செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 10

22. ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீமதுரகவிகளைக் குறிக்கிறது. “கண்ணிநுண் சிறுத்தாம்பு” விஷயமாய் “ஸ்ரீமதுரகவி ஹ்ருதயம்” என்ற க்ரந்தமும், இவர் விஷமாகவும் இவருடைய அநுஷ்டானத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆசார்ய நிஷ்டையை சொல்லக்கூடியதான விஷயத்தை ‘இன்பத்தில்’ என்கிற பாசுரத்தில் விசேஷித்து நிரூபித்து, இவருடைய ஞாநமே நமக்கு உபஜீவ்யமானது என்பதை “ப்ரபந்தஸார”த்தில் ‘தேறியமாஞானமுடன்’ என்றும் அருளிச் செய்வார்.

23. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீகுலஶேகரப் பெருமாளைக் குறிக்கிறது. இவர் விஷயமாக ஸ்வாமி “துய்ய குலசேகரன்” என்று அருளிச் செய்துள்ளார். இவருடைய மற்றைய ப்ரபாவங்களை “அநுஷங்க ஸித்தைஶ்வர்யரான ஸ்ரீகுலசேகரப் பெருமாளும்” என்றும், பஞ்சகால ப்ரக்ரியையாக ஆராதநம் செய்வதற்குப் ப்ரமாணம் இவருடைய “இருமுப்பொழுதேத்தி” (பெருமாள் திருமொழி –7)என்று அநுஸந்திப்பதை அருளிச் செய்து, இவர் ஊனேறு செல்வத்து என்று திருமொழியில் அநுபவித்த அம்ஶங்களையெல்லாம் “ஸ்ரீதயாஶதக”த்தில் ஸங்க்ரஹமாக நிரூபித்தருளி உள்ளார். 

24. ராமாநுஜ பதம் பெரியாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய பிரபாவத்தை கல்பஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்), இந்தரூப விசேஷத்தையுடைய பரம புருஷனே ஸர்வ வேத ப்ரதிபாத்யமான பரதத்வம் என்னுமிடத்தை ஸர்வ வேத ஸாரபூத ப்ரணவ ப்ரதிபாத்யதையாலே (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) , மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழு வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் (பெரியாழ்வார் திருமொழி) என்று பெரியாழ்வார் அருளிச் செய்தார். மேலும் பல்லாண்டு என்று தொடங்கி “சாயை போலப் பாடவல்லார்” என்றும் இவருடைய திருமொழி “ ஏக” ப்ரபந்தமாய் அமைந்திருப்பதை ஏரணி பல்லாண்டு முதற்பாட்டு நானூற்று எழுபத்தொன்றிரண்டும் (ப்ரபந்தஸாரம்) என்று அருளிச் செய்துள்ளார். மேலும் இவர் பாடிய திருப்பல்லாண்டு நம்மை பரமபதத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை “ஸ்ரீபரமபத ஸோபாந”த்தில் ப்ராப்தி பர்வத்தில் “தமிழ் பல்லாண்டிசையுடன் பாடுவமே” என்று அருளிச் செய்துள்ளார்.

என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்” (பெரிய. திரு. 4-10-2)என்ற பாசுரத்திற்கு பாவம் செய்தால் அது நல்லதுதான் அதற்காக ப்ராயஶ்சித்தாதிகள் செய்யவேண்டாம் என்று சிலர் வ்யாக்யாநம் செய்துள்ளனர். ப்ரமாதிகமாகப் புகுந்தால் நாமே க்ஷமிப்புதோம், புத்தி பூர்வமாகப் புகுந்தால் அவர்கள் க்ஷமை கொள்ளாத அளவிலும் ஶிக்ஷா விசேஷங்களாலே நாம் க்ஷமிப்புதோம் ஒருபடிக்கும் கைவிடோம் என்று தாத்பர்யம் நன்று செய்தார் என்பர் போலும் என்று சொல்லுகையாலே இது வஸ்து வ்ருத்தியில் நன்று அன்று என்னுமிடம் ஸூசிதம் ( ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரம்) என்று எந்த ப்ரமாணங்களுடனும் முரண்பாடு ஏற்படாமல் அர்த்தத்தை நிரூபித்துள்ளார்.

25. ராமாநுஜ என்ற பதம் நீளாப்பிராட்டியின் அபராவதாரமான ஸ்ரீ ஆண்டாளைக் குறிக்கிறது. இவளுடைய ப்ரபாவத்தை “ஸ்ரீகோதா ஸ்துதி”யில் நிரூபித்து அருளியுள்ளார். இவள் பகவானை அநுபவித்த விதமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தியினாலும் ப்ரபத்தியினாலும் ஆசார்ய நிஷ்டையாலும் எம்பெருமானை அடையலாம் என்று அநுஷ்டித்துக் காண்பித்துக் கொடுத்தவள் கோதை.
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
                            
(நாச்சியார் திருமொழி)
என்ற இவள் வாக்கே சான்று. மேலும், நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் மற்றை நம் காமங்கள் மாற்று (திருப்பாவை) என்றும், அநுஸந்தித்த நாச்சியார், கிருஷ்ணனைப் பெறுகைக்காகப் பண்ணின காம தேவார்ச்சநம் ஶ்ருங்கார ஸமாத்யநுகுண க்ருஷ்ண ரூபாந்தர விஷயம் (ஸ்ரீபரமதபங்கம்) என்பது இவளுடைய பரமைகாந்தித்வத்தை வெளிக்காட்டுகிறது என்று அருளியுள்ளார் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக