பத்தாங் களம்
இடம்: கைகேயியின் அந்தப்புரம்
காலம்: நண்பகல்
பாத்திரங்கள்: தசரதர், கோசலை, கைகேயி, சுமித்திரை, வசிஷ்டர், சுமந்திரர், இராமர், வாயில்
காப்போர் முதலியோர்
(தசரதர், தலையிற் கைவைத்தபடி சோகமாய்த் தரையில் உட்கார்ந்திருக்கிறார். கோசலை, சுமித்திரை இருவரும் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டு அவருக்கிரு புறத்திலும் உட்கார்ந்திருக்கின்றனர். கைகேயி அவர்கள் மூவரையும் பார்த்துக்கொண்டு ஒரு புறமாய் நிற்கின்றாள். வசிஷ்டரும், சுமந்திரரும் சிந்தாக் கிரந்தராய் வாயிலில் நிற்கின்றனர். இராமர் வருகின்றார். அவரைத் தொடர்ந்து சீதையும் இலக்ஷ்மணரும் வருகின்றனர். மூவரும் சக்கரவர்த்தியை நமஸ்கரிக்கின்றனர். சக்கரவர்த்தி “ஆ! மகனே” என்று சோகித்து வீழ்கிறார். இராமர் அவரைத் தாங்கிக்கொண்டு)
இராமர்: பிதா! ஏன் சோகிக்கின்றீர்கள்? நான் ஆரணியஞ் சென்று பதினான்கு வருஷம் விளையாடிக் காலத்தைக் கழித்துத் தங்கள் வாக்கையும் காப்பாற்றிப், பிறகு தங்கள் பாதத்தை அடைவேன். சீதையும், இலக்ஷ்மணனும் என்னுடன் காட்டுக்கு வருகின்றார்கள். நான் அவர்களை வரவேண்டாமென்று என்னால் இயன்றவரை தடுத்தும் பிரயோஜனப்படவில்லை. ஆதலால் நாங்கள் மூவரும் காட்டுக்குச் செல்ல விடை யளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.
தசரதர்: ஹே, இராமா! என் கண்மணி ! என் நெஞ்சை இரும்பென்று நினைத்தையா, அல்லது கல்லென்று கருதினாயா? என் உயிரினும் மேலாகிய உன்னைக் “காட்டிற்குப்போ” என்று உரைத்துப் பின் உயிர் தரித்து, நான் இவ்வுலகத்தில் இருப்பேனா?
இராமர்: எந்தாய்! அன்னையார்க்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் நீங்கள் பின்வாங்கக்கூடாது. சத்தியத்தின் மிக்கதொன்றில்லை யென்பதை சத்தியசந்தராகிய தாங்கள் அறிவீர்கள். ஆதலால் சிறிதும் ஆலோசியாது என்னைக் கானனுப்பி அன்னையார்க்குரைத்த உரையைப் போற்றியருளுங்கள்.
தசரதர்: இராகவா! கைகேயி வரத்தைக் கொண்டு என்னை வஞ்சித்துவிட்டாள். உனக்குப் பட்டத்தின் உரிமையுள்ளது. அவ்வுரிமையைக் கொண்டு, என் உரையை மறுத்து, நீயே இவ் வயோத்தியின் அரசைக் கைப்பற்றிக்கொள்.
இராமர்: (அஞ்சலி செய்து) பிதா ! தாங்கள் அறுபதினாயிரம் வருஷகாலமாக அரசாட்சி செய்து வருகிறீர்கள். இவ்வளவு நீண்ட அரசாட்சியில் சிறிதேனும் குறைபாடு இதுவரை நிகழ்ந்ததில்லை. உலகமெலாம் தங்களை மனுநெறி கடைப்பிடித்து மொழி தவறாது அரசு செலுத்தும் மன்னரென்று புகழ்ந்து கொண்டாடி வருகின்றது. அந்த மறுவற்ற புகழை மாசு படுத்துவது, தங்களுக்கு மகனென வந்த நானோ? பொய்யாத கீர்த்தியை மெய்யாலடைந்த அரிச்சந்திர மன்னர் வந்த மரபல்லவோ நமது மரபு. அவர் மெய்யை நிலைநிறுத்த எவ்வளவோ இன்னல்களுற்றார். கட்டுரை இழக்க அஞ்சி பதியிழந்தார்; பாலனை இழந்தார்; படைத்த நிதி இழந்தார்; தமக்குண்டென்று கருதிய கதியையும் இழக்கச் சித்தமாயிருந்தார். இத்தனை இடும்பைகளில் ஒன்றேனும் அடையத்தக்க துர்ப்பாக்கியம், கடவுள் கிருபையால் தங்களுக்கு நேரவில்லை. தாங்கள் பதியை இழக்கப் போகிறீர்களா? பாலனை இழக்கப் போகின்றீர்களா? படைத்த நிதியை இழக்கப் போகின்றீர்களா? ஒன்றுமில்லையே! அரிச்சந்திர மன்னருக்கு ஒரே புத்திரன் இருந்தான். அப்புத்திரனைச் சின்னஞ்சிறிய பருவத்தே ஒருவருக்கு அடிமையாக விட்டுப் பிரியும்படி நேர்ந்தது. தங்களுக்கோ புத்திரர் நால்வர் இருக்கின்றனர். இவர்களுள் ஒருவனாகிய என்னைச் சிலகாலம் பிரிந்திருக்கப் போகின்றீர்கள். அப்படித் தங்களை விட்டுப் பிரியும் நான் ஒன்றுமறியாத சிறுவனல்ல. ஒருவருக்கு அடிமையாகவும் தாங்கள் என்னை விற்றுவிடவில்லை. மகான்களும் மாதவரும் உறையும் வனத்தில் சர்வ சுதந்தரத்தோடும் வசித்துத் திரும்பித் தங்கள் பாத சேவைக்கு வந்துவிடுவேன். இதற்குத் தாங்கள் வருந்துவானேன்? கொஞ்சமும் சஞ்சலப்படாமல் விடை கொடுத்து அனுப்புங்கள்.
தசரதர்: ஆ, மகனே! தேவதாசன் இவ்வளவு சாதுர்யமாகப் பேசியிருந்தால், அவன் தந்தை அவனை விட்டுப் பிரியுங்கால் என்னைப் போலவே வருந்தியிருப்பார். என் செல்வமே! உன் சாதுர்ய மொழி என் மன வருத்தத்தை மிகுவிக்கிறதடா!
கொல்லணைவேல் வரிநெடுங்கண் கௌசலைதன்
குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணிந்த வரைத்தோளா வல்வினையேன்
மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய்
வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ
காகுத்தா! கரிய கோவே !
கற்புக்கரசியாகிய கோசலையின் செல்வப் புதல்வா! சாதுரிய வார்த்தைகளால் என் மனமுருக்கத்தானே கற்றாய்! இது வரையில் அம்சதூளிகா மஞ்சத்தின்மீது துயில் கொண்ட நீ, இனி காட்டு மரங்களின் கீழே கல்லைத் தலைக்கு அணையாகக் கொண்டு படுத்து உறங்க வேண்டுமே; அதைக் கற்றுக் கொண்டனையோ? மைந்தா ! என் குடியைக் கெடுக்கப் பெண்வடிவு கொண்டு வந்த பேயாகிய, இந்தக் கைகேயி என்னை வஞ்சித்து வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அதனாலென்ன? நீ ஒரு தேசத்தை ஆளத்தக்க பல பராக்கிரமத்தோடு கூடிய யௌவன புருஷன். இவ்வரசும் முறைப்படி உனக்கு உரியது. ஆதலால் என்னையும், இந்தக் கைகேயியையும் அவளைச் சேர்ந்தவர்களையும் அடித்துத் துரத்திவிட்டு நீ அரசனாய் விடு. அது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் மனச் சமாதானத்தையும் கொடுக்கும். அதைவிட்டு, ஒரு ஸ்திரீயின் மாயவலையிற் சிக்கிய என் வார்த்தையைக் கொண்டு காட்டுக்குப் போகாதே, குலக் கொழுந்தே!
வெவ்வாயேன் வெவ்வினைகேட் டிருநிலத்தை
வேண்டாதே விரைந்துவென்றி
மைவாய களி றொழிந்து தேரொழிந்து
மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேனெடுங்கண் நேரிழையு
மிளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடப்பையோயெம் மிராமாவோ
எம்பெருமான் என்செய்கேனே!
இரக்கமற்ற பாவியாகிய என் சொல்லைக் கேட்டு நீ இவ்வரசைத் துறக்கலாமா? நீ ஊர்வலம் வருவதற்காக அரண்மனையிலுள்ள பசும்பொன் தேர்கள் எத்தனை! பட்டத்து யானைகளெத்தனை! பஞ்ச கல்யாணிக் குதிரைக ளெத்தனை! இத்தனையும் வேண்டா மென்றொழித்துவிட்டு, மெல்லிய பூங்கொடி போன்ற மைதிலியும், இளவல் இலக்ஷ்மணனும் பின்தொடர, கொடிய காட்டிற்கு எவ்வாறடா செல்வாய்? என் செல்வத் திருக்குமரா! உன்னைப் பிரிந்து நான் எவ்வாறு சகித்திருப்பேன்! நெடுநாள் வருந்தி, கொடுந்தவம் புரிந்து, குருடன் பெற்ற கண்போலவும் மிடியன் அடைந்த தனம் போலவும் உன்னை வேள்வி செய்து பெற்றேனடா! என் புத்திர சிகாமணி! மைந்தனின்றி வருந்திய என் மனக்குறை மாற்றவந்த மகனே! வயோதிக காலத்தில் என்னை வந்தடைந்த வாழ்வே! அயோத்தியை ஆண்டு என் அகத்தைக் குளிர்விப்பாய் என்று இறுமாந்திருந்தேனடா, என் அருமருந்தே!
வன்தாளின் இணைவணங்கி வளநகரம்
தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை அரியணைமே லிருந்தாயை
நெடுங்கானம் படரப் போகு
என்றாளெம் இராமாவோ உனைப்பயந்த
கைகேசி தன்சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்
நன்மகனே யுன்னை நானே.
இராமச்சந்திரா! உலகமெல்லாம் உன் திருவடியிணைகளை வணங்க அரசனாகி அரியணை மீது வீற்றிருக்க வேண்டியவனல்லனோ நீ? உன்னைக் ‘காட்டுக்குப் போ’ என்று கூசாது கூறினாளே அந்தக் கொடும்பாவி கைகேசி! இதற்குத்தானோ நீ அவளைப் பெற்ற தாயாகப் பாவித்து வந்தது? ஐயோ! அந்தப் பாவி சொல்லைக் கேட்டு நானும் உன்னைக் காட்டுக்கனுப்புவதோ! நான் உனக்கு அரசு தருவதாகச் சொன்னது வெகு அழகா யிருக்கிறது! நீ அரசாள்வாய், அதைக் கண்ணாற் பார்த்துச் சந்தோஷிக்கலாம் என்றெண்ணியிருந்தேனே! அந்தச் சந்தோஷம் தெய்வத்திற்குப் பொறுக்கவில்லையோ! குழந்தாய்! இராமா ! நீ வனஞ் செல்லாதே! சென்று என்னைக் கொல்லாதே! உரை தவறினான் தசரதன் என்று உலகம் என்னைத் தூற்றட்டும். நான் அதற்கு நாணேன். உன்னை இழந்து நான் காப்பாற்றும் வாக்குறுதியும் சத்தியமும் எதற்கு? வேண்டாம், நீ காட்டுக்குப் போகாதே , போனால் என் உயிர் தரியாது.
இராமர்: பிதா! தாங்கள் இவ்வாறு கூறுவது தகுமோ? வெகு நாளாகத் தாங்கள் போற்றிவந்த சத்திய விரதத்தை என் பொருட்டோ இழப்பது?
புலையனும் விரும்பாதஇப் புன்புலால் யாக்கை
நிலையெனா மருண்டுயிரினு நெடிதுறச் சிறந்தே
தலைமைசேர் தருசத்தியம் பிறழ்வது தரியேன்
கலையுணர்ந் தநீயெனக்கிது கழறுவ தழகோ?
தந்தாய்! நாம் இறந்த பிறகு, வெகு அருமையாகப் போற்றி வந்த இந்த உடலைப் புலையனும் வெறுத்துத் தூரத்தே நின்று தீமூட்டிக் கோலாற் புரட்டிச் சுட்டுவிடுகிறான். அவ்வளவு இழிவான இந்த யாக்கையை நிலையென்று மயங்கிக் கருதி அதன்மீது வைத்த பாசத்தால் உயிரினுஞ் சிறந்த சத்தியத்தை விடுவதற்கு நான் ஒருபொழுதும் சம்மதியேன். சகல கலைகளையும் உணர்ந்த தாங்கள் இவ்வாறு சொல்லுவது அழகோ? தந்தாய்! அன்னையார்க்குக் கொடுத்த வாக்கை மாற்ற வேண்டாம். தங்களுக்கு நான் அருமைப் புதல்வனேயானாலும் என்னிலும் பன்மடங்கு அருமையுள்ளதாகும் வாய்மை என்பது. அதையோ என்பொருட்டு இழப்பது? உரைத்த உரையை மாற்றுவதாவது என்ன? பொய் கூறுதலன்றோ? பொய்யெனப் படுவது பஞ்ச மாபாதகங்களில் ஒன்றல்லவா?
இம்மை நலனழிக்கும் எச்சங் குறைபடுக்கும்
அம்மை யருநரகத் தாழ்விக்கும் – மெய்மை
யறந்தேயும் பின்னு மலர்மகளை நீக்கும்
மறந்தேயும் பொய்யுரைக்கும் வாய்
என்றபடி மறந்தேனும் பொய் கூறுவதால் வரும் தீங்கு ஒன்றோ? இப்பிறப்பில் அடையக்கூடிய புகழ், பொருள் முதலிய நலன்களையெல்லாம் அழிக்கும்; சந்ததி விருத்தியைக் கெடுக்கும்; இறந்தபிறகு கொடிய நரகத்தில் விழச் செய்யும். உண்மையான தர்ம நெறியைச் சிதைக்கும். மறந்தும் பொய் கூறல் இவ்வளவு தீங்குகளை விளைவிப்பதாய் இருக்க, தாங்கள் மனமறியக் கூறிய வாக்கை மாற்ற ஒருப்படுவது தருமமோ? எனக்கு இந்த இராஜ்யமும் பெரிதல்ல; நாட்டிலிருந்து அனுபவிக்கும் சுகசௌக்கியங்களும் பெரிதல்ல. தங்கள் வாக்கை நிறைவேற்றித் தங்களை மெய்மை தவறாதவராகச் செய்வதொன்றுதான் பெரியது. மேலும் காட்டுக்குச் செல்வதாகத் தீர்மானித்து விட்டேன். அவ்விதம் தீர்மானித்ததை இனி மாற்றுவதாகாது. தாங்கள் எனக்கும், சீதை, இலக்ஷ்மணர் இருவருக்கும் விடை கொடுத்து அனுப்புமாறு பிரார்த்திக்கின்றேன்.
தசரதர்: குழந்தாய்! நான் என்ன சொல்லியும் கேளேனென்கிறாயே! இன்னும் நானென்ன சொல் மாட்டுவேன்? நீ தர்ம நெறி தவறாதவனாக இருப்பது எனக்கன்றோ துன்பத்தை விளைவிப்பதாயிருக்கிறது. என் செல்வனே! இனி உன்னைத் தடுக்க என்னாலாகாது. உன் விருப்பம்போல் சென்று வா. உன் சிந்தை தருமத்தில் வேரூன்றி இருக்கிறது. உன் புத்தியைக் கெடுக்க எவ்வாறு முடியும்? உன் தீர்மானப்படியே செல். அடவியில் பல பல வழிகள் காணப்படும். அவற்றுள் நல்லதாயும் அச்சமற்றதாயு மிருக்கும் வழியில் ஜாக்கிரதையாகப் போ. பிடிவாதமாய் உன்னைத் தொடர்ந்து வரும் ஜானகியைப் பத்திரமாகப் பாதுகாத்து வா. இலக்ஷ்மணனை அரை க்ஷணமும் விட்டுப் பிரியாதே. சென்று வா.
இராமர்: பிதா! நான் கிருதார்த்தனானேன். (நமஸ்கரிக்கிறார். பிறகு கோபத்தோடு இலக்ஷ்மணரும் அவருக்குப் பிறகு சீதையும் நமஸ்கரிக்கின்றனர். அப்பால், இராமர், இலக்ஷ்மணர், சீதை மூவரும் கைகேயியை நோக்கிச் செல்கின்றனர். கைகேயியை இராமர் நமஸ்கரிக்கிறார். கைகேயி அவரை நோக்கி)
கைகேயி: இராமச்சந்திரா ! வனத்தில் நீ அருந்தவர் ஆசீர்வாதங்களைப் பெறுவாயாக.
சுமந்திரர்: (கைகேயியை நோக்கி) அம்மா! உம்முடைய கணவர் அடையும் துன்பத்துக்கும் இரங்காமல், மற்றோர் அபவாத மொழிகளுக்கும் அஞ்சாமல், நீர் செய்யும் தொழிலினுங் கொடியதொன்றில்லை. நீர் படுகொலைக்கும் அஞ்சாத பாறை நெஞ்சினர் என்றெண்ணுகிறேன். அறுபதினாயிரம் வருஷம் அரசாண்டவரும், அசுரர்களை வென்றவரும், சகல கலையுணர்ந்தவருமாகிய தசரதச் சக்கரவர்த்தியையும் தவிக்கச் செய்கின்றீரன்றோ? இது தகுமா? நீரோ பென்பால். பெண்களுக்குத் தம் கணவரே தெய்வம் என்பதை நீர் அறிவீர். அறிந்தும் உமது கணவரும் உலகுக்கு அரசரும் ஆகிய தசரதரை அவமதிக்கின்றீர். இது நியாயமல்ல. ‘தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை’ என்ற பழமொழி மெய்யே யென்பதை இன்றுணர்ந்தேன். உமது தாயாருடைய கெட்ட குணத்தைப் பற்றி நாங்கள் விசாரித்து அறிந்திருக்கிறோம். உங்கள் தந்தை மிருக பாஷை அறிந்தவர். அவர் ஒருநாள் ஓர் எறும்பின் ஒலியைக் கேட்டுச் சிரித்தார். அதைக்கண்டு உமது தாயார், அவர் சிரித்த காரணத்தைச் சொல்லும்படி வேண்டினார். அரசர் அதை வெளியிட்டால் தமக்கு மரணம் நேருமென்றார். அப்பொழுது உம் தாயார் அவரை நோக்கி, “நீர் இறந்தாலும் சரி, இருந்தாலும் சரி, எனக்கு நீர் அதைச் சொல்லித் தீரவேண்டும்” என்றார். கலக்கமற்ற மனத்தையுடைய உமது பிதா அவர் துர்க்குணத்தை அறிந்து அவரைத் தள்ளிவிட்டார். உமது தாய்போலவே நீரும் துர்க்குணம் உள்ளவராயிருக்கிறீர். வீணாகக் கெட்டுப்போக வேண்டாம். உலக வேந்தராகிய உமது கணவருக்கும் உமக்கும் பழி தேடிக் கொள்ளாதீர். ஸ்ரீராமச்சந்திரர் குலத்தில் மூத்தவர். தர்ம சொரூபி. எல்லார்க்கும் இனியவர். அவர் இந்நாட்டை விட்டுக் காட்டுக்குப் போய்விட்டால் உமக்குப் பெரிய அபவாதம் நேரிடும். ஊராரனைவரும் உம்மை நிந்திப்பார்கள். ஆதலால், இராமர் இங்கிருந்து அரசு புரியட்டும். நீரும் உமது புத்திரர் பரதரும் சகல செல்வங்களையும் அநுபவித்துக் கொண்டிருங்கள். இராமன் அரசாள்வது உமக்கு விருப்பில்லையாயின், உமதிஷ்டப்படி பரதரே அரச பாரத்தை வகிக்கட்டும். நாங்கள் இராமர் எங்கு செல்கின்றாரோ அங்கு செல்கிறோம். உமது இராச்சியத்தில் அந்தணர்கள் வசிப்பது தகாது.
கைகேயி: (சற்று கோபத்தோடு) அரசர் மனமாரக் கொடுத்த வரங்களைப் பற்றித் தாங்கள் இவ்வளவு தூரம் பேசவேண்டிய அவசியமில்லை.
தசரதர்: (சுமந்திரரைப் பார்த்து) சுமந்திரரே! நீர் சீக்கிரம் சதுரங்கங்களால் நிறைந்துள்ள சேனையைச் சித்தப் படுத்தும். பற்பல தொழிலாளிகளும், வியாபாரிகளும் புறப்பட்டு எனது குமாரனுடன் செல்லட்டும். முக்கியமான நகரத்தார்கள் அனைவரும் அவனுடன் போகட்டும். காட்டை நன்றாக அறிந்த வேடர்கள் முதலியோரும் இராமனைப் பின்தொடர்ந்து செல்லட்டும். இப்படி இருந்தால், இராமன், யானை முதலிய மிருகங்களைக் கொன்றும், காட்டுத் தேனைக் குடித்தும், அநேக புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும், மகரிஷிகளைத் தரிசித்தும் நாட்டைப் பற்றி நினையாமல் சுகமாகக் காலம் கழிப்பான்.. நமது தானியக் களஞ்சியமும் தனசாலையும் மனுஷ்ய சஞ்சாரமற்ற காட்டுக்குச் செல்லும் இராமனுடன் செல்லட்டும்.. நீர் இராமனைத் தேர்மேலேற்றி அழைத்துப் போம்.
கைகேயி: (குரல் மாறி, உள்ளம் நடுங்கி, தசரதரைப் பார்த்து) அரசரே! மனிதரற்றதும், சகல செல்வங்களும் நீங்கியதும், சாரமற்ற சக்கை போன்றதுமான இராச்சியத்தைப் பரதன் பெற்றுக் கொள்ளமாட்டான்.
தசரதர்: (கைகேயியைக் கோபத்தோடு பார்த்து) அடி, அநியாயக்காரி! உனக்கு வரத்தைக் கொடுத்து அவதிப்படும் என்னை ஏனடி இன்னும் வருத்துகிறாய்? உனக்கு வரம் கொடுக்கும்போது ‘ஒருவரும் இராமனுடன் போகக்கூடாது’ என்று நீ கேட்டுக்கொள்ள வில்லையே! பாவத்தின் அவதாரமே! உன்னையும் பெண் என்று பிரமன் ஏன் படைத்தான்? நான் எனது கண்மணி இராமனுடன் காட்டுக்குப் போகின்றேன். நீ பரதனுடன் இவ்விராச்சியத்தை ஆண்டுகொண்டு சுகமாக வாழ்ந்திரு.
இராமர்: (தசரதரைப் பார்த்து) தந்தாய்! சகல சுகங்களையும் வெறுத்து, காட்டுக்குத் தவஞ் செய்யச் செல்லும் எனக்கு யானை, சேனைகளால் என்ன பயன்? யானையை விட்டுவிட்டு யானையைக் கட்டும் கயிற்றைப் பத்திரமாக வைத்திருப்பவர் எவரேனும் உண்டோ? அரசைத் துறந்து செல்லும் எனக்கு அரசிற்கு அங்கங்களான யானை சேனை பரிவாரங்களும், பொன்னும் பூஷணங்களும் எதற்கு?
(கைகேயி மரவுரிகளை எடுத்துவந்து, இராமர் கையில் இரண்டும், சீதை கையில் இரண்டும், இலக்ஷ்மணர் கையில் இரண்டுமாகக் கொடுக்கிறாள். இராமர் மரவுரிகளைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, பிறகு உடுத்திக் கொள்கிறார். இலக்ஷ்மணரும் அங்ஙனமே செய்கிறார். சீதை மரவுரிகளை உடுத்திக்கொள்ள அறியாது வெட்கப்பட்டவளாய், இராமனைப் பார்க்கிறாள்.)
….. தொடரும்………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக