பட்ட ஜயத்ரதன்‌ என்ன செய்தான்‌?

விடை.- விடுபட்டதும்‌ இவன்‌ கங்கோத்தரை சென்று பரமசிவனைக்குறித்துத்‌ தபஸுசெய்தான்‌. அவர்‌ பிரத்யக்ஷமாகி "என்னவரம்‌ வேண்டும்‌" என்று கேட்க, இவன்‌ "எனக்குப்‌ பாண்டவர்களை ஜயிக்கும்‌ சக்தி வேண்டும்‌" என, பரமசிவன்‌ அந்தச்சக்தி ஒருவருக்கும்‌ வராது என்றும்‌, அவர்கள்‌ பரம்பொருளாகி லோகபாலனார்த்தம்‌ அநேக திவ்ய அவதாரங்கள்‌ செய்தருளிய கிருஷ்ணபகவானது அருள்‌ பெற்றவர்கள்‌ என்றும்‌ எடுத்துக்காட்டி, "உனக்கு அவர்களை ஒருநாள்‌ தடுக்கும்‌ சக்தி வரட்டும்‌” என்று அனுக்கிரஹித்துப்‌ போனார்‌. இதைப்‌ பெற்றுக்‌ கொண்டு இக்கொடியவன்‌ தனது இராஜ்யத்தை அடைந்தான்‌.

வினா 118.- திரெளபதிக்கு வந்த ஆபத்தால்‌ துக்கமடைந்திருந்த பாண்டவர்களை யார்‌ எவ்வாறு தேற்றினார்‌.

விடை.- அப்பொழுது தர்மபுத்திரரைப்‌ பார்க்க மார்க்கண்டேயமஹாமுனி வர, அவரிடம்‌ தமக்குவந்த ஆபத்தை எடுத்துரைத்து வெகுவாகத்‌ தர்மபுத்திரர்‌ துக்கித்தார்‌. அவர்‌ இராமர்‌ ஸீதையை இழந்து, பட்டபாடுகள்‌ அடங்கிய இராமாயணக்‌ கதையைச்‌ சுருக்கி சொல்லி, தர்மபுத்திரரது துக்கத்தை மாற்றினார்‌.

வினா 119.- இராமாயண கதையின்‌ சுருக்க மென்ன?

விடை.- ஸூர்யவம்சத்தரசராகிய தசரதர்செய்த புத்திரகாமேஷ்டிமூலமாய்‌ பரம்பொருள்‌ இராம, பரத, லக்ஷ்மண, சத்ருக்கினராய்‌ அவதரித்ததும்‌, இராம லக்ஷ்மணர்கள்‌ விசுவாமித்திரர்‌ பின்சென்று வில்வித்தை கற்று, தாடகை முதலிய இராக்ஷஸ குலத்தவரைக்கொன்றதும்‌, இராமர்‌ சிவதனுஸை ஒடித்து ஸீதையைக்‌ கல்யாணம்‌ செய்து கொண்டதும்‌, பிதிர்வாக்கிய பரிபாலனத்திற்காக அவர்‌ ஆரண்யம்‌ சென்றதும்‌, ஸஹோதர வாஞ்சையோடுவந்த பரதனுக்கு அவர்‌ தமது பாதுகைகளைக்‌ கொடுத்ததும்‌, பின்பு பஞ்சவடியில்‌ இருக்குங்கால்‌ அவர்‌ மாயமாய்‌ வந்த மானைப்பிடிக்கப்‌ போய் ஸீதையை இழந்து பரிதபித்ததும்‌, குற்றுயிராய்‌ இருந்த ஜடாயுவிடமிருந்து அவர்‌ ஸீதைபோன வழியை அறிந்து ஸுக்ரீவனோடு ஸ்நேகம்‌ செய்து வாலியை மறைந்து பாணம்‌ விட்டுக்‌ கொன்றதும்‌, பின்பு ஹனுமார்‌ விஸ்தாரமான ஸமுத்திரத்தைத்‌ தாண்டி ஸீதை இராவணனது அசோகவனத்தில்‌ கஷ்டப்படுவதை அறிந்துவந்து ஸ்ரீராமரிடம்‌ சொன்னதும்‌, வானர ஸேனையோடு இராமர் ஸேதுக்கரை வந்ததும்‌, இராவணன்‌ தம்பியாகிய விபீஷணர்‌ என்கிற பகவத்‌ பக்தர்‌ இராமரைச்‌ சரணமடைந்ததும்‌, நளன்‌ என்ற வானரம்‌ இராமரது ஏற்பாட்டின்பேரில்‌ ஸேதுபந்தம்‌ செய்ய வானரர்கள்‌ இலங்கை சேர்ந்ததும்‌, அங்கதன்‌ இராவணனிடம்‌ தூது சென்றதும்‌, இராவண ஸேனையோடு வானரஸேனைகள்‌ விசித்திரயுத்தம்‌ செய்ததும்‌, லக்ஷ்மணர்‌ இந்திரஜித்தையும்‌, இராமர்‌ இராவணனையும்‌ கொன்ற விசித்திரமும்‌, ஸீதை தனது பரிசுத்த நிலையைப்‌ பலர்‌ அறிய அக்கினிப்‌ பிரவேசம்‌ செய்ததும்‌, யுத்தத்திலிறந்த வானரர்கள்‌ பிழைத்தெழுந்ததும்‌, விபீஷணருக்கு இலங்கையைக்‌ கொடுத்ததும்‌, இராமர்‌ அயோத்திக்குத்‌ திரும்பிவந்து பட்டாபிஷேகம்‌ செய்து கொண்டதுமே இராமாயண கதையின்‌ சுருக்கம்‌. (இக்கதையின்‌ விஸ்தாரத்தை இராமாயண வினா விடையில்‌ காண்க.)

வினா 120.- இந்த இராமாயணத்தைச்‌ சொல்லிய பின்னர்‌ மார்க்கண்டேயர்‌ எந்த விஷயத்தைக்‌ குறித்து என்ன சொன்னார்‌?

விடை... திரெளபதியைப்‌ போன்ற கஷ்டகாலங்களிலும்‌ தப்பிவந்து மேன்மை யடைந்த பதிவிருதைகள்‌ யாரையாவது கேட்டதுண்டா என்று கேட்ட யுதிஷ்டிரருக்கு மார்க்கண்டேயர்‌, ஸாவித்திரி தனது கணவனான ஸத்யவானை யமனிடம்‌ இருந்து மீட்டுவந்து எவ்வாறு மேன்மை யடைந்தாள்‌ என்ற விஷயத்தை விஸ்தாரமாய்ச்‌ சொன்னார்‌.

வினா 121.- இந்த ஸாவித்திரி யார்‌? இவள்‌ கல்யாண விஷயத்தில்‌ என்ன தடை ஏற்பட்டது? அப்பொழுது இவள்‌ என்ன செய்தாள்‌?

விடை... மத்திர ஸேனாதிபதியாகிய அசுவபதி என்பவருக்கு இவள்‌ ஸரஸ்வதியின்‌ அனுக்கிரகத்தால்‌ பிறந்த பெண்‌. இவளுக்குப்‌ பருவம்‌ வந்து தகுந்த நாயகன்‌ அகப்படாததுகண்டு, அவளைச்சில பரிவாரங்களோடு நாயகனைத்‌ தேடிவரும்படி அரசன்‌ அனுப்பினான்‌. இவள்‌ போய்த்‌ திரும்பி வந்ததும்‌, அரசன்‌ ஸபைக்கு நாரதர்‌ வந்து ஸாவித்திரிக்குத்‌ தக்க நாயகன்‌ யார்‌ என்று விசாரித்தார்‌. அப்பொழுது லாவித்திரி, தான்‌ காட்டில்‌ இராஜ்யமுமிழந்து, கண்களுமிழந்து கஷ்டப்படும்‌ துயமத்ஸேனர்‌ என்ற ஒர்‌ அரசனிருக்கிறார்‌ என்றும்‌, அவரது புத்திரராகிய ஸத்யவானே தனக்குத்‌ தகுந்த நாயகன்‌ என்றும்‌ மறுமொழி கூறினாள்‌. நாரதர்‌ "ஸத்யவானுக்குக்‌ காலம்‌ சீக்கிரத்தில்‌ முடியப்போகிறது, ஆகையால்‌ வேறு நாயகனைத்‌ தேடிக்கொள்‌" என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தும்‌ ஸாவித்ரி மனம்‌ மாறவில்லை. இதைக்கண்டு நாரதர்‌ ஸாவித்ரியின்‌ மன உறுதியை மெச்சிக்‌ கொண்டு விவாஹத்திற்கு உத்தரவு கொடுத்து மறைந்தார்‌. உடனே கூடிய சீக்கிரத்தில்‌ விவாஹமும்‌ நடந்தேறியது.

வினா 122.- ஸத்யவானுக்கு முடிவுகாலம்‌ எவ்வாறு வந்தது? ஸாவித்ரி இதற்கு என்ன ஏற்பாடுகள்‌ செய்துகொண்டிருந்தாள்‌?

விடை. கல்யாணம்‌ முடிந்ததும்‌ ஸாவித்ரியும்‌ ஸத்யவானும்‌ கொஞ்சகாலம்‌ ஸுகித்து வருகையில்‌ ஸத்யவானது முடிவுநாள்‌ வந்து விட்டது. அதற்கு முன்‌ நான்கு நாள்‌ முதல்கொண்டே, ஸாவித்திரிபட்டினி இருந்து மஹாசுத்தியாய்‌ இருந்தாள்‌. அந்த முடிவு நாள்‌ இரவு தனது விரதத்தை முடிப்பதாக இவள்‌ எல்லாரிடத்தும்‌ சொல்லியிருந்தாள்‌. அன்று மாலை ஸத்யவான்‌ வழக்கம்போலவே கைக்‌ கோடரியை எடுத்துக்கொண்டு ஸமித்து வெட்டக் காட்டிற்குப்‌ புறப்பட்டான்‌. ஸாவித்திரியும்‌ தனது புருஷன்‌ மாமனார்‌ மாமியார்‌ முதலியவர்களிடம்‌ விடை பெற்று, ஸத்யவானோடு அன்று காட்டிற்குப்‌ போனாள்‌. காட்டிற்சென்று வெகுநாழிகை வெலைசெய்த பின்னர்‌ ஸத்யவானுக்கு ஒரு மாதிரியான தலைவலி வர, அவன்‌ வந்து ஸாவித்ரியின்‌ மடியில்‌ தலைவைத்துப்‌ படுத்துக்‌ கொண்டான்‌. கொஞ்ச நாழிகைக்கெல்லாம்‌ ஒரு கறுத்த மேனியையும்‌, சிவந்த கண்ணையும்‌, கையில்‌ பாசக்கயிற்றையும்‌ உடையவனாக ஒரு புருஷன்‌ ஸாவித்ரி கண்ணில்பட, அவள்‌ எழுந்து அவனுக்கு வந்தனம்‌ செய்து நின்றாள்‌. வந்தவன்‌, தான்‌ யமன்‌ என்று சொல்லி ஸத்யவானது உயிரைக்‌ கவர்ந்து கொண்டு ஸாவித்ரிக்குத்‌ தேறுதல்‌ சொல்லித்‌ திரும்பிப்போகச்‌ சொல்லிவிட்டு தான்‌ யமபட்டணம்‌ நோக்கிப்‌ புறப்பட்டான்‌.

வினா 123.- இவ்வாறு தனது கணவனது உயிரைக்‌ கவர்ந்துசென்ற யமன்‌ செல்ல ஸாவித்ரி என்ன செய்தாள்‌? இவள்‌ பிரயத்தனம்‌ எவ்வாறு முடிவு பெற்றது?

விடை.- ஸாவித்திரி யமனை விடாது தொடர்ந்து செல்ல, அவளது பாதிவிருத்தியத்திற்கு மகிழ்ந்து, கணவனது உயிரைத்‌ தவிரவேறு எதையும்‌ கேட்டுக்கொள்ள யமன்‌ அனுமதி கொடுத்தான்‌. உடனே அவள்‌ வரிசையாய்‌ தன்‌ மாமனார்‌ குருட்டுத்தனம்‌ நீங்கி இராஜ்யம்‌ பெறவேண்டும்‌ என்பதுபோன்ற ஸாதாரணமான வரங்களை முதலில்‌ கேட்டாள்‌. யமன்‌ இவைகளைக்‌ கொடுத்த போதிலும்‌, ஸாவித்ரி அவனைப்‌ பின்னும்‌ தொடர்ந்து சென்று தனது பிதாவுக்கு அனேகம்‌ பிள்ளை உண்டாக வேண்டுமென்று கேட்டாள்‌. தனக்குத்‌ தன்‌ கணவன்‌ அருகிலிருக்கிறவரை கஷ்டம்‌ தோன்றாது என்று சொல்லிக்கொண்டே யமனை விடாது பின்‌ தொடர்ந்து, அவனைத்‌ துதித்து, அரிய சாஸ்திர விஷயங்களை எடுத்துச்சொல்லி கடைசியில்‌ தனக்கு அனேகம்‌ பிள்ளைகள்‌ உண்டாக வேண்டுமென்றும்‌ ஸாவித்ரி கேட்க, யமன்‌ தான்‌ கொடுக்கும்‌ வரத்தின்‌ ஸ்வரூபத்தை அறியாது கொடுத்துவிட்டான்‌. பின்பு ஸாவித்ரி ஸத்யவானது உயிரை யாஜித்து, அதை யுக்தி பூர்வகமாய்த் தர்க்கித்து யமனிடம்‌ இருந்து பெற்றுக்‌ கொண்டு ஸத்யவான்‌ தேகம்‌ இருக்கும்‌ இடம்வரவே, அவன்‌ உயிர்த்து எழுந்தான்‌. ஸத்யவானைக்‌ கூட்டிக்கொண்டு வெகு மெதுவாய்‌ ஸாவித்ரி தன்‌ ஆசிரமம்‌ வந்து சேர்ந்தாள்‌.

வினா 124.- ஆசிரமம்‌ வந்ததும்‌ அவள்‌ அங்கு என்ன வினோதத்தைக்‌ கண்டாள்‌? எல்லாரும்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- இவள்‌ வந்ததும்‌ மாமனாருக்குக்‌ கண்‌ தெரிவதைக்‌ கண்டாள்‌. அங்குள்ள ரிஷிகள்‌ இந்த விசித்திரங்களுக்கு என்ன காரணம்‌ என்று ஸாவித்ரியைக்‌ கேட்க அவள்‌ நடந்த விஷயங்கள்‌ எல்லாவற்றையும்‌ சொன்னாள்‌. இந்த ஸ்திரீ தனது நாயகன்‌, மாமனார்‌, தகப்பனார்‌ ஆகிய இவர்களுக்கு ஏக காலத்தில்‌ செய்த உபகாரத்தைக்கண்டு ஸகல ரிஷிகளும்‌ அவளை வியந்து பேசினர்‌.

வினா 125.- இவ்விரு கதையையும்‌ சொல்லி முடித்த பின்பு மார்க்கண்டேயர் எவ்வாறு பாண்டவர்களைத்‌ தேற்றினார்‌?

விடை... இராமருக்கு ஆபத்து வந்து அது எவ்வாறு மங்களமாய்‌ முடிவுபெற்றதோ, அதுபோலப்‌ பாண்டவர்களுக்கு வந்த ஆபத்து அவர்களுக்கு நன்மையாகவே முடியும்‌ என்றும்‌, திரெளபதியைப்‌ போன்ற பதிவிரதா சிரோமணிகளது மேன்மை (ஸீதையின்‌ மேன்மைபோல்‌) எந்நாளும்‌ மாறாதிருக்கும்‌ என்றும்‌, அவர்கள்‌ தமது நாயகன்‌ முதலிய தம்மைச்‌ சேர்ந்தவர்களுக்கு ஸாவித்ரியைப்‌ போல்‌ நன்மை புரிவார்கள்‌ என்றும்‌ சொல்லிப்‌ பாண்டவர்களை மார்க்கண்டேயர்‌ தேற்றினார்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக