ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

அபீதிஸ்த‌வ‌ம்

கிட்ட‌த்த‌ட்ட‌ நூறு ஆண்டுக‌ளுக்கு முன் வ‌ந்துகொண்டிருந்த‌ “வேதாந்த‌ தீபிகை” மாத‌ இத‌ழில் , ஸ்ரீ வேதாந்த‌ தேசிக‌ன் அருளிய‌  “அபீதிஸ்த‌வ‌ம்” என்ற‌ ஸ்தோத்திர‌த்திற்கு ஸ்ரீ உப‌.வே. அன்பில் ஏ.வி. கோபாலாசார்யார் ஸ்வாமி த‌மிழில் வ்யாக்யான‌ம் எழுதியுள்ளார். அன்று ஸ்ரீ தேசிக‌ன் மாலிக்காபூர் ப‌டையெடுப்பால் அர‌ங்க‌னே ஸ்ரீர‌ங்க‌த்தை விட்டுப் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் வெளியேறியிருந்த‌ நிலையில் ப‌ய‌ம் நீங்கி ந‌ம்பெருமாள் மீண்டும் அர‌ங்க‌மாந‌க‌ர் வ‌ர‌வேண்டுமென்று ப்ரார்த்தித்துப் பாடிய‌ அந்த‌ சூழ்நிலை இப்போதும் நில‌வ‌ ஆர‌ம்பித்திருக்கிற‌து. அன்று ப‌டையெடுத்த‌ முஸ்லீம்க‌ள்தான் எதிரிக‌ள். இன்று ந‌ம் ச‌னாத‌ன‌ தர்ம‌த்திலேயே பிற‌ந்தும் அத‌ற்கு எதிராக‌ச் செய‌ல்ப‌டும் விரோதிக‌ளும் துரோகிக‌ளும் அன்றைய‌ மாலிக்காபூர் கால‌த்தை விட‌ அபாய‌க‌ர‌மான‌தாக‌ மாற்றிவ‌ரும் நிலையில் இந்த‌ ஸ்தோத்திர‌த்தைக் கூட்டு ப்ரார்த்த‌னையாக‌ செய்வ‌து ப‌ல‌ன‌ளிக்கும். அந்த‌ ஆசையாலே ஸ்தோத்திர‌ம், அத‌ற்கு ஸ்ரீ ஏ.வி.கோபாலாசாரியார் உரை இவ‌ற்றுட‌ன், ஒரு த‌மிழாக்க‌மும் சேர்த்து இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன். த‌மிழாக்க‌ம் இன்னொரு அன்பில்காரர் செய்தது. இவ‌ர் ஸ்ரீ அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி. த‌ற்ச‌ம‌ய‌ம் சென்னைவாசி.

       இந்த‌ உரையைப் பின்னாளில் நூலாக‌ வெளியிடும்போது அத‌ற்கு முன்னுரையாக‌ அந்நாளில் பேர‌றிஞ‌ராக‌ விள‌ங்கிய‌ புதுக்கோட்டை ஸ்ரீ ஸ்ரீனிவாச‌ராக‌வ‌ன் ஸ்வாமி வ‌ழ‌ங்கிய‌ முன்னுரை இங்கே.

||ஸ்ரீ:||

முக‌வுரை

ஸ்ரீ ராமானுஜ‌ருடைய‌ கால‌த்திற்குப் பிற‌கு விசிஷ்டாத்வைத‌ ஸித்தாந்தத்திற்கு உள்ளும் புற‌ம்பும் தோன்றிய‌ விரோதிக‌ளைப் போக்கி அதை நிலை நிறுத்த‌ திருவேங்க‌ட‌முடையான் த‌ன் திரும‌ணியை இவ்வுல‌கில் அவ‌த‌ரிப்பித்தான். அதுவே தூப்புலில் ஸ்ரீ வேங்க‌ட‌ நாத‌னாக‌ அவ‌த‌ரித்தது. இந்த‌ க‌விதார்க்கிக‌ சிம்மம் ப‌ல‌ வாத‌க்கிர‌ந்த‌ங்க‌ளைச் செய்ததுபோல‌வே த‌மிழிலும் ஸ‌ம்ஸ்க்ருதத்திலும் ப‌ல‌ ஸ்தோத்ர‌ங்க‌ளையும் செய்த‌ருளினார். ஸ்ரீ தேசிக‌ன் இந்த‌ ஸ்தோத்ர‌ங்க‌ளில் ம‌ந்த்ர‌ங்க‌ளையும் ம‌ந்த்ராக்ஷ‌ர‌ங்க‌ளையும் இசைத்து வைத்திருக்கிற‌ப‌டியால், ம‌ந்திர‌த்தை அறியாத‌ ந‌ம்போலிய‌ரும் இந்த‌ ஸ்தோத்திர‌த்தைச் சொல்வ‌தினாலேயே ம‌ந்திர‌ம் கைவ‌ந்தார் பெறும் ப‌ல‌னைய‌டைய‌லாம். அத‌னாலேயே ஒவ்வொரு ஸ்தோத்ர‌த்தின் முடிவிலும் "இதைப் ப‌டிப்போர் பெறும் ப‌ய‌ன் இது" என்று ப‌ல‌ ச்ருதியைக் கூறியிருக்கிறார். எல்லாம் ப‌க‌வ‌த் பிரீதியின் பொருட்டு என்று செய்வோருக்கு எல்லாப் ப‌ல‌மும் கிடைக்கும்.

இவ‌ற்றுள் "அபீதிஸ்த‌வ‌ம்" என்ற‌ ஸ்தோத்ர‌ம் த‌ன் பெய‌ருக்கேற்ப‌ ஸ‌க‌ல‌ ப‌ய‌த்தையும் போக்கி ப‌க‌வ‌த‌னுக்ர‌ஹ‌த்தால் ஸ‌க‌ல‌ ஹிதத்தையும் அளிப்ப‌தோடு, ப‌ய‌ன் கிடைப்ப‌தாக‌ச் சொன்ன‌து பொய்ய‌ன்று என்ப‌தையும் ருஜுப்ப‌டுத்துகிற‌தாயும் இருக்கிற‌து. ஸ்ரீதேசிக‌ன் ஸ்ரீர‌ங்க‌த்தில் எழுந்த‌ருளியிருந்த‌ கால‌த்தில் மாலிக்காபூர் என்ற‌ ம‌ஹ‌ம்ம‌திய‌த் த‌லைவ‌னின் ஸைன்ய‌ம் ஸ்ரீர‌ங்க‌த்தின்மீது ப‌டையெடுத்து வ‌ந்தது. அதைக்க‌ண்டு ப‌ய‌ந்த‌ கோவில‌திகாரிக‌ள் க‌த‌வைமூடி ஸ‌ந்நிதிக்கு முன் வேறொரு விக்ர‌ஹ‌த்தைப் பூஜிப்ப‌தாகக் காட்டிவிட்டு, ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌நாச்சிமார்க‌ளையும் ப‌ல்ல‌க்கில் எழுந்த‌ருளுவித்துக்கொண்டு ஸ்ரீர‌ங்க‌த்தை விட்டு வெளியேறினார்க‌ள். வ‌ய‌து முதிர்ந்த‌வ‌ரான‌ ஸுத‌ர்ச‌னாசார்ய‌ர் என்னும் ஆசார்ய‌ர் தான் செய்த‌ சுருத‌ப்ர‌காசிகையையும் த‌ன் ம‌க்க‌ள் இருவ‌ரையும் ஸ்ரீ தேசிக‌னிட‌ம் ஒப்பித்து, "உம்மால் ந‌ம் த‌ர்ச‌நத்திற்கு ந‌ன்மை ஏற்ப‌ட‌ப் போகிற‌து, ஆத‌லால் நீர் த‌ப்பிச் செல்லும் " என்று கூறி அவ‌ரை அனுப்பினார். பிற‌கு த‌ங்க‌ள் உயிருள்ள‌வ‌ரையும் விரோதிக‌ள் உட்புகாமைக்காக‌வும் பெருமாளை எடுத்துச் செல்வோரை அவ‌ர்க‌ள் பின்தொட‌ராமைக்காக‌வும் ம‌ஹ‌ம்ம‌திய‌ ஸைன்ய‌த்தை எதிர்த்துப் போர் புரிந்து ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ப‌க்த‌ர்க‌ள் உயிர் நீத்த‌ன‌ர்.

ஸ்ரீதேசிக‌னும் ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌து முத‌ல் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ங்கி, க‌டைசியாக‌ திருநாராய‌ண‌புர‌ம் வ‌ந்து சேர்ந்தார். வ‌ந்ததுமுத‌ல் ஆச்ரித‌ ர‌க்ஷ‌ண‌த்தின் பொருட்டுவ‌ந்த‌ ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னுக்கும் ஸூர்ய‌னும் பார்த்த‌றியாத‌ நாச்சிமார்க‌ளுக்கும் த‌ங்க‌ள் வாஸஸ்த‌ல‌த்தை விட்டு இட‌ம் தேடித்திரிய‌ வேண்டியிருந்த‌ நிலைமையையும் ராம‌னைப் பிரிந்த‌ அயோத்யைபோல‌ அர‌ங்க‌ம் த‌ன் நாத‌னைப் பிரிந்து பொலிவ‌ற்று நிற்ப‌தையும், த‌ன‌க்கும் த‌ன்னைப்போன‌ற‌ ப‌ர‌மைகாந்திக‌ளுக்கும் ஸ்ரீர‌ங்க‌ வாஸ‌மும் ப‌க‌வ‌த் ஸேவையும் இல்லாததால் உயிரேய‌ற்ற‌து போல் இருக்கும் நிலைமையையும் எண்ணி எண்ணி ம‌ன‌ம் நொந்து ஏங்கினார். முடிவில் த‌ன்னைக் காத்துத் த‌ன்ன‌டியார்க‌ளுக்கு அளிக்கும் பொருட்டு அவ‌னையே துதித்துச் ச‌ர‌ண‌ம‌டைய‌ வேண்டுமே யொழிய‌ வேறு க‌தியில்லை என்று நிச்ச‌யித்து "துருஷ்க‌ய‌வ‌நாதிக‌ளால் அர‌ங்க‌த்திற்கும் அர‌ங்க‌னுக்கும் அர‌ங்க‌ன‌டியார்க‌ளுக்கும் ஏற்ப‌ட்ட‌ ப‌ய‌த்தைப் போக்கி, ம‌றுப‌டியும் த‌ன்னையும் த‌ங்க‌ளையும் ஸ்ரீர‌ங்க‌த்தில் பிர‌திஷ்டித‌மாக்கி அப‌ய‌ம‌ளிக்க‌ வேண்டும்" என்று "அபீதிஸ்த‌வ‌ம்" என‌ற‌ இந்த‌ ஸ்தோத்ர‌த்தைச் செய்து, பெருமாள் திருவ‌டிக‌ளைச் ச‌ர‌ண‌ம‌டைந்தார்.

இந்த‌ ஸ்தோத்ர‌த்தின் ப‌ய‌னாக‌வே கொப்ப‌ணார்ய‌ன் என்னும் செஞ்சிக் கோட்டையின் த‌லைவ‌னான‌ ப‌ர‌ம‌ ப‌க்த‌ன் துருஷ்க‌ர்க‌ளை ஸ்ரீர‌ங்க‌த்திலிருந்து விர‌ட்டி விட்டு ஸ்ரீர‌ங்க‌த்தை நிர்ப்ப‌ய‌மாக்கி ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌துமுத‌ல் சுற்றித் திரிந்து க‌டைசியில் திருப்ப‌தியில் எழுந்த‌ருளியிருந்த‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌ நாச்சிமார்க‌ளையும் த‌ன் ஊரான‌ செஞ்சியில் கொஞ்ச‌ நாள் எழுந்த‌ருளுவித்து ஆராதித்து ம‌றுப‌டியும் ஸ்ரீர‌ங்க‌த்தில் தானே பிர‌திஷ்டை செய்வித்தான். மானிட‌த்தைக் க‌வி பாடாத‌ தேசிக‌ன் இந்த‌ப் பெரிய‌ கைங்க‌ர்ய‌ம் செய்து வைத்த‌ கொப்ப‌ணார்ய‌னைக் கொண்டாடி எழுதின‌ சுலோக‌ங்க‌ள் இர‌ண்டும் ஸ்ரீர‌ங்க‌த்தில் விஷ்வ‌க்ஸேன‌ர் ஸ‌ந்நிதிக்கு முன்பு பெரிய‌பெருமாள் ஸ‌ந்நிதியின் கீழ்ப்புற‌த்துச் சுவ‌ரில் க‌ல்லில் வெட்ட‌ப்ப‌ட்டு இன்னும் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.

स्वस्ति श्रीः बन्धुप्रिये शकाव्दे (शकाव्द १२९३)

i.
आनीयानीलश्रृङ्गद्युतिरचितजगद्रञ्जनादब्जनाद्ने .

चेञ्चयामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुप्कान् तुलुष्कान् ।

लक्ष्मीक्ष्माभ्यमुभाभ्यां सह निजनगरे स्थापयन् रङ्गनाथं

सम्यग्वर्या सपर्या पुनरकृत यशोदर्पणो गोप्पणार्यः ||

ـ
2.

ــــه حविश्वेशं रङ्गराजं वृषभगिरितटात् गोप्पणक्षोणिदेवो

नीत्वा स्वां राजधानी निजबलनिहतोत्सिक्तौलुष्कसैन्यः ।

कृत्वा श्रीरङ्गभूमिं कृतयुगसहितां तं च लक्ष्मीमहीभ्यां

संस्थाप्यास्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्या सपर्याम् ||

முத‌ல் வ‌ரி இந்த‌ ச்லோக‌ங்க‌ள் வெட்ட‌ப்ப‌ட்ட‌ வ‌ருஷ‌மான‌ ச‌காப்த‌ம் 1293 (கி.பி. 1371)ஐக் காட்டுகிற‌து. ஸ்வ‌ஸ்தி ஸ்ரீ:-- (முகில் வ‌ண்ண‌ன் இருப்ப‌) முகில்க‌ள் த‌வ‌ழ‌ க‌றுத்துத் தோன்றும் த‌ன் சிக‌ர‌ங்க‌ளால் உல‌க‌த்தையே ம‌கிழ்வூட்டும் அஞ்ஜ‌னாத்ரியிலிருந்து ல‌க்ஷ்மி பூமி இருவ‌ருட‌ன் கூடிய‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னை செஞ்சிக்கு எழுந்த‌ருளுவித்துக் கொண்டுவ‌ந்து அங்கு சில‌ கால‌ம் ஆராதித்து, பிற‌கு வில்லாளிக‌ளான‌ துருஷ்க‌ர்க‌ளை வென்று, பெருமாளையும் பிராட்டிமார்க‌ளையும் அவ‌ர்க‌ளுடைய‌ ந‌க‌ர‌மான‌ ஸ்ரீர‌ங்க‌த்திலேயே பிர‌திஷ்டை செய்து, கீர்த்திக்கோர் க‌ண்ணாடியான‌ கொப்ப‌ணார்ய‌ன் ம‌றுப‌டியும் சிற‌ப்பாக‌த் திருவாராத‌ன‌த்தைச் செய்தான்.

விருஷ‌ப‌கிரியிலிருந்து ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னை த‌ன் ராஜ‌தானிக்குக் கொண்டு சென்று, க‌ர்விக‌ளான‌ துருஷ்க‌ ஸேனா வீரர்க‌ளை த‌ன் ஸைன்ய‌த்தால் கொல்லுவித்து, அத‌ன்பின் ஸ்ரீர‌ங்க‌த்தை கிருத‌யுக‌த்தோடு கூடிய‌தாக‌ச் செய்து, ஸ்ரீ பூமிக‌ளோடுகூட‌ பெருமாளையும் அதில் ம‌றுப‌டி பிர‌திஷ்டை செய்வித்து அம்புய‌த்தோனான‌ ச‌துர்முக‌ன்போல‌ ந‌ல்லோர் கொண்டாடும் முறையில் கொப்ப‌ணார்ய‌ன் என்ற‌ பிராம‌ண‌ன் ந‌ம்பெருமாளை ஆராதித்து வ‌ருகிறான்.

இந்த‌ சுலோக‌ங்க‌ளிலிருந்து திருநாராய‌ண‌புர‌த்திலிருந்து தாயைப் பிரிந்த‌ க‌ன்றைப்போல‌க் க‌த‌றி அநுஸ‌ந்தித்த‌ அபீதிஸ்த‌வ‌த்தின் ப‌ய‌னாக‌ ம‌னோர‌த‌ம் நிறைவேறிவிட்ட‌து என்ப‌தை அறிகிறோம்.

ப‌ய‌நிவிருத்தியைப் பிரார்த்திக்க‌ப் பிற‌ந்த‌ இந்த‌ச் சிறிய‌ ஸ்தோத்ர‌த்திலும் தேசிக‌னுடைய‌ ம‌ற்ற‌ ஸ்தோத்ர‌ங்க‌ளில்போல‌ தத்வ‌ஹித‌ புருஷார்த்த‌ விஷ‌ய‌மான‌ ஸூக்ஷ்மமான‌ வேதாந்தார்த்த‌ங்க‌ள் பொதிந்து கொண்டிருப்ப‌தைக் காண‌லாம். கோல‌த்திருமாம‌க‌ளோடு கூடிய‌ நாராய‌ண‌னோ ஸ‌க‌ல‌ ஜ‌க‌த்கார‌ண‌மான‌ ப‌ர‌தத்வ‌ம் என்ப‌தும் (சுலோக‌ம் 1) ப்ர‌ஹ்மாதி ஸ‌க‌ல‌ தேவ‌தைக‌ளும் அவ‌னுக்குப் ப‌ய‌ந்து த‌ங்க‌ள் தொழில்க‌ளைச் செய்து வ‌ருகிறார்க‌ள் என்ப‌தும் (சுலோக‌ங்க‌ள் 4, 26), ஸ‌ர்வேச்வ‌ர‌ன் ஒருவ‌னை ர‌க்ஷிக்க‌ விரும்பினால் ம‌ற்ற‌ எந்த‌ப் புதுத் தெய்வ‌மும் எதிராக‌ ஒன்றும் செய்ய‌ முடியாதென்ப‌தும் (7), பிராட்டியைப் புருஷ‌கார‌மாகக் கொண்டு ப‌ர‌தத்வ‌மான‌ இவ்விருவ‌ரிட‌முமே ச‌ர‌ணாக‌தியை அநுஷ்டிக்க‌ வேண்டுமென்ப‌தும் (2), ஒரே த‌ட‌வை அனுஷ்டிக்க‌வேண்டிய‌து முத‌லான‌ ச‌ர‌ணாக‌தியின் பெருமைக‌ளும் (2,5,15,21), நாம‌ஸ‌ங்கீர்த்த‌ன‌த்தின் பெருமைக‌ளும் சுருக்க‌மாக‌வும் அழ‌காக‌வும் காட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. இருப‌த்தோராவ‌து சுலோக‌த்தில் பிர‌ப‌த்தி அனுஷ்டிக்க‌ப்ப‌டுகிற‌து. 20, 22, 24 முத‌லான‌ சுலோக‌ங்க‌ளில் இந்த‌ ஸ்தோத்திர‌த்திற்குக் கார‌ண‌மான‌ ச‌த்ரு ப‌ய‌த்தைப் போக்க‌ வேண்டுமென்ப‌து ம‌றுப‌டியும் ம‌றுப‌டியும் "ஶ‌ம‌ய‌" "ப்ர‌ஶ‌ம‌ய‌" என்று ப்ரார்த்திக்க‌ப்ப‌டுகிற‌து. பிர‌ப‌த்தி ஸ‌க‌ல‌ப‌ல‌ ஸாத‌ந‌ம் என்ப‌து விபீஷ‌ண‌ன் பிர‌ஹ்லாத‌ன் காக‌ம் முத‌லான‌ ப‌ல‌ருடைய‌ அனுஷ்டான‌த்தை எடுப்ப‌தால் குறிப்பிட‌ப் ப‌டுகிற‌து.

இத்துட‌ன் பிர‌ப‌த்தியை அனுஷ்டிப்ப‌த‌ற்கு ப‌ர‌ம் வ்யூஹ‌ம் விப‌வ‌ம் என்று ஒரு இட‌ நிய‌மமில்லை. அர்ச்சாவ‌தார‌த்திலேயே ச‌ர‌ணாக‌தி செய்ய‌லாம் என்ப‌து ஸ்ரீர‌ங்க‌நாத‌னிட‌த்தில் ச‌ர‌ண‌ம் புகுவ‌தால் காட்ட்ப்ப‌டுகிற‌து. அர்ச்சாவ‌தார‌த்தில் ஸௌல‌ப்ய‌ம் அதிக‌ம் என்ற‌ ஏற்ற‌மே உண்டு. ம‌ற்ற‌ப்ப‌டி ஸ‌ர்வ‌ஜ்ஞ‌த்வ‌ ஸ‌ர்வ‌ச‌க்தித்வாதி க‌ல்யாண‌ குண‌ங்க‌ள் எங்கும் துல்ய‌ம் என்ப‌தும் அறிய‌த் த‌க்க‌து. ஆனால் அர்ச்சாவ‌தார‌த்தில் ச‌க்திக்கு ஏற்ற‌த் தாழ்வு இருப்ப‌தாக‌த் தோன்றுவ‌த‌ற்கு ஆச்ரித‌ர்க‌ளின் புண்ய‌ பாப‌ங்க‌ளே கார‌ண‌ம். ஆகையால் ஸ்ரீவைகுண்ட‌த்தில் பூம‌க‌ளும் ம‌ண்ம‌க‌ளும் இருபாலும் திக‌ழ‌ வீற்றிருக்கும் ப‌ர‌ந்தாம‌னிட‌த்தில் செய்யும் ப‌க்தியை ந‌ம‌க்காக‌ ந‌ம் நாட்டிலும் இல்ல‌த்திலும் தோன்றி நாம் இட்ட‌தை ஏற்று ம‌கிழும் அர்ச்சையிட‌ம் செய்வ‌தே விவேக‌முடையார் செய்ய‌த் த‌க்க‌து. அர்ச்சாவ‌தார‌ ஸேவையே ந‌ம‌க்குச் சிற‌ந்த‌ உபாய‌ம். ஆல‌ய‌ங்க‌ளுக்கும் எம்பெருமான்க‌ளுக்கும் ம‌ற்றும் தேச‌த்திற்கும் த‌ன‌க்கும் ஏற்ப‌ட்ட‌போது இந்த‌ அபீதிஸ்த‌வ‌த்தை அநுஸ‌ந்தித்தால், ஆப‌த்து நீங்கி இது அப‌ய‌த்தை நிச்ச‌ய‌மாய் அளிக்கும் என்ப‌து ஸ்ரீ தேசிக‌ன் ச‌ரித்ர‌த்தால் ப்ர‌த்ய‌க்ஷ‌ஸித்த‌ம்.

இப்ப‌டி ஸ‌க‌ல‌ப‌ய‌ நிவ‌ர்த்த‌க‌மான‌ இந்த‌ ஸ்தோத்ர‌த்தின் தாத்ப‌ர்யார்த்த‌ங்க‌ளை எளிய‌ த‌மிழில் எல்லோரும் உண‌ரும்ப‌டி த‌க்க‌ ப்ர‌மாண‌ங்க‌ளைக் கொண்டு அநுப‌வ‌ரூப‌மாகக் காட்டி ஸ்ரீ உ.வே. கோபாலாசார்ய‌ ஸ்வாமி செய்த‌ ப‌ர‌மோப‌கார‌த்திற்கு நாம் அவ‌ருக்கு மிக‌வும் க‌ட‌மைப் ப‌ட்டிருக்கிறோம். இதை யாவ‌ரும் ப‌டித்து அநுஸ‌ந்தித்து திவ்ய‌ த‌ம்ப‌திக‌ளிட‌மிருந்து அப‌ய‌த்தையும் அருளையும் பெற்று கிருதார்த்த‌ர்க‌ளாவார்க‌ளாக‌.

ஸ்ரீநிவாஸ‌ராக‌வ‌ன்.

புதுக்கோட்டை
25 – 12 -- 1938

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக