வியாழன், 24 மே, 2018

ஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்


நிமலன் நின்மலன் திரும்பவும் திரும்பவும் தன்னுடைய சாமீப்யத்தால் என்ன மலம் வருமோ வென்கிற அச்சம் கிளம்புகிறது. உடனுக்குடன் ஹேயப்ரதிபடமான ஸ்வபாவத்தை அறுதியிட்டு மனதைத் தேற்றிக்கொள்ளுகிறார். இந்த ஸங்கை அரங்கத்தமலன் ' என்று மேலும் உதித்து நிவ்ருத்திக்கப் படுவதைக் காண்கிறோம். 'தம்முடைய ஜந்மாதிகளால் உண்டான நிகர்ஷாநுஸந்தாநத்தாலே அகல, அது தானே பற்றாசாகத் திருவுள்ளம் புண்பட்டு மேல் வீழ்ந்த இடத்திலும் அத்தனைக்கு அவத்யமின்றியிலே நிர்மலனாயிருக்கிற படியைக் கண்டு அமலன் என்கிறார்' என்று நாயனார்.
நீதி வானவன் -- விண்ணவர் கோனே நீண்மதிளரங்கத் தம்மானாக எழுந்தருளியிருப்பதால் வானாட்டு நீதியை இங்கும் செலுத்துகின்றான் போலும் ! எல்லாச் சேதநர்களுக்கும் ஸாம்யமே மேனாட்டு நீதி. அந்த நீதியைத் தாழ்ந்த என் விஷயத்திலும் செலுத்தி என்னை உத்தமரோடு அத்யந்த சமமாய் பாவிக்கிறானோ வென்று ரஸமாய்  உபபத்தி செய்யப் பார்க்கிறார்.
நீண்மதி ளரங்கத்தம்மான்- அரங்கத்தின் மதிள் நீண்டதுபோல் அரங்கத்தம்மான் பாதகமலமும் நீண்டதே என்று ரஸம். அரங்கத்தில் பத்ம ஸரஸ்ஸுக்களில் பத்மங்களிருப்பது ஸஹஜம். இவருக்கு முந்திய தொண்டரடிப்பொடியாழ்வார் திருநாமத்தை அநுசரித்து அடியார்க் கென்னை யாட் படுத்த விமலன்' என்று முதலடியிலேயே இவர் ஈடுபட்டது போல இப்பாசுரம் கேட்டுப்போலே காணும் (இவருக்கடுத்த) திருமங்கையாழ்வார் திருமதிள்கள் செய்தது. அழகிய வாயாலே இதருளிக் செய்த பின்பாகாதே திருமாளிகைகளும் திருக்கோபுரங்களும் கனத்தது ' என்று நாயனார். ॠषीणां पुनराद्यानां वाचमर्धोनुधावति (ரிஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தாநுதோவதி) (பவபூதி உத்தரராம சரிதம்) என்பார்கள்.
திருக்கமல பாதம் வந்து - தாய் முலையில் போல் பெருமாள் திருவடிகளில் ஸ்நேஹம் என்பர். சஹஜ நிரவதிக ஸ்நேகத்தால் திருவடிக்கு நீண்டு நெருங்கும் ஸ்வபாவம். திருவடி நீளக் காரணம் திருவுள்ளம் உவந்து நீள்வது. சயனத்திருலிருந்த  திருவடிப்பூ ஸ்நேஹ பாரவச்யத்தால் நீண்டு என் கண்ணுள் வந்து நின்றது போலும். 'திரு' என்று இங்கு லஷ்மியைச் சொல்லுகிறது. இது பூமிப் பிராட்டியாருக்கும் உபலக்ஷணம். 'लक्ष्मीभूम्योः करसरसिजैर्लालितं रंगभर्तु: पादाम्भोजम्' (லஷ்மீ பூம்யோ : கரஸரஸிஜைர்லாலிதம் ரங்கபர்த்து: பாதாம்போஜம்) (ஸோபாநம்) என்ற அநுபவம். தாய்மார்கள் இந்தக் கமலத்தைப் பிடித்து லாளநம்செய்து என் கண்ணினுள் ஒத்துகிறார்கள் போலும் ' என்று அநுபவம்.. பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக்கண்களிலும் ஒற்றிக்கொள்ளும் திருவடிகள்' என்று பிள்ளை.
 என் கண்ணிலுள்ளன வொக்கின்றதே - தினமும் இவர் திருக்காவிரிக் கரையிலிருந்து யோகம் செய்கையில் தர்ஸந சமாநாகாரமான பிம்பதர்ஸந மேற்பட்டு வந்தது. 'கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்’ (திருவாய்மொழி 1,10,2) என்றது போல இவர் காதல் தொழுகையாகிய யோகத்தில் இவர் கண்ணுள்ளே திருவடி நின்றுகொண்டிருந்தது. பெரிய பெருமாள் திருவடிக்கமலம் இவர் கண்ணிற்கு யோக தசையிலே சேவை சாதித்துக் கொண்டிருந்தது. யோக தசையில் சேவை சாதித்து இவர் கண்ணுள்ளே நின்றுகொண்டிருந்த திருவடிக் கமலத்தோடு இப்பொழுது தன் கண் வரையில் நீண்டு வந்த அரங்கன் திருவடிக் கமலத்தை ஒத்துப் பார்க்கிறார். யோகாநுபவ உறுதியால் என் கண் ணுள்ளே நிற்கும் திருக்கமல பாதத்தோடு இப்பொழுது நேரில் ஸாக்ஷாத்தாக சேவிக்கும் திருக்கமலபாதம் மிகவும் ஒக்கின்றதே யென்று அத்புத ரஸம்.
(2) கண்ணினுள்ளே வந்து விட்டாலும் ஸாக்ஷாத் ஸ்பர்சத்தை நினைக்கவும் பச்சையாகச் சொல்லவும் மனமில்லாதவராய், கண்ணில் வந்து புகுந்தது போலிருக்கிறது என்று பேசுகிறார். இப்படியே மேலும் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே' என்று பேசுகிறார். தாமாகப் பெருமாள் பாத கமலங்களைத் தீண்ட அச்சமே; அவையே வலிய என்னிடம் வந்து என்னை ஸ்பர்சிக்கின்றன; நான் என்ன செய்வேன் ! திருமேனி அவயவங்களை எட்டு ச்லோகங்களால் அநுபவிக்கிறார். அஷ்டாங்க யோகக் கணக்கு. பகவத் த்யாந ஸோபாநமும் இதை அநுசரித்தது. அங்கும் அவயவங்களின் அநுபவம் எட்டு ச்லோகங்களால் செய்யப் படுகிறது. இங்கு, 1, 4, 5, 6, 7, 8-வது: பாசுரங்களில் அவயவங்களை தாமாக நெருங்குவதாக அநுபவமில்லை. 2-ம் பாசுரத்தில் சென்றதாம் என் சிந்தனை' என்கிறார். சிந்தனை தொடுவதால் தீட்டில்லை. 'உந்திமேல தன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே' என்று தன் ஆத்மா தொடுவதைப் பேசுகிறார். ஆத்மாவுக்கும் தீட்டில்லை.
(3) ஒன்பது பாட்டு வழியிலே அநுசந்தித்துப் பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதாரென்கிற ஐதிஹ்யத்தின்படியே மாநஸ ஸாக்ஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டாப் போலே இருக்கை. அங்ஙனமன்றிக்கே மாநஸ ஸாக்ஷாத்காரத்தோடு சேர்ந்திருந்த தீசஷுர் விஷயமான திருப்புகழென்றுமாம்' என்று இரண்டுவிதமாகவும் நாயனார் அருளியது. மாநஸ ஸாக்ஷாத்கார மென்பது  யோக ஸாக்ஷாத்காரம் ; தர்சன ஸமாநாகாரம். கருமணியைக் கோமளத்தைக் கண்ணாரக் கண்டு, மனத்தூணே பற்றி நின்று வாயார வாழ்த்தும் ப்ரபந்தமாகை யாலே ' என்றும் அருளியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக